Search This Blog

17.9.12

எனது தொண்டு மனித சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல!-பெரியார்

பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்!

(அனைவருக்கும் 134 ஆவது பெரியார் பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.-தமிழ் ஓவியா)

தந்தை பெரியார் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால் பெரிய ஏற்பாடுகள் செய்து பணப் போர்வை போர்த்தியும் பல அன்பளிப்புகள் செய்தும் பெருமைப் படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற ஆண்டும் இதுபோல செய்தீர்கள். எதற்காக இப்படிச் செய்கின்றீர்கள் என்றால், எனது தொண்டை உற்சாகப் படுத்தும் முறையில் இப்படிச் செய்கின்றீர்கள்.

எனது தொண்டு உங்களுக்குத் தெரியும். மனித சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வருகின்ற இழிவை, அறியாமையைப் போக்கச் செய்யப்படும் தொண்டாகும்.

இன்றைக்கு சட்டசபைக்குப் போக வேண்டும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும். பதவிக்குப் போக வேண்டும். பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதைத் தான் பொதுத் தொண்டாகக் கொண்டவர்கள் இருக்கின்றார்களே ஒழிய, மனித சமுதாயத்தின் திருத்தப்பாட்டுக்குத் தொண் டாற்ற எவரும் இல்லை. மனித சமுதாயத்துக்காக உழைத்தார்களா என்று பார்ப்போமானால், விரலை விடக்கூட ஒரு ஆள் இல்லை.

இந்த நாட்டில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள்,  அவதார புருஷர்கள் எல்லாம் தோன்றியுள்ளார்கள் - ஒருவருக்குக்கூட கவலை இல்லை. இந்தியாவுக்கு வெளியே போனால், நம் நாட்டைப் பற்றி அவர்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், மூட நம்பிக்கையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, காட்டுமிராண்டி நாடு என்று தான் கருதுகின்றார்கள். உலகத்தினர்கள் கண் களுக்கு முன்னால் நாம் சுத்த காட்டுமிராண்டிகள் என்று எண்ணப்படு கின்றோம்.

இன்றைக்கு உலகம் மளமளவென்று வளர்ந்து கொண்டே போகின்றது. விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு உன்னத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் நாடு மட்டும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது.

நமது காட்டுமிராண்டி நிலைக்குக் காரணம் நமது மதங்கள், இலக்கியங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவை என்றுதான் சொல்லலாம். இப்படி கடவுள், மதம், சாஸ்திரம் என்பவை எல்லாம் நமக்கு மட்டும் அல்ல, உலகில் மற்ற நாட்டினருக்கும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 100, 120 கோடி மக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை.

இவை  ரஷ்யா போன்ற சில நாடுகள் தான் இவைகளை நீக்கிப் பார்த்தால் மற்ற நாட்டுக்காரர்களுக்கு எல்லாம் கடவுள் உண்டு, மதம் உண்டு, சாஸ்திரமும் உண்டு. இவர்கள் 150 - 200 கோடி இருப்பார்கள். அப்படித்தான் மேல் நாட்டுக்காரர்கள் புத்தகங்களே எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் பகுத்தறிவையோ, விஞ்ஞானத் தையோ புதுப்புது கண்டுபிடிப்புகளையோ தடை செய்து குறுக்கே நிற்கவில்லை. உலகில் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட மதத்தினர்கள் ஆவார்கள்.

அவர்களுக்கு நம்மைப் போல பல கடவுள்கள் இல்லை. பல சாஸ்திரங்கள் இல்லை. ஒரே கடவுள், ஒரே சாஸ்திரம்தான் உண்டு. அவர்களுக்கு எல் லாம் மதத்திற்கு ஒரு தலைவன்தான் உண்டு. ஒன்று அல்லாமல் இரண்டு என்று நம்புகின்றவன் கிறித்துவனோ, முஸ்லிமோ ஆகமாட்டான். அவன் அஞ்ஞானி என்றே கருதப்படுவான்.

கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்று துறைகளிலும் நாம் எவ்வளவு மடையர்களாக உள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கிறித்துவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ என்றைக்கு முதல் ஏற்பட்டது என்பதற்கு காலக் குறிப்பு உள்ளது.

நமது மதத்துக்குக் குறிப்பே கிடையாதே. நமக்கு எது மதம்? எது சாஸ்திரம்? எது முதல் ஏற்பட்டது? என்பதற்கு ஆதாரமே கிடையாது. பார்ப்பான் நமது மதத்தையே வேத மதம் என்றுதான் கூறுவான். நமது மானங்கெட்டவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.

வேதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா என்றால் தெரியாது. நாம் ஏன் சூத்திரன்? தீண்டத் தகாதவன் என்றால் இந்து மதப்படி, கடவுள்படி, சாஸ்திரபடி தான் ஆகும். இவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் தொண்டாற்றுகின்றேனே, இதற்காகத்தான் இப்படி பாராட்டுகின்றீர்கள்.

கிறித்தவரும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான், உருவம் கிடையாது. அவருக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. அவர் கருணையானவர், அன்பானவர், அருளாளர் என்று தான் கூறுகின்றார்கள்.

நமது கடவுள் இப்படியா பல கடவுள், பல உருவங்கள், பெண்டு பிள்ளைக் குட்டிகள், சோறு சாறு கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணுகின்றானே. எந்தக் கடவுளை எடுத்தாலும் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம் இவற்றை அல்லவா கொடுத்து உள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் கண்டிக்க, புத்தி கூற எங்களைத் தவிர யார் உங்களுக்கு பாடுபட்டார்கள்?

இத்தகைய மடமைகளை எல்லாம் மாற்ற நமது அரசாங் கத்துக்கு சக்தி போதவே இல்லை.  நம்மை மனிதத் தன்மையில் பழக்கும்படியான நூல்கள் நம்மிடையே இல்லையே? நமது நாட்டில் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன. ஒருவன்கூட மக்களை திருத்தும்படியாக நாலு வரிகூட எழுதுவது கிடையாது. மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும்படியான செய்தி களைத் தான் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றார்கள்.

எனவே, இந்த நாட்டில் பகுத்தறிவு ஊட்டக் கூடிய சாதனங்களே இல்லாமல் போய் விட்டதே! ஏதோ, காமராஜர், நேரு ஆகியவர்கள் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்பாக, காங்கிரசுக்கு எதிர்ப்பாக போராட்டங்கள் நடைபெறு கின்றது என்றால் எதற்காக நடக்கின்றது? பகுத்தறிவு வளர்ச்சிக்கு எதிர்ப்பாகத்தான். காங்கிரஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாதாட வரவில்லை. இது போய்விட்டால் இன்று விடப் பல மடங்கு கேடான ஆட்சி தானே ஏற்படும்? என்பதற்காகத் தான் ஆகும்.

தோழர்களே, நாட்டில் எப்படி இத்தனை கடவுள்கள் தோன்றியுள்ளன. நமது முட்டாள்தனத்தை முதலாகக் கொண்டுதானே ஆரம்பிக்கப்படுகின்றன?

இந்த நாட்டில் மதத் துறையில், கடவுள் துறையில், சாஸ்திர, சம்பிரதாயத் துறையில் எவ்வளவு முட்டாளாக இருக்கின்றோமோ, அவ்வளவு முட்டாள் களாகத்தானே அரசியல் துறையிலும் இருக்கின்றோம்.

              -------------------------17.9.1965 அன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.9.1965

11 comments:

தமிழ் ஓவியா said...

இசைப்பாடல் - யார்...யார்....பெரியார்



இலண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜித் ஜி எழுதி, ராப் இசை வடிவத்தில் தானே பாடியுள்ள இப்பாடல், இன்றைய இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பெரியார் களம் சார்பில் ஒலிக்குறுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் ஒலி வலம் வரும் இப்பாடலை நீங்களும் தரவிறக்கம் செய்து கேட்கலாம். உங்களது செல்பேசியில் சேமித்து அழைப்பு மணியோசையாகவும் வைத்துக் கொள்ளலாம்.

தரவிறக்க: https://files.me.com/sme2010/eu8x7w.mp3

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்

உனக்காய் நீ வாழ, உனையே நீயாள, தனையே தந்தார் அய்யா
நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் அய்யா
தோளோடு தோளாக நின்றார் அய்யா - சுய
மரியாதை கொண்டாளச் செய்தார் அய்யா
நீ சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும்
உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும்
நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை
சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை
சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு - ஒரு
மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு

யார் யார் பெரியார் ... ரா ரா ஈ.வே.ரா

பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத
பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத
தெம்பு பலம் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே பெரு மடமை
வலிமை என்று பார்க்க போனா எருமைக்கும் நீ அடிமை
ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி
உன்னையறி பெண்ணையறி இதையும் நீ பகுத்து அறி

சாதகத்தை நம்பி மாழும் மடமை வேண்டாம் அம்மா
இங்கு சாதியிலே இழிகுலமாம் எழுதிவைச்சான் சும்மா
கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா - என்றும்
ஆணும் பெண்ணும் நிகரே என்றுன் மனம் உணரணுமம்மா
சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் - உன்
பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும்

யார் யார் பெரியார் ... ரா ரா ஈவே.ரா

நரைத்து இளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார்
உனை அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றது வேறுயாரு
உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பிநீ விட வேணும் - எமை
வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும்
எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் - எமை
மழுக்க நினைக்கும் அனைத்தினையும்நீ தகர்த்தெறிந்திடவேணும்

தமிழ் ஓவியா said...

பொளந்து கட்டுறார்

"காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,

ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு, அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு "அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்"னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.

அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல்ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு

மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.

பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.

- காமராஜரின் தங்கை நாகம்மாளின் மருமகள் தங்கம்மா காமராஜர் குடும்பத்தின் வலைப்பூ kamarajar.blogspot.in--லிருந்து

தமிழ் ஓவியா said...



காலத்திசை காட்டும் பெருங்கிழவன்

அவன் யாரென இவர்கள் துழாவிக் கொண்டிருந்தார்கள்.
நாம் யாரெனக் கண்டறிந்து தந்தான் அவன்.

அவன் மொழி எதுவென
இவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
நம் மொழியை புதைசேற்றிலிருந்து
மீட்டுத் தந்தான் அவன்.

அவன் இனம் பற்றி
இவர்கள் ஆய்வு செய்கையில்
நம் இனத்தை
அடையாளம் காட்டியவன் அவன்.

ஆத்திரச் செருப்பெடுத்து
அவன் மீது வீசிவிட்டு
வீழ்த்திவிட்டதாய் சுய மோகம் கொள்கின்றனர் குருட்டு மூடர்கள்.

கோபப்படமாட்டான்
கொள்கையாய் வாழும் பெருங்கிழவன்.

இன்னும் தன் பணி
இங்கே நிறைவடையவில்லை என்றே
பகுத்தறிவு விளக்கைக் கையிலேந்தி
காலத்திசை காட்டிடுவான்.
மூத்திர சட்டி சுமந்தபோதும்
நம் சூத்திரப் பட்டம் ஒழித்தவன் அவன்.

கல்லடியையும் சொல்லடியையும்
காலிக் கூட்டத்தின்
கலவரச் சேட்டைகளையும்
வாழும் காலத்திலேயே நேர்கொண்டு நின்றவன்

நெருப்பாறுகள் கடந்து
எதிர்ப்புகளை வென்றவன்.

வசவாளர்களை மீறி
வரலாறாய் நிற்பான்
இலட்சிய நிமிர்வுடன்
இன்னும் பல நூற்றாண்டுகள்... ...

- கோவி.லெனின்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் தத்துவ நயங்கள்


தந்தை பெரியார் பல நேரங்களில் உவமைகூறி தத்துவங்களை விளக்கும்போது, அதில் மிளிரும் நயம் பண்டிதர்களுக்கே வியப்பளிக்கக் கூடியவையாகும்.



1. 1925ல் சுயராஜ்ய கட்சியை பெரியார் கடுமையாக எதிர்த்தார். சுயராஜ்யவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களைக் கண்டித்து அவர்களின் யோக்கியதை என்ன என்பதை தத்துவ நடையில் எழுதினார்.

இவர்களை சுயராஜ்யவாதிகள் என்று கூப்பிடுவதே விபச்சாரிகளை தேவதாசிகள் என்று கூப்பிடுவது போலும், கொடுமைக்காரரை பிராமணர் என்று சொல்வது போலும், தற்கால கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தல மென்றும், நியாயவாதியென்றும் சொல்லுவதுபோலும், சர்க்கார் உத்தியோகஸ்தரை பொதுநல ஊழியர்கள் என்று சொல்வதுபோலும், தேசத்தின் பொருளைக் கொள்ளையடித்துக் கொண்டுபோக வந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும், அந்நிய ராஜ்யம் நிலை பெறுவதற்கு பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்ய கட்சியினர் என்று குறிப்பிடுவது ஆகும். (குடியரசு 20.09.1925)

2. மதச்சார்பின்மை என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க அவர்தந்த தத்துவார்த்த உவமை உச்சநிலை நயமுடையதாகும்.
மதச்சார்பின்மை என்றால் எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது; எந்தவொரு மதத்திற்கும் சார்பாக நடவாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். நமது அரசும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது.

தமிழ் ஓவியா said...

எல்லா மதப் பண்டிகைகளுக்கும் விடுமுறை விடுவது, நிதி உதவுவது, எல்லா மத விழாக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, வானொலியிலும், தொலைக் காட்சியிலும் எல்லா மதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிபரப்புவது, ஒளிபரப்புவது.

ஆனால், இது மதச்சார்பின்மையா என்றால் இல்லை. மதம் சாரா அரசு என்றால் மதத் தொடர்பான எந்த செயலையும் செய்யக்கூடாது. அது தனிப்பட்டோர் செயல்பாடு என்று கருதவேண்டும். சுருங்கச் சொன்னால் மதத் தொடர்பு இல்லாதிருத்தலே மதச்சார்பின்மை. மாறாக எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது அல்ல.

இதை விளக்க தந்தை பெரியார் அற்புதமான ஓர் உவமையை தத்துவமாகக் கூறினார்கள்.

கன்னிப்பெண் என்றால், ஆண் தொடர்பு (உறவு) இல்லாதவள் என்பதுதான் பொருள். மாறாக எல்லா ஆண்களையும் சமமாகக் கருதுபவள் அல்ல என்றார் நயம்மிளிற.

3. 1927ல் காந்தியாரை பெரியார் சந்தித்து மதம் சார்ந்து விவாதித்தார். அப்போது காந்தியார், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக்கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா? என்று பெரியாரிடம் கேட்க, நான் யாரையும் பாக்கவில்லை என்று பெரியார் பதில் அளிக்கிறார். அதற்குக் காந்தியார், அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர். அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே என்றார். இதைக்கேட்ட பெரியார், ஓ! உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாய் இருக்கலாம். ஆனால் என்னைப்போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியம்? என்றார்.

பெரியாரின் நயமான, இந்த பதிலைக் கேட்ட காந்தியார், அதிலுள்ள சொல்லாற்றலை, நயத்தை, நகைச்சுவையை எண்ணி வாய்விட்டுச் சிரித்தார்.

4. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம், விடுதலை ஆசிரியர் பொறுப்பை அய்யா வழங்கியபோது, அய்யா இவ்வளவு பெரிய பொறுப்பை என்னால்... என்று இவர் தயங்கியபோது அய்யா சொன்ன அறிவுரை இருக்கிறதே அது நுட்பமும், சுருக்கமும் நயமும் உடையது.

நீங்கள் எம்.ஏ.,பி.எல்., படித்தவர்கள். ஆங்கிலம் நன்றாகத் தெரியும். பிவீஸீபீ பேப்பர் என்ன எழுதுகிறானோ அதற்குப் எதிர்ப்பாய் எழுதுங்கள் அதுதான் விடுதலை என்றாராம் பெரியார். ஆசிரியர் _அய்யாவின் நுட்பத்தையும், தெளிவையும், நறுக்குத் தைத்தாற்போன்ற நயத்தையும் கண்டு நெகிழ்ந்து மகிழ்ந்தார்கள். இதுபோன்ற பதில்கள் அய்யாவுக்கன்றி எவர்க்கும் வந்ததில்லை. ஆம். அடுத்த நயத்தைப் பாருங்கள் புரியும்.

ஆரியப் பார்ப்பனர்கள் பரம்பரையாய் படித்தவர்கள். நம் மக்களோ படிப்பறிவு இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஏய்த்துவந்தனர்.

இந்நிலையில் ஆங்கில ஆட்சி முடிவுற்றது. இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு தேர்தல் வந்தது. மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க வேண்டும். வாக்களிக்க வேண்டுமானால் விழிப்பு வேண்டும். இன்றைக்கு நமது மக்கள் ஏமாந்து, பார்ப்பன சூழ்ச்சியில் மயங்கி வாக்களிக்கிறார்கள் என்னும்போது அன்றைய நிலையைச் சொல்லவும் வேண்டுமா? பார்ப்பனர்கள் நம் மக்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள் என்பதால், நம் மக்கள் விழிப்போடு இருக்க ஒரு அறிவுரையை தத்துவ நயத்தோடு தந்தார்.

பார்ப்பான் விஷயம் தெரிந்தவன். தனக்கு எது நல்லது; யார் வந்தால் நல்லது என்று சிந்தித்து ஓட்டு போடுவான். நம் மக்களுக்கு அந்த விழிப்பு இன்னும் வரவில்லை. அதனால், ஒரு எளிய வழி சொல்கிறேன். பார்ப்பானுக்கு நல்லது என்றால் அது நமக்குக் கேடு. அவன் யாரை ஆதரித்து ஓட்டுப்போடுகிறானோ, பார்ப்பன ஏடுகள் யாரை ஆதரித்து எழுதுகின்றனவோ அவர்களை எதிர்த்து நீங்கள் ஓட்டுப்போடுங்கள். அதுதான் நமக்கு நன்மை தரும் என்றார். இதில் உள்ள நயமும், நுட்பமும் எத்தகையது பாருங்கள்.

இந்த அளவுகோலைத் தமிழர்கள் இன்று பின்பற்றியிருந்தால் இன்றைக்கு தமிழகத்திற்கு இந்த அவலம் வந்திருக்குமா? பார்ப்பனர் எண்ணம் ஈடேறியிருக்குமா?

- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...

புரட்டுக்கு மறுப்பு



கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

- கி.தளபதிராஜ்

அண்மையில் சிம்ம வாகனி என்பவர் தனது முகநூலில் ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி "பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல.. அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல.".என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை படியுங்கள்!

"அதிசயச்சாமியாரும் நம் பாமரமக்களும்"

இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கிறார்.அவர் மகமது சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆகிற்றாம். மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம்!. மூன்று மாதகாலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக்குடிக்குச் சென்று அங்குள்ள ஒரு வறண்ட குளத்திலே போய் அவர் கை வைத்த மாத்திரத்தில் தண்ணீர் பெருகிவிட்டதாம்!.

அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்து தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்றாராம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் நிவர்த்தியாகின்றதாம். ஆகா! என்ன ஆச்சரியம்? இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லுவதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது, ஒரு மனிதன் கடவுளும் செய்யொனாத காரியங்கள் செய்வதென்றால் பகுத்தறிவுள்ள எவரும் நம்ப ஏதும் உண்டா?

நிற்க. இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்ட மாத்திரத்தில் கர்ப்பம் உற்பத்தியாகின்றதாம்!.

முன் தேவர்களுடைய கலிதமான இந்திரியத்தைச் சாப்பிட்ட பின் குழந்தைகளோ மிருகங்களோ உற்பத்தியானதாகப் புராணங்கள் புளுகின. இப்பொழுதோ குளத்து தண்ணீரை குடித்த மாத்திரத்தில் குழந்தை உற்பத்தியாகின்றதென்றால் ஆண் பிள்ளைகளுக்கு இனி அது சம்மந்தப்பட்ட வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சாமியாரிடம் வரம் கேட்க நூறு மைல் சுற்றுப்புறமிருந்து நம் சகோதர சகோதரிகள் வந்து குவிந்து ஒரு செம்பு தண்ணீர் கொண்டு போகிறார்கள். எவ்வளவு பணம் விரயமாகிறது. கூடிய சீக்கிரம் அவ்வூரில் ஜனநெருக்கடி மிகுதியால் காலரா போன்ற வியாதிகள் நிச்சயமாக வரும் போலிருக்கின்றபடியால் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அதை உடனே நிறுத்தி நிவர்த்தி செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

- குடிஅரசு கட்டுரை (12.7.1931)

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தேவை - இன்று : ஜாதி ஒழிப்பில்


ஒருபோதும் அஞ்சாதவர்

"இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஷாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும். (25.-03.-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு) இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். ஜாதி ஒழிப்பில் பெரியாரின் இலக்கும் மிகத் தெளிவானது.

ஜாதி அடுக்கின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பார்ப்பனர்களைத் தாங்குபவர்களாகவும், தங்களுக்குக் கீழ் அடுக்கில் இருக்கும் தலித் மக்களை ஒடுக்குபவர்களாகவும் இருந்த இடைநிலை ஜாதியினரை நோக்கியே பேசினார். இந்து மதத்தில் பறையர், பள்ளர்களை விட மோசமாக 'தாசி மக்கள்' என்று சூத்திரர்கள் அழைக்கப்படுவதை முகத்தில் அறைந்ததுபோல் பிற்படுத்தப்பட்டோரிடம் கூறினார். இடைநிலை ஜாதிச் சங்க மாநாடுகளில் கலந்துகொண்டு, அவர்களிடம் இருக்கும் சுயஜாதிப் பற்றை சாடினார். வன்னியகுல சத்திரியர்கள், ஆரியகுல வைசியர்கள் என்று போலிப் பட்டங்களை வைத்துக்கொள்வதைக் கடுமையாகக் கண்டித்த பெரியார், ஜாதி வேறுபாடுகள் நீங்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

ஆதிதிராவிடர்களின் நலனுக்காக தனிக் கிணறு, தனிப் பள்ளி தொடங்குவதற்கு காங்கிரஸ் செயல்திட்டம் வகுத்தபோது, 'இது ஜாதி வேறுபாடுகளை நிரந்தரப்படுத்தி விடும். பொதுக்கிணற்றில் ஆதிதிராவிடர்களை தண்ணீர் எடுக்கச் செய்வதே சரியான வழிமுறையாகும்' என்று காந்திக்குக் கடிதம் எழுதினார்.

தனிக் கிணறு ஒன்றை திறந்து வைக்க பெரியாரை ஆதிதிராவிடர்கள் அழைத்தபோது, அக்கூட்டத்திலேயே அதற்கு எதிராகப் பேசினார். ஆதிதிராவிடர்கள் குளிக்கத் தண்ணீரற்று அசுத்தமாக இருப்பதற்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும், இழிவாக நடத்தப்படுவதற்கும் இந்துமதத்தின் ஜாதி வேறுபாடுகள்தான் காரணமே அன்றி, அவர்கள் தினமும் குளித்து சுத்தமாக இருப்பதாலேயோ, மாட்டுக்கறி சாப்பிடுவதைக் கைவிடுவதாலேயோ உயர்வை அடைய முடியாது என்று எடுத்துக் கூறினார். இழிவு நீங்க இந்து மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தைத் தழுவச் சொன்னார். இராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தபோது, தமிழகம் முழுவதையும் திரட்டிப் போராடினார்.

இராஜாஜியை பதவியை விட்டே துரத்தினார். ஜாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினார். முதுகுளத்தூர் கலவரத்தின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்)க்கு ஆதரவாக நின்றபோது, தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக பெரியார் நின்றார். முத்துராமலிங்கத் (தேவரைக்) கைது செய்ய காமராஜரை வலியுறுத்தினார்.

ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பெரியார், ஒருநாளும் தன்னை ஆதிதிராவிடர்களின் தலைவராக அறிவித்துக் கொண்டதில்லை. அவர்களுக்கான தலைவராக அம்பேத்கரை அடையாளப்படுத்தியதோடு, தனது தலைவரும் அவரே என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்த பெரியார், தனிநாடு கோரியது அதற்காகவே. இந்தியாவோடு இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க விடமாட்டார்கள்; தனிநாடு அமைந்தால் நமது இழிவை உடனடியாக போக்கிக் கொள்ளலாம் என்பதில் பெரியார் கடைசிவரை உறுதியாக இருந்தார்.

"எங்கள் நாடு எங்களுக்கு வந்துவிடுமேயானால் கட்டாயம் இன்றைய தினம் நாங்கள் சொல்லுகின்ற இந்த உத்தரவைப் போடுவோம். இந்த நாட்டிலே எவனாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருந்தால் ஒருவருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்" (செங்கற்பட்டில் 5.11.1950ல் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு)

பெரியார் யாருக்கும், எந்த அடக்குமுறை சட்டத்துக்கும் ஒருபோதும் அஞ்சியதில்லை. பதவி சுகத்துக்காக தனது கொள்கைகளை ஒருநாளும் கைவிட்டதில்லை. மான, அவமானத்துக்குப் பயந்து தான் சொல்ல வந்ததை மறைத்தவரில்லை. இந்த தமிழ்ச் சமுதாயம் உலகின் மற்ற சமுதாயத்தவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் அவரிடம் இல்லை. அதனால்தான் பதவி, சுயநலன் சார்ந்த அரசியல் மேலோங்கியிருக்கும் இச்சூழலில் பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.

- கீற்று நந்தன் ஊடகவியலாளர்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தேவை - இன்று : மனிதநேயத்தில்


நம் இயக்கம் உலக இயக்கம்

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், எனக்கு வலிக்கிறது என்று சொல்வது போல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபடுகளையும்

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டுவாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் (உள்ள சமுதாயம்) ஏற்படும்.



-இதைச் சொன்னவர் பெரியார். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் 1943ஆம் ஆண்டிலேயே, இனி வரும் உலகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில், எதிர்கால சமுதாயம் குறித்து இப்படிக் கூறுகிறார். பிறருடைய துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதும் மனதுடைய மனித சமுதாயம் ஒன்று தோன்றவேண்டும்- தோன்றும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பெரியார் வெளியிட்ட கருத்து இது. உலகில் எந்த மூலையில் யாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், யாருடைய விடுதலை பறிக்கப்பட்டாலும், யார் அடிமையாக நடத்தப்பட்டாலும் அவர்களின் துயர் துடைக்கும் வகையில் உரிமைக்குரல் எழுப்பவேண்டிய அவசியத்தை இதன் மூலமாக உணர்த்தியிருக்கும் பெரியாரின் தேவை, நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இன்னல்படுகின்ற இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

ஈழத்தந்தை என்றழைக்கப்படும் தந்தை செல்வா அவர்கள் ஒரு முறை பெரியாரை சந்தித்து, தங்கள் உரிமைப் பிரச்சினைகள் குறித்து விவரித்துபோது, நாங்களே இந்த நாட்டில் (இந்தியாவில்) அடிமைகளாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவ முடியும்? என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார் பெரியார். இன்றும் நாம் இந்திய அரசிடம் நமது மாநில சுயாட்சி உரிமைகளைக் கோரியபடியே இருக்கிறோம். எனினும், ஈழத்தமிழர்களுக்காக இன்றுள்ள சூழலில் உலக அரங்கில் பல நாடுகளிலும், சர்வதேச அமைப்புகளிலும் வலுவானக் குரலை ஒலிக்கச் செய்ய முடியும். பெரியார் இன்றிருந்தால் அந்தப் பணியைத்தான் முன்னெடுத்துச் செல்வார். ஏனென்றால், உலகத்தின் போக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அன்றே விளக்கியவர் அவர்.


தமிழ் ஓவியா said...

தோழர்களே.. நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கிறோம். நம் இயக்கம் உலக இயக்கம். உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான். இவர்கள் இங்கிருந்துகொண்டுதானே பேசுகிறார்கள் என்று! முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும். அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச் சாதனங்கள் இல்லை. அது மட்டுமல்ல, தமது நாட்டைப்பற்றிக்கூட உணர வசதியில்லை. இன்று அப்படியல்லவே! அமெரிக்காவானது 10ஆயிரம் மைல்கள் என்றாலும் ஒன்றரை நாளில் அங்கு போய்விடலாமே! நமக்கு ரஷ்யாவுக்கும் 8மணி நேரப்பயணம்தானே! அங்கு போக 8மணி, காரியம் பார்க்க 8 மணி, திரும்பி வர 8 மணி என்று வைத்துக்கொண்டால் 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்குப் போய் வந்துவிடலாமே! இப்படியாக உலகம் விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது (-விடுதலை 14.11.1972)

மாற்றங்களை எதிர்பார்த்து ஏற்றுக்கொண்டு செயலாற்றியவர் பெரியார். அவருடைய ஒரே நோக்கம், மனிதர்களிடையே பேதங்கள் கூடாது என்பதுதான். அவன் எந்த நாட்டுக்காரனாகவும் எந்த இனத்தைச் சேர்ந்தவனாகவும், எந்த மொழியைப் பேசக்கூடியவனாக இருந்தாலும் மனிதர்களுக்குரிய உரிமைகளை பிறப்பினாலோ மதத்தினாலோ சாதியினாலோ வேறு எந்தக் காரணத்தினாலோ மறுக்கக்கூடாது என்று தன் இறுதி மூச்சு வரை பெரியார் போராடினார். இன்று உலகெங்கும் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படுகிறது. ஐ.நா அவையில் மனித உரிமைக்கென தனி அமைப்பு உள்ளது. சர்வதேச அளவில் தொடங்கி உள்ளூர்கள் வரை பல மனித உரிமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 1996-2001ல் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது முதல்வர் கலைஞரிடம் செய்தியாளர்கள், மனித உரிமைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன என்று கேட்டார்கள். அதற்கு கலைஞர் சொன்ன பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் இன்றைக்கு எதனை மனித உரிமை என்று சொல்கிறீர்களோ அதைத்தான் அன்றே பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் சுயமரியாதை என்று சொன்னார்கள் என்பதுதான் தலைவர் கலைஞரின் பதில்.

தனக்கான மதிப்பும் மரியாதையும் எவர் ஒருவராலும் பறிக்கப்படக்கூடாது, இழிவுக்குட்படுத்தப்படக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. இதன் விரிவாக்கமே, இன்று நாம் பேசுகின்ற மனித உரிமை. சக மனிதனை மதித்து நடக்கவும், அவனுக்குரிய உரிமைகளை அளிக்கவும் சமுதாயம் தயங்கக்கூடாது என்பதுதான் மனித உரிமையின் அடிப்படை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே இதுதான். அதனால்தான் சக மனிதர்களான- நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகள் மீட்கப்பட, உலகளாவிய கவனத்தை ஈர்க்கவும், சர்வதேச அமைப்புகளின் வாயிலாகத் தீர்வு காணவும் டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்கி, அதன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தலைவர் கலைஞர். பன்னாட்டுப் பிரதிநிதிகள்- சர்வதேச மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று அரிய கருத்துகளை வழங்கிய இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, ஐ.நா.மன்றத்திடம் அளிப்பதற்காகத் தளபதி அவர்கள் அங்கு நேரில் செல்லவிருக்கிறார். இந்த மாநாட்டிற்கு முன்பாகவே, அமெரிக்காவில் ஐ.நா. நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தும் டெசோவின் நோக்கம் குறித்தும் விளக்கி உலக அரங்கின் பார்வையை ஈர்த்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இத்தகையச் சூழலில்தான் தந்தை பெரியாரின் தேவையை உணரவேண்டியிருக்கிறது. யார் பழித்தாலும்-இகழ்ந்தாலும்-தூற்றினாலும் தன்மானத்தைவிட சமுதாயத்தின் மானமும் முன்னேற்றமுமே உயர்வானது என்ற இலட்சியத்துடன் போராட்ட வாழ்வை மேற்கொண்டவர் பெரியார். அவர் வெறும் மனிதரல்ல. அவர் ஒரு கொள்கை. ஒரு தத்துவம். வாழ்க்கை நெறி. அதனால் கொள்கை வடிவில் அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியர் வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, பெரியார் இன்று உலகமயமாகியிருக்கிறார். அதனால், அவருடைய கொள்கை வழியில் செயல்படும் கலைஞர் அவர்கள் உலகத்தின் பார்வையை ஈழப்பிரச்சினை நோக்கி ஈர்க்கும் வகையில் எவருடைய விமர்சனம் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றி வருகிறார்.

பெரியார் வழியில் மேற்கொள்ளப்படும் பயணம் தனது இலக்கை நிச்சயம் அடையும். ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும். மனிதநேயத்திற்கானப் புதிய விடியல் புலரும்.

- அசன் முகமது ஜின்னா, வழக்குரைஞர்

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 17

இந்நாள் உலக மானுட வரலாற்றில் ஒப்பற்ற திருநாள். மதமற்ற ஒப்புரவு உலகிற்கான ஒளி கிடைத்த நாள்.

தமிழ் மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாதிச் சழக்குகளில் பிணைத்துக் கொண்டு தாம் ஓரினம் என்ற உணர்வைப் பறி கொடுத்த திராவிட மக்களை மீட்டுத் தந்த ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த வரலாற்றில் குறிப்பு நாள்!

வரலாற்றை ஒழுங்காக எழுத விரும்புவோர் தமிழ்நாடு - பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் எழுதப்பட வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பாகும்.

அறிஞர் அண்ணா மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெரியார் ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பமாகும்.

தந்தை பெரியார் அழகாக - சரியாகச் சொன்னதுபோல இதுவரை பிறக்காத கடவுள்களுக்குத் தான் விழா எடுத்துள்ளார்கள்.

பிறப்பு - இறப்பு அற்றவன் கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள்களுக்குப் பிறந்த நாள் என்று சொல்லி கோயில் திருவிழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடிக் கொண்டிருப்பது முரண்பாடானது என்றாலும், மக்களை பக்தி பிடியிலிருந்து விலகிச் செல்லாமல் கட்டிப் போடுவதற்கும், அவர்களின் பொருளைச் சுரண்டுவதற்கும் அவை தேவைப்படு கின்றன.

இந்த மோசடியை அம்பலப்படுத்தவந்த அறிவுலக ஆசான்தான் தந்தை பெரியார்.

உலகில் யாரையும் மன்னிக்கலாம்; ஆனால் அறிவை நாசப்படுத்துபவர்களை மன்னிக்கவே கூடாது - முடியாது என்று பெரியார் சொன்னதில் மிகப் பெரிய உண்மையும், வாழ்வியல் தத்துவமும் நிமிர்ந்து நிற்கின்றன.

மதவாதிகள், பழைமைவாதிகள், ஆதிக்கவாதிகள் இன்று வரை தந்தை பெரியார் அவர்களையும் அவர் வழி செயல்படும் தலைவர்களையும், பெரியார் வகுத்துத் தந்த கொள்கைக் கோட்பாடுகளையும் இன்றுவரை கடித்துக் குதறுவதற்குக் காரணமே தங்களின் சூழ்ச்சி அஸ்திவாரம் நொறுக்கப்படுகின்றதே என்கின்ற ஆத்திரம்தான்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை, அவர் பட்டபாடு இயக்கச் செயல்பாடுகளின் அருமை எப்பொழுது புரியும் என்றால், தமிழ்நாட்டைக் கடந்து பிற பகுதிகளில் நிலவும் சமூகச் சுரண்டலைப் பழுதறத் தெரிந்து கொள்ளும்போதுதான்.

நேற்றோ, அதற்கு முன்போ பெரியார் தேவைப்பட்டு இருக்கலாம்; இன்று தேவையா என்றுகேள்வி எழுப்பும் - அப்பாவி அறிவாளிகள் சமூகத்தின் வேர் போன்ற பிரச்சினைகள் பற்றி நுனிப்புல் மேய்ந்து திரிவது பரிதாபம்தான்.

ஜாதியை எடுத்துக் கொள்ளலாம். இதனை வெளிப்படையாக ஆதரிக்கும், பிரச்சாரம் செய்யும் துணிவு - இந்நாட்டில் சங்கராச்சாரியார்களுக்குக்கூட கிடையாது.

அதே நேரத்தில் ஜாதியை கட்டிக் காக்கும் அம்சத்தில் அவர்கள் மிகவும் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்.

ஜாதி - தீண்டாமை என்பதெல்லாம் இன்று வரையிலும்கூட சட்டப்படி சாஸ்திரப்படி பாதுகாப்பாக இருக்கும் இடம் கோயில் கர்ப்பக் கிரகம்தான். அதற்கு வெடி வைத்தவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள்(?) இதற்குப் பச்சைக் கொடி காட்டியிருக்க வேண்டாமா? மூதறிஞர் என்று பார்ப்பன வட்டாரம் போற்றும் ராஜாஜியே இதனை எதிர்த்து வாதாட பரிந்துரை கடிதம் கொடுத்து, பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தாரா இல்லையா?

இன்றைக்கு ஆவணி அவிட்டத்தை - பூணூலைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியை - மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

இன்றைக்கும் மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் பார்ப்பனர் பகுதிகளில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகை கொடுத்துக் குடியிருக்க அனுமதி அளிக்கப்படுவதில்லையே!

சமூக நீதி என்றால் எதிர்ப்பது ஏன்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றால் ஏற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழ் செம்மொழி என்றால் ஆத்திரப்படுவது ஏன்? - கிண்டல் செய்வது ஏன்?

தமிழ்ப் பண்பாட்டுத் தளத்திலும் எந்த ஒரு கூறாவது பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் வெற்று முழக்கம்தான். உண்மையில் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு மூலமான ஜாதியை ஒழிக்க வேண்டாமா? அந்த ஜாதியை இந்திய அரசமைப்புச் சட்டம் அடைகாத்துக் கொண்டுதானே இருக்கிறது.

இது மாற்றப்பட வேண்டாமா? அதற்குத் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும் அவர் வழி பயணங்களும் தொடரப்பட வேண்டாமா?

அரசு மக்கள் அரசாக இல்லாமல் தனியார் வயப்படும் முதலாளித்துவத்தை முதுகில் சுமந்து செல்கிறதே - இதனை முறியடிக்கவும் - இந்த நாட்டுக்கான பொருளியல் கண்ணோட்டத்தில் பெரியாரியல் தானே தேவைப்படும்.

எல்லா வகையான முற்போக்குப் பயணத்திற்கும் சாதனைகளுக்கும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தேவைப்படுகிறார் என்பதை மறக்க வேண்டாம்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!17-9-2012

தமிழ் ஓவியா said...

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்
இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும்
மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் !

வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று
விவேகமாக என்றும் பேசிய வல்லவர் !

ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம்
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !

தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில்
தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் !

பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து
பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் !

மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு
மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் !

உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள்
உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் !

பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் !

இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம்
எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் !

அறியாமை இருளை அகற்றி விட்டு
அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் !

பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்
பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் !


சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர்
சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் !

பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் !
பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி