கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?
தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.
கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் உருவப் படத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.
ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.
விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!
ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?
பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்பது எப்படி சரி ஆகும்?
இந்து என்று சொல்லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?
ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் - அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.
அப்படிச் சொல்லாதீர்கள். எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே? என்றார்.
அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் - பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!
உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்திருப்பது அசல் திரிபுவாத மாகும்.
பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன்னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!
அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாசகங்கள் கோணிப்பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.
ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?
அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந்திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் - ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.
பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவியல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?
அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.
அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறிவியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?
கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க வில்லையா?
ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கிய பார்ப்பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார்கள். அதன் ஒரு முன் னோட்டம்தான் இந்தத் தினமலர் விளம்பரம்!
எச்சரிக்கை!
--------------------"விடுதலை” 21-9-2012
21 comments:
டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர்
டி.முருகேசன் நியமனம் புதுடில்லி, செப் 21: டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் டி.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 12 ஆண்டு காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர். டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் பெரியார் விழா விழாவில் பங்கேற்றார் அமெரிக்க நாத்திகப் பெண்மணி! அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் கொண்டாட முடிவு
வாஷிங்டன், செப்.21- அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டனில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வெகு சிறப் பாகக் கொண்டாடப் பட்டது.
வருடா வருடம் தந்தை பெரியாரின் பிறந்த நாளை பெரி யார் பன்னாட்டு மய்யம் பெரியாருக்கு நன்றி கூறும் வகையில் பெரி யார் பிறந்தநாளை கொண் டாடுவது வழக்கம். செப்டம்பர் 15, சனி மதியம் மேரிலாந்தில் உள்ள எல்க்ரிட்ஜ் என்ற நகரில் உள்ள பொது நூலகத்தில் தந்தை பெரியார் விழா நடை பெற்றது.
இந்த விழாவை கடந்த சில வாரங்களாக மருத்துவர் சோம. இளங் கோவன் ஒருங்கிணைத்து வந்தார். விழாவின் முதன் முதலில் "லிபியாவில் உள்ள அமெரிக்க தூது வர் கிறிஸ்டோபர்" மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விழா தொடங்கப் பட்டது. இந்தாண்டு விழாவில் ஒரு சிறப் பம்சம் உள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளர் இருவர் வந்து இருந்தார்கள். ஒருவர் வெள்ளைக்கார அமெரிக்கப் பெண், மற்றொருவர் பெரும் கவிக்கோ வா.மு. சேது ராமன்.
வெள்ளைக்காரப் பெண்மணி பங்கேற்பு
வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் மார்கெரட் டவ்லி. இந்த மார்கெரட் அமெரிக்கா வில் பகுத்தறிவை, கட வுள் மறுப்பாளர் இங்கர் சால் பற்றி பேசினார், அவற்றுள் உள்ள பல ஒத்த சிந்தனைகளை தந்தை பெரியார் கருத் தோடு ஒத்துப் போவது கண்டு மிக மிக ஆச்சர் யம் அடைந்தார். அவர் தன்னுடைய பேச்சில், தந்தை பெரியாரின் கருத்துகளை அமெரிக்க வாழ் மக்களிடமும் நான் பகிர்ந்து கொள்ள விரும் புகிறேன் என்றார்.
தந்தை பெரியார்பற்றி பாடல் பாடி மகிழ்வித்த பூஜா செல்வன் (வயது 15)
அது மட்டும் அல்ல மார்கெரட் முழுநேர பணியாக கட வுள் மறுப்பு, சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்வது என தொடர்ந்து பணி செய்து கொண் டும், இங்கர்சாலின் பேச்சு மற்றும் எழுத் துகளை அமெரிக்கா வில் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பரப்புரை செய்தும் வருகிறார். ஆசிரியர் வீரமணி யின் நண்பரும், சிறந்த பகுத்தறிவாளருமான முனைவர் இன்னாசி எல்லோரையும் வர வேற்று பேசிவிட்டு, அறி ஞர் அண்ணா, பெரியார் மற்றும் ஆசிரியர் வீர மணியின் நட்பு மற்றும் அவர்களது களப்பணி பகுத்தறிவுப் பாதை, கடவுள் மறுப்பை குறிப் பிட்டார்.
மேலும் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந் தனைகளை மேல்நாட் டில் குறிப்பாக அமெரிக் காவில் பரப்பவில்லை என்று ஆதங்கப்பட் டார். போராசிரியர் முனை வர் கிருஷ்ணகுமார் விழாவில் கலந்து கொண்டு, அறிவியல், மதம் மற்றும் கோட் பாடு என்ற தலைப்பில் புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். சில அடையாளங்கள் நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு சிந்திக்க விடாது என் றார்.
புத்தர் எப்படி பல அடையாளங்களை உடைத்தார் என்றும், பகவத் கீதை மற்றும் பைபிள் போன்ற மத நூல்களில் நிறைய அறி வியலுக்கு முரண்பட்ட கருத்துகள் உண்டு என் பதையும் சில எடுத்துக் காட்டுகளுடன் விளக் கினார்.
பெரியாரும், காந்தியும்
அமெரிக்க நாத்திகப் பெண்மணி மார்கெரட் டவ்லி, மருத்துவர் சோம. இளங்கோவன் முதலியோர் (15.9.2012)
காந்தி கூட இந்து மதத்தை சீரமைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரே ஒழிய, எல்லோரும் சமம், ஜாதி கூடாது என்று சொல்ல வில்லை என்றும் குறிப் பிட்டார், ஆனால் தந்தை பெரியார் மனிதர் களில் வேறுபாடு இல்லை, எல்லோரும் சமம் என்ற கருத்தை பல ஆண்டு களுக்கு முன்பே நிறுவி னார் என்பதையும் பேரா சிரியர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் எல் லோருக்கும் புரியும் வண்ணம் எளிய ஆங்கி லத்தில் முனைவர் பிரபா கரன் அவர்கள் இலக்கி யத்தில் மனிதனுக்கு வேறுபாடு இல்லை, சாதி அடுக்குகள் இல்லை என்பதை, திருவள்ளுவர், சங்க இலக்கியம், ஔ வையார், சிலப்பதிகாரம் மூலம் சில பாடல்கள் எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார். நாஞ்சில் பீட்டர் அவர்கள், தந்தை பெரியாரின் பல கருத்துகள் அடங்கிய புத்தகங்களை தமிழ் சமுதாயத்தில் பிரபல மான பெரும்வாரி மக்கள் ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்களைக் கொண்டு உரு வாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பூஜா செல்வன் என்ற 15 வயது பெண், தந்தை பெரியாரின் பெரி யார் அவர்தாம் பெரியார் என்ற பாடலும் கிழவன் அல்ல கிழக்கு திசை என்ற இரு பாடல்களையும் மிக மிக அருமையாகப் பாடினாள். பார்வையாளர்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டினார்கள். தமிழகத்தில் இருந்து வந்திருந்த மற்றொரு பிரபலம் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் தந்தை பெரி யாரைப் பற்றி நீண்ட கவிதை வாசித்தார்.
தந்தை பெரியாரால் பெயர் வைக்கப்பட்ட திரு பன்னீர் செல்வம் அவர்களும் பெரியாரை பாராட்டி ஒரு கவிதை வாசித்தார்.
மருத்துவர் சோம. இளங்கோவன்
விழாவின் இறுதியாக மருத்துவர் சோம. இளங் கோவன் தந்தை பெரி யாரும், இங்கர்சாலும், என்ற ஒப் புமையை எடுத்துரைத்தார். இவர்கள் இருவரும் எப்படி மதத்தை எதிர்த் தார்கள், ஆன்மீக அடையாள சின்னங்களான கோவில், சர்ச் இவற்றை ஏன் எதிர்த்தார்கள், இவர்கள் இருவரும் பெண் விடு தலைக்கு எப்படி போரா டினார்கள், அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைக்காக போராடி னார்கள் என்று ஒப் புமை கொடுத்து பேசி யது பார்வையாளர்கள் மிக மிக ரசித்துக் கேட் டார்கள்....
விழாவின் நடுவில் ஈழ மக்களுக் காகவும், சாந்தன், பேரறிவாளன், முருகனுக்காக போராடி இன்னுயிரை நீத்த தோழர் முத்துக்குமார் மற்றும் தோழி செங்கொடிக்கு மயிலாடுதுறை சிவா ஒரு நிமிடம் நினைவு கூர்ந்தார்...
விழாவின் இறுதியில் கொழந்தை வேல் இராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இன்னும் பெரிய அளவில்....
வழக்கம் போல் இந்தாண்டும் அமெரிக்காவில் பெரியார் பன் னாட்டு மய்யம், பெரியார் பிறந்த நாள்விழாவை கொண்டாடினாலும், அடுத்தமுறை இன்னமும் பெரிய அளவில், பெரிய அரங்கில் கொண் டாட வேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டார்கள்.
விழாவிற்கு பென்சில்வேனியா, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலவேர் மற்றும் நியுஜெர்சியில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டார்கள்....
விழா கட்டுரை தொகுப்பு மயிலாடுதுறை சிவா
தமிழர் தலைவர் கி.வீரமணி பெரியாரின் வெற்றி முரசு
தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமை இருளை அகற்றிய அறிவு அகல் விளக்கை ஏற்றி வைத்த தந்தை பெரியார் உலகத் தமிழர்களின் தலைமை சான்ற மறுமலர்ச்சி சிந்தனைத் தலைவர் என்பதை உலகறியும்.
தந்தை பெரியார் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும், அந்த வரலாற்றை இக்காலத்தில் படிப்பவர்களுக்கும்தான் தந்தை பெரியாரின் தன்னேரில்லாத தறுகண்மைத் தொண்டுகள் தெரியும்.
அக்காலத்தில் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மக்கள் பட்ட துயரமும் துன்பமும் சொல்லில் அடங்கா. எழுத்தில் வடிக்க இயலாத பெருங்கொடுமைத்துவங்கள் நிறைந்ததாகும்.
பெரிய சாதி பார்ப்பனர் கள், அனைத்துச் சாதி மக்களையும் கீழே போட்டு மிதித்தனர். மேல் சாதிக்காரர்கள் அடுத்தடுத்த கீழ் சாதிக்காரர்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்தனர். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் படாதபாடுபடுத்தி புழு, பூச்சிகளைவிட கேவலமாக நடத்தினர்.
மதம், சாதி, கடவுள் பெயரால் தமிழர் கள் வீழ்த்தப்பட்டனர். இந்தக் காலகட் டத்தில் தமிழகத்தின் விடியலாகத் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம், அவர் வழி அறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் புத்துணர்ச்சியும், எழுச்சியும், விழிப்பும் தான் இன்றைய தமிழர்கள் நல்வாழ்வு உயர்வாழ்வு.
இதற்காக அன்று எத்தனை, எத் தனையோ இளைஞர்கள் கழுமரம் ஏற்றப் பட்டது போன்ற துன்பங்கள், துயரங்களை ஏற்றனர். தங்கள் வாழ்வை இழந்து தமிழர்கள் சுயமரியாதைக்காக தமிழ் மண்ணுக்காக, தமிழர்க்காக உரமாயினர். திராவிட இயக்கம் என்றர்லே அடி உதை, மிதி, சிறை என்று படாதபாடுபடுத்து வார்கள் அன்றைய ஆட்சியினர், மேல் சாதித் திமிர்த்தனத்தினர்.
சொத்து சுகத்தை, நலத்தை, ஊணை, உயிரை, இழந்து வளர்த்த இயக்கம்தான் திராவிட இயக்கங்கள். இன்றைய தலைமுறையினர் நன்றியோடு இதனை நினைக்கவேண்டும்.
இன்று தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்குரிய தந்தை பெரியார் தந்த விலைக்கு ஈடே கிடையாது! அறிஞர் அண்ணாவிற்குப் பின் இன்றுவரை திராவிட இயக்கத் தேரோட்டத்தை இழுத்துப் பிடித்துத் தொண்ணூறு அகவையிலும் தொடரும் கலைஞர் போன்றவர்களின் தியாக, ஈகத்திற்குத் தமிழ்ச் சமுதாயம் கடமைப் பட்டுள்ளது.
இந்த வழித் தடத்தில் தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடு களுக்காக எத்தனையோ இன்னல்களை, இடையூறுகளை விடுதலை, இதழ் வழி சுயமரியாதைச் சுடர் விளக்கை அணை யாத விளக்காகக் காத்து உலகுக்கு ஒளிகாட்ட வைத்தவர் ஒப்பாரும், மிக்காரு மில்லாத தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஆவார்.
தந்தை பெரியார் தந்த விதைகளை யெல்லாம் பக்குவமாகப் பாதுகாத்து, அந்தந்தக் காலகட்டத்திற்கு என்ன தேவையோ அதற்குத் தக பருவகாலத் திற்கு ஏற்ற பகுத்தறிவோடு அந்த வித் துக்களை, நல்ல நிலங்களை நன்னில மாகப் பயன்படுத்தி விதைத்து இன்று பல்வேறு துறைகளில் தமிழர்களுக்கு நலம் பயக்கும் சீரிய நேர்த்திய கடமையை நம் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வியக்கத்தக்க கடமையை விடுதலை இதழின்; இயக்கத்தை நடத்தி வெற்றி நடைபோடுகிறார்.
தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விடுதலை இதழை ஒரு சிறப்பு மிக்க இதழாக நடத்துவதோடு, வேறு எந்த இதழிலும் சொல்ல அஞ்சும் செய்திகளை எல்லாம் துணிவோடு வெளியிட்டு, எந்த வகையிலும் தமிழர் பகைமைகளோடு சமாதானம் செய்து கொள்ளாமல் விடுதலை முரசு கொட்டி வருகிறார்.
விடுதலை 50 ஆண்டு நிறைவை நாம் போற்றும் போது, பெருமகனார் வீரமணி அவர்கள் அரும் பெரும், தமிழர் தொண்டினையும் போற்றி, நல்ல உடல் நலத்தோடு, பலத்தோடு, தமிழர்களுக்கு நூறாண்டு மேலாண்டு, பல்லாண்டு தொண்டாற்ற நீடூழி வாழ வாழ்த்தி வணங்குவோம்.
(நன்றி: தமிழ்ப் பணி, செப்டம்பர் 2012)
தீட்சிதர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறார் திருமணத்தை (பால்ய விவாகம்) தடுக்கும் சாரதா சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் அந்தச் சட்டம் வெகுநாள் செயலாக்கப்படாமலேயே முடக்கப்பட்டது. தந்தை பெரியாரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் பயனாக சட்டத்தின் துணையில்லாமலேயே சிறார் திருமணங்கள் குறைந்தன. சமீப காலத்தில் திருச்சி யிலும், வேலூரிலும், தர்மபுரியிலும் நடக்கவிருந்த சிறார் திருமணங்களை மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு நிறுத்தினார்கள் எனச் செய்திகள் வருவது வரவேற்கத்தக்கதே.
ஆனால், இன்றும் சரளமாக சிறார் திருமணத்தை நடத்தும் தில்லைவாழ் தீட்சிதர்களை இந்தச் சட்டம் நெருங்காதது ஏன்? கடலூர் மாவட்ட நிருவாகம் தூக்கத்திலேயே உள்ளதா? அல்லது தீட்சிதர்கள் பக்கம் திரும்பக் கூடாது என கண்மூடி தவம் செய்கிறதா? பள்ளிக்குச் செல்லும் 10, 11 வயது சிறுமிகள்கூட கழுத்தில் மஞ்சள் கயிறுடனும், காலில் மெட்டியுடனும் செல்வது வெகு சரளமான காட்சி. அந்த மாணவிகள் பள்ளி மாணவர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாவது தனிக் கதை.
நாம் தீட்சிதர்களிடம் விசாரித்தால் இதில் பெண்ணடிமைத்தனமோ, வரதட்சணை விவ காரமோ, இல்லையென்றும் கோயில் அர்ச்சகர் பணி குடும்பஸ்தர்களுக்கே உண்டென்பதால் இளவயதுத் திருமணம் தவிர்க்க முடியாதது என்கிறார்கள். தந்தை பெரியார் கூறியபடி பிறவி முதலாளிகளாக வருமானம் பார்க்கும் அர்ச்சகர் தொழிலுக்காக அறிந்தே செய்யும் இந்த அநியாயம் தொடரலாமா?
மாவட்ட நிருவாகத்தின் கீழ் சிதம்பரம் இல்லையா? அல்லது தீட்சிதர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? சிதம்பரத்தில் சிறார் திருமணக் கொடுமையை மாவட்ட நிருவாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் பொது மக்கள் கூடி போராட்டம் நடத்த நேருவதுடன் பொது நல வழக்கும் தொடரப்படும். எச்சரிக்கை!
- தி. சோமசுந்தரம்
பிள்ளையார்ப்பட்டி
தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாள்
எழுத்துரு அளவு
வெள்ளி, 21 செப்டம்பர் 2012 17:40
இந்த ஸ்தலத்தில் (திருப்பதியில்) வீற்றிருக்கும் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளும் ஒரு ஜமீன்தாரேயாவார். நூற்றுக் கணக்கான ஏழை மக்களின் இரத்தத்தை இவர் உறிஞ்சி வருகிறார். நேர்த்திக் கடன் செய்பவர்களும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரீகர்களும், பக்தர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் வருஷாவருஷம் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு முட்டாள்தனமாகப் பதினாறு லட்சம் ரூபாய்கள் வீதம் செலவு செய்கின்றனர். எனக்கு இத்தகைய கடவுள் மீது சிறிதேனும் நம்பிக்கையே இல்லை. நீங்கள் தோழர் வெங்கடேஸ்வரர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆட்சியின் கீழ் சரியான நியாயம் வழங்கப்படுகிறதா? அவர்மீது நான் நம்பிக்கை வைப்பதற்கு மறுதலிக்கிறேன்.
இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினி கிடக்கிறார்கள். முதலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய கொள்கைப்படி சுயராஜ்யம் என்றால், அபேத வாதந்தான்.
- என்.ஜி.ரங்கா
புத்தம் மரணம் கச்சாமி!
புத்தர் விழா தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
தத்துவார்த்த வகையில் பார்க்கப் போனால் புத்தர் விழாவில் பங்கேற்க சற்றும் அருகதை இல்லாத ஆசாமிதான் இந்த ராஜபக்சே.
அன்பும், கருணையும், பண்பும், மனித நேயமும் குலுங்கும் பூஞ்சோலையாம் புத்தர் எங்கே? தமிழர்களின் உடலை உயிரோடு கொத்தித் தின்னும் கொடிய கழுகாம் ராஜபக்சே எங்கே?
ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தத்தம் செய்ய முன்வந்த கவுதமப் புத்தர் எங்கே? புத்தர் சிலைகளை - தமிழனை வெட்டி, அவன் ரத்தத்தால் குளிப்பாட்டும் கொடுங்கோலன் ராஜபக்சே எங்கே? மனித குலத்துக்கே மாசு மருவற்ற நல்வழி காட்டி மனிதர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் அன்பு இழைகளால் இணைத்த அந்தக் கருணைச் சீலர் எங்கே? இனவெறி கொண்டு - இட்லரும்கூட எனக்கு ஈடு இல்லை என்ற தோரணையில், பச்சிளங் குழந்தைகள் தங்கி இருந்த விடுதிகளில்கூட குண்டு மழை பொழிந்து அந்தச் சின்னஞ்சிறு மலர்களைக் கொன்று குவித்த குரூர மனிதனான இந்த ராஜபக்சே எங்கே?
யாகங்களின் பெயர்களால் உயிர்ப் பலி கொடுக்கும் உன்மத்தர்களை நேருக்கு நேர் சந்தித்து, இதோபதேசம் செய்து திருத்த முன்வந்த அந்தத் திருமேனி எங்கே? ஆசைகாட்டி மோசம் செய்யும் வகையில் ஓரிடத்திற்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை வரச் செய்து ஒரே நேரத்தில் கொடிய ஆயுங்களை வீசிப் பிணக் குவியலாக்கிய இந்தப் பேர் வழி எங்கே?
புத்தம் என்பது ஒரு நெறி என்ற நிலையை வெறியாக்கிய, ஓநாயல்லவா இந்த ராஜபக்சே! இன்னொரு இனத்தை இல்லாமல் செய்வதற்கு சிங்களவர்கள் மத்தியில் இனவெறியை ஊட்டிய - இரக்கம் என்ற ஒன்று இல்லாத இடி அமீன் அல்லவா இவர்!
இலங்கை அரசின் அதிகாரப் பூர்வமான மதம் பவுத்தம். புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர்தான் அங்கு அதிபராக வர முடியும் என்பது சட்டத்தின் நிலை அங்கு.
இதன் பொருள் என்ன? தமிழர்கள் அந்நாட் டின் குடிமக்கள் இல்லை என்பதுதானே? தமிழர்களுக்கென்று தாய்மொழி, இனப் பண்பாடு, வாழும் உரிமை கிடையாது என்று உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் தானே ராஜபக்சே? இல்லை என்று மறுக்க முடியுமா?
இனவெறி, இன்னொரு இனத்தின் அழிப்பு, சொந்த நாட்டு மக்கள் மீதே போர்ப் பிரகடனம், அழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சிய வர்களும் முள்வேலி முகாமுக்குள் முடக்கி இருக்கும் மோசமான நிலை; ஈழத் தமிழர்கள் என்று சொல்லுவதற்கான எந்தத் தடயமும், அடையாளமும் சற்றுமின்றி முற்றிலும் ஒழித்துக் கட்டும் பாசிச நடவடிக்கைகள் பவுத்தக் கொள்கை என்ற பெயரால் இலங்கையில் நடக்கிறதா - இல்லையா?
பவுத்தத்தில் ஆரிய ஊடுருவலால் அதன் அடிப்படைத் தத்துவங்கள் திரிபு நிலைக்கு ஆளாக்கப்பட்டதே! அன்பு நெறி - அபாய வெறியாக அல்லவா மாறி விட்டது?
பவுத்தம் பரவுயுள்ள நாடுகளில், பவுத்தத்தின் அடிநாதம் அழிக்கப்பட்டு விட்டதே! இல்லை என்றால் இலங்கையில் சிங்கள வெறி பவுத்தத்தின் பெயரால் தாண்டவம் ஆடுமா? ஆடுகின்ற நிலையில், பவுத்த நெறியாளர்கள் எதிர்க் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?
புத்தம் சரணம் கச்சாமியல்ல - புத்தம் மரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமியல்ல - சங்கம் கலகம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமியல்ல தம்மம் தண்டம் கச்சாமி
- என்பதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை.
பவுத்தம் தோன்றிய மண்ணிலே நர வேட்டை மனிதனுக்கு அழைப்பு - வரவேற்பு என்பது வெட்கப்பட வேண்டியதே! 21-9-2012
சிரார்த்தப் பித்தலாட்டம்: ஒரு பார்ப்பனர் கருத்து
காலஞ்சென்ற திரு.ஏ.ராமச்சந்திர அய்யர் என்பவர் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்ஷன் பெற்றும், கவர்மெண்ட் வித்தியா இலாகாவில் வேலை பார்த்தவர். சித்தூரில் கவர்மென்ட் ஸ்கூல் இருந்தபொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அவை வருமாறு:
சுயேச்சை பெரிதும் பாராட்டும் பிராமணர்களின் விஷயமாய், கவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ் நானம், தசதானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக் கூடாதென்று என்னுடைய வாரிசுகளுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன், முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள்ளளவும் பயனில்லையென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
தங்களுடைய சுயநலத்தினால் பிராமணர்கள் இறந்து போனவர்கள் சந்ததியாரிட மிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தியிருக் கிறார்களேயொழிய வேறில்லை. இட்டாருக்கு இட்ட பலன் சித்திக்கு மென்னும் முதுமொழி உண்மையே.
ஒருவன் இறந்து போன பிறகு அவனுக்காக நற்கதி கிடைக்குமென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர்களை கவுரவப்படுத்த வேண்டுமென்பதையும் அவர்களை மறந்து விடக் கூடாதென்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
இறந்து போனவனைக் குறித்து வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடி அவனுடைய கண்ணியத்திற்கு குறைவில்லாமல் அவனுடைய சந்ததி யாரும் பந்துமித்திரர்களும் நன்னடக்கையுடன் நடந்து கொள்வது போதும். ஒரு பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சித்திக்கும், ஆதலின் ஒருவன் சந்தோஷத்துடன் சுகித்திருப்பதற்குக் காரணம், அவனுடைய செய்கைகளேயாகும். சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அதுகெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன்.
ஆகவே, இதைக் கண்ணுறும் நண்பர்கள் இனிமேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல், அவர்கள் என்ன செய்ய சொல்லு கிறார்களென்பதைக் கவனித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களையும், மூடப் பழக்கங்களையும், அடிமை புத்தியையும் அடியோடு அகற்றி சுயமரியாதை பெற்று மனிதத் தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ்வாராக!
- குடிஅரசு, 19.10.1930
கோவில் சமத்துவமா?
கோவிலில் ஜாதி வித்தியாசம் கிடையாது. யாவரும் உள்ளே செல்லலாம் என்கிறார்கள்.
எந்த கோவிலிலாவது பார்ப்பனர் (பிராமணர்) அல்லாதவன் பூசை செய்ய, சமையல் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறானா?
சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம்
சகோதரர்களே! நமது பார்ப்பனர்களால் பதினாயிரக் கணக்கான வருஷங்களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகுசுலபத்தில் வெகு சீக்கிரத்தில் மாறக் கூடிய காலம் வந்திருக்கிறது; இதை இழந்து விடாதீர்கள். இது சமயம் தவறினால் பின்னால் விமோசனமோ இல்லையென்றே சொல்வேன்.
நமது உணர்ச்சியை இது சமயம் உலகம் ஒப்புக் கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆண்மை அடைந்திருந்தவர்கள், இப்போது வெட்கப்படுகின்றார்கள். நல்ல சமயத்தை விட்டு விடாதீர்கள்! பணங் கொடுக்கக் கூடியவர்கள் பணங்கொடுங்கள்! பத்திரிகை வாங்கிப் படிக்கக்கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்! ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்.
அவன் காலைக் கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங் கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள் தனத்தை ஒழியுங்கள்! பார்ப்பனர் மூலம்தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
அவன்தான் தரிசனை காட்ட வேண்டும்; அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையை யாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது. மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை! சுயமரியாதை! சுயமரியாதை!! என்பதை உணருங்கள்.
ஈ.வெ.இராமசாமி திராவிடன் 1927, மார்ச் 8
வெள்ளையன் வெளியேறி கொள்ளையன் புகுவதா?
சில்லறை வர்த்தகப் பிரச்சினை பெரும் பூகம்பமாகக் கிளம்பிவிட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே எழுந்து நிற்கின்றன.
இது தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வில்லை.
பி.ஜே.பி., பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு), சிவசேனா, அ.இ.அ.தி.மு.க. முதலிய எதிர்க்கட்சி கள் மாத்திரமல்லாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரசும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக் குக் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் அகாலிதளம் ஆகிய மக்களவை உறுப்பினர்கள் 227 பேர் ஆதரிக்கும் நிலையில், அதனை எதிர்ப்போர் எண்ணிக்கை 272 ஆகும்.
மக்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 51 சதவிகிதம் அனுமதிக்கப்படுவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது கண்டிப்பாகத் தோல்வியைச் சந்திக்கும் நிலைதான்!
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ராஜினாமா செய்யவேண்டும் என்று குரல் செங்குத்தாக எழுந்து நிற்கும். மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பலகீனத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து தப்பிப் பிழைப்பது என்பது எளிதான ஒன்றல்ல.
இதன் இலாபச்சுளையை முழுமையாக விழுங்கிட பாரதீய ஜனதா என்னும் மதவாத முதலை, தன் வாயை ஆர்வமாக அகலமாகத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, அரசியல் கண்ணோட்டத்திலும் இந்தப் பிரச்சினையை விழிப்பாக அணுகவேண்டிய அவசியம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு இருக்கிறது.
இந்த நிலையில், எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று பிரதமர் கருத்துத் தெரிவிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்நிய முதலீடுகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை நாம் அறியாதவர்கள் அல்லர்.
பிஸ்லேரி என்பது தம்ஸ்அப் குளிர்பானத்தை விற்றுக் கொண்டிருந்த நிறுவனம் ஆகும். கொக் கோகோலா என்ற ஒட்டகம் உள்ளே புகுந்ததும், அந்த நிறுவனம் கொக்கோகோலாவிடம் விற்றுவிட்டு கடையைக் கட்டிக் கொண்டுவிட்டது.
கொக்கோகோலா கின்லி என்ற பெயரில் குடிநீர் வியாபாரத்தைத் தொடங்கியதும், பெப்சி என்ன செய்தது? அக்வாஃபினா என்னும் பெயரில், சந்தைக்கு வந்தது. நெஸ்லே நிறுவனம் கையைக் கட்டிக்கொண்டு நிற்குமா? பியூர் லைஃப் என்ற முத்திரையுடனும், பிரிட்டானிய நிறுவனம் ஒன்று பியூர் ஹெல்த் என்ற முகமூடியுடனும் இந்தியாவுக்குள் புகுந்து தன் வியாபார வேட்டையை நடத்தியதா - இல்லையா?
இதற்கு உலக அழகிகள் அய்ஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்களை விளம்பர முகவர்களாக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லையா? இந்த உலக அழகிகளை உருவாக்கும் பின்னணியில்கூட இந்த உலக வர்த்தகர்கள்தான் பின்னணியில் உள்ளனர் என்ற ரகசியம் தெரியுமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களும் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லையா?
தொலைக்காட்சிகள் பெருந்தொகைகளைப் பெற்றுக் கொண்டே, இந்தப் பன்னாட்டு முதலாளிகளின் பாதங்களைத் தாங்கிப் பிடிக்கவில்லையா?
10 லட்சம் மக்கள் உள்ள இடத்தில்தான் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று சமாதானம் சொல்லப்படுகிறதே! இந்த நிறுவனங்களால் மக்களுக்குப் பயன் என்று மத்திய அரசு தெரிவிக்கிறதே - அது உண்மை என்னவென்றால், கிராமங்களிலும் ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லத் தயங்குவது ஏன்?
கிராமங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்து அரசுக்கு இருக்குமானால், நகர்ப்புற மக்கள் பாதிக்கப் பட்டால் பரவாயில்லை என்று அரசு கருதுகிறதா?
மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்நிய நாட்டு விதைகள் வசீகரமாக விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி விவசாயம் செய்யக் கிளம்பிய நமது உழவர் குடிகளின் நிலை என்ன தெரியுமா?
மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் இருந்து விதை நெல்லைப் பயன் படுத்த முடியாது. விதை நெல்லுக்கு அந்நியர்களை எதிர்பார்க்கும் விவஸ்தை கெட்ட நிலைதான்.
அந்நியன் வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்துவிட்டது என்று கூறிக்கொண்டு, இப்பொழுது வேறு காரணம் கூறி அந்நியர்களிடம் இந்தியாவின் பொருளாதார ஆதிக்கத்தை ஒப்படைக்கத் துடிப்பது ஏன்? மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!
பகுத்தறிவுப் பணி
தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய் தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.
எங்கள் கொள்கை மிகக் கசப்பான கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிட மிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத்தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலையத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக்காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.
பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான் காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருட னும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா? என்பதே விளங்க வில்லையே!
மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந் தானே? இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டு மென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில் லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?
---------------விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 8.7.1961.
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறான வைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது.
மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் பகுத்தறி வில்லாதவை என்பதை அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அப்படியே ஒருவித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி இருப்பதைக் கொண்டு அறிகிறோம். ஆனால், மனிதன் அப்படி இல்லை.
10, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்று ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளான். நாளுக்கு நாள் மனித வாழ்க்கை பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டே போகிறது. இவ்வுண்மை நம் நாட்டை விட மேல்நாடுகளில் மிக விரைவில் செல்லுகிறது. சரியான முறையில் பகுத் தறிவின் மேன்மை தெரிய பயன்படுத்தப்பட்டு வருகிது. அந்நாடுகளில் அதற்கேற்ற வண்ணம் நாகரிக வாழ்க் கையைப் பின்பற்றி அதிசயிக்கத்தக்க அற்புதங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனால், இந்த நாட்டிலே காட்டுமிராண்டி வாழ்க்கை இன்னும் அழிந்தும் போகவில்லை. பழக்க வழக்கம், முன்னோர் கள் கூறியவை, சாஸ்திர - புராணங்கள் கூறியவை, முனிவர்கள் - ரிஷிகள் கூறியவை, கடவுள் அவதாரங் களும், கடவுள்களும் கூறியவை என்பதில் பேரால் எதையும் கண்மூடித்தனமாக ஆராய்ந்து பார்க்காமல் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர். எனவே, பகுத்தறிவுக்குப் போதிய இடமின்றிப்போய் அநாகரிக வாழ்க்கை வாழுகிறார்கள்.
மற்ற நாடுகளைப் போன்று இங்கும் நாகரிகமும், விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் விளங்க வேண்டுமென் றால், பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்து இந்துக் கடவுள்களின் அநாகரிக அமைப்பு முறைகளைப் பற்றியும், கடவுள்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையின் கதை களைப் பற்றியும் விளக்கினார். இறுதியில் வால்மீகி இராமா யண சம்பந்தப்பட்ட ஊழல்களையும் எடுத்துக் கூறி இரவு 10 மணி வரை பேசினார்.
(10.1.1956 அன்று மீனாட்சிபுரம் படிப்பக 5-ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 15.1.1956)
டாக்டர் வரதராசலு நாயுடு
நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள்தான் தமிழ்நாடு இந்த மும்மூர்த்தி கள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு.
இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள்.
இந்த மும் மூர்த்திகளில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் இன்று (1957).
டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப் பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான வ.வே.சு. அய்யர், பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் என்று வேறுபாடு செய்து, சமபந்திக்கு இடம் இல்லாமல் தனித்தனியாக உணவு பரிமாறச் செய்ததைக் கண்டித்தவர்.
அப்பொழுது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக டாக்டர் வரதராசலு நாயுடுவும், செய லாளராக தந்தை பெரியார் அவர்களும் இருந்தனர்.
குருகுலத்தில் ஜாதி வேறு பாடு காட்டப்படுவது குறித்துக் கலந்து பேச திருச்சியில் காங்கிரஸ் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது (27.4.1925).
அக்கூட்டத்தில் பச்சையாக பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு பக்கமும், பார்ப்பனர் அல்லாதார் இன்னொரு பக்கமும் அணி பிரிந்து காரசாரமாக விவாதிக்கும்படி நேரிட்டது.
வேதங்களிலும், சாஸ்திரங் களிலும் வருணப் பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கின்றன. வேத விதி முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டு இருக்கிறார். இதில் என்ன தவறு? என்று ஒரு பார்ப்பனர் வ.வே.சு. அய்யருக்கு ஆதரவாகப் பேசினார். பெரியாருக்கு வந்ததே கோபம்!
ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரங்களும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கர்ச்சனை செய்தார். (1922 இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இதே கருத்தைச் சொன்னதும் கருத்தூன் றத்தக்கது!)
பெரியாரை அடுத்து டாக்டர் வரதராசலு நாயுடு ஆவேசப் புயலாக வெடித்தெழுந்தார்.
ஆரியர்களின் வேதகால கலாச்சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடம் இல்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று வெடித்தார்.
பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? டாக்டர் வரதராசலு நாயுடு பார்ப்பனத் துவேஷப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்துப் பேசித் தீர்மானத்தைத் தோற் கடித்தார் பெரியார். அதன் காரணமாக டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், ராஜாஜி, என்.எஸ்.வரதாச்சாரி, கே. சந்தானம் அய்யங்கார், சாமிநாத சாஸ்திரி ஆகிய அய்ந்து பார்ப்பனர்களும் உடனே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர்.
1954 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி, தந்தை பெரியாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய நேரத்தில், சென்னையில் அரசினர் தோட்டத்தில் (இப்பொழுது ஓமந்தூரார் வளாகம்) இருந்த டாக்டர் வரதராசலு நாயுடு இல்லத்தில் தான், அவரின் முயற்சியால் தந்தை பெரியார் காமராசர் ஆகியோர் அமர்ந்துப் பேசி காமராசர் முதலமைச்சர் ஆவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.
இன்னொரு முக்கிய தக வல் உண்டு. தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வலியுறுத்திய வரும் டாக்டர் நாயுடு அவர்களே! (17.9.1956).
----------------------மயிலாடன் அவர்கள் 23-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
குற்றாலம் வாரீர்!
இம்மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி முடிய நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடக்க உள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக அன்னை மணியம்மை யார் அவர்கள் காலந்தொட்டு இந்தப் பட்டறை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கழகத் தலைவர் அவர்களும், கழகப் பேராசிரியர்ப் பெரு மக்களும், கழக முன்னணியினரும் பெரியாரியலின் பல்வேறு தலைப்புகளில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான இருபால் இளைஞர்களும் இப்பட்டறையால் பலன் பெற்றுள்ளனர்.
வெறும் பாட வகுப்புகள் மட்டுமின்றி களப்பயிற்சி, யோகா பயிற்சி முதலியவையும் கற்பிக்கப்படு கின்றன.
இப்பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்கள், கழகத் தின் பல்வேறு பொறுப்புகளுக்குப் பிற்காலத்தில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரோட்டில் கோடைக் காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் இத்தகு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களே பாடங்களை நடத்தியுள்ளார். இன்றைய நமது கழகத் தலைவரும் அத்தகு பயிற்சிப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டு, மாணவர் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் பலனை இன்று கழகமும், நாடும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த மண்ணுக்கான தத்துவம் என்பது தந்தை பெரியார் அவர்களுடையதே! தந்தை பெரியார் கண்ட இயக்கம் என்பது புத்தர் இயக்கத்தின் இன்னொரு பதிப்பு அல்லது மறுபக்கமாகும்.
ஆரியத்தின் ஆணி வேரை வீழ்த்த தோன்றியது தான் புத்த நெறி! வர்ணாசிரம தர்மத்தை வேரோடு சாய்க்கவந்த தத்துவம் அது!
போக்குவரத்து வசதியற்ற அந்தக் கால கட்டத்தில் அரசக் குடும்பத்தில் பிறந்த அந்தக் கவுதமப் புத்தர், எல்லா வனப்புகளையும், வளர்ப்பு களையும் துறந்து மக்கள் மத்தியில் இருந்த துக்க இருளை துடைத்தழிக்கப் புறப்பட்டு பிரச்சாரம் செய்தார்.
அதே அச்சின் வார்ப்பில்தான் 29 பதவிகளைத் தூக்கியெறிந்து, ஆடம்பர வாழ்வைக் கசக்கி எறிந்து தொண்டறத்தில் குதித்தார் - தும்பை மலரினும் தூயதான உள்ளம் கொண்ட தந்தை பெரியார்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பார்ப்பனீய வருணாசிரம சமூக அமைப்புதான் சகல நோய்களுக்கும், துன்பத்துக்கும் பகைமைக்கும், பேதங்களுக்கும் காரணம் என்பதைத் தெற்றென உணர்ந்து மக்கள் மத்தியில் தம் சிந்தனை வெளிச் சத்தை பாய்ச்சினார். எதிர்ப்புப் புயல்கள் கிளம்பி னாலும் அவற்றைத் தூசாகத் தட்டி, தம் பூகம்பப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு, மக்கள் மத்தியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றியும் கண்டார்.
இன்றைக்கு ஏற்பட்டு இருக்கும் எல்லா வகையான வளர்ச்சிகளுக்கும், மாற்றத்திற்கும் இந்த வரலாற்றுத் தலைவரின் உழைப்புதான் அடிப்படை!
ஆரியம் வளைந்து வளைந்து, குழைந்து குழைந்து, குமைந்து குமைந்து தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் சாகசங்களை அறிந்த ஒன்றாகும்.
வரலாற்றில் அதன் மீது ஏவப்பட்ட எதிர்ப்பு களையெல்லாம் சீரணித்துக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் மூலபலத்தை நோக்கிப் போர் புரிந்த காரணத்தால்தான் அதன் ஜம்பம் பலிக்கவில்லை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். என்ற பெயராலும், பா.ஜ.க. என்ற பெயராலும், பாரதி சங்கம் போன்ற பெயராலும் தலைமையைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டு தான் உள்ளது.
இந்த நிலையில் நம் இன இளைஞர்களை ஈட்டி முனையாக வளர்த்தெடுக்க வேண்டாமா? ஆரியத் தின் அங்க மச்ச அடையாளங்களை எடுத்துரைக்க வேண்டாமா? தத்துவ ரீதியாக ஆரியத்தைத் தகர்த்தெறிய வேண்டாமா?
இத்தகைய அடிப்படையைச் செய்யக் கூடிய ஒரே ஒரு புரட்சி இயக்கம் இந்நாட்டில் திராவிடர் கழகமே!
குற்றாலத்தில் நான்கு நாட்கள் என்றால் மற்ற மற்ற மாவட்டங்களில் சனி, ஞாயிறுகளில் பட்டறைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
அவற்றில் பயிற்சி பெறும் இருபால் இளைஞர் களைக் கழக இளைஞரணி, மாணவரணிப் பொறுப் பாளர்கள் ஆற்றுப்படுத்தி, கழகப் பணியின் பக்கம் மடை மாற்றம் செய்திட வேண்டும்.
குற்றாலம் பயிற்சி பட்டறை 16 வயதுக்கு மேற்பட்ட இருபால் இளைஞர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கும் கடமையினை ஆங்காங்குள்ள கழகத் தோழர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள் கிறோம்.
இளைஞர்களின் எழுச்சியே எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும்.
செயல்படுவீர்! - தோழர்களே! 22-9-2012
தமிழ் - இன, கலாச்சாரப் போராட்டத்துக்குப் பயன்படுமா?
தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படி பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம்.
ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம். எனவே, அக்காலச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றி லிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்ததாக வேண்டும். மொழியால் மேம்பாடும், வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா.
- தந்தை பெரியார் விடுதலை 27.1.1950
அப்பா - மகன்
சகிப்பு
மகன்: சகிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று ராஜபக்சே கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: என்ன செய் வது, இவரையே சிலர் சகித்துக் கொண்டு இருக்க வில்லையா மகனே? 22-9-2012
ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல கலைஞர் பேட்டி
சென்னை, செப். 22 - இலங்கையிலே தமிழ் மக்களைக் கொடுமைப் படுத்திய அதன் அதிபர் ராஜபக்சேவுக்கு வர வேற்பு கொடுத்தது உசித மல்ல என்றார் திமுக தலைவர் கலைஞர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: செய்தியாளர் :- இலங்கை அதிபர் இந் தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வரு கிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. பிரத மரே அவருக்கு விருந் தளித்திருக்கிறார். இது முறையா? கலைஞர் :- ஒரு நாட்டின் பிரதமரையோ, அதிபரையோ வரவேற் பது என்பதும், உபசரிப் பது என்பதும் மரபு களாகும்.
அந்த மர பினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை யிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப் புகளுக்கிடையே ராஜ பக்ஷேயின் இந்திய வருகையை தி.மு. கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சி களும் கண்டித்தும்கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பதுதான் தமிழ் மக்களின் கருத்து.
அன்னிய முதலீட்டினை ஆதரிப்பது அந்தந்த மாநிலங்களின் உரிமை!
செய்தியாளர் :- அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட் டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறை வேற்றப் போவதாக அறி வித்திருக்கிறார் களே?
கலைஞர் :- அது அந்தந்த மாநில உரிமை களாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலை மைகளுக்கேற்ப, மக் களுடைய கருத்துக் களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக் கிறார்கள்.
செய்தியாளர் :- மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யிலிருந்து வெளியேறியி ருக்கிறார். இந்த நேரத் தில் நீங்கள் கூட்டணி யில் காங்கிரஸ் கட்சி யுடன் உறுதியாக இருக் கிறீர்களா?
கலைஞர் :- எங் களைப் பொருத்தவரை யில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடி வுகளைப் பற்றி விமர் சிக்க விரும்பவில்லை. திராவிட முன் னேற்றக் கழகத்தைப் பொருத்து, எந்த கூட்டணி யிலே நாங்கள் இடம் பெற் றாலும், அந்தக் கூட் டணியிலிருந்து அவச ரப்பட்டோ, ஆத்திரப் பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை.
கூட் டணி தர்மத்தை நாங் கள் எப்போதும் காப் பாற்றுவோம். அப்ப டியே காப்பாற்றி வருகிறோம். கொள்கை மாறுபாடுகள் ஏற் பட் டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை.
காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல!
செய்தியாளர் :- மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட வுள்ளது. ஏற்கனவே தி.மு. கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரி யான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க்கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கலைஞர் :- காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல.
செய்தியாளர்:- உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கலைஞர்:- இதெல் லாம் கட்சியின் செயற் குழு, பொதுக் குழுவிலே விவாதித்து முடிவெ டுக்க வேண்டிய விஷ யங்கள்.
செய்தியாளர் :- கர் நாடக அரசு தமிழகத் திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக் கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதலமைச்சர் தண்ணீர் கொடுக்க முடியா தென்று சொல்கிறாரே?
கலைஞர் :- இதைப் பற்றி நாங்கள் எங் களுடைய கருத்தை ஏற் கனவே சொல்லியிருக் கிறோம். கர்நாடகத் தோடு நட்பு முறை யிலும், நேச மனப் பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்தபோது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீ ருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப் போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றா லும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்து கின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடு வதற்கில்லை. எனவே இதை விடக் கடுமை யான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கு வழிகாட்டக் கூடிய சட்டத் திட்டங் களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித்தான் நிலைமை இருக்கும் என் பது என்னுடைய கருத்து.
கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லதல்ல!
செய்தியாளர் :- தமிழக அரசு இந்தப் பிரச் சினையிலே முறை யாக நடந்து கொண் டிருக்கிறதா?
கலைஞர் :- நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல் லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடி வாதம் காட்டுவது நல் லது அல்ல. இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.
22-9-2012
கட்டப் பஞ்சாயத்தா?
சென்னை வளசரவாக் கம் - ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பன்னீர்செல்வத் தின் மகள் பவித்ராவு, எழும்பூர் ரெயில்வே அதி காரி செங்குட்டுவன் மகன் கோவேந்தன் (போர்ச்சுகல் நாட்டில் இந்தியத் தூதர கத்தில் பணியாற்றுபவர்) ஆகியோருக்குப் பெரி யோர்களால் நிச்சயித்த படி ஜாதகப் பொருத்தப்படி விவாஹ சுப முகூர்த்தம் கோடம்பாக்கத்தில் சாங்கோ பாங்கமாக புரோ கித பார்ப்பனரின் மந்திர கோஷங்களோடு வெகு ஜோராக நடைபெற்றது.
தாலி கட்டியதுதான் தாமதம்! பிரச்சினையும் வெடித்தது! பொதுவாக கல்யாணத்தில் எங்கே பிரச்சினை ஆரம்பமாகும் என்றால் சாப்பாட்டில்தான்.
மாப்பிள்ளை வீட்டார் சாப்பிடவில்லை - மாப் பிள்ளை வீட்டார் சாப்பிட வில்லை என்ற சேதி மண் டபம் முழுவதும். என்ன விஷயம்?
4 லட்சம் ரூபாய் ரொக் கம், போர்ச்சுகல் நாட்டுக் குப் போக விமான செலவு ரூபாய் ஒன்றரை லட்சம் - இவற்றை வைத்தாலே போச்சு! என்று நிபந்தனை! மணமகள் வீட்டாருக் குத் தலை சுற்றியது. மணமகள் பவித்ராவோ கதறல். காரில் மாப்பிள்ளை வெடுக்கென்று வெளி யேறினார்.
வேறு வழியின்றி புகார் காவல் நிலையத்துக்குச் சென்றது. உதவி காவல் துறை ஆணையர் விசா ரணை என்று சேதி.
இதில் என்ன அதிர்ச்சி என்றால் காவல்துறை பெண் அதிகாரி சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு வருகிறாராம்.
இப்பவே இப்படி! வெளி நாட்டுக்குச் சென் றால் அங்கே என் கதி என்ன என்று மணமகள் வினா தொடுக்கிறார் - மணமகள் தந்தையாரின் நிலைப்பாடும் இதுவே! மாப்பிள்ளை வேண் டவே வேண்டாம். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்கிறார் மணமகள் துணிவோடு.
இது வரவேற்க வேண் டிய சரியான - துணிச்ச லான முடிவு. நமக்கு என்ன அய்யமென்றால் சட்டப்படி வரதட்சணை குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி - அதுவும் ஒரு பெண் அதிகாரி இதில் ஏன் சொதப்புகிறார்? கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடு கிறார்?
அய்.எப்.எஸ். அதிகாரி வேலை போய்விடும் என்ற பச்சாதாபமா? இது போன் றவர்களுக்குச் சட்டப் படியான தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண் டாமா?
அந்தத் தண்டனையில் கொட்டை எழுத்துக்களில் ஏடுகளின் முதல் பக்கத்தில் வெளியிடப்படவேண்டும். அப்பொழுதுதான் பெண் களை விலைப் பொருளாகக் கருதும் வீணர்களின் கொட்டமும் அடங்கோ அடங்கென்று அடங்கும்!
- மயிலாடன் 22-9-2012
எச்சரிக்கை!
யாருடைய மின்னஞ்சல் முகவரியையாவது கைப்பற்றி, அவருக்குத் தெரிந்தவர்களுக்கு வேண்டுகோள் மின்னஞ் சல் அனுப்புவது சமீபத் திய மோசடி. வெளிநாடு வந்த இடத்தில் பணத்தை இழந்து தவிக்கிறேன்.
இந்த கணக்கில் கொஞ் சம் பணம் செலுத்துங் கள் என்பதாக அந்த மின்னஞ்சல் இருக்கும். பணம் போட்டால் மோச டிப் பேர்வழி சுருட்டிக் கொள்வார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், சமீப கால மாக லண்டனில் தங்கி தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அவ ருடைய மின்னஞ்சல் முக வரியை யாரோ கைப்பற்றி இப்படி செய்துவிட்டார் களாம்
- எச்சரிக்கை!
ஆமாம்! விவேகானந்தர் கருத்துக்கள் அப்படியும் இப்படியும் தான் முரண்பட்டு இருக்கும்...விவேகானந்தர் மட்டுமல்ல எல்லா ஆன்மீக மதவாதிகளின் கருத்துக்களும் மதத்தில் இருந்தால் அப்படித்தான் வரும்! (எல்லா மத ஆன்மீகவாதிகளும் இப்படித்தான் ) பெண்ணுரிமையையும் விவேகானந்தர் மிக தாழ்வாகத்தான் எழுதியிருப்பார். பேசியிருப்பார். இராமலிங்க அடிகளாரும் இப்படித்தான் எழுதியிருப்பார். முகமது நபியும் இப்படித்தான் எழுதியிருப்பார். இதையும் பெரியார் சுட்டிக் காட்டியிருப்பார். முகமது நபி ஒரு பெண்ண்டிமைவாதி என்று....
அந்த மௌடிக காலத்தில் ஆன்மீகத்தில் இருந்துகொண்டு மனதில் பட்டதை, மனித தர்மத்துக்கு எதிராகப் பட்டதை ஒரளவுக்கு, ஒரு சில இடங்களில் வெளிப்படுத்தினர் என்ற அளவில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
மதத்தில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே மனிதனை மட்டுமே பார்க்கும் மனம் வரும்.
Post a Comment