Search This Blog

24.9.12

காந்தி ஜயந்தி பற்றி பெரியார்கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.

அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என் கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்களால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்துகொண்டார்.

இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவையயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்திஉடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதுஒருபுறமிருக்க,

இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத்தையும் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டியைக் காட்டுவது. எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக்கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுட மையை ஜாடைகாட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு) பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.

அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொது வுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார் முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறு படியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்கா ருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டு வதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.

அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக் காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண் களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர வர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.

இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவ தாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அதுசெய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக் கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொருக்கமுடியும்?

அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான் களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடு வதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவ தென்றால் இதன் அக் கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை. தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடு வதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர் களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர் களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,

அலகிலா விளையாட்டுடையா ரவர்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக் கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்தி வாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்திஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால்,

தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ்வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனீய தாசராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.

தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்திய வர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச் சிரம தர்மத்தை ஆதரிப்ப தினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பன ரல்லாதார் நிலை என்னவா கின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக்கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத்தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பன ரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.


 ----------- தந்தைபெரியார் --”குடி அரசு” - தலையங்கம் - 15.10.1933

7 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வைர விழா வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா! நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி நெகிழ்ச்சியுரை!திருச்சிராப்பள்ளி, செப்.24- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சிறப்பான பணிகளுக்கும், வெற்றிக்கும் பெரிதும் துணையாக இருந்தவர்களுக்கு இங்கு நடத்தப்படுவது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்றார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி. 23-8-2012 ஞாயிறு மாலை 6 மணிக்கு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திறந்த வெளி அரங்கில் கல்வி நிறுவனர் நாள் விழா (தந்தை பெரியார் பிறந்த நாள் விழா) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் மானமிகு கோ.சாமிதுரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கடந்த காலத்தில் பெரியார் அறக்கட்டளைக்கு ஏற்பட்ட சோதனைகள் பற்றியும், முதுகில் குத்தியோர் பற்றியும் சுட்டிக் காட்டினார்.

ஆன்றோர் பெருமக்களுக்குப் பாராட்டுவிழாவில் பங்கேற்று சிறப்பித்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களுக்கு தமிழர் தலைவர் நினைவு பரிசும், நூல்களும் வழங்கினார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சிறப்பாகச் செயல்பட பங்களித்த ஆன்றோர் பெரு மக்கள் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டது. நிதித்துறை ஆலோசகர் ச. இராசரத்தினம், வீகேயென் கண்ணப்பன், நல்ல-கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் ஏ.நமசிவாயம், வழக்குரைஞர் தியாகராசன், வழக்குரைஞர் த.வீரசேகரன், மறைந்த வடசேரி து.ஜகதீசன் அவர்களுக் காக அவர்தம் இணையர் மீரா ஜெகதீசன், தந்தை பெரியார் அவர்களின் நேர்முக உதவியாளராக இருந்து பணியாற்றிய தி.மகாலிங்கன், பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

வழக்குரைஞர் தியாகராஜன்

பாராட்டப்பட்டவர்கள் சார்பில் ஏற்புரையாக வழக்குரைஞர் தியாகராஜன் அவர்கள் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்று வந்துள்ளது.தந்தை பெரியார் அவர்களின் தொண்டால் கல்வி உரிமை பெற்று, பெரும் உத்தியோக வாய்ப்புகளைப் பெற்ற வர்கள் கூட, இந்த வாய்ப்பு யாரால் கிடைத்தது? எந்த இயக்கத்தால் கிடைத்தது? என்று நினைத்துப் பார்ப்ப தில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவற்றை யெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிதி ஆலோசகர் ச. இராசரத்தினம்

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பயனுள்ள ஒரு பணிக்கு என்னால் ஆன உதவியைக் கடந்த 20 ஆண்டு காலமாகச் செய்து வருகிறேன். இந்த வாய்ப்புக் கிடைத்தமைக்காக நாங்கள் தான் ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டியவர்கள் என்று நிதி ஆலோசகர் ச. இராசரத்தினம் கூறினார்.

பெரியார் அறக்கட்டளை நல்ல வகையில் வளர்ந்து வருகிறது என்றும் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணிஇயக்கத்துக்கும், இயக்கச் சொத்துக்களின் பாதுகாப்புக்கும் ஒரு நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தந்தை பெரியார் அவர்களுக்கு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது. இது குறித்து தந்தை பெரியார் 1943 ஆம் ஆண்டிலேயே குடிஅரசில் எழுதி உள்ளார். 1952 இல் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டபோதும் எழுதியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகத்தான் அன்னை மணியம்மை யார் அவர்களை திருமணம் என்ற பெயரில் ஓர் ஏற்பாட் டைச் செய்தார்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில், எல்லார்க்கும் எல்லாம் என்ற தலைப்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள், தமிழர் தலைவர் மற்றும் பேராசிரியர் மா.நன்னன் ஆகியோருடன் உள்ள குழு படம் (23.9.2012, திருச்சி)

நமது அமைப்புக்கு இருக்கும் சொத் துக்கள் பற்றி பலர் ஆராய்ச்சியில் ஈடு படுவதுண்டு. எங்கள் சொத்து என்பது கல்லும், கட்டடமும் அல்ல!

தந்தை பெரியார் அவர்களின் கொள் கைகளை ஏற்றுக் கொண்ட இலட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறார் களே அவர்கள்தான் எங்களின் அசையும் சொத்தும், அசையாச் சொத்தும் ஆகும்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் எத்தகையன என்பதற்குப் பெரிய ஆய்வுகள் எல்லாம் வேண்டாம். அவர்கள் ஏற்படுத்திய - நடத்திய ஏடுகள், இதழ்களின் பெயர்களைப் பார்த்தாலே போதும்.

குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடு தலை, ரிவோல்ட், உண்மை என்ற இந்தத் தமிழ்ப் பெயர்களே போதுமானது.

தந்தை பெரியார் காலத்தில் 15 லட்சம் ரூபாய் வருமான வரி போட்டனர். பெரியாருக்குப் பிறகு அது 40 லட்ச ரூபாய், 60 லட்ச ரூபாய் என்று வளர்ந்து எங்கள் காலத் தில் அது 80 லட்சம் ரூபாய் என்று அச்சுறுத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு (Income Tax Appelate Tribunal) வழக்கு சென்றது. விசாரித்த இரண்டு நீதிபதிகளும் பார்ப்பனர்கள். அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞரும் ஓர் அய்யங்கார் பார்ப் பனர்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில், ஹர்ஷமித்ரா புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் கோவிந்தராசு அவரின் இணையர் சசிப்பிரியா, வழக்கறிஞர் த.வீரசேகரன், தந்தை பெரியார் அவர்களின் நேர்முக உதவியாளராக இருந்து பணியாற்றிய தி.மகாலிங்கன், மறைந்த வடசேரி து.ஜெகதீசன் அவர்களுக்காக அவர் தம் இணையர் மீரா ஜெகதீசன், தொழிலதிபர் வீகேயென் கண்ணப்பன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளார். (23.9.2012, திருச்சி)

பெரியார் அரசியல் சட்டத்தை எரித்தவர், தேசியக் கொடியை எரிப்பேன் என்று சொன்னவர். பார்ப்பான் ஒழிக ! காந்தி ஒழிக! கடவுள் ஒழிக! என்றவர். பிள்ளையாரை உடைத்தவர். அப்படிப்பட்டவர் ஏற்பாடு செய்த அறக் கட்டளை எப்படி சட்டப்படி சரியாகும் என்று தந்தை பெரியார் அவர்களின் இறுதி உரையை எடுத்துக்காட்டி வாதிட்டார்.

நாம் ஏற்பாடு செய்த வழக்கறிஞர் உத்தம்ரெட்டி அவர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர். இவை எல்லாம் உண்மையா என்று நம்மிடம் கேட்டார். ஆமாம் என்று சொன்னோம். இவற்றை எல்லாம் நீங்கள் சொல்ல வில்லையே! இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று அச்சப்பட்டார்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. அதோடு சேர்த்து தந்தை பெரியார் பற்றி இந்தி, இங்கிலீஷ் மொழிகளில் குறிப் பிட்டவை பற்றி எடுத் துச் சொன்னோம். நமது வழக்கறிஞருக்கு நம்பிக்கை ஏற் பட்டது. அதன் அடிப்படையில்தான் அவர் வாதாடினார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெரியார் பல கருத்துக்களைக் கூறுவார். அவர் ஏற்படுத்திய அறக்கட்டளையோடு சேர்த்து இவற்றை முடிச்சுப் போடக்கூடாது என்று வழக்கறிஞர் உத்தம் ரெட்டி கூறிய நியாயத்தை இரு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, இது அறக்கட்டளைதான் - எனவே பெரியார் அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட 80 லட்சம் ரூபாய் ரத்து செய்யப்படுகிறது. அவர் இதுவரை கட்டிய பணமும் திருப்பி கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பாணை 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் (With retrospective effect) என்று தீர்ப்பளித்தது மேலும் சிறப்பானதாகும்.

கட்டிய பணத்தை வட்டி போட்டுத் திருப்பி வாங்கி னோம். அந்தப் பணம்தான் டில்லி பெரியார் மய்யத்துக்கு முதல் முதலீடு.

இந்த நேரத்தில் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கோட்டினை நகர்த்தியபோது, அப்பொழுது அத்துறையில் அதிகாரியாக இருந்தவர் நமது நிதி ஆலோசகர் அய்யா ராசரத்தினம் அவர்கள் ஆவார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை; அப்படிச் சென்றாலும் வெற்றி பெற முடியாது என்று எழுதினார்.

இந்த நேரத்தில் மறைந்த நீதியரசர் வேணுகோபால் அவர்களையும் நன்றியோடு நினைவு கூர்வோம்.

இந்த வழக்கின்போது கவிஞர் கலி.பூங்குன்றன் என்னோடு இருந்து பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்று குறிப்பிட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...

நன்றி தெரிவித்துப் பாராட்டப்பட்டோர் பற்றி . . .

இந்த நிகழ்ச்சியில் சென்னையி லிருந்து விமானம் மூலம் வருகை தந்துள்ள அய்யா ஏ.நமச்சிவாயம் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் ஆவார்.

விடுதலைக்கு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் வாங்கிட வங்கி மூலம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தவர் மட்டுமல்ல. பெரம்பலூர் பக்கத்தில் ஓர் உள் கிராமத்தில் இருந்த தந்தை பெரியார் அவர்களை நேரில் சந்தித்து தந்தை பெரியார் அவர்களைச் சம்மதிக்க வைத்தவர் என்று பெருமையாகக் குறிப்பிட்டார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர்.

வீகேயென் அவர்கள் எப்போதும் எங்களுக்குத் தோன்றாத் துணையாக இருக்கக் கூடியவர். எங்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் ஆழ் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது அவர்கள்தான் என்றும் குறிப்பிட்டார்.

ஆம்பூர் ஜெகதீசன் அவர்கள் அறக் கட்டளையின் நிருவாகக் குழு உறுப்பினராக இருந்தவர். இந்த வளாகத்தில் பல மாதங்கள் தங்கி இருந்து இந்த மேடு பள்ளங்களைச் செப்பனிட்டுக் கொடுத்தவர். அந்தக் குடும்பம் மூன்று தலை முறையாகக் கொள்கை குடும்பம். அவர் மறைந்த நிலையில் அவரின் வாழ்வி ணையர் இந்தப் பாராட்டைப் பெறுகிறார்.

சொர்ணா அரங்கநாதன்

இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். அரசுப் பணியில் இருந்தவர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். நடுத்தரக் குடும்பம்தான். தமது சொத்தை விற்றதில் கிடைத்த ஒரு தொகையாக ரூபாய் 35 லட்சத்தைப் பல் கலைக் கழகத்துக்குக் கொடுத்த உள்ளத்துக்குச் சொந் தக்காரர் இவர் என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.

நல்ல கிருஷ்ணமூர்த்தி அய்யா நல்ல கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வள்ளலாரின்மீது மதிப்பு கொண்டவர். அதே நேரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் நம் இயக்கத்தின்மீது பற்றுக் கொண்டவர். தொண்டறச் செம்மல் என்று பாராட்டினார்.

வழக்கறிஞர்கள் தியாகராசன், த. வீரசேகரன்

இவர்கள் நமது அறக்கட்டளை தொடர் பான வழக்குகளை நடத்துவதில் பெரும் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடியவர்கள்; நம்மிடம் எந்தவிதப் பொருளாதார பலனையும் எதிர்பார்க்காமல் உதவக் கூடிய நண்பர்கள் என்று குறிப்பிட்டார்.

தி. மகாலிங்கன்

நாகையைச் சேர்ந்தவர் தந்தை பெரி யார் அவர்களின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடக்கமாக இருக்கக் கூடியவர் என்று குறிப்பிட்டார். இறுதியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் ஊமை ஜெயராமன் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

எல்லார்க்கும் எல்லாம் கலை நிகழ்ச்சி

பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் எல்லார்க்கும் எல்லாம் எனும் தலைப்பில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நடனம், ஓரங்கநாடகம் இவற்றின்மூலம் தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கை, அறக்கட்டளையின் பணி கள்பற்றி நேர்த்தியாக எடுத்துரைக்கப்பட்டன.

அரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை என்கிற அளவுக்குக் கலை நிகழ்ச்சிகள் களை கட்டின. விழா நிகழ்ச்சி களை சிறப்பாக ஏற்பாடு செய்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர் ப.சுப்பிரமணியம், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரை ஆசிரியர் அவர்கள் பாராட்டினார்.

புற்றுநோய் கண்டுபிடிப்பு வாகனம்

இன்றைய விழாவில் முக்கியமானது நடமாடும் புற்றுநோய் கண்டுபிடிப்பு - வாகனம் தொடங்கப்பட்டதாகும். நம் பெண்கள் மத்தியில் இந்த நோயைப்பற்றி பெரும் விழிப்புணர்ச்சி தேவைப்படுகிறது. கூச்சத்தின் காரணமாக நமது பெண்கள் மார்பகப் புற்றுநோய் பற்றி வெளியில் தெரிவிப்பதில்லை. குளிக்கும் பொழுது அவர்களுக்கு தெரிந்தாலும் கணவரிடம்கூட சொல்லுவதில்லை.

இதன் காரணமாக முற்றிப் போய் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே தான் நமது அறக்கட்டளை சார்பில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஒரு வாரம் இந்த வேன் வெளியில் சென்று வர வேண்டும் என்றால் ரூ.22 ஆயிரம் செலவாகும். இதை எப்படி ஈடு கட்டுவது என்று நாம் திட்டமிட வேண்டும் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ளவர்கள் தாராளமாக செய்யலாம்.

இன்றைக்கே இந்தத் திட்டம் செயல்படுத்தத் தொடங்கப்பட்டு விட்டது. 104 பெண்களுக்குப் பரிசோதனை செய்து பார்த்ததில் 17 பேர்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கான அய்யம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கருப்பை வாய்ப்புற்றுநோய் பற்றியும் நம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்றார் அறக்கட்டளையின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் ஹர்ஷமித்ரா புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் கோவிந்தராசு அவரின் இணையர் சசிப்பிரியா ஆகியோர் இந்தப் பணியில் ஆர்வமும், ஒத்துழைப்பும் காட்டி வருவது பாராட்டத்தக்கது.

தமது தந்தையார் தொண்டைப் புற்றுநோய்க்கு ஆளாகி மரணம் அடைந்ததுதான் - தான் இத்துறையில் மருத்துவராகிப் பணிபுரிவதன் நோக்கம் என்று டாக்டர் கோவிந்தராசு கூறியதோடு அல்லாமல், நடமாடும் புற்றுநோய் கண்டுபிடிப்பு வாகனப் பணிக்காக ஒரு வாரத்துக்கு ஆகும் செலவில் பாதித் தொகையை (ரூ.11 ஆயிரம்) பெரியார் அறக்கட்டளையின் செயலாளர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கரவொலிக்கிடையே அளித்தார். மறைந்த சுயமரியாதை சுடரொளி விடுதலைபுரம் தங்கவேல் குடும்பத்தின் சார்பாக ரூபாய் ஆயிரம் அளிக்கப்பட்டது. 24-9-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வைர விழா : பிரபல அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் எஸ். சம்பந்தம் அவர்களின் வாழ்த்து

சென்னை, செப். 24: தந்தை பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவன வைரவிழா கொண்டாட்டத் தின்போது பிரபல அமெரிக்க புற்று நோய் மருத்துவர் எஸ். சம்பந்தம் அவர்கள் கீழ்க்கண்ட வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

கருமம் செயஒருவன் கைதூவேன் - ஒருவன் பெருமையின் பீடுடையது இல்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வை நாடி

உடல் நலம் கெட்டு நோயுறுவது வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்.

விபத்துகள், அனைத்து வகையான நோய்கள், முதுமை அடைதல் ஆகியவை மனித வாழ்க்கை முடிவுறும் வழிகளாகும்.

இதய நோய்கள், தொற்று நோய்கள், புற்றுநோய் ஆகி யவை நமது சமூகத்தில் அதிக அளவிலான இறப்புகளை ஏற்படுத்துபவையாகும். அறிவே ஆற்றல் எனும் ஆயுதமாகும். சரியான, வலுவான சிந்தனை மற்றும் பலம் நிறைந்த தத்துவ வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவே முழுமை யான ஆற்றலாகும். பெரியாரியலின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இருப்பதாகும் இந்த உண்மை.

ஒரு நேரத்தில், ஒரு தனிப்பட்டவரை ஒரு நோய் பீடித்தால், நோயின் தீவிரத்துக்கும் அதனைக் குணம் பெறச் செய்யும் முயற்சிக்கும் இடையே நடக்கும் கடுமை யான போட்டியில், அந்த நோயைக் குணப்படுத்து வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கத்தான் செய்யும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளே நோய் வராமல் தற்காத்துக் கொள்வதும், விரைவில் அந்நோய் பீடித்துள் ளதை அடையாளம் கண்டு கொள்வதும்தான்.

இத்தகைய தற்காப்பு நடவடிக்கையும், நோய் பீடித் துள்ளதை விரைவில் கண்டறிவதும், அந்த நோய் தோன் றியது முதல் முடிவு வரை பெறப்படும், அந்த நோய் பற்றிய ஒருங்கிணைந்த அறிவினைப் பொறுத்ததே ஆகும்.

தந்தை பெரியார் அவர்களைப் போன்றே தங்களையும் வடிவமைத்துக் கொள்ளும் சமூக உணர்வும், சுயநியாய உணர்வும் கொண்ட மக்கள் இச் சாதனையைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர்.

வாழ்க்கையின் போக்கை மாற்றிடும், வாழ்க்கைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முக்கியமான நடவடிக் கையைப் பற்றிய விழிப்புணர்வை எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடம் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

நோய்வாய்ப்படுவது என்பது பெருந்தன்மை மிக்கது; இயல்பானது; பாராட்டத்தக்கது. இந்தத் தகவல் நெடுஞ்சாலைகளில் மட்டுமன்றி அனைத்து சந்து பொந்துகளின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அந்த உண்மை மேலும் மேலும் தெளிவாகிறது.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும், ஒவ்வொரு அமைப்பும் பின்பற்றத் தகுந்த முக்கியமான சேவை இது. இந்தப் பெருந்தன்மையான நோக்கத்திற்காக இந்தச் சேவையை மேற்கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கத்தை நான் மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது முயற்சிகளில் அவர்கள் பெருவெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு

- எஸ். சம்பந்தம்

தமிழ் ஓவியா said...

செந்துறை இராஜலெட்சுமி திருமண மண்ட பத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு வருகைதந்த அனைவரையும் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மண்டல செயலாளர் சி.காமராஜ், தி.மு.க சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் செல்ல.ரவி, பா.ம.க. மாநில துணைத் தலைவர் உலக.சாமிதுரை, வி.சி. கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் செ.வெ.மாறன், கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், தி.மு.க. மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் உரையாற்றி இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

கொள்கை உரமேறிய இந்த பகுதியில் இருபது நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறையாக வந்து உங்களையெல்லாம் சந்திப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். சுயமரியாதைக் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றம் பெற்றி ருக்கிறார்கள். பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் படிக்க வைத்து சனிக்கிழமையில் இந்த திரும ணத்தை இராமச்சந்திரன் நடத்துகிறார் என்றால் அந்தத் துணிச்சல் பெரியார் பல்கலைக் கழகத்திலே படித்தால்தான் வரும்.

சட்ட சபையில் ஆளும் கட் சிக்கு சிம்மமாக விளங்கக்கூடிய நமது சட்டமன்ற உறுப்பினர் சனிக்கிழமையில் திருமணம் செய்து கொண்டவர் எல்லா வெற்றிகளையும் பெறக் கூடியவர் அவரது தந்தை பவளவிழா நாயகர் சிவ.சுப்பிரமணியத்திற்கு நமது வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களெல்லாம் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் வாழ்விலே உயர்ந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாமெல்லாம் படிக்க முடியுமா?

இந்த பகுதிகளில் பள்ளிக்கூடம் ஏராளம் வரு வதற்கு காமராஜரிடம் பெரியார் பரிந்துரை செய் திருக்கிறார். விதிமுறைகளைக்காட்டி அதிகாரிகள் தயங்கியபோது மைல்கல்லை பார்க்காதே மனிதனைப் பார் என்ற காமராஜரால், பெரியா ரால் நாம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் மூடநம்பிக்கைகள், செவ்வாயில் காலடி வைக்கின்ற நேரத்திலும் செவ்வாய் தோசம், ஜாதி, சடங்குகள், சம்பிரதாயம் என்ற அறியாமை நோய்கள் அகல ஈரோட்டு மருந்தே - பெரியாரி யலே தீர்வு என விளக்கி வாழ்வியல் உரையாற் றினார். 24-9-2012

தமிழ் ஓவியா said...

செப்.28: விஜயவாடாவில் உலக நாத்திகர் மாநாடு தமிழர் தலைவர் பங்கேற்கிறார்விஜயவாடா, செப். 24-துணிவு நிறைந்தவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் இருந்து - சமத்துவத்தை நோக்கி நடைபோடுங்கள் என்ற தலைப்பில் அனைத்துலக மாநாடு ஒன்றை விஜயவாடா நாத்திக மய்யம் ஏற்பாடு செய்து நடத்த உள்ளது. விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், விஜயவாடா நாத்திக மய்யத்தைத் தோற்றுவித்த இணை தோற்றுநருமான சரஸ்வதி கோரா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி, செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் இந்த இருநாள் மாநாடு விஜயவாடா சித்தார்த்தா அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள துவக்கவிழாவின்போது சரஸ்வதி கோரா அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவை பற்றிய ஒளிப்படக் கண்காட்சி ஒன்று இடம் பெறும். அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கழகத்தின் தலைவரும் பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஒரு மாபெரும் கல்வியாளருமான சொஞ்சா எக்கரிக்ஸ் (Sonja Eggericks) இந்த விழாவின் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு பெருமைப் படுத்துவார். இந்தத் தகவலை வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி. சமரசம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான முனைவர் கி.வீரமணி அவர்கள் இந்தத் துவக்க விழாவுக்குத் தலைமை தாங்குவார் என்றும் அவர் கூறினார்.

வெகு காலமாக துவக்கப்படுவதற்காகக் காத்தி ருக்கும் கோரா மற்றும் சரஸ்வதி கோரா அனைத்துலக நாத்திக ஆய்வு மய்யத்தைத் துவங்கி வைக்கவும், கோரா, சரஸ்வதி கோரா, மற்றும் நாத்திக மய்யம் என்னும் நூல், ஜிம் ஹெர்ரிக் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கோராவுடனான எனது வாழ்க்கை என்ற சரஸ்வதி கோரா அவர்களின் தன் வரலாற்று நூல் ஆகிவற்றை வெளியிடவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்று நாத்திக மய்யத்தின் இயக்குநர் ஜி.விஜயம் கூறினார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் உலகத் தலைவர்களில் ஜெர்மனி சுதந்திரக் கல்வி நிறுவனத்தின் தலைவரும், ஜெர்மன் நாட்டு பிராண்டர்பர்க்கில் உள்ள சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவருமான வோல்கர் முல்லர் (Volker Mueller) அவர்களும், புகழ் பெற்ற பகுத்தறிவு எழுத்தாளரும், லண்டனிலிருந்து வெளிவரும் மனித நேயர் என்னும் இதழின் ஆசிரியருமான ஜிம் ஹெர்ரிக்(Jim Herrick) அவர்களும், புதுடில்லி காந்தி தேசிய சமாதான அமைப்பின் தலைவர் ராதா பட் அவர்களும், ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வி.பாலமோகன் தாஸ் ஆகியோரும் அடங்குவர்.

இந்த மாநாட்டில் கருத்துரை ஆற்ற உள்ள அறிஞர் பெருமக்களில் மங்களூர் அனைத்திந் திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்ட மைப்பின் தேசியத் தலை வர் நரேந்திர நாயக் , திறந்தவெளிப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.வி.ஆர். சந்திரசேகர ராவ் , தெற்குகுஜராத் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பி.ஏ.பரிக் , அனைத்திந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் யு. கலாநாதன், ஒடியா பகுத்தறிவாளர் கழகத் தத்துவ இயலாளர் தானேஸ்வர் சாஹூ, அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கழகத்தின் பிரதிநிதி பாபு கோகினேனி , வார்தா காந்திய சிந்தனைகள் ஆய்வு மய்யத் தலைவர் சம்ஸ்கார் லவணம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ஜோசப், விஜயவாடா வாசவ்ய மஹிளா மண்டலியின் தலைவர் சென்னுபட்டி வித்யா மற்றும் எண்ணிறந்தோர் அடங்குவர்.
இத்தகவலை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் விஜயம் தெரிவித்துள்ளார். 24-9-2012