Search This Blog

3.7.13

கழிவிரக்கமற்றவர்கள் பார்ப்பனர்கள்!

 
உத்தரகாண்ட் பேரழிவுக்குப் பின், புண்ணிய தலங்கள் - அவற்றின் மகாத்மியங்கள்பற்றிப் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அய்யப்பாடு ஏற்படுவது இயல்பே!

எந்தக் கோவில், கடவுள் மகாசக்தி வாய்ந்தவர்கள் - அங்கு சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிச் சென்றார்களோ, அந்தக் கடவுள்கள் தங்களைக் காப்பாற்ற வில்லை; இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் சகிதமாகப் பரிதாபகரமாகத் துடிதுடித்து மாண்டனர் என்பதை - அவற்றைப் பார்த்த நிலையில், எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள்?

இதற்குப் பெரியதோர் ஆய்வுகள் தேவைப்படாது - பிரத்தியட்சமாக நேரில்பார்த்து வந்துள்ளனர்; தப்பித்தோம், பிழைத்தோம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ளனர்.   
 
இராணுவம் என்ற ஒன்று இல்லாவிட்டால், லட்சக் கணக்காக அவ்விடங்களுக்குச் சென்றிருந்த அத்தனை மக்களும் வெள்ளத்தால் அடித்துக்கொண்டு செல்லப்பட்டு இருப்பார்கள்.

அங்கு சென்று பாதிப்புக்கு ஆளான மக்கள் மட்டுமல்லர், இந்தச் செய்திகளை ஏடுகளில் படித்தவர்கள், தொலைக் காட்சிகளில் பார்த்தவர்களும் என்னதான் நினைப்பார்கள்?

கடவுள் சக்தி என்பதெல்லாம் சுத்தப் புரட்டு; கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறது என்றுதானே சாதாரணமாகவே நினைப்பார்கள்.

அந்த நிலை ஏற்பட்டுவிட்டால் கடவுள் சக்தியின்மீது நம்பிக்கை இழக்கப்பட்டால் தங்களின் ஜாதி ஆதிக் கத்துக்கும், புரோகிதச் சுரண்டலுக்கும் ஆபத்து வந்துவிடுமே என்ற அச்சம் உலுக்க உலுக்க ஏடுகள் நடத்தும் பார்ப்பனர்கள் எவ்வளவு பம்மாத்தாக, நயவஞ்சகமாக எழுதுகிறார்கள் - செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

கேதார்நாத் அழைக்கிறது எனும் தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, நிதி திரட்டும் வேலையில் இறங்கி இருக்கும் தினமணி (2.7.2013, பக்கம் 1) எப்படி செய்தியை வெளியிடுகிறது?

கேதார்நாத் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனிதத் தலமாகவோ மட்டும் இருக்கவில்லை. சபரிமலை, வேளாங்கண்ணி போன்று அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதியினருக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு புகலிடம் அது - இன்னும் சொல்வதாக இருந்தால், அது இந்தியாவின் பாரம்பரியச் சின்னம்! கலாச்சாரத்தின் அடையாளம்! என்று தினமணி எவ்வளவுத் தளுக்காக எழுதுகிறது பார்த்தீர்களா?

அது என்ன அனைத்து மதத்தினருக்கும் புகலிடம்? அந்தப் புகலிடம் பாதுகாப்பானதாக இல்லையே!

கடவுளை மய்யப்படுத்தும் அந்தப் புகலிடம் அனைத்து மதப் பக்தர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இல்லையே! இதை ஒப்புக் கொள்வதற்கு, எழுதுவதற்கு என்ன தயக்கம்?

இது அறிவு நாணயமற்ற தன்மை என்பதைத் தவிர வேறு என்னவாம்? அடுத்து தினமணி எழுதுகிறது? இந்தியாவின் பாரம்பரியச் சின்னம் - கலாச்சாரத்தின் அடை யாளமாம்.

இதற்கு ஏதாவது அர்த்தம் புரிகிறதா? வெறும் வார்த்தைக் குப்பைகள் அல்லாமல் வேறு என்னவாம்?

இந்தியா என்பது எப்பொழுது வந்தது? இந்தியாவுக்கு என்று தனித்த கலாச்சாரம் என்ன? பல இனம், பல மொழி, பல பண்பாடு, பல மதங்கள், மதமற்ற தன்மைகள் என்று பிளவுபட்டுக் கிடக்கும்போது, எங்கிருந்து வந்தது கலாச்சார சின்னம்?

பாவம், உத்தரகாண்ட் இயற்கைச் சீரழிவு பார்ப்பனர்களைப் பெரிய அளவுக்குத் தாக்கி இருக்கிறது. அதனுடைய உளறல், உதறல்களாகவே இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன.

தமிழர்களின் முதலீட்டில் புதிய தலைமுறை என்ற இதழ் - ஆசிரியரோ அவாள்! கடவுளைக் காப்பாற்றித் தீர வேண்டுமே எழுதுகிறார்கள் பாருங்கள் (நாள்: 4.7.2013, பக்கம் 4).

இயற்கை என்பது கடவுளின் கைவண்ணம்; தொழில் நுட்பம் என்பது மனிதனின் குழந்தை. கடவுளுக்கும், மனிதனுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான் என எழுதிக் கொண்டிருந்ததை முதுகுக்குப் பின்னிருந்து படித்துக் கொண்டிருந்த சகா உருக்குலைந்து கிடக்கும் உத்தரகாண்ட் படங்களைப் பார்த்த பின்பும்கூட இப்படிச் சொல்வீர்களா? என்றார். நான் புன்னகைத்தேன்.
இப்போதும் கடவுள் மனிதனைக் கடிந்துகொண்டி ருக்கிறார். ஆனால், கைவிட்டுவிடவில்லை என்று சொல்வேன் என்றேன்.

என்ன எழுதுகிறார்? கடவுள் மனிதனைக் கண்டிக் கிறாராம். அப்படி என்றால், அவர் கண்டிப்பு தம்மை நாடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை துடிதுடிக்க அதிர்ச்சியூட்டி சாகடிப்பதுதானா?

கடவுள் யாரைக் கண்டிக்கிறார் என்பதைவிட, தண்டிக்கிறார் - அப்பாவி பக்தர்களை - இது எந்த வகை நியாயம்?

இயற்கையை அழித்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்? அவர்களுக்காக பக்தர்கள் பழிவாங்கப்படவேண்டுமா?

பழி ஓரிடம்; பாவம் மற்றோரிடம் என்பார்களே! அது இவர்களின் கடவுளுக்கும் பொருந்துமோ!

கடவுளைக் காப்பாற்றப் போய், கழிவிரக்கம் அற்ற மனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதை மற்றொரு முறை நிரூபித்துக்கொண்டு விட்டனர்.
                                  
-------------------------"விடுதலை” தலையங்கம் 3-7-2013

23 comments:

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?


இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.

படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?

யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!

1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.

2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?

அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.

இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?

1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.

While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!


புதுடில்லி, ஜூலை 3- திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்

இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...

கும்மிடிபூண்டி அழைக்கிறது வாரீர்!

தோழர்களே கடந்த ஆறு மாதங்களில் அடுக் கடுக்கான மாநாடுகள்! மாநாடுகள்!! ஆத்தூர், சிறீரங்கம், கோவை, செயங்கொண்டம், ராஜபாளையம், மதுக்கூர் அடுத்து கும்மிடிபூண்டி மாநாடு.

எந்த கால கட்டத்திலும் நமது இயக்கத்தில் மட்டுமல்ல. வேறு எந்த கட்சிகளும் இந்த அளவு மாநாடுகள் நடத்தியதும் இல்லை.

ஒவ்வொரு மாநாட்டிலும் நாம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் காலத்தின் கர்ஜனைக் குரல்கள்!

ஜாதி தீண்டாமை ஒழிப்பு சமூக நீதி

பாலியல் நீதி

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு மூடநம்பிக்கை ஒழிப்பு

இவற்றை மய்யப்படுத்தி மாநாடுகள் வெற்றி கரமாக நடந்தேறியுள்ளன.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - சேது சமுத்திரத்திட்டம் இவற்றை வலியுறுத்தி குமரியிலிருந்து ஒரு பிரச்சாரப் படையும், தென் காசி யிலிருந்து இன்னொரு பிரச்சாரப் படையும் முறையே செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மதுரை நோக்கி வந்து கொண்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் பிரச்சார அலைகளை எழுப்பி ஜூலை 8ஆம் தேதி மதுரையில் சங்கமம் ஆக உள்ளன.

இந்தச் சங்கம விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் செய்ய இருக்கிறார்.

நாலாதிசைகளிலும் நமது பணிகளின் வீச்சு மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது - ஈர்த்துள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் 6ஆம் தேதி சென்னை மண்டல திராவிடர் கழக மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இரவும் பகலுமாக நடந்து கொண்டுள்ளன. கழகத் தோழர்கள் பம்பரமாக பணியாற்றி வருகின்றனர், தேனீக்களாக பறந்து திரிந்து செயலாற்றி வருகின்றனர்.

வேறு எந்த மாநாட்டிலும் இல்லாத அளவுக்கு கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள 300 கிராமங்களுக்கு ஒலி பெருக்கி விளம்பரம் ஓகோ என்று நடந்து கொண்டிருக்கிறது. நமது கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசனின் மணியோசை எங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கும்மிடிப்பூண்டியை பொறுத்தவரை இதுவரை கழக மாநாடுகள் நடந்ததில்லை. ஆனாலும் கும்மிடிப் பூண்டிக்கு என்று தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும் அளவிற்குக் கழகத் தோழர்கள் (பெரும்பாலும் இளைஞர்கள்) நிறைந்து காணப்படு வதால், இதை ஒரு தனி மாவட்டமாகவே அறிவித்தார் நமது கழகத் தலைவர்.

அதன் அருமை நமக்கு இப்பொழுது தெரிகிறது. மாநாட்டுக்குப் பிறகு ஏராளமான இளைஞர்கள் இயக்கத்திற்குக் கிடைக்க இருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் மகளிர் அணி செழித்து நிற்கிறது கும்மிடிப்பூண்டி மண்டல மாநாடு மகளிர் அணி மாநாடா? என்று வியக்கும் அளவிற்கு பெண்கள் பெருந்திரளாக வருகை தர இருக்கின்றனர். கழகப் பொதுக்குழு உறுப்பினர் சகோதரி மேரி அக்சீலியா வின் களப்பணி பிரமிப்பை ஊட்டுகிறது.

மண்டலச் செயலாளர் மானமிகு வெ.ஞானசேகரன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் தென்னரசு ஆகியோர் முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

நமது கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இன்று கும்மிடிப்பூண்டி சென்று கழகத் தோழர்கள், பொறுப்பாளர்களைச் சந்தித்து செயல்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன.

இருபது ஆண்டுகட்குமுன் இதே கும்மிடிப்பூண் டியில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீக்குண்டம் இறங்குதல் முதலிய நிகழ்ச்சிகள் ஊரையே கலக்கின. அந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இயக்கத் தின் பக்கம் திரண்டனர்.

கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் இளைஞர் சேனையை கட்டாயம் பார்க்கலாம். பேரணியில் அதன் எழுச்சியைக் கண்டு களிக்கலாம்.

சென்னை மண்டலம், காஞ்சி மண்டலம், வேலூர் மண்டலம், புதுச்சேரி கழகத் தோழர்கள் குடும்பம் குடும்ப மாகக் கூட உள்ளனர்.

தமிழ் நாட்டில் எங்கு மாநாடு நடந்தாலும் திண்டி வனம் மாவட்டக் கழக குடும்பத்தினர் தனி வாக னங்கள் மூலம் வந்து சேர்ந்து விடுவார்கள்.

அண்மைக் காலமாக இயக்கத்திற்கு இளைஞர் சேனை திரண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் மதவாதம் மிரட்டுகிறது என்றால், தமிழ்நாட்டிலோ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட இயக்கப் போர்வையில் நேர்மா றான செயல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

ஆகஸ்டு ஒன்றாம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அரங்கேறுவதற்கு முன் நடைபெறும் மாநாடு கும் மிடிப்பூண்டி மாநாடு என்பதால் இந்த மாநாடு முக் கியத்துவம் பெறுகிறது. ஏதோ சென்னை மண்டல மாநாடு என்று அதனைக் குறுகலாகக் கருத வேண்டாம், கொள்கை வீச்சில் மிக முக்கியமான மாநாடு.

நாட்டு நடப்பு கண்ணோட்டத்தில் கவனிக்கப் படத்தக்க மாநாடாக அமையப் போகிறது.

காலையிலேயே மாநாடு, களை கட்டப்போகிறது. இந்தியாவில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களா?

மிதிக்கப்படுகிறார்களா? என்னும் அருமையான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

பேரணி உண்டு, தீர்மானங்கள் முக்கியமானவை. தமிழர் தலைவர் இருவேளைகளிலும் எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்.

இதற்கு மேல் என்ன வேண்டும் தோழர்களே கும்மிடிப்பூண்டி கொள்கைப் பூண்டியாக மலரட்டும்.

ஜாதி - தீண்டாமை சழக்குக் குணங்கள் வேரறுந்து வீழட்டும்! சமூக நீதி புது சரிதம் படைக்கட்டும்!

காவிரி, முல்லைப் பெரியாறு, சேது சமுத்திரத் திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை என்கிற பேரிகைகள் முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!!

பாலியல் நீதி புதுவெள்ளம் பாய்ந்து வரட்டும்! வரட்டும்!!

எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றே உயிர் மூச்செனக் கொண்டு முழங்கும் கருஞ்சட்டைப்படை வேறு எங்குண்டு?

பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை தலைமுறை இடைவெளியின்றி போர்ச்சங்கு முழங்கும் பாசறை அழைக்கிறது.

தோழர்களே, குடும்பம் குடும்பமாக கும்மிடிப்பூண்டி வாரீர்! வாரீர்!!

கும்மிடிப்பூண்டி புது வரலாறு படைக்கட்டும்! படைக்கட்டும்!!

அது உங்கள் கைகளில்தான் இருக்கிறது சந்திப்போம் சனியன்று!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!


நீங்கள் குளிர்பானம் அருந்துபவர்களா? நீரிழிவு நோயை நீங்கள் விரைவில் எதிர்நோக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 40 முதல் 70 மில்லிவரை குளிர் பானம் அருந்தும் சிறுவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை எடை எகிறும். தண்ணீர் குடிப்பதையும் புறந்தள்ளிவிட்டு, குளிர்பானம் அருந் தினால், 40 வயதில் வரும் சில நோய்கள் பத்து வயதிலேயே வரக்கூடும் என்கிறார் மும்பை இருதய ஆய்வு மய்ய மருத்துவர் ராமகாந்த பாண்டா!

தமிழ் ஓவியா said...


சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 4- 1927இல் தொடங்கப்பட்ட சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என்றார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சேலம் தாய் வீடு என்று சொல்லுவார்கள்; 1927இல் சேலம் சுயமரியாதைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்கான சொந்த இடம் வாங்கி 1931 ஜூன் 29ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அப்போதைய அமைச்சர் திவான் பகதூர் பி.டி. ராஜன் கலந்து கொண்டார். 1957இல் இருந்து பழைமை வாய்ந்த சுயமரியாதை சங்க கட்டடத்தில் படிப்பகம் நூலகங்கள் இயங்க ஆரம்பித்தன. இந்த சுயமரியாதை சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் 1998இல் மனுகுல தேவாங்கர் சங்கத்தோடு இணைந்தார்கள். இந்த சுயமரியாதை சங்கமானது, பகுத்தறிவைப் பரப்புவதற்கும் ஜாதி பேதங்களை ஒழிப்பதற்கும், பெண்ணடிமை ஒழிப்பிற்காகவும், இயங்கி வந்தது. ஆனால் இந்த சங்கத்தை மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஜாதிச் சங்கத்தோடு இணைத்தது தவறு என்றும் வழக்கு நடத்தப்பட்டது.

இந்த சங்கத்தின் உறுப்பினராக இருந்த நடேசன் என்பவர் வழக்கு நடத்தி வந்தார். அவர் நோயுற்ற காலத்தில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பிரச்சார செயலாளர் கி.வீரமணி அவர்களே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கின் இறுதியில் 19.6.2013-இல் பத்திரபதிவுத் துறையின் அய்.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் ஜாதி சங்கத்தோடு, சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைத்தது தவறு என்றும், சேலம் சுயமரியாதை சங்கம் தனித்து இயங்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சேலம் சுயமரியாதை சங்கத்தின் அலுவலகம் இந்த கட்டடத்தில் இன்று முதல் இயங்குகிறது. தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்ட (1927) சேலம் சுயமரியாதை சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

மேலும் வேலூர் பி.ஜே.பி. முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டதுபற்றி செய்தியாளர் கேள்விக்கு தமிழர் தலைவர் கூறியது:- கொள்கையளவில் வேறுபாடு இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அது தவறு தான். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மிகவும் மலிவாகிவிட்டது. தமிழக அரசு நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

பழநி முருகன் தீர்த்து வைக்க மாட்டானா?

பழனி, ஜுலை.4- பழனி கோவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி சேமநல பிடித்தத்தில் முறைகேடு ஆகிய வற்றை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அறு படை வீடுகளுக்கும் ஆஸ்பிடாலிட்டி பெசிலிட்டி அன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். பழனி மலைக்கோவில், கிரிவலவீதி, படிப்பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கென துப்புரவு பணியாளர் கள் 325 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 125 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3,300 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் கூட குறிப்பிட்ட தேதியான 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கியது கிடையாது. சேமநல நிதியாக ஒவ்வொரு வருக்கும் ஊதியத்தில் இருந்து ரூ.400 பிடித்தம் செய்து அதனுடன் ஒப்பந்தகாரர் சார்பில் ரூ.400 சேர்த்து ரூ.800 வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்குகூட சேமநல நிதி வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை கேட் டும் எந்த வித பதிலும் தரவில்லை. இத னால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதி பிடித்தம் செய்யப்படு கிறதே தவிர அது வரவுவைக்கப்பட வில்லை. கடந்த 5 ஆண்டில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்தும் அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கவில்லை. யாராவது அவர்களை எதிர்த்து கேட்டால் வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறார்கள். எனவே எங்களை திருக்கோவில் நிர்வாகத்தினரே தினக்கூலி அடிப்படையில் வேலையில் அமர்த்தி னால்கூட நிம்மதியாக பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


தவறான தீர்ப்பாம்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு பார்ப்பனர்களின் - பிற்போக்குவாதிகளின் அஸ்திவாரத்தைக் கலகலக்க வைத்து விட்டது.

கல்கி துக்ளக் போன்ற பார்ப்பன இதழ்கள் பகிங்கரமாக எதிர்ப்புக் கணைகளை வீசு கின்றனர்.

இன்று வெளி வந்துள்ள துக்ளக் (10.7.2013) இதழில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: திருமணமாகாத ஆண் - பெண்ணின் பாலியல் உறவை திருமணமாகவும், அவர்களைத் தம்பதிகளாகவும் கருதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா?

பதில்: இது தவறான தீர்ப்பு என்பது என் கருத்து. அப்பீல் செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு மாற்றப்படும் என்பது என் எதிர்பார்ப்பு என்று எழுதுகிறது துக்ளக்.

கல்கி (7.7.2013) இதழில் வெளிவந்த கேள்வி பதில் வருமாறு: கேள்வி: ஆண் - பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து, நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி

சென்னை நீதிபதியோடு இந்தக் கருத்து நிற்கவில்லை; உச்சநீதிமன்றத்திலும் நீதியர சர்கள் பி. சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வும் இதே வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின்மீது உச்சநீதிமன்ற அமர்வு - சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் அவர்களின் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தீர்ப்பினை வழங்கி விட்டதே!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத் துடன் உடலுறவு கொண்டவரை நிரபாரதி என்று கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

ஆண்கள்தன் ஆதிக்கத் தன்மையுடன் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு விட்டு தப்பித்துக் கொள்வதை துக்ளக் கல்கி வகையறாக்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆண் கூறியது உண்மைதானே; அதைக் கூறி பாலியல் உறவு கொண்ட நிலையில் அதனைத் திருமணம் என்று ஏன் கருதக் கூடாதாம்?

நீதியரசர் கர்ணன் தன் தீர்ப்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். சடங்கு ஆச்சாரங்களுடன் திருமணம் செய்து கொண்டு அதே நேரத்தில் பாலியல் உறவு கொள்ளவில்லையென்றால் அந்தத் திருமண மும் சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள் ளாரே! இதன் மூலம் கணவன் - மனைவி என்பதற்கு முக்கியமான அடையாளம் பாலியல் உறவு என்பது வெளிப்படவில்லையா?

பார்ப்பன வட்டாரங்கள் பதறுவதற்கு முக்கிய காரணமே - சடங்குகள் முக்கியமல்ல என்று கூறப்பட்டு இருப்பதுதான்; சடங்குகள் என்று சொல்லும்போது திருமணத்தில் முழுக்க முழுக்க பார்ப்பனக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்.

ஓமக் குண்டம் சப்தபதி என்பதற்கும் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அய்யப்பன் என்பதை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்கள், வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை முக்கிய சாட்சியமாக ஏற்றுக் கொள்ளாதது - ஏன்?

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத் தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...





கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

தகுதிக்கு அதிகமாகச் செலவு செய்பவர்கள் தங்கள் கழுத்துக்குத் தாங்களே சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்.
-_செர்பியா

தமிழ் ஓவியா said...

வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

பார்ப்பனார் பற்றி
காந்தியார்

பிராமணர்கள் தங்களை உயர் வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது
- காந்தியார் (ஆதாரம்: இந்து ஏடு, 23.8.1920)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசு வரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!

கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக்கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக்கின்றது அது எப்பொழுதும் அடிமைத் தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக்கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை; அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்கு பவர்களின் தெய்வத் தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டி ருக்கின்றது. மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும்.

- லெனின்

தமிழ் ஓவியா said...

வராத தேவன்

எந்த நிலையிலும் நான்
உன்னுடன் இருக்கிறேன்
கவலைப்படாதே!
- என்றது தேவ வசனம்!
நிலநடுக்கம் வந்தபோது
எல்லோரும் வெளியில்
ஓடித்தப்பிக்க
உள்ளேயே இருந்த அவன் மட்டும் இடிபாட்டில் சிக்கி
நொறுங்கிப் போனான்! வசனம் பேசிய
தேவன் வரவேயில்லை!

காழி - கு.நா.இராமண்ணா, சென்னை

தமிழ் ஓவியா said...




கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய் களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ் டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக் கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் இடஒதுக்கீடு



வரும் 19ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்க உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு. பி.சதாசிவம் அவர்கள், ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டி யில், ஓர் அருமையான கருத்தினை வெளியிட் டுள்ளார்.

உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி நியமனத்தில், இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மற்ற எந்த மாநில நீதிபதிகளை விடவும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நீதிபதிகளுக்குச் சமூக நீதி என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? என்பது தெளிவாகவே புரிந்திருக்கும்; காரணம் - தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும்தான்.

இந்தக் கருத்து ஒன்றும் புதிய ஒன்றாகவும் கருதப்பட முடியாது. திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் பொதுக் குழுக்களிலும், மாநாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.

மத்திய சட்ட அமைச்சராகவிருந்த சங்கரானந்து அவர்கள் சென்னை வந்தபோது அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்து, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கையினை அளித்தார் (விடுதலை 22.9.1988) என்பது, இந்த இடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 37 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு, பிஜேபியைச் சேர்ந்த கரிய முண்டா தலைவராக வந்தார். அவர் வெளியிட்ட கருத்தும், தகவலும் மிக முக்கியமானவை.

இந்தியாவில் 481 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 15 தாழ்த்தப்பட்டவர்களும், 5 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர். உச்சநீதிமன்றத் தில் தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியினர் ஒருவர்கூட நீதிபதியாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் முன் னேற்றம் அடைவதை, வேண்டுமென்றே திட்டமிட்டுக் கெடுக்கும் முயற்சியே இது. எங்கோ ஓர் இடத்தில் பாகுபாடு நிறைந்த மனோ நிலை, நிச்சயமாக நிலவுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் திறமை படைத்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமற் போய் விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அலுவலர்களுள் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளபோது, நீதித்துறையில் மட்டும் ஏன் இல்லை? மற்றவர்கள் எல்லோரும் கந்தையாக உள்ளபோது, சில நீதிபதிகள் மட்டும் அளவுக்கு அதிகமான அறிவாளிகளாக உள்ளனர் என்பதையும் என்னால் நம்ப இயலவில்லை என்றார் நாடாளு மன்ற நிலைக் குழுவின் தலைவர் கரியமுண்டா எம்.பி.
(தி.வீக் 13.8.2000).

இந்தக் கேள்விக்கு இதுவரை நியாயமான பதில் உண்டா? 1950ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் 50 பேர் என்றால், இதில் பார்ப்பனர்கள் மட்டும் 48 பேர் என்று தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன் அவர்கள் குறிப்பிட்டது - இந்த இடத்தில் நினைவு கூரத் தக்கதாகும்.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தால் சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகள் அளிக்கப்பட்டு இருக்குமா? என்பது, சிந்தனைக்கு விருந்தான அரிய வினாவாகும்.

மண்டல் குழு தொடர்பாக இந்திரா - சகானி வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தானே சமூகநீதிக்கு இணக்கமான தீர்ப்பை - மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு எழுதினார்.
சென்னை மாநிலத்தில் 1928 முதல் செயல்பாட்டில் இருந்த இடஒதுக்கீட்டைச் செல்லாது என்று கூறியது சென்னை உயர்நீதிமன்றம் என்றால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூவரில் இருவர் பார்ப்பனர்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்தால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் (தமிழ்நாட்டுக்காரர்) கூறிய கருத்தின் அருமையும், நியாயமும் புரியும்.

தமிழ் ஓவியா said...


முடிந்த பாடில்லை...


மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்தி ரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

தமிழ் ஓவியா said...


வாழ்வின் இரு முக்கிய கண்காணிப்பாளர்கள்!


வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வாக அமைய வேண்டும் என் றால் அதற்கு உணவும், தூக்கமும் மிகப் பெரிய தேவைகள் அல்லவா?

இந்த இரண்டும் நம் உடல் நலத்தின் மிகப் பெரிய கண்காணிப்புகள் ஆகும்.

உடம்பார் அழியின்

உயிரார் அழியும் நிலை ஏற்படும்.

சரியான உணவோ, போதுமான தூக்கமோ இன்றி நம் வாழ்க்கை அமைந்தால் அதைவிட கொடுந் தண்டனை நமக்கு வேறு இருக்கவே முடியாது.

உணவுகூட, நல்ல நலவாழ்வுக்கு உகந்த, உதவிடும் உணவாக அமை வதும், அல்லது நாம் அமைத்துக் கொள்வதும் மிக கவனம் செலுத்தப் பட வேண்டிய அன்றாடக் கடமை களில் ஒன்று. ஏன் முக்கியமானதும் கூட!

இன்றைய இருபால் இளைஞர்கள் உணவை, வெறும் நாக்கு சுவைக் காகவே பல நூறு ரூபாய்கள் செலவழித்து, வேக உணவுகள் (Fast Foods) என்ற பல அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு உணவுகளில், இத்தாலியிலிருந்து உலக நாடு களுக்கு அனுப்பப்பட்ட பீட்சா, போன்றவைகளில் மோகம் கொண்டு, பர்கர் (Burger) களை வாங்கி தின்று கொழுப்பை உடலில் ஏற்றிக் கொண்டு, காற்றடைத்த பலூன்களைப் போல ஆகி விடுகிறார்கள். இப்போது அது இன்ப மாகக் கூடத் தோன்றலாம்! ஆனால் போகப் போக அது உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு செய்யக் கூடிய ஆபத்து என்பது புரியும்.

இதற்குமேல் (Coke) கோக், பெப்சி, செவன் அப் போன்ற இனிப்பு சுவைநீர் பானங்களை - தூய நீர் அருந்தாமல் குடித்து, பணத்தையும், உடல் நலத்தையும் இழக்க வேண்டியவர்களாகிறார்கள்!

முன்பெல்லாம் 50 வயதுக்குமேல் தான் சர்க்கரை நோய் - டயாபெட்டிஸ் (Diabetes)! இப்போதோ 30 வயதுள்ள வாலிபர்களுக்கே சோதனை தேவைப்படும் அளவு நாட்டில் இளைஞர் கூட்டம், நல்ல உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிட மறுக்கின்றனர்.

பல வீடுகளில் - பணக்காரர்கள்கூட அல்லர்; நடுத்தர வர்க்கத்தினர்தான் - அங்கே மாணவர்கள் - அடம் பிடித்து பெற்றோர்களிடம் காசை வாங்கிக் கொண்டு இப்படி வேக உணவு என்ற முறையில் விலை இல்லாக் கொழுப்பை, உடலில் சேர்க்கின்றனர்!

50 வயதுக்குமேல் உள்ள எவரும் நாக்குக்கு அடிமையாகாமல், நலக்கண்ணோட்டத்திற்கு உணவுகளையே மருத் துவ ஆலோசனைப்படி கைக்கொள்ள திடசித்தம் உடையவர்களாக வேண்டும்.

வயிறு 50 வயதுக்குமுன் நாம் என்ன சொன்னாலும், எதைத் தின்றாலும் செரிமானம் செய்து, சொன்னதைக் கேட்கும்.

ஆனால் 50-க்குப் பின், வயிறு என்ன சொல்கிறதோ, அதைக் கட்டளையாகக் கொண்டு நாம் வாழ்ந்தால்தான் நமக்கும் தொல்லை இருக்காது. மருத்துவச் செலவும் குறையும், நம்முடன் இருக்கும் குடும்பத்தவர்களுக்கும் நம்மால் தொல் லையோ தொந்தரவோ இருக்காது!

நாம் பிறருக்குச் சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக் கூடாது!

தூக்கமும்கூட இதுபோல முக்கிய மாக 8 மணி நேரத் தூக்கம் என்று கூறுகிறார்கள்.

பலருக்கு - அது வாய்ப்பாக அமையா விட்டாலும்கூட குறைந்தது 7 மணி நேரம் இருந்தால் நிம்மதி; நல வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாது என்பது பிரபல தூக்கவியல் ஆய்வாளர்களின் கருத் தாகும்!

மித மிஞ்சிய உணவு எப்படி அஜீர ணத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளுகிறதோ அது போலவே, அதிக தூக்கம் - அளவு மீறிய தூங்கு மூஞ்சித் தனம் நம் நல வாழ்வுக்குக் கேடாய் முடிந்து நம் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும்!

மனம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான், இந்த இரண்டு உடற்காவலர்களும் (உணவும் தூக்கமும்) நமக்கு நல்ல வண்ணம் ஒத்துழைப்பார்கள்.

அமைதியற்ற நிலையிலோ, ஆத்திரத்தின் இடையிலோ உணவை உண்டால் அது செரிமானமாகாது;

வயிற்றுப் பொருமல், முதல் பல் வகை அஜீரணக் கோளாறுகளில் கொண்டு போய் நிறுத்தவே செய்யும்!

இந்த இரண்டுக்கும் உள்ள புரிந்துணர்வு (Under Standing) மிகவும் வியக்கத்தக்கதாக இல்லையா?

இரவு உணவு மிகக் குறைத்தலும் கூட, தூக்கம் பாதியிலேயே பாதிப் பதை நானே பல முறை அனுபவித் துள்ளேன்.

எதையும் அளவுக்குள் வைத்து, குறையாமலும் கூடாமலும், பார்த்து வாழ்ந்தால் அதைவிட கொள்ளை இன்ப வாழ்வுதான் வேறு ஏது?

இளமையிற் கல்லாக இருக்கும் உடல் வேகமாக முதுமையில் நொறுங்கி மண்ணாகாமல் தடுக்க கட்டுப்பாடு இவை இரண்டிலும் தேவை! தேவை!!

- கி.வீரமணி