Search This Blog

3.7.13

மழையை வரவழைக்க யாகமா? நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு


மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை
வளர்க்க வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கும் விரோதமே!
நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற பிரிவுக்கும் விரோதமாக, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை மழைக்காக யாகங்களை ஏற்பாடு செய்துள்ளதைக் கண்டித்தும், உடனடியாக இது நிறுத்தப்படா விட்டால் அறப்போர், பிரச்சாரம், நீதிமன்றம் ஆகிய தளங்களில் கழகத்தின் சார்பில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

இந்த ஆண்டு, சரியான மழை - காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு - பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே!

மழையை வரவழைக்க யாகமா?

இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோயில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் - தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களை கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?
இந்த மூடநம்பிக்கைகளை - பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்!

இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுவது என்ன?

இந்திய அரசியல்   அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,
அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசு துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர் மறை செயலில் ஈடுபடலாமா?
இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?
மழை வேண்டி - பருவக் காற்றுத் துவங்கும் காலத்தில் மிக சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?
சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.

சில கேள்விகள்
1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம்  - மோசடி அல்லவா?

2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?

3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! - எதற்காக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?

மழை வெள்ளத்தைத் தடுக்க யாகம் உண்டா?

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? - சொல்லட்டுமே பார்க்கலாம்!

அறியாமையை விட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!
இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்க லாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?

இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்டமன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.

கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!

உடனடியாக நிறுத்தப்படா விட்டால்...

இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒரு முனையிலும், பொது நல வழக்கு மறு முனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

------------------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை   --"விடுதலை”
2.7.2013

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் மழை வேண்டி திங்கள்கிழமை காலை நடைபெற்ற வருணஜெபம். (தினமணி 2.7.2013)

18 comments:

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?


இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.

படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?

யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!

1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.

2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?

அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.

இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?

1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.

While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!


புதுடில்லி, ஜூலை 3- திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்

இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...


ஏமாறாதே!


வறுமையையும், அறி யாமையையும் மய்யப் படுத்தி மூட நம்பிக்கை மாடுகள் மேய ஆரம் பித்துவிடும்.
அப்படித்தான் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் புதிய மூட நம்பிக்கை நான்கு கால் பாய்ச்சலாகச் சுற்றித் திரிகிறது.

மழை இல்லை - வயல் வெளிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன.

நெல் பயிரிட முடியாத நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தென்னை யைப் பயிரிடத் தொடங்கி விட்டனர்.

மூன்று மாதங்களாக தண்ணீர் இல்லாமல் அவையும் தவித்து நிற் கின்றன - வளர்ந்தால் அல்லவா அது தலை யாலே தரும் இளநீரை!

நிலத்தடி நீரும் கிடைக் காத அவலம் பிடுங்கித் தின்கிறது. நூறு அடிக் குக்கீழ் போனால்தான் தண்ணீர் தட்டுத்தடு மாறிக் கிடைக்கும் நிலை!

குழாய்ப் போட குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப் படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை வியாபாரிகள் புறப்பட்டுள்ளனர்.

எந்த இடத்தில் எளி தில் தண்ணீர் கிடைக் கும் என்று கண்டு பிடித் துச் சொல்கிறர்களாம்.

குச்சி சுத்தி, தேங் காய்ச் சுத்தி, கடிகாரச் சுத்தி என்று தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.

நீரோட்டம் கண்டு பிடித்துச் சொல்லுகிறார் களாம். அதற்காக ஆயிரம், இரண்டாயிரம் என்று ரூபாய்களை கறக்கிறார் களாம்.

தனக்குத் தேவை என்கிற வெறி கிளம்பு கிறபோது அறிவைப் பயன்படுத்துகிறவர்கள் எத்தனைப் பேர்?

காக்கை உட்கார்ந் தது பனம் பழம் விழுந் தது என்பதுபோல நூறு இடத்தில் சொன்னால், ஓரிரு இடத்தில் பலித்து விடாதா? சோதிடம்போல குருட்டுத்தனம்தான்.

98 இடத்தில் தோல்வி என்பதுபற்றி யாரும் பேச மாட்டார்கள்; இரண்டு இடத்தில் சொன்னது நடந்தது என்பதைத்தான் விளம்பரப்படுத்துவார்கள்.

ஏமாறுகிறவன் இருக் கின்றவரைக்கும் ஏமாற் றுகிறவனும் இருக்கத் தான் செய்வான். நமது தோழர்கள் இதுபற்றி விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை நடத்தலாமே!

- மயிலாடன்

குறிப்பு: தகவல் நாமக்கல் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வை.நடராஜன்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சதாசிவம் கருத்து

டில்லி, ஜூலை 4- நமது நாட்டின் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்கும் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதியன்று சதாசிவம் பொறுப் பேற்க உள்ளார்.

இதனையொட்டி ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும். இந்நிய மனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கப் படும். அதற்காக ஏற்கெனவே கடைப்பிடித்து வரும் குறிப் பிட்ட தகுதிகளைப் புறக் கணித்துவிட வேண்டும் என்பது அல்ல. அதாவது தகுதியற்ற நபர் களை தேர்வு செய்வது என்பது இதற்கு அர்த்தம் அல்ல..ஆனால் இடஒதுக்கீடு என்ற சலுகை வழங்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்துகு நீதிமன்றங்கள் எதிரி அல்ல..

நீதித்துறை, சட்டசபை, அரசு நிர்வாகம் மூன்றும் அரசியல் சாசனத்தின் மூன்று அங்கங்களாகும். ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்து இயங்கி வருகின்றன.

பொதுவாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; அதே போல் தான் நீதிமன்றத்தின் செயல்பாடு களை அரசால் தடுக்கவும், தலையிடவும் முடியாது; நீதித்துறை ஊழல்களுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை.

ஆனால் இதர துறைகளை ஒப்பிடுகையில் நீதித் துறையில் ஊழல் குறைவுதான். ஊழல் வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. குற்றத்தின் அடிப்படையிலேயே பிணை அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப் படுகிறது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் அளிப்பது தவறல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

பழநி முருகன் தீர்த்து வைக்க மாட்டானா?

பழனி, ஜுலை.4- பழனி கோவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி சேமநல பிடித்தத்தில் முறைகேடு ஆகிய வற்றை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அறு படை வீடுகளுக்கும் ஆஸ்பிடாலிட்டி பெசிலிட்டி அன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். பழனி மலைக்கோவில், கிரிவலவீதி, படிப்பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கென துப்புரவு பணியாளர் கள் 325 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 125 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3,300 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் கூட குறிப்பிட்ட தேதியான 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கியது கிடையாது. சேமநல நிதியாக ஒவ்வொரு வருக்கும் ஊதியத்தில் இருந்து ரூ.400 பிடித்தம் செய்து அதனுடன் ஒப்பந்தகாரர் சார்பில் ரூ.400 சேர்த்து ரூ.800 வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்குகூட சேமநல நிதி வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை கேட் டும் எந்த வித பதிலும் தரவில்லை. இத னால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதி பிடித்தம் செய்யப்படு கிறதே தவிர அது வரவுவைக்கப்பட வில்லை. கடந்த 5 ஆண்டில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்தும் அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கவில்லை. யாராவது அவர்களை எதிர்த்து கேட்டால் வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறார்கள். எனவே எங்களை திருக்கோவில் நிர்வாகத்தினரே தினக்கூலி அடிப்படையில் வேலையில் அமர்த்தி னால்கூட நிம்மதியாக பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மதம் பிடித்த 20 கோயில் யானைகளுக்கு மருத்துவம்!

பாலக்காடு, ஜூலை 4- கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானத் திற்கு சொந்தமாக 62 யானைகள் உள்ளன. இவை, கோயில் அருகேயுள்ள புனத்தூர் கோட்டை யானைதாவளத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். ரூ.8 லட்சம் செலவில் இந்தாண்டுக்கான முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதற்கட்ட மாக 42 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகளுக்கு அரிசி, பாசிபயறு, கொள்ளு மற்றும் அட்டசூர ணம் போன்ற ஆயுர்வேத மூலிகை கலந்த உணவு வகைகள் வழங்கப்படுகிறதாம்.

முகாமை, திருச்சூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜோந்திர தாஸ் துவக்கி வைத்தார். மீதமுள்ள 20 யானைகளுக்கு தற்போது மதம்பிடித் துள்ளதால், அவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம் முகாம் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ் ஓவியா said...


தவறான தீர்ப்பாம்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு பார்ப்பனர்களின் - பிற்போக்குவாதிகளின் அஸ்திவாரத்தைக் கலகலக்க வைத்து விட்டது.

கல்கி துக்ளக் போன்ற பார்ப்பன இதழ்கள் பகிங்கரமாக எதிர்ப்புக் கணைகளை வீசு கின்றனர்.

இன்று வெளி வந்துள்ள துக்ளக் (10.7.2013) இதழில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: திருமணமாகாத ஆண் - பெண்ணின் பாலியல் உறவை திருமணமாகவும், அவர்களைத் தம்பதிகளாகவும் கருதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா?

பதில்: இது தவறான தீர்ப்பு என்பது என் கருத்து. அப்பீல் செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு மாற்றப்படும் என்பது என் எதிர்பார்ப்பு என்று எழுதுகிறது துக்ளக்.

கல்கி (7.7.2013) இதழில் வெளிவந்த கேள்வி பதில் வருமாறு: கேள்வி: ஆண் - பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து, நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி

சென்னை நீதிபதியோடு இந்தக் கருத்து நிற்கவில்லை; உச்சநீதிமன்றத்திலும் நீதியர சர்கள் பி. சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வும் இதே வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின்மீது உச்சநீதிமன்ற அமர்வு - சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் அவர்களின் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தீர்ப்பினை வழங்கி விட்டதே!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத் துடன் உடலுறவு கொண்டவரை நிரபாரதி என்று கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

ஆண்கள்தன் ஆதிக்கத் தன்மையுடன் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு விட்டு தப்பித்துக் கொள்வதை துக்ளக் கல்கி வகையறாக்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆண் கூறியது உண்மைதானே; அதைக் கூறி பாலியல் உறவு கொண்ட நிலையில் அதனைத் திருமணம் என்று ஏன் கருதக் கூடாதாம்?

நீதியரசர் கர்ணன் தன் தீர்ப்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். சடங்கு ஆச்சாரங்களுடன் திருமணம் செய்து கொண்டு அதே நேரத்தில் பாலியல் உறவு கொள்ளவில்லையென்றால் அந்தத் திருமண மும் சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள் ளாரே! இதன் மூலம் கணவன் - மனைவி என்பதற்கு முக்கியமான அடையாளம் பாலியல் உறவு என்பது வெளிப்படவில்லையா?

பார்ப்பன வட்டாரங்கள் பதறுவதற்கு முக்கிய காரணமே - சடங்குகள் முக்கியமல்ல என்று கூறப்பட்டு இருப்பதுதான்; சடங்குகள் என்று சொல்லும்போது திருமணத்தில் முழுக்க முழுக்க பார்ப்பனக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்.

ஓமக் குண்டம் சப்தபதி என்பதற்கும் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அய்யப்பன் என்பதை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்கள், வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை முக்கிய சாட்சியமாக ஏற்றுக் கொள்ளாதது - ஏன்?

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத் தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(விடுதலை, 13.9.1972)

Ragavan said...

அதுசரி அவங்க அவங்க அறிவுக்கு எட்டினபடி தான் அவர்களுடைய கதையும் செயலும் இருக்கும். என்பது நன்றாக தெரிகின்றது. கடவுள், அந்தணர்கள், பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள் சரியான முறையில் வளர்க்கப்படவில்லை என்பதையும், ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்படவர்களாகவே இருக்க வேண்டும். வீரமணி அவர்கள் ஒரு குழப்பவாதி, அரசியல் சந்தர்ப்பவாதி, அவருடைய அறிவு இந்த மாதிரியான விடயங்களில் அவருடைய சூழல் மாற்றி உள்ளது. அவர் சாகமுன் தானாகவே போய் சுடுகாட்டில் படுத்து விடுவார் போல ஏன் தெரியுமா? அவருக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே........

Ragavan said...

அதுசரி அவங்க அவங்க அறிவுக்கு எட்டினபடி தான் அவர்களுடைய கதையும் செயலும் இருக்கும். என்பது நன்றாக தெரிகின்றது. கடவுள், அந்தணர்கள், பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள் சரியான முறையில் வளர்க்கப்படவில்லை என்பதையும், ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்படவர்களாகவே இருக்க வேண்டும். வீரமணி அவர்கள் ஒரு குழப்பவாதி, அரசியல் சந்தர்ப்பவாதி, அவருடைய அறிவு இந்த மாதிரியான விடயங்களில் அவருடைய சூழல் மாற்றி உள்ளது. அவர் சாகமுன் தானாகவே போய் சுடுகாட்டில் படுத்து விடுவார் போல ஏன் தெரியுமா? அவருக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே........

Ragavan said...

அதுசரி அவங்க அவங்க அறிவுக்கு எட்டினபடி தான் அவர்களுடைய கதையும் செயலும் இருக்கும். என்பது நன்றாக தெரிகின்றது. கடவுள், அந்தணர்கள், பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள் சரியான முறையில் வளர்க்கப்படவில்லை என்பதையும், ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்படவர்களாகவே இருக்க வேண்டும். வீரமணி அவர்கள் ஒரு குழப்பவாதி, அரசியல் சந்தர்ப்பவாதி, அவருடைய அறிவு இந்த மாதிரியான விடயங்களில் அவருடைய சூழல் மாற்றி உள்ளது. அவர் சாகமுன் தானாகவே போய் சுடுகாட்டில் படுத்து விடுவார் போல ஏன் தெரியுமா? அவருக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே........

தமிழ் ஓவியா said...





கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கடவுள் வழிபாடு மற்றும் பக்திப் பிரமிடு


- சரவணா.இரா

இன்றைய காலகட்டத்திலும் ஆலயங்களில் கூட்டம் கூடுகிறது என்றால் அந்தக் கூட்டத்தை நான்கு அடுக்குப் பிரமிடாகப் பிரிக்கலாம்.

முதல் அடுக்கு: தான் சார்ந்த மதம் என்ற சுயநலத்தில் கோயிலுக்குச் செல்பவர். இவர்களுக்கு 1%கூட கடவுள் பக்தியோ அல்லது பயமோ கிடையாது. இவர்களுடைய நோக்கம் வருமானம் மட்டுமே, இதில் பார்ப்பனப் பூசாரிகள் இதர ஜோதிடர்கள் மற்றும் கோயில்களில் கடை வைத்திருப்பவர்கள் காரணம். வருகிறவர்கள் எல்லாம் கன்னத்தில் தாளமிட்டு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொண்டு சென்றுவிட்டால் மேலே கூறியவர்களின் பிழைப்பிற்கு என்ன வழி?

இரண்டாம் அடுக்கு: கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது போல் நடிப்பவர்கள். இவர்கள் செல்வந்தர்கள், வியாபாரிகள், அதிகாரம் மிக்கவர்கள். இவர்களின் நோக்கமே ஆதாயம் _ உழைப்பின்றி ஆதாயம் பெறுவது. இவர்களுக்கும் கடவுள்பக்தி, பயம் என எதுவும் இம்மியளவும் கிடையாது. இவர்களுக்கு முதல் அடுக்குக்காரர்கள் பெரிதும் துணை செல்வார்கள். இலாபத்தொகையில் கணிசமான பங்கு முதல் அடுக்கு ஆட்களுக்கு உண்டு.

மூன்றாம் அடுக்கு: இவர்களுக்குப் பக்தி இருக்கும், ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்காது. எதற்குக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமல் செல்பவர்கள். இவர்களால்தான் பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

நான்காம் அடுக்கு: இருப்பதைக் கொடுத்துவிட்டு பகவான் செயல் என்று செல்லும் சாமானியர்கள். பிள்ளைக்குத் திருமணம் ஆகவேண்டுமா? மகளுக்கேற்ற மருமகனைத் தேடுவதைவிட்டு கோயில் கோயிலாகச் செல்வார்கள்!.

திருமணம் முடிந்து பிள்ளை பிறக்க வில்லையா? மீண்டும் கோயில்! மகள் குழந்தை யின்மைப் பிரச்சினையால் விரட்டப்பட் டாளா? மீண்டும் கோயில்! இவர்களின் பக்தி குறை யாமல் பார்த்துக் கொள்வதில் முதல்படி ஆசாமிகளின் பங்கு 100% உண்டு.

மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட முழு உழைப்பும் பிடுங்கப்படுகிறது. இதில் என்ன வருத்தமான செய்தி என்றால், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திருந்த மறுக்கிறார்கள். இவர்கள்தான் பக்தி வியாபாரத்திற்குத் தங்க முட்டையிடும் வாத்து. இந்த இறுதிநிலை மக்கள் திருந்தினால் ஒரே மாதத்தில் திருப்பதி ரெயில் நிலையம் இழுத்து மூடப்படும்.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

தகுதிக்கு அதிகமாகச் செலவு செய்பவர்கள் தங்கள் கழுத்துக்குத் தாங்களே சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்.
-_செர்பியா

தமிழ் ஓவியா said...

வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை