Search This Blog

4.9.12

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!பெரியார் இல்லாமல் இருந்திருந்தால்...

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! உச்சநீதிமன்ற நீதியரசர் சுட்டிக்காட்டிய வரலாற்றுச் சுவடுகள்சென்னை உயர்நீதிமன்றத்தின் 150ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.

1975ஆம் ஆண்டில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்திருந்த அணியினர் சார்பில் சென்னையில் நடை பெற்ற ஒரு விழாவில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதியரசர் ஜஸ்டீஸ் பி. சதாசிவம் அவர்கள் மிக அருமையானதோர், வரலாற்றுச் சுவடு களைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்படி சமூக உரிமைகளைக் காக்க அடிகோலின என்பதை மிகவும் ஆதார பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.

அவ்வுரையில் சுட்டிக்காட்டப் பெற்ற இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளும், அவை ஏற்படுத்திய தாக்கமும் அதன் விளைவாக ஏற்பட்ட சட்ட ரீதியான அமைதிப் புரட்சியையும் அசை போட்டுச் சிந்திக்கும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார்கள்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

1. 1950இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முழு அமர்வு(Full Bench) தலைமை நீதிபதி டாக்டர் ஜஸ்டீஸ் பி.வி. இராஜமன்னார் அவர்களது தலைமையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு -

செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண் 1928ஆம் ஆண்டு, முத்தய்யா (முதலியார்) அவர்கள் அமைச்சராக இருந்து நிறைவேற்றி செயல்படுத்திய கம்யூனல் ஜி.ஓ. (Communal G.O.) என்ற வகுப்புவாரி உரிமை ஆணையை  1950 முதல் அமுலுக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள சட்டப் பிரிவை 15(1)க் காட்டி இந்த ஆணை, அந்த  அரசியல் சட்ட பிரிவுக்கு  முற்றிலும் விரோதமானது என்று மனு போட்டார்.

வழக்கின் சுருக்க வரலாறு எம்.பி.பி.எஸ். படிக்க ஏற்கெனவே பட்டதாரியாகிவிட்ட பார்ப்பன அம்மையார், நான் மனு போட்டுள்ளேன். வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருப்பதால் என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு அந்த இடம் கொடுக்கப்படும் என்பதால் எனது அடிப்படை உரிமையைப் பறிக்கிறது அந்த வகுப்புரிமை ஆணை ஆகவே அரசியல் சட்ட விரோதம் என்று கூறினார்.

வாதாடியோர் யார்?

இவருக்காக பிரபல மேனாள் அட்வகேட் - ஜெனரல் அம்புஜம்மாள் தந்தையான வி.வி. சீனுவாச அய்யங்கார் (காங்கிரஸ்காரரும்கூட) -  அரசியல் சட்ட வரைவு கர்த்தாக்களின் இறுதி ஆறு பேர் குழுவின் ஓர் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றவர்களே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜராகி வாதாடினர். பொதுவாக, பெரும் நிலைக்குப் போன பிறகு பிரபல வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களுக்கு வந்து வாதிடுவதைத் தவிர்ப்பார்கள்; ஆனால் அவர்களின் இனமானம் முன்பு அவாளின் தன்மானம் மிகச்  சாதாரணமாக விடைபெற்றுக் கொள் ளும் என்ற வழமைக்கேற்ப அவரே சட்டத்தைச் செய்து சூட்டோடு சூடாக அதையே சுட்டிக்காட்டி வாதாடினார்.

கல்வியில் இப்படி இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைப் பகுதியில் இல்லை என்றனர்.

மெஜாரிட்டி தீர்ப்பும் - தந்தை பெரியார் போராட்டமும்

மூன்று நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வில், பெரும்பான்மையான இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித் தனர்.

Minority Judgement என்ற முறையில் ஜஸ்டீஸ் திரு. என். சோமசுந்தரம் அவர்கள் தனித் தீர்ப்பு - அரசியல் சட்டத்தின் வேறு சில பிரிவுகள் Directive Principles the State Policy நெறிமுறைகளுக்கும் சட்ட வலிமை உண்டு என்ற தொலை நோக்குப் பார்வையோடு, விரிந்த விளக்கமாக (Liberal Interpretation) தந்து எழுதினர். (பின்னால் பஞ்சாப் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் Om Prakash vs State என்ற வழக்கில் இந்த மெஜாரிட்டி நீதிபதிகள் தீர்ப்பை ஏற்காமல், மைனாரிட்டி (சோமசுந்தரம் தீர்ப்பையே சரியென்று ஏற்று எழுதினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்)

இந்திய அரசியல் சட்டத்தின் இடஒதுக்கீடு கல்வியில் செய்ய வற்புறுத்தி, தந்தை பெரியார் அவர்கள் செய்த திராவிடர் இயக்க பெரும் மக்கள் கிளர்ச்சி அறப்போர் - இந்திய நாட்டின் - மத்திய அரசின் கவனத்தை ஏற்றது;

முதல் திருத்தம்

அன்று பண்டிதநேரு அன்றைய பிரதமர், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர்.

இருவரும் யோசித்து, நாடாளுமன்றத்தில்  1951இல்  முதலாம்  அரசியல் சட்டத் திருத்தம் (First  Ammendment to the Constitution of India) கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

அப்போது பிரதமர் நேரு மிகவும் தொலைநோக்குடன், இந்தக் கிளர்ச்சி இப்போது சென்னையில் தமிழ்நாட்டில் - தான் தொடங்கியுள்ளது என்றும் இந்தியா முழுவதிலும் இக்கோரிக்கை பரவும் நிலை இனி வரும் என்பதால் இத்திருத்தம் தேவைப்படுகிறது என்று நாடாளுமன்றத் தில் குறிப்பிட்டார்!

15(4) என்ற புதிய பிரிவு -   சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வழி வகுத்து, வகுப்புவாரி உரிமை, சமூகநீதி நிலை நாட்டப்பட்டது.

இதில் ஒரு முக்கிய தகவலும் வெளியே அதிகம் பரவாத ஒரு செய்தி - பதிவு செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பமே போடாத பார்ப்பனப் பெண்

கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று ரிட் மனு போட்டு - எவரது சார்பில் வி.வி. சீனுவாசய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் வாதாடினார்களோ - அந்த செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, மருத்துவக் கல்லூரிக்கு மனு போடாமலேயே, போட்டதாக உண்மைக்கு மாறான ஒரு தகவலை பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) கையொப்பமிட்டு கூறியுள்ளது, எடுத்த எடுப்பிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டியதொரு வாய்ப்பாகும்.

ஏனெனில் சட்டப்படி, ரிட் மனுவின் சட்ட உரிமை என்பது. (Principle of  Writ) “Where there is a legal right, there is a legal remedy’’ என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும்.

இவருக்கு வழக்குப் போட உரிமை  எப்போது கிடைக் கிறது என்றால் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டிருந் தால் மட்டுமே. ஆனால் மனு போட்டதாக பொய்ப் பிரமாணம் கொடுத்ததே சட்டப்படி குற்றமாகும்.

அதைப் பற்றி கவலைப்படாமல் அந்த இரண்டு படே மூத்த சட்ட நிபுணர்கள் வாதாடியது அதைவிட நேர்மையற்ற செயல்.

குமாரசாமி ராஜா முதலமைச்சராகவும், மாதவமேனன் கல்வி அமைச்சராகவும்  குட்டிக் கிருஷ்ணமேனன் அட்வ கேட் ஜெனரலாகவும் இருந்தனர். நன்றாக வாதாடினார் குட்டிக் கிருஷ்ணமேனன். அப்போது  தொடக்கத்திலேயே இதனை எடுத்துக் கூறிடத் தவறிவிட்டனர்.   உச்சநீதிமன் றத்தில் - இவ்வழக்கு வந்தபோதுதான், சென்னை மாகாண அரசு சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சுட்டிக் காட்டினர்.

இந்த அலட்சியத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் செய்தார்கள் வாய்மொழி மூலம். ஆனால் இது too late now to interfere என்று கூறி ஆட்சேபத்தை தள்ளுபடி செய்தனர்.

தந்தை பெரியார் இல்லாமல் இருந்திருந்தால்...

இவ்வழக்கின்மூலம் பார்ப்பனர்களின் மனுதர்ம வாதிகளின் நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி குலதர்மப் பாதுகாப்பு மனப்பான்மை அகில உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட....

இன்று அதனால் அல்லவோ சமூக நீதிக் கொடி இந்தியா முழுவதும் பறந்து ஒளி  வீசித் தொடங்கியுள்ளது. தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் இல்லாமல் இருந்திருந்தால்...? யோசியுங்கள் தோழர்களே!
அடுத்து நீதியரசர் கூறியது 76ஆவது சட்டத் திருத்தம் (அதுபற்றி அடுத்த கட்டுரையில்).

         ------------- கி.வீரமணி அவர்கள் 4-9-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

அட, ரமணா!


வானிலை ஆராய்ச்சி மய்யம் ஒன்றை அறிவித் தால், அதற்கு நேர்மாறான பொருள் கொள்ள வேண் டும் என்ற உரையாடல் அனைத்து மய்யங்களிலும் நகைச்சுவை துக்கடா வாகச் சொல்லப்படுவ துண்டு. (சில நேரங்களில் அவர்கள் சொல்லுவது போல மழை பொழிவதும் உண்டு)

சென்னை வானிலை ஆராய்ச்சி மய்ய இயக்கு நராக இருக்கும் ரமணன் எல்லோருக்கும் அறிமுக மானவர் ஊடகங்களின் உதவியால்; அவருக்குப் பணிமாற்றம் என்பதெல் லாம் கிடையாது - சாசுவ தமான பதவி இடம்.

வானிலை மய்யம் ஓர் அறிவியல் கூடம் - அது ஒன்றும் பஜனை மடமில்லை. பஜகோவிந்தம் பாடுவதற்கு.

அவர் திருவாய் மலர்ந்த கதையைக் கேட் டால் ஒரு பக்கத்தில் சின மும், இன்னொரு பக்கத்தில் சிரிப்பும்தான் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

அப்படி என்னதான் திருவாய் மலர்ந்தார் சொல்லிவிட்டார்?

மழை பொழிவதற்காக கடவுளையும், ரமண மகரிஷியையும் வேண்டிக் கொண்டுள்ளேன்! - என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைச் சொல்லுவ தற்கா ஆயிரக்கணக்கில் ரூபாய் சம்பளம் கொடுத்து அந்த நாற்காலியில் அமர்த்தப்பட்டுள்ளார்?

மழை பொழிவது கடவுள் செயலா? அரு ளாலா? மழை பொழிய வில்லை என்றால் கடவு ளுக்குச் சக்தியில்லை. அருள் இல்லை என்று ஒப்புக் கொள்வார்களா?

கடவுள்தான், மக்களை யும், உலகத்தையும் படைத் தார் என்றால், அந்த அப் பனின் கடமை என்ன? மக்களுக்குத் தேவையான மழையைக் கொடுக்காவிட் டால் அவனைவிட பொறுப் பற்றவன் அயோக்கியன் வேறு யாராக இருக்க முடியும்?

மழை பொழிந்து வெள்ளக் காடாகி மக்களை, ஆடு, மாடுகளைப் பிண மாக மிதக்கச் செய்வது ஒருபுறம். மழை பொழி யாமல் வறட்சி நெருப்பில் வறுத்து எடுத்து மக்கள் பஞ்சம் பட்டினியில் சாவது இன்னொரு புறம்.

இவை எல்லாம் கடவுள் செயல் என்றால் பரந்து கெடுக உலகியற்றியான்! என்ற வள்ளுவரைத்தான் துணைக்கழைக்க வேண் டும்.

மக்கள் மத்தியில் விஞ் ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று இந் திய அரசமைப்புச் சாசனம் (51A(h) கூறுகிறது.

இங்கு என்னடா என்றால், வானிலை மய்ய மான விஞ்ஞான கூடத்தில் உட்கார்ந்துகொண்டு அஞ்ஞான குப்பைகளைக் கொட்டிக் கொண்டு இருக் கிறார்கள். அதுவும் ரமண ரிஷியைப் பிரார்த்திக்கிறா ராம். அந்த ரமண ரிஷியே புற்று நோய் வந்து செத்த ஆசாமி - அவருக்குச் சக்தி யிருந்தால் ஏன் அந்த நோய் அவருக்கு வர வேண்டும்?

படிப்பு வேறு - பகுத்தறிவு வேறு என்ற தந்தை பெரியார் அவர்களை இந்த இடத்தில் நினை யுங்கள்!.

- மயிலாடன் 4-9-2012

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே?

உழைப்பவனிடம்தான் கடவுள் இருப்பதாக தென் னிந்திய சபைத் தலைவர் பாதிரியார் ராஜ் பிரசங்கம் செய்திருக்கிறார்.

வறுமைக் கோட்டுக் கும் கீழ் இருப்பவர்கள் அத்தனைப் பேரும் உழைப்பாளிகள்தானே! அந்தக் கடவுள் எங்கே போனாராம்? உழைக் காமல் உப்பரிகையில் வாழ்கிறார்களே - அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு விட் டாரா உங்கள் கடவுள்?

மலம் அள்ளுவது

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் பிரச்சினை தொடர்பாக நான்கு மாநில செய லாளர்கள் நீதிமன்றத் திற்கு நேரில் வர வேண் டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது.

நான்கு நாட்களுக்கு மலம் அள்ளுவதை நமது தோழர்கள் நிறுத்தினால் தான் இதற்கு விடிவு பிறக்குமோ! 4-9-2012

தமிழ் ஓவியா said...

நாம் முன்னேற, இந்தக் கூடுதல் திறனும் தேவை!

நம் ஒவ்வொருவருக்கும் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், செயல்திறன், சிந்தனைத் திறன், கேட்புத் திறன் - முதலிய பல்வகை ஆற்றல்களுடன் இணையாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கூடுதல் திறன் ஒன்றும் உண்டு.

அதுதான் மறுப்புத் திறன் (Refusal Skill) என்பதாகும்.

இத்திறன் வேறு ஒன்றுமில்லை. முடியாத பொறுப்புக்களை, பணிச் சுமைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குவோம் நம்மில் பலர். என்றாலும் நம்முடைய மேலோர் கள் - அப்படிச் சொன்னால் நம்மைப் பற்றி வேறு விதமாக நினைத்துவிடுவார்களோ என்று நாம் எண்ணி, நம் சக்திக்கு அப்பாற்பட்டதை எல்லாம் கூட நம் நெஞ்சம் முணுமுணுக்கும் நிலை யில் கூட - செய்கிறோம் என்று ஏற்றுக் கொள்வதும், பிறகு கெட்ட பெயர் வாங்குவதும் என்ற அவல நிலை அறவே தவிர்க்கப்படுதல் நல்லது - ஏன் அவசியமுங் கூட!

எடுத்துக்காட்டாக, 150 கிலோ உள்ள எடைச் சுமையை என்னை விட்டுத் தூக்கச் சொன்னால் முடியுமா? எனக்கு என்னதான் ஆசை, முயற்சி இருந்தாலும் கூட.

உடனே நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற வழமையான வாக்கியங்களை இங்கே பயன்படுத்துவது பொருத்த முடையதல்லவே!

சிலருக்கு செய்யும் ஆற்றல் இருந் தாலும்கூட, நேரம் இருக்கவேண் டுமே! ஒரே நேரத்தில சில நண்பர்கள் பல பேரிடம் தலையாட்டி, முடியாது No - மாட்டிக் கொண்டு சூடி - என்று சொல்லத் தெரியாமல் - தாட்சண்யத் திற்காக தலையாட்டும் தம்பிரான் களாகி விடுகின்றனர்! விளைவு...?

அவர் புதிதாக சம்பாதிக்கும் கெட்ட பெயர்தான்!

வாழ்க்கையில் காலத்தை நாம் அளந்து திட்டமிட்டு, எண்ணி எண்ணி செலவிடப் பழகவேண்டும்.

எதையும் கால அட்டவணை போட்டு செய்யப் பழகிக் கொண்டால் நம் உடலும் மனமும்கூட ஒத்துழைப்பு நல்கும் என்பது உறுதி!

மிருதுவான முறையில் பேசி, இயலாமைக்கு வருந்தி நாம் நமது மறுப்புத் திறனை மெல்லிய வெளிச்சம் போல் காட்ட வேண்டும்.

நாம் பார்க்கும் நிலையில் எத் தனையோ குடும்பங்களில் கணவன் சொன்னவுடன் - அல்லது சொல்வ தற்கு வாயெடுக்கும் முன்பே, நோ, முடியாது, அதெப்படிங்க நடக்கும்? போன்ற சொற்கள் வந்து விழுந்து, ஒரு பெரும் குழப்பம், கோபம், ஆத்திரத்தை இருவர் மனங்களிலும் விதைத்துவிடும் அபாயம் உண்டு. இதைத் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், அதே மறுப்புத் திறனை, உரத்த குரலைத் தவிர்த்து, அதில் உள்ள சிக்கல்களைப் புரிய வைத்து, தனக்குள்ள இக்கட்டான சந்தர்ப்பங்களை விளக்கினால், அதனால் யாரும் கோபப்படாமல், பக்கு வத்துடன் - பான்மையுடன் எடுத்துக் கூறி, தமது இயலாத சூழ்நிலையை விளக்கிவிட்டால் விளங்கிக் கொள் ளாதவர் பெரும்பாலோர் இல்லையே!

கனியிருக்கக் காய் கவராமல் இதமான குரலில், இனிய வகை யில், நம் இயலாமைக்கு நாமே வருந்துகிறோம் என்று நமக்குக் கட்டளை பிறப்பிக்கும் மேலவர், உட்பட எல்லோரும் நம்மை - நமது மறுப்புத் திறனை ஏற்று பாராட்டவே செய்வர். எந்தப் பொறுப்பை ஏற்றா லும், இந்தத் தேதிக்குள் முடித்துத் தருவேன் என்று சொல்லுமுன், சிந்தித்துச் சொல்ல வேண்டும்.

சில நண்பர்களிடம் சொல்வ துண்டு. அய்யா, நீங்கள் இரண்டு நாள் தவக்கமாகக் கூடச் சொல் லுங்கள். ஆனால் சொன்ன நாளில் தாருங்கள் என்று.

அதில் உறுதியாக இருந்தால் நம் வளர்ச்சிக்கு அது வழி வகுக்கும்; நம்மை முன்னேற்றச் செய்யும். அந்த மறுப்புத் திறன் -நோ, இயலாது “Sorry” என்பது சோம் பலினாலோ, பயத்தினாலோ, அகங்காரத்தினாலோ, சொல்லு வதாக அமையாமல் உங்களைக் காத்து உயர்த்த இந்த மறுப்புத் திறனை (Refusal Skill) வளர்த்து முன்னேறுங்கள்.

--கி.வீரமணி 4-9-2012

தமிழ் ஓவியா said...

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பதா?

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் தமிழ்நாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பெருமை யாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, முழுமையாக தமிழ்நாட்டுக்கே பயன்படுகிறது என்று சொல்ல முடியாது.

நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுமே யானால் மின் தட்டுப்பாடு என்ற பிரச்சி னைக்கே இடமில்லை. வெறும் 20 விழுக்காடே தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படுகிறது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை!

என்ன முக்கிய இலாபம் என்றால், பொட்டல் காடாக இருந்த பகுதி புதிய நகரியமாக உருவாகி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது.

தொடக்கத்தில் நெய்வேலி, திருவெறும்பூர் பகுதிகளில் ஆலைகள் தொடங்கப்பட்டபோது மலையாளிகளின் ஆதிக்க நங்கூரம் பாய்ச்சப் பட்டது.

அதனை எதிர்த்து கண்டித்து திராவிடர் கழகம்தான் பொதுக் கூட்டம் போட்டுப் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத் தியது. தந்தை பெரியார் அவர்களேகூட அத்தகைய கூட்டங்களில் பேசியதுண்டு.

1935ஆம் ஆண்டில் ஜம்புலிங்க முதலியார் துளையிட்ட ஆழ் குழாய் கிணற்றில் கறுப்பு நிற கனிமம் கிட்டியது. எளிதில் தீப்பற்றக் கூடியதாகவும், வெப்பம் மிகுந்ததாகவும் இருந்த அந்த நிலக்கரியாகிய கனிமம் தென்னாப்பிரிக் காவில் கிடைக்கும் நிலக்கரிக்குச் சமமான உயர் தரத்தைக் கொண்டதாகும். 1953இல் தொடங்கப்பட்ட பணி 1956இல் இந்த நிறுவனம் உருவானது.

20 கிராம மக்கள் புலம் பெயரும் நிலை ஏற்பட்டது. வாக்குறுதி கொடுத்தபடி அம்மக்களுக்கான நிவாரணம் அளிக்கப்பட வில்லை என்ற குறைபாடு இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைப்படி ரூ.47,229 மில்லியன் வருவாயும் ரூ.13,474 மில்லியன் இலாபத்தையும் இந்த நிறுவனம் எட்டியது.

இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் இந்த என்.எல்.சி.யும் ஒன்று. இதன் அடுத்த விரிவாக்கமாக ஜெயங்கொண்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தையும், ரூ.4,900 கோடி செலவில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை தூத்துக்குடியிலும் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2000 மெகாவாட் திறன் கொண்ட நிறுவனத்தை கான்பூரிலும் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

இத்தகைய வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனத்தின் பங்குகளை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும்? 2010இல் 10 விழுக்காடு பங்குகளை விற்று ரூ.2400 கோடி திரட்ட முனைந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. நெய்வேலி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து போராடிக் கொண்டே வந்திருக்கிறது. (8.7.2009, 30.6.2010, 8.6.2011).

இவற்றின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. கொஞ்ச கால இடை வெளிக்குப் பிறகு இப்போது மறுபடியும் தனி யார்க்குப் பங்குகளை விற்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக என்.எல்.சி. தலைவர் பி. சுரேந்திர மோகன் அறிவித்துள்ளார்.

இதனை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் எதிர்த்து இருப்பது வரவேற்கத்தக்கது. திராவிடர் கழகமும் தனியார்க்குப் பங்குகளை விற்பதற்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. அடுத்த கட்ட முயற்சி களிலும் இறங்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 4-9-2012