Search This Blog

21.9.12

காவிரி நதி நீர்ப் பிரச்சினை - திராவிடர் கழகம் கூறிய யோசனை! தீர்வுதான் என்ன?

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: பிரதமர் அடுத்து செய்ய வேண்டியது என்ன? கருநாடகாமீது 365அய் பயன்படுத்த வேண்டும் தொலைநோக்காக நதிகளை இணைக்க வேண்டும் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைபிரதமர் கூட்டிய நதி நீர் ஆணையக் கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய அரசு - பிரதமர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

காவிரி நதிநீர் ஆணையம் அதன் தலைவர் பிரதமர் (exofficio தகுதியில்) டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று (19.9.2012) புதுடில்லியில் கூடியது.

இக்கூட்டம்கூட, உச்சநீதிமன்றத் தில் போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன் றம் சுருக்கென்று தைப்பதுபோல் கேள்வி கேட்ட பிறகே பிரதமர் அலுவலகத்தால் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, அதன்படி தான் கூட்டப்பட்டிருக்கிறது! 9 ஆண்டுகளுக்குப்பின் கூடிய கூட்டம்!

முந்தைய தேசீய முன்னணியின் பிரதமர் வாஜ்பேயி தலைமையில்தான் ஒரு கூட்டம் நடந்தது.

9 ஆண்டுகளுக்குப்பிறகே நேற்று அடுத்த கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே, இப்பிரச்சினை எப்படி ஊறு காய் ஜாடியில் ஊறிக் கொண்டுள்ள பிரச்சினையாகி உள்ளது என்பது தெரியும். நமது தமிழ்நாட்டுத் தமிழர் களும், விவசாய சாகுபடி நேரத்தில் மட்டுமே விவசாயிகளுக்காக காவிரி யில் தண்ணீர் வராவிட்டாலும் தத்தம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தலைவர்களும், கட்சிகளும் இருக் கின்றன!

காவிரி நடுவர் மன்றத்திற்குத் தலைவர் நியமிக்கப்படாத நிலை!

1. இல்லாவிட்டால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் ஜஸ்டீஸ் என்.பி. சிங் - உடல் நலம் காரணமாக - தனது பதவியை ராஜினாமா செய்து சில ஆண்டுகள் ஆகிவிட்டபோதும்கூட இதுவரை அத்தலைமைப் பொறுப்பு நிரப்பப்படாமல், காலியாகவே உள்ளது மிகவும் வருந்தத்தக்க நிலை அல்லவா? இதை தமிழ்நாடு முதல்வரும் சுட்டிக்காட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாமும் முன்பே சுட்டிக் காட்டி எழுதியுள்ளோம்.

2. இதைவிட இன்னொரு கொடுமை இந்த நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது 2007 பிப்ரவரி 5ஆம் தேதி. 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்ட நிலையில், இன்னமும் அது கெசட்டில் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை! (No Central Gazettee Notification). -  இது உடனடி யாகச் செய்யப்பட வேண்டும்.

ISRWD - நதி நீர்ப் பங்கீடு குறித்து மாநிலங்களிடையே உள்ள பிரச்சினை - தாவாக்களுக்குத் தீர்வு காணும் சட்டத்தின்படி இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதனைப் பிரதமருக்கு சுட்டிக்காட்டியும் - மேற்காட்டிய இரண்டு பிரச்சினை களிலும் எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை பிரதமர் அலுவலகத்தால் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக் குரியது.

பாலையாகி வரும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கும் - நீர்வரத்து இன்மையால் சாகுபடி செய்ய வாய்ப்பில்லை- காவிரி நீர்ப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நிலங்கள் தரிசுகளாகி பாலைகளாகி வரும் அவலம் தொடருகிறது!

இப்போது வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படாமல் தாமதம் ஆனபடியால் - போதிய நீரை - நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடக அரசு தராமல் மறுத்த காரணத்தால், இப் போது காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லாமல், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்படும் அநீதி அரங்கேற்றப்பட்டுள்ளது!

காவிரி நடுவர் மன்றம் 1990 ஜூன் 2இல் அமைக்கப்பட்டது. (இன்று 22 ஆண்டுகள் ஆகி விட்டன!)

திராவிடர் கழகம் கூறிய யோசனை!

1991 ஜூன் 25ஆம் தேதி அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்புப்படி ஒவ்வொரு ஆண்டும் 205 டி.எம்.சி. தண்ணீரை - கருநாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டும் என்று கூறியது! மேட்டூருக்கு அந்த அளவு நீரை கருநாடக அரசு கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை!

இதில் தமிழ்நாடு 6 டி.எம்.சி. காவிரி நீரை புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டும் (காரைக்கால் பகுதியில் உள்ள நிலங்கள் பயன் பெறுவதற்காக)

இதனை ஒழுங்குபடுத்திக் கண் காணித்து நீர் வழங்கவே காவிரி நதிநீர் ஆணையம் (Cauvery River Authority) 1998இல் அமைக்கப்பட்டு அறி விக்கப்பட்டது. இடைக்கால நிவாரண ஆணையை ஒழுங்காகத் தரப்படு வதைக் கணித்து அளிப்பதற்காகவே இப்படி ஒரு நிரந்தர ஆணையம் உரு வாக்கப்பட்டது. (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து காவிரி நீர்ப் பிரச்சினை சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்படி ஒரு யோசனையை எடுத்து வைத்து உருவாகச் செய்ததே திராவிடர் கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது)

நடுவர் மன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை

17 ஆண்டுகளுக்குப்பின், 500 கூட்டங்களுக்குப் பின் இந்த நடுவர் மன்றம் - (இது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வழங்கிய அருட்கொடையாகும்) இறுதித் தீர்ப்பை 2007இல் தந்தது.இது 419 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு அளிக்கும் படி இறுதித் தீர்ப்பு வழங்கியது (தமிழ் நாட்டின் கோரிக்கை 562 டி.எம்.சி. தண்ணீராகும்) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டி.எம்.சி. யாகும்!

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் (அப்பீல்கள்) மேல் முறை யீடுகள், தமிழ்நாடு, கருநாடகா, கேரளா  அரசுகளால் தாக்கல் செய்யப் பட்டு நிலுவையில் உள்ளன!

டிசம்பர் 1996 அன்று, அதன் தலை வர் ஜஸ்டீஸ் N.P. சிங் 80 வயதாகி விட் டதால் உடல் நலம் காட்டி விலகினார்!

முதல் கட்டமாக, மேனாள் குடிய ரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறிய ஆலோசனைப்படி தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகத் துவங்கினால் இந்தப் பிரச்சினைகள் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

அனைத்துக் கட்சிகளும் கருநாட கத்தைப் போல ஒரே குரலில் - இது பொதுப் பிரச்சினை என்கின்ற கண்ணோட்டத்தில் ஒன்றுபட்ட குரலைத் தர வேண்டும் -  ஓரணியில் நிற்கத் தயங்கினாலும்கூட என்பதே நமது வேண்டுகோள்!

வாடும் விவசாயியின் நிலங்களும், காயும் அவர்களின் வயிறுகளும்  நமது பார்வையில் தெரிய வேண்டும்.

வாக்கு வங்கி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு நாட்டு நலனைக் கருதியே யோசிக்க வேண்டும். செய்ய முன்வருமா நம் நாட்டு கட்சிகள்?

சென்னை
20.9.2012

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

******************************************************************************
பிரதமரின் தீர்ப்புரையை ஏற்க மறுக்கும் கருநாடக அரசு

இப்படிப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தால் ஒரு பயனும் - விளையவில்லையே!

யானைப் பசிக்கு சோளப் பொரி போன்ற தீர்வை - பிரதமர் - காவிரி நதிநீர் ஆணையத் தலைவர் கூறியது தமிழ்நாட்டிற்கும் ஏமாற்றம்; கருநாடக அரசும் ஏற்க மறுத்துவிட்டது.

9000 கன அடி நீர் வினாடிக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தீர்ப்புரை வழங்கினார்.

தமிழக முதல்வர் குறைந்தபட்சம் 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கேட்டும் கருநாடகம் ஒப்புக் கொள்ளவில்லை!

மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில் இதற்குத் தீர்வுதான் என்ன?

1)    உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்றாலும் அதன் தீர்ப்பை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் யதார்த்தத்தில் இதற்கென்ன வழி?

2) பிரதமர் - மத்திய அரசு - கருநாடக அரசைக் கண்டிப்புடன் வழங்க ஆணையிடலாம் - அரசியல் சட்டத்தின் 365 விதி அதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது! செய்யும் நிலையில் இன்றுள்ள மத்திய அரசு உள்ளதா என்பது அடுத்த கேள்வி!

3)    நதிகளை தேசியமயமாக்கி அறிவிக்கும் அவசர சட்ட ஆணை (Ordinance) போட்டு நாட்டிலுள்ள எல்லா நதிகளும் மத்திய அரசுக்கு உரிமையானது என்றும் உடனடியாக அறிவிக்க முன்வர வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும்

4) தொலைநோக்காக, எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டத்தை - உலக வங்கி ; சர்வதேச நிதியம்  (IMF) போன்றவற்றில் நிதி உதவி, கடன் பெற்று திட்டத்தை பெரும் திட்டமாகத் தொடங்க வேண்டும்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் இவ்வறிக்கை துண்டறிக்கையாக அச்சிடப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் மேட்டூர் வரையிலான காவிரி டெல்டா பகுதிகளில் கழகத் தோழர்களின் பிரச்சாரம் மற்றும் துண்டறிக்கைகள் விநியோகத்திற்கான ஏற்பாடுபற்றி தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளிவரும்.

                              *********************************

2 comments:

தமிழ் ஓவியா said...

மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!


சென்னை: நீங்கள் உயிரை மாய்ப்பதாக இருந்தால் ஒரு தனுவாக மாறுங்கள். கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.

ராஜபக்சே வருகையை எதிர்த்து சேலத்தில் தீக்குளித்து உயிர்நீத்த ஆட்டோ டிரைவர் விஜய்ராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,

எங்கள் பேச்சை கேட்டு தான் தம்பி விஜயராஜ் உணர்வு பெற்றதாக சொல்கிறார்கள். நம்முடைய பேசும் எழுத்தும் எதிரிகளை வீழ்த்தவில்லையே ஆற்றாமையில் தன்னை மாய்த்து கொள்கிற தோழர்களை வீழ்துகிறதே என்ற வேதனை என்னை வாட்டுகிறது.

நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். வலிமை உள்ளவனை எதிர்க்கும் போது அவன் எந்த தளத்தில் வலிமையாக உள்ளான் என ஆராய வேண்டும். எங்காவது பார்ப்பனர்கள் தீக்குளித்து பார்த்துள்ளீரா?! அவர்கள் யாரும் தீ குளிப்பதில்லை நாம் தான் செய்கிறோம்.

எண்ணிக்கை என்பது ஆள் வலிமை அல்ல ஒற்றுமையே வலிமை நாம் தனி தனி குழுக்களாக சிதறி உள்ளோம். இனி விஜயராஜ் போன்றவர்கள் தீக்குளித்தால் இனி வரமாட்டான் திருமாவளவன் என சொல்லலாமா என
தோன்றுகிறது. இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம்.

ஆனாலும் இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள்.

நம்மை அழித்துக்கொள்வது மேலும் நம் எண்ணிக்கையை குறைக்கும். ஆதரவு சக்திகள் கை கோர்க்க வேண்டும். ஆறரை கோடி தமிழர்களில் ஆறு லட்சம் தமிழர்கள் கூட ஒன்று சேர முடியவில்லையே...வேதனை.

இந்தியாவில் காங்கிரஸ் வேறு, பாஜக வேறல்ல காங்கிரஸ் -கதர் போட்ட காவியினர். காவி போட்ட கதர் பாஜக...இவர்கள் இருவருமே ஈழ விசயத்தில் எதிரானவர்கள்..

நாம் வெல்ல இரெண்டே வழி தான். ஒன்று எதிர்த்து நின்று மோதி எதிரியை வீழ்த்துவது. மற்றொன்று அவனுடன் தோழமை பாராட்டி நட்பு பாராட்டி புரிய வைத்து நம் எண்ணத்திற்கு உடன்பட வைப்பது அந்த வகையில் நாம் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஈழத்தை சாத்தியபடுத்த இயலாது.

எனவே தோழர்களே இனி நாம் உணர்ச்சி சார்ந்து மட்டும் இயங்காமல் அறிவு சார்ந்து இயங்கி ஒன்றுபடும் விசயத்தில் நாம் ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துவோம். இனி யாரும் தங்களை மாய்த்துகொள்ள வேண்டாம் என்று கூறினார் திருமாவளவன்.
-----------http://tamil.oneindia.in/news/2012/09/21/tamilnadu-thirumavalavan-s-angry-speech-161876.html

தமிழ் ஓவியா said...

புத்தம் மரணம் கச்சாமி!

புத்தர் விழா தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

தத்துவார்த்த வகையில் பார்க்கப் போனால் புத்தர் விழாவில் பங்கேற்க சற்றும் அருகதை இல்லாத ஆசாமிதான் இந்த ராஜபக்சே.

அன்பும், கருணையும், பண்பும், மனித நேயமும் குலுங்கும் பூஞ்சோலையாம் புத்தர் எங்கே? தமிழர்களின் உடலை உயிரோடு கொத்தித் தின்னும் கொடிய கழுகாம் ராஜபக்சே எங்கே?

ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தத்தம் செய்ய முன்வந்த கவுதமப் புத்தர் எங்கே? புத்தர் சிலைகளை - தமிழனை வெட்டி, அவன் ரத்தத்தால் குளிப்பாட்டும் கொடுங்கோலன் ராஜபக்சே எங்கே? மனித குலத்துக்கே மாசு மருவற்ற நல்வழி காட்டி மனிதர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் அன்பு இழைகளால் இணைத்த அந்தக் கருணைச் சீலர் எங்கே? இனவெறி கொண்டு - இட்லரும்கூட எனக்கு ஈடு இல்லை என்ற தோரணையில், பச்சிளங் குழந்தைகள் தங்கி இருந்த விடுதிகளில்கூட குண்டு மழை பொழிந்து அந்தச் சின்னஞ்சிறு மலர்களைக் கொன்று குவித்த குரூர மனிதனான இந்த ராஜபக்சே எங்கே?

யாகங்களின் பெயர்களால் உயிர்ப் பலி கொடுக்கும் உன்மத்தர்களை நேருக்கு நேர் சந்தித்து, இதோபதேசம் செய்து திருத்த முன்வந்த அந்தத் திருமேனி எங்கே? ஆசைகாட்டி மோசம் செய்யும் வகையில் ஓரிடத்திற்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை வரச் செய்து ஒரே நேரத்தில் கொடிய ஆயுங்களை வீசிப் பிணக் குவியலாக்கிய இந்தப் பேர் வழி எங்கே?

புத்தம் என்பது ஒரு நெறி என்ற நிலையை வெறியாக்கிய, ஓநாயல்லவா இந்த ராஜபக்சே! இன்னொரு இனத்தை இல்லாமல் செய்வதற்கு சிங்களவர்கள் மத்தியில் இனவெறியை ஊட்டிய - இரக்கம் என்ற ஒன்று இல்லாத இடி அமீன் அல்லவா இவர்!

இலங்கை அரசின் அதிகாரப் பூர்வமான மதம் பவுத்தம். புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர்தான் அங்கு அதிபராக வர முடியும் என்பது சட்டத்தின் நிலை அங்கு.

இதன் பொருள் என்ன? தமிழர்கள் அந்நாட் டின் குடிமக்கள் இல்லை என்பதுதானே? தமிழர்களுக்கென்று தாய்மொழி, இனப் பண்பாடு, வாழும் உரிமை கிடையாது என்று உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் தானே ராஜபக்சே? இல்லை என்று மறுக்க முடியுமா?

இனவெறி, இன்னொரு இனத்தின் அழிப்பு, சொந்த நாட்டு மக்கள் மீதே போர்ப் பிரகடனம், அழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சிய வர்களும் முள்வேலி முகாமுக்குள் முடக்கி இருக்கும் மோசமான நிலை; ஈழத் தமிழர்கள் என்று சொல்லுவதற்கான எந்தத் தடயமும், அடையாளமும் சற்றுமின்றி முற்றிலும் ஒழித்துக் கட்டும் பாசிச நடவடிக்கைகள் பவுத்தக் கொள்கை என்ற பெயரால் இலங்கையில் நடக்கிறதா - இல்லையா?

பவுத்தத்தில் ஆரிய ஊடுருவலால் அதன் அடிப்படைத் தத்துவங்கள் திரிபு நிலைக்கு ஆளாக்கப்பட்டதே! அன்பு நெறி - அபாய வெறியாக அல்லவா மாறி விட்டது?

பவுத்தம் பரவுயுள்ள நாடுகளில், பவுத்தத்தின் அடிநாதம் அழிக்கப்பட்டு விட்டதே! இல்லை என்றால் இலங்கையில் சிங்கள வெறி பவுத்தத்தின் பெயரால் தாண்டவம் ஆடுமா? ஆடுகின்ற நிலையில், பவுத்த நெறியாளர்கள் எதிர்க் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?

புத்தம் சரணம் கச்சாமியல்ல - புத்தம் மரணம் கச்சாமி!

சங்கம் சரணம் கச்சாமியல்ல - சங்கம் கலகம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமியல்ல தம்மம் தண்டம் கச்சாமி

- என்பதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை.

பவுத்தம் தோன்றிய மண்ணிலே நர வேட்டை மனிதனுக்கு அழைப்பு - வரவேற்பு என்பது வெட்கப்பட வேண்டியதே! 21-9-2012