Search This Blog

18.9.12

அழுக்குருண்டை பிள்ளை-யார்? அறிஞர்கள் கருத்து!


விநாயகர்

விநாயகர்

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில்  சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக் கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண் டும் என்னும் காமவிருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கே னும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழி யுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய் யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததா யிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப் படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறு பட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ் வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!

இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழி யில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது.,


பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மை யாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியனெனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகு மென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருக்க அவர் கருத்தறியாது, அம்மை அவன் தம் மகனைப் பாராது இகழ்ந்தனனென்ற சினங்கொள்ள அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ!

அதனைக் கண்டதும் என ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச்சனியன்மேல் சினங்கொள்ளல் ஆயினளாம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண ரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளையின் முண்டத் திற் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளை யாருக்கு யானைமுகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

இங்ஙனமாக இக்கதை பிரமனை வர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடு களையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்காள்! அன்பர்களே, எல்லாம் வல்ல சிவபிரானுக்கும் அம்மைக் கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால், அஃது எவ்வளவு தெய்வத்தன்மையும்,  எவ்வளவு பேராற்றலும் உள்ளதா யிருக்க வேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற் றென்றால், அப்பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமோ? கூர்ந்து பாருங்கள்! மேலும், அத் தெய்வப் பிள்ளையை விடச் சனியனன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான்? அதுவுமே யன்றி, முழுமுதற் கடவுளான அம்மையார் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்ய மாட்டாமற் போயினரென்றால் அச்சனி யனல்லவோ அவர்களினும் மேலான தெய்வம் ஆகிவிடுகிறான்?


அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க, அவை தம்மை எல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினா னென்பது கடவுளின் இறைமைத் தன் மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும், இத்துணை இழிவுகளும், இத்துணை பொல்லங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவ னும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்மின்காள்! ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களிலும் மேலாகச் சனி யனைக் கொண்டாடி அவனை உயர்த்து வதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்ப் பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவுபடுத்தி விட்டானென்பது

உங்களுக்குப் புலப்படவில் லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் தன் முழு முதற்றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்றும் எமது அறிவுரை யினைக் கண்டு குறை கூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்று தெரிந்து கொள்மின்காள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகா புராணத்தின்கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக் காட்டுதும்; ஒரு கால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தமது கையாற் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து சிவபிரான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம்.


அங்ஙனம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரள் உடனே உயிருள்ள பிள்ளையாராகி அக் குளியலறையின் வாயலிற் காவலாய் இருந்ததாம். சிவபெரு மான் அம்மையைத் தேடிக்கொண்டு அங்கு வந்தனராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டாமெனத்  தடை செய்ய இருவருக்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடிக் கடைசியில் சிவ பெருமான் அப்பிள்ளையாரின் தலையை வெட்டினாராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையை வெட்டிவிட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபெருமான் தாமும் ஆற்றாதவ ராகி நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே! இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வம் என ஆறுதல்  மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளை யாரின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தனராம்.

அடிகளாரின் ஆராய்ச்சி அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற் பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது? எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம் போல் ஊனுடம்பு உடையவரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருள்ஒளி வீசித் துலங்குவதென்று தேனோபநிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி யிருந்ததென்றும்  அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளை யாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகாபுராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதியுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்காள்! ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிக மும், தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட்பேரொளியின் வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதா யிருக்குமோ? சொன்மின்காள்!     மேலும் தன் மனைவியாரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண் பட்டதா யிருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தன் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத் தகுந்ததாகுமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்ப லாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தி னனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது?

இத்துணைத் தகாததென்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும், அருள் வடிவான பிராட்டியையும், ஓங்கார, ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

                     ----------------மறைமலை அடிகள் எழுதிய - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளி யிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்.

(தொகுப்பு: வய்.மு.கும்பலிங்கன், குடந்தை) 15-9-2012

0 comments: