Search This Blog

26.9.12

பெரியார் அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்!

அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்! (2)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வைர விழா என்பது தமிழ்நாட்டின் சமூக, கல்வி வளர்ச்சி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு என்னும் திசையில் அது சாதித்திருக்கும் பட்டியலை நினைவு கூர்வதாகும்.

மருத்துவ உதவிப் பணிகளும் சாதாரண மானவையல்ல; சென்னை, திருச்சி, வல்லம், சோழங்கநல்லூர், சேலம், திருவெறும்பூர் என்று இதன் மருத்துவப் பணிகளின் கரம் நீளக் கூடியதாகும். இயக்கத் தோழர்கள் பலருக்குத் தேவையான  மருந்துகளையும் வாங்கிக் கொடுத்து வருகிறது. அதனை ஓர் அமைப் புக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற் காகவே பெரியார் மருத்துவக் காப்பு நிதி என்ற ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (வாய்ப் புள்ளவர்கள் நிதி தரலாமே!)


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் மனிதனை நினை என்று சொன்னதன் பொருளுக்கான விளக்கமும் - செயல்முறையும் இதன்மூலம் விளங்குமே!

பெரியார் அறக்கட்டளை ஒரு பக்கம் வளர்ந்து, அதன் பணிகள் பரவலாக விரிந்து, பயன்பெறுவோர் எண்ணிக்கையும் பெருகி வந்தாலும் உள்ளுக்குள் புகுந்து அழிக்கும் கிருமிகள்போல கூட இருந்தே குழி வெட்டிய கொடுமைகளும் நிகழ்ந்தன.

வெளிப்படையான இன எதிரிகள் ஒரு பக்கம் - இந்தத் தொண்டால் யார் பலன் அடைகிறார் களோ, அவர்களே அதனைப் புரிந்துகொள்ளாமல் எதிரிகளுக்கு அம்பாகப் பயன்படும் கொடுமை ஒருபுறம் - கூட இருந்தே உடன் கொல்லும் துரோகம் இன்னொருபுறம் - இவற்றையெல்லாம் கடந்துதான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் பணிகளும் ஓங்கி ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

வருமான வரித்துறை என்பது ஓர் ஆயுத மாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் முகம் கொடுத்து, சட்டப்படி அறக்கட்டளை என்று ஏற்கும்படிச் செய்த வகையில், நமது மதிப்பிற் குரிய அறக்கட்டளையின் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றியிருக்கும் பணியை யாராலும் அளவிடவே முடியாது. பாதுகாத்தது மட்டுமல்ல - அதனை வளர்த்திருக்கும் நேர்த்தி களையெல்லாம் எண்ணிப் பார்த்தால், இயக்கம் மட்டுமல்ல, இந்த நிறுவனங்களால் பலன் பெறுவோரும் காலாகாலத்திற்கும் நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளனர்.

தனது மகத்தான இந்த வெற்றிகளுக்குப் பின் பலமாக, பின்புலமாக இருந்தவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் பண்பாட்டை உள்ளடக்கியதுதான் திருச்சி விழா. இது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்று குறிப்பிட்டது மிகச் செறிவானதாகும்.


இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அப்படி நன்றி காட்டப்பட்டவர்கள் அவ்விழாவில் சொன்ன கருத்து - மிக உயர்ந்த சீலத்தைக் கொண்டதாகும். தந்தை பெரியார் அவர்களால் பலன் பெற்ற இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள், தந்தை பெரியார் அவர்களின் நிறுவனத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் தான் நன்றி கூறவேண்டும் என்று சொன்னார்களே, அந்த மெருகேறிய உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே!

தந்தை பெரியார் அவர்களை உணர்ந்தவர்கள், புரிந்துகொண்டவர்களின் ஒவ்வொரு செயல்பாடும், பண்பாடும் பெருநிலை கொண்டதாகத்தானிருக்கும் என்பதற்கு இவையெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து, அதனால் பலன் பெறும் மக்களின் தொகையும் பெருக நம்மால் இயன்ற உதவிகளைத் தொடர்வது என்று தமிழர்கள் உறுதி கொள்வார்களாக!


வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
                   --------------------”விடுதலை” தலையங்கம் 26-9-2012

3 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வைர விழா புற்றுநோய்த் தடுக்கும் தொண்டறப் பணி தொடக்கம் வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளித்து ஊக்கப்படுத்தலாம் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (பெரியார் டிரஸ்ட்) 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கிராமப் புறங்களில் புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளாகும் பெண் களுக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுப் பிரச் சாரம் மேற்கொள்ளப்படும் திட்டம்பற்றி பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது இயக்கத்தைப் பொறுத்தவரை, வரலாற்றுப் பெருமையை - கால வளர்ச்சியில் திளைக்கும்போது - வெறும் வெளிச்சம் போட்டுக் காட்டிடும் விழாக்களாக மட்டும் அவற்றை நடத்தி முடித்திடுவதில்லை.

வெள்ளி விழா (25 ஆண்டுகள்), பொன்விழா (50 ஆண்டுகள்), வைர விழா (60 ஆண்டுகள்), பவள விழா (75 ஆண்டுகள்), நூற்றாண்டு விழா என்ற வரலாற்று மைல் கற்களைச் சுட்டிடும்போதுகூட புதியதோர் லட்சியப் பாதை யில், மேலும் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பயணிக்க வேண்டும் என்பதே பகுத்தறிவாளர்களாகிய பெரியார் தொண்டர்களின் நோக்கமும், செயலுமாகும்.

பெரியார் நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக்

அதன் அடிப்படையில்தான் 1979 இல் தஞ்சையில் திரா விடர் கழகத்தால் தரப்பட்ட 100 பவுன்களை (அப்போது பவுன் விலை 800 ரூபாய்தான்!) மூல நிதியாக வைத்தே, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கைத் தொடங் கினோம். (அன்னையார் மறைந்து நான் பொறுப்பேற்றுச் சில மாதங்களில்) நூற்றாண்டு அய்யாவுக்கு வந்த நிலை யில் - ஓராண்டு முழுவதும் பிரச்சாரமாக மாவட்டத் தலை நகர்களில் விழா எடுத்தோம். (எம்.ஜி.ஆர். அவர்கள் தலை மையில் அமைந்த அரசும் ஓராண்டு விழா நடத்தியது).

திருச்சியிலும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி நூற்றாண்டு நினைவாகத் தொடங்கப் பெற்றது.

ஆக்க ரீதியாக நம் அய்யாவின் கொள்கைகள் சமுதாய வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக் - தொழில் நுட்பக் கல்லூரியை தஞ்சை வல்லத்தில் தொடங்கி, அது தனது 32 ஆம் ஆண்டில் பீடுநடை போட்டு, கனடா அரசாலும், தமிழ்நாட்டு அரசாலும் தலைசிறந்த கல்லூரி என்ற விருதினைப் பெற்று வளர்ந்து வருகிறது.


தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்

அதுபோலவே, எனக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகள், தங்கம், புதுக்கோட்டையிலும், தஞ்சையிலும் என்றும் நினைவில் வாழும் கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்களது பெருமுயற்சியால் மக்களால் அளிக் கப்பட்டது. மூன்று கோடி ரூபாய் மூலதன நிதியாகித் தான் தஞ்சையில் உலகின் முதல் பொறியியல் கல்லூரி - பிறகு அது வேக வளர்ச்சி பெற்று பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகமாய் தடைக்கற்களைத் தாண்டி - வளர்ந்தோங்கி உலகத்தாரின் மலைப்பைப் பெறுகிறது. மேனாள் குடியரசுத் தலைவர் அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் போன்றவர்கள் - அதன் சாதனைபற்றி அவர்தம் நூலில் எழுதிப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள்! இன்னும் பல உண்டு.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளை யின் உண்மை வயது 81 ஆண்டுகள் (1931 லேயே நிறுவப் பட கருத்துரு கொள்ளப்பட்டது). ஆனால், அதிகாரப்பூர்வ மாக பதிவு செய்யப்பட்டது 1952, செப். 23; அதற்கு இப் போது 60 ஆண்டுகள் என்பதால், வைர விழா எளிமையாக ஆடம்பர வெளிச்சம் இன்றி, ஆக்கப் பணிகளையே அணிகலன்களாக்கி அழகுபட அது நடந்தேறியுள்ளது!

புற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கை

அதில் துவக்கப் பெற்ற திட்டங்களில் - மனித நேயப் பணிகளில் ஒன்று, நமது மகளிருக்கு வரும் புற்றுநோய் களை காலத்தே விரைந்து அறிந்து கொண்டு சிகிச்சை மூலம் பாதிப்பு உள்ளவர்களைக் காப்பாற்றிட முடியும் என்ற விழிப்புணர்வை, சோதனைகளை நடத்திட (தக்க மருத்து வர்கள்மூலமாக) நடமாடும் ஊர்தி - மருத்துவமனையுடன் கிராமப்புறங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பது என்பதை வாரத்திற்கு ஒருமுறை (டாக்டர்கள் விடுமுறை நாள்களாக 2 நாள்களைத்தான் ஒதுக்கிடும் நிலை இருப்பதால்) சென்று ஆய்வு - மருத்துவம் - அறிவுரை வழங்கிடும் ஏற்பாட்டின் தொடக்க விழாவும் நடைபெற்றது.

அறக்கட்டளை இதற்குரிய மூலதனச் செலவினை ஏற்றுள்ளது என்றாலும்கூட, வாரந்தோறும், மருத்துவர்களாக பணிபுரிவோர் - இவர்களுக்காகும் குறைந்தபட்ச செலவு எல்லாம் சேர்த்து ரூபாய் 22,000 (இருபத்தி இரண்டாயிரம்) ஆகலாம்.

மாதம் ஒன்றில் இரண்டு அல்லது மூன்று (வார) முகாம்களை - கிராமங்களில் அமைத்து இந்த மனிதநேயப் பணியைத் தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழ் ஓவியா said...

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு புற்றுநோயால் மரணம் 4 லட்சம் பேர்

உலக அளவில் ஆண்டுதோறும் ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 60 லட்சம் பேர் மரணமடைகிறார்கள்.

இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். 4 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

ஆட்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றவர்கள் எண்ணிக்கைப் பெருகியே வருகிறது.

இருப்பினும் மருத்துவ ஆராய்ச்சியின் பயனாக, தக்க நேரத்தில் நோய் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்தி மீள வைக்க முடியும் என்பதால், தடுப்பு முறைகளையும் பிரச்சாரம் செய்து வெல்லலாம்; ஏழை, எளிய கிராமத் தாய்மார்கள் மத்தியில் இத்திட்டம் தொடக்கத்தின்போதே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது!

புற்றுநோய் மருத்துவர் திரு. டாக்டர் கோவிந்தராஜூ அவர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் பகுதிச் செலவினை ரூபாய் 11,000 (பதினோராயிரத்தினை) அளிப்பதாக 23.9.2012 திருச்சி விழாவிலேயே அறிவித்தார் பெரும்தொண்டுள்ளத்தோடு!

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

விடுதலை இணையத்தில் படித்த சிகாகோ பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த திருமதி அருள்செல்வி - பாலு அவர்கள் (தொலைப்பேசி வாயிலாக) ஒரு வாரச் செலவை தனது குடும்பம் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

தங்களது பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் நினைவாக ஒவ்வொரு வாரச் செலவுத் தொகையை வசதியும், தரும உள்ளமும் படைத்தவர்கள் அனுப்பினால், அந்தந்த வாரம் என்று முறையாக அவரவர்கள் பெயர்கள் பதிவு செய்து First Come First Served என்ற முறையில் அவரவர்கள் அறிவிக்க விரும்பும் பெயர்களால் அந்த வார அறப்பணி நடைபெறும்.

இதற்கென நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், வெளிநாட்டவர்களானால் தங்களது நன்கொடைகளை Periyar Maniammai ‘‘Institute of Science and Technology’’ என்ற பெயரில் Drafts - வரைவோலை எடுத்து அனுப்புவ தோடு, விவரமான கடிதம் ஒன்றையும் அதன் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.

உள்நாட்டவர்கள் ஆனால், வரைவோலைகளை - செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - Secretary, The Periyar Self-Respect Propaganda Institution என்ற பெயரில் Cross செய்து, கடிதத்துடன் அனுப்பிடலாம்.

அனைத்து மக்கள் பங்கு பெறும் இயக்கமாக (Campaign) இது நடந்தால்தான் இதற்குப் பெருமை என்பதால் இவ்வேண்டுகோள்.

துண்டேந்தியும் தொண்டு செய்வோம்!

இந்தத் தொண்டறப் பணிகளை எப்படியும் துண்டு ஏந்தியாவது தொய்வின்றி நடத்திடும் திட சித்தம் உள்ள தோழர்கள், தோழியர்களுடன் இந்த வைர விழாவில் புதியதோர் மனிதநேயப் பணி நல்ல துவக்கமாகி தொடருகிறது.

ஏற்கெனவே தஞ்சையில் பல ஆண்டுகளாக, நீதியரசர் ஜஸ்டீஸ் E. பத்மநாபன் அவர்களால் தொடங்கப் பெற்று சிறப்புடன் பணியாற்றி வருவதன் (புற்றுநோய் தடுப்பு - ஆய்வு) இரண்டாவது கட்டப்பணி இது.

மேலும் பாய்ச்சலுடன் (Deep Foreward) தனது பயணத்தை நடத்திடும்.

தஞ்சை புரா கிராமங்களில், இப்பணி தொடரக்கூடும்.

கடவுளை மற; மனிதனை நினை! - தந்தை பெரியார்.

சென்னை
26.9.2012

கி. வீரமணி
செயலாளர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்