திராவிடர் மொழி பேசும்
திராவிடரைப்பற்றிச் சிறிது கூற ஆசைப்படுகிறேன். "திராவிடம்'
என்பது நமது நாட்டினுடைய பெயராகும். "திராவிடர்' என்பது இந்நாட்டின்
பழங்குடி மக்கள் இனத்துக்கு ஏற்பட்ட உலகப் பெயராகும். திராவிடர் என்பதை
நம்மில் சிலர் மறுக்கிறார்கள்; வெறுக்கிறார்கள். திராவிடர் என்பது என்ன –
நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே! ஆரியர் என்ற
பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர் என்பது? நீக்ரோ,
மங்கோலியர் என்ற பெயர்கள் ஏற்பட்டதும் அன்றுதானே? திராவிடர் என்ற பெயரை
மநுதர்ம நூலில் காணலாமே! ராமாயணத்தில், பாரதத்தில்கூட இதற்கு ஆதாரம் உண்டே!
இந்த நாட்டைப் பொருத்தவரையில் இதுவரைக்கும் இருந்துவரும் போராட்டமெல்லாம்
ஆரியர் – திராவிடர் போராட்டமே ஒழிய, வடமொழி – தென்மொழிப் போராட்டமல்லவே!
இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!
வடநாட்டு – தென்னாட்டுப் போராட்டம் இன்று
நேற்று ஏற்பட்டதல்ல; புராண கால முதற்கொண்டு இருந்து வந்திருக்கிறது.
இதிகாசங்களுக்கெல்லாம் முந்தியது புராணம்; புராணங்களுக்கெல்லாம்
முதன்மையானது கந்தபுராணம். கந்தப்புராணத்திலேயே இந்த வடநாடு – தென்னாடு
போராட்டம் தொடங்கப்பட்டு விட்டது. அதிலுள்ள சிறு கதையைக் கேளுங்கள். கதை
கற்பனையாக இருந்தாலும் அதிலுள்ள கருத்தைக் கவனித்துப் பாருங்கள்.
ஆரியக் கடவுளாகிய சிவனுக்கும் (ஆரியர்
தலைவன்) பார்வதிக்கும் வடநாட்டில் திருமணம் நடக்கிறது. கவனித்துப்
பாருங்கள், அப்போது தேவர்கள் (வடநாட்டவர் – ஆரியர்கள்) தென்னாடு
உயர்ந்துவிட்டதையும், வடநாடு தாழ்ந்து விட்டதையும் சிவனிடம் வருத்தத்துடன்
கூறுகிறார்கள். சிவன் தென்னாட்டைத் தாழ்த்த வேண்டி அகத்தியனை
அனுப்புகிறார்; அகத்தியன் தெற்கு நோக்கி வருகிறான்; திராவிட நாட்டின்
வடக்கெல்லையான விந்தியமலை அவனைத் தடுக்கிறது. அகத்தியன் சினந்து அம்மலையை
அழுத்திவிடுகிறான் (அங்குள்ள மக்களை வென்றுவிடுகிறான்). மேலும் தெற்கு
நோக்கிச் செல்கிறான்; வாதாபியும் வில்லவனும் தடுக்கிறார்கள். அவர்களையும்
வென்று கொண்டு போய்த் தென்னாட்டில் ராவணனுடைய ஆதிக்கத்தைத் தகர்த்தெறிந்து,
தமிழை உண்டாக்கினான். அதாவது, முதலில் மொழியில்தான் அகத்தியன் கை
வைத்தான்; மொழியை ஒழிக்கும் வேலைதான் அவர்களின் முதல் வேலை; இதுதான்
அவர்களின் நடைமுறைப் பழக்கம்.
இந்த வடநாட்டு – தென்னாட்டுப் போராட்டம்,
நான் தொடங்கியதல்ல. கந்தபுராண காலத்திலே வாதாபியில் தொடங்கப்பட்டது. இது,
ஆரியப் புராணம் கூறுவது. அன்று தொட்டு இடைவிடாது இருந்துவரும் இயற்கைப்
போராட்டம்தான் இது. ஆரியம் ஒழிந்து, ஆரியர்கள் அத்தனைப்பேரும்
திராவிடர்களாகும் வரையிலும், அல்லது அவர்கள் அத்தனைப்பேரும் திராவிட நாட்டை
விட்டு வெளியேறும் வரையிலும் இப்போராட்டம் இருந்தே தீரும். உடற்கூற்று
வல்லுநர்கள் அந்தந்த நாட்டுத் தட்பவெப்பத்திற்கேற்ப அமைந்த அங்க, மச்ச
அடையாளங்களைக் கொண்டு பாகுபடுத்திக் கொடுத்த இனப்பெயர்கள்தாமே ஆரியர் –
திராவிடர் என்பவை!
இப்பிரிவுகள் தேவர்களாலோ, கடவுளாலோ
உண்டாக்கப்பட்ட பிரிவுகள் அல்லவே. அறிவுள்ள மக்களால் பிரிக்கப்பட்டு,
மற்றவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் பெயர்தாமே
இவை? இவர்களைப் பிரிக்க ரத்தப் பரீட்சை செய்ய வேண்டியதில்லையே! ஆடையின்றிப்
பிறந்தமேனியாய் நிறுத்தினால்கூட – இவன் ஜப்பானியன், இவன் நீக்ரோ, இவன்
திராவிடன், இவன் ஆரியன் என்று பிரித்துவிடலாமே! நாய்களைப் பிரிக்கவில்லையா
நாம்? இது கோம்பை; இது "புல்டாக்'; இது சிப்பிப்பாறை; இது ராஜபாளையம்; இது
சீமை – என்று? குதிரையைப் பிரிப்பதில்லையா நாம்? இது அரபிக் குதிரை; இது
ஆஸ்திரேலியா குதிரை; இது வேதாரணியத் தட்டு – என்று?
இவற்றையெல்லாம் பிரிக்கும்போது
மக்களைத்தானா பிரிக்க முடியாது? இது போகட்டும். நாம் பிறவி பார்த்து
இனப்பிரிவினை செய்யும்படிக் கேட்கவில்லையே? அவரவர்கள் கொண்டாடும்
உரிமைகளைக் கொண்டுதானே பிரிக்கும்படிச் சொல்லுகிறோம்!
தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர்
என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூற
முடியும். ஆனால், தமிழ்பேசும் அத்தனைப் பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது.
இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த
மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான்.
ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன்
அல்லாத ஒருவன் – மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள
முடியாது.
தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத்
தமிழனென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மை கெடுக்கப்
பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன்
என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன் வந்தாலும்
அவனுடைய ஆசார அனுஷ்டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டு திராவிடப்
பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று
ஒப்புக்கொள்ள மாட்டோம்.
பண்டைத் திராவிட மக்களின் பழக்க
வழக்கங்களை ஒட்டி, அதில் ஏதாவது தவறு இருக்குமேயானால் அதையும்
களைந்துவிட்டு, ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று
ஏற்பாடு செய்தால், அவ்வேற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான்
திராவிடன் என்று கூறுவோமே அல்லாது, சி.பி. ராமசாமி அய்யரையும்,
ராசகோபாலாச்சாரியாரையும் கூட அவர்களின் பண்பு திராவிடப் பண்பாக மாறும் வரை,
திராவிட இனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோமே! தமிழர் என்பதில் இவ்வளவு
நிபந்தனை உண்டா? இதைத்தவிர திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன
உள்ளெண்ணம் இருக்க முடியும்?
எங்கள் நடத்தையிலோ, அன்பிலோ உங்களுக்குச்
சந்தேகம் எழத்தான் என்ன காரணம் இருக்க முடியும்? தமிழர் என்பதில் நான்
சேர்க்க நினைத்த அத்தனைப் பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த –
நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா?
இழிவுக்கும், தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறாக –
இவ்விழிவுக்கே காரணமான உயர்சாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில்
இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு
எல்லோரும் ஒன்றாவோம்.
இந்நாட்டுக் கிறித்துவர்களும்,
முசுலிம்களும் தம்மைத் திராவிடர் அல்லர் என்று கருதுவார்களானால் – தம்மை
சூத்திரர் அல்லரென்று கருதுவார்களானால், அதைப்பற்றியும் நமக்குக்
கவலையில்லை. ஆனால் உண்மையில், ஆரியம் அவர்களைச் சூத்திரருக்கும்
தாழ்ந்தவராக – அதாவது "மிலேச்சர்கள்' என்பதாகத்தான் கருதி வருகிறது என்பதை
அவர்கள் உணரவேண்டும். வைசியன் தன்னை "ஆரிய வைசியன்' என்று கூறிக்
கொண்டாலும், ஆசாரி தன்னை "விஸ்வப் பிராமணன்' என்று கூறிக் கொண்டாலும்,
கவுண்டன் தன்னைத் "தேவேந்திரகுல வேளாளன்' என்று கூறிக்கொண்டாலும்,
படையாச்சி தன்னை "வன்னியக்குல சத்திரியன்' என்று கூறிக்கொண்டாலும், ஆரியம்
இவர்கள் அத்தனைப் பேரையும் – "சூத்திரன்' என்ற பிரிவில் ஒன்றாகத்தான் கருதி
வருகிறது என்பதையும், கோயிலில் ஒரு குறிப்பிட்டவரையில்தான் இவர்கள்
அத்தனைப்பேரும் போக முடியும் என்பதையும் இவர்கள் உணர வேண்டுகிறேன்.
பிராமணர்கள், பிராமண மகாசபை வைத்துக்
கொள்ளுகிறார்கள்; அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன.
நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் சாதியானுக்கு
அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும்; பார்ப்பானின் தாசிமக்கள் என்ற
பட்டம்தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய
வேலையாகக் கொண்டிருப்பதால்தான், அப்பெயரால் எவ்விதச் சலுகையோ, உரிமையோ
கிடைக்காததால்தான், அப்பெயரிலுள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே
இழிதன்மையுள்ள திராவிடராகிய முசுலிம்கள், கிறித்தவர்கள், வைசியர்கள்,
சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர்,
மலையாளிகள் ஆகியவர்களெல்லாம் ஒன்றுசேர மறுத்துவிடுவார்கள்.
ஆதலால்தான், நம்மைச் சூத்திரர் என்று
கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்ளுகிறோம். சூத்திரர்
என்பவர்களுக்குத் "திராவிடர்' என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர்
யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, எனது
அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைப்பேரும் ஒன்றுசேர
வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள
வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க
வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில்
வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும், "பிறவி காரணமான
இழிதன்மை'யும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும்
காரணமில்லை.
"ஆரியராவது, திராவிடராவது? அதெல்லாம்
இன்றில்லை' என்பீர்கள், இங்கே வாருங்கள்; பேசாமல் மேல்துண்டு போட்டுக்
கொண்டு நாலு வர்ணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான்
உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா
பாருங்களேன்!
---------------"தந்தைபெரியார் - நூல் : "மொழியாராய்ச்சி' வள்ளுவர் பதிப்பகம், பவானி 1948
1 comments:
ஆரிய திராவிட வாதம் ஆறிப்போன, நாறிப்போன வாதம். வட இந்தியக் கோவில்களில் எல்லா வருணத்தவரும் சாமியைத் தொட்டு பூசை செய்யலாம். நம் தென்னாட்டில் மட்டும் ஆகம விதி.வடநாட்டு இலக்கணங்களில் நால்வகை வர்ணங்களுக்கு ஆதாரம் இல்லை. நமது தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் அரசன், அந்தணன், வாணியன், வேளாளன் என நால்வகை வரனப்பகுப்பு விளக்கப்பட்டுள்ளது. எனில் இது யார் சூழ்ச்சி. புராணங்களில் கூறப்படும் அரக்கன் தமிழன் என்றால் இங்கு எந்த சாத்தியமே அரக்கர் எனப் பெயர் பெறவில்லையே, தேவர், தேவேந்திரகுல வெள்ளாளர் எனப் பெயர் பூண்டது ஏன்? நண்பா உனது மூளையை வைத்து யோசி. யாரோ,எந்தக் காலத்திலோ அரசியல் அபிலாசைகளுக்காக சொன்னதை வைத்து அளவிடாதே.
Post a Comment