Search This Blog

18.9.12

விநாயகசதுர்த்தி என்றால்?கொழுக்கட்டை ஏன்?தோப்புக்கரணம் ஏன்?

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் வினாயகன்!
இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் கைக்கொள்ள வேண்டியது.

பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொறி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது.

இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமகனுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.

கொழுக்கட்டை ஏன்?

விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.

யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?

இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?

தோப்புக்கரணம்

பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டுத் தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.

இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம்.

இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?

இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும் அசுரனையும் ஒன்றாக் கருதுகின்றனரா?

இந்தப் பிள்ளையார் தன்னைக் கும்பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!

சதுர்த்தி என்றால்...?

சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.

சதுர்த்தி அறை - திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.

அருள்பெற குறுக்கு வழி

கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.

(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)

திடீர்ப் பிள்ளையார்

கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.

பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.

விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?

இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமி யாகவும் அறிவிற்கும் படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?

பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனை பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங்களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?

தோன்றிய காலம்

கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.

முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திராமல் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.

விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.

பெரும்குடும்பி பிரம்மச்சாரி

கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.

கணபதி அறிவையும் பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!

இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடு கிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.

பிறந்த கதைகள்! சிரிப்பானி!

ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.

(அபிதான சிந்தாமணி)

(கண்ணால் பார்த்தாலும் கற்றுச் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.

(அபிதான சிந்தாமணி)

                ---------------- உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி  அவர்களால் “விடுதலை” யில் எழுதப்பட்ட கட்டுரை

0 comments: