Search This Blog

16.9.12

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி?

ஒழிக்கப்பட வேண்டியவை எவை?


தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நன்மை_தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான் _ கடவுளுக்குச் சமமானவன். அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.

மனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி, பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.
இரண்டாவதாக, பணக்காரன் -_ ஏழை. இது எதற்காக? பணக்காரன் ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப் பவன்! ஏழை_பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்து விட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக, ஆண்_எஜமானன்! பெண்_அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண்_எசமான்; பெண்_அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதும் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97 பேர் கீழ்ஜாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.
காரணம்: 1. கடவுள், 2. மதம், 3. அரசாங்கம்.

கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம் _ சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும்வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் - திராவிடர் கழகத்தைத் தவிர?

                   --------------------12.11.1958 அன்று மேலவாளாடியில் பெரியார் சொற்பொழிவு  - விடுதலை 07.01.1959

17 comments:

தமிழ் ஓவியா said...

விடுதலை திருச்சி பதிப்பு 6ஆம் ஆண்டு துவக்கம்! எங்கும் விடுதலையைப் பரவச் செய்வீர்! விடுதலை ஆசிரியர் அறிக்கைவிடுதலை நாளேடு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் அருட்கொடை! பகுத்தறிவு உலகிற்கு இது இல்லையென்றால், அது பெரும் இழப்பே! உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைதான் என்றும் உலகப் பகுத்தறிவாளர் அமைப்பின் (IHEU) தலைவர்களில் ஒருவரான நார்வே நாட்டைச் சேர்ந்த லெவிஃபிராகல் என்ற அறிஞர், 10 ஆண்டுகளுக்கு முன்பே டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் பெருமிதத்துடன் பறைசாற்றினார்!லெவிஃபிராகல்

78 ஆண்டுகளாக வீறு நடை போடும் உலகில் ஒரே நாளேடு விடுதலையே!

பல வெளிநாடுகளில் இன்னமும் மனிதநேயத்தையும், பகுத்தறிவையும், அறிவியல் மனப்பான்மை பரப்புதலையும் மய்யப்படுத்தி, மூடநம்பிக்கைகளை முழு மூச்சுடன் எதிர்த்து, எதிர் நீச்சல் போட்டு, 78 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஒரு ஏடு - அதுவும் ஒரு நாளேடு விடுதலையைத் தவிர எங்கும் உண்டா?

மக்கள் போதைக்காக எதை விரும்பு கிறார்களோ அந்த போதைச் சரக்குகளான ஜோதிடம், சினிமா, பக்தி, ஆன்மீகம் என்ற அவலங்கள், அறிவியலுக்கு எதிரான அறியாமை ஊற்றுக்களை அன்றாடம் வெளியிட்டு நாய் விற்ற காசு குரைப்ப தில்லை; கருவாடு விற்ற காசு நாறுவ தில்லை என்பதுபோல, பணம் பண்ணும் ஏடல்ல விடுதலை!

குணம் என்னும் குன்றேறி நின்று, குவலயத்திற்கு ஒளியூட்டி, வழிகாட்டும் வாழ்வியல் நாளேடு விடுதலை! எத்தனை அடக்குமுறை அம்புகள் அதன்மீது இந்த முக்கால் நூற்றாண்டு சரித்திரத்தில் ஏவப்பட் டன! அதே நாளேட்டிற்கு 75ஆம் ஆண்டில் அதன் அறிவியல், சமூக மாற் றப் பணிகளுக்காக மத் திய அரசே சிறப்பு அஞ்சல் உறை வெளி யிட்டதானது. அது கொண்ட வெற்றி வாகைகளில் தலையாயது அல்லவா?

இணையத்தில் வெளிவந்த முதல் ஏடும் - விடுதலையே!

முதன்முதலில் இணையத்தில் வெளி வந்த தமிழ் நாளேடு என்ற பெருமை படைத்ததும் விடுதலையே!

இவ்வாண்டு முதல் (பெரியார் ஆண்டு செப் 17 முதல்) ஆப்பிள் போன்ற i-pod, i-pad, கைத் தொலைபேசிகளிலும்கூட படித்து மகிழும் வாய்ப்பை வாசக நேயர்களுக்கு ஏற்படுத்தித் தரும் அறிவியல் நாளேடு விடுதலை என்ற சாதனையை தனது மகுடத்தின் மற்றொரு வைரக்கல் ஆக்கிப் பதித்துள்ளதே!

ஆறாம் ஆண்டில் திருச்சி பதிப்பு

விடுதலை - திருச்சிப் பதிப்பு துவக்கப்பட்டு இன்று ஆறாவது ஆண்டு தொடக்கம்!

அரசுகளின் விளம்பரங்கள் என்ற வருவாய் இல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உற்சாகம் பொங்கும் ஆதரவினால் வேக நடைபோடும் ஏடாக பொலிவுடன் வருகிறதே!

நூலகங்களின் கதவுகள் - நூல் - அக ஆட்சியால் - மனுதர்ம வர்ணாசிரம வாரிசுகளால் மூடப்பட்டன என்றாலும், தமிழ் இன உணர்வாளர்களின் உள்ளக் கதவுகள் அகலமாகத் திறந்தமையால் பீடு நடை போட்டு தடைக்கற்களை தாண்டி தனது பயணத்தை பெருமையுடன், தொடர்கிறது!

மூவகைப் பதிப்புகள்!

பெரியாருக்குப் பின் இயக்கம் இருக் குமா? இந்தக் கொள்கைகள் நிலைக்குமா? என்ற அலட்சியப் பார்வையுடன் கேட்ட ஆரியம் அலறும் வண்ணம், இரண்டு பதிப் புகள், இணையப் பதிப்பையும் சேர்த்த முத்தமிழ் போல் மூவகைப் பதிப்பு களின் முழக்கம் உலகெலாம் கேட்கிறது!

இன்னும் அது ஓங்க வேண்டும்! விடுதலை - தமிழர் இல்லத்தின் அடை யாளம் என்ற மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளாரின் அன்பு ஆணை அகி லத்தை ஆட்கொண்டு விடுதலையை எங்கும் பரப்பிட நாளும் உழைப்போம்!

மூன்று வாகனங்களில் விநியோகம்!

திருச்சி பதிப்பு - உடனடியாக வெளியூர் களுக்கு மாலையே செல்ல மூன்று வாகனங்கள் ஏற்பாடு - முதல் கட்டமாகச் செய்யப்படுகின்றன!

தென்மாவட்ட விடுதலை வாசகர் களுக்கு இது ஒரு தேன் பாய்ச்சும் செய்தி அல்லவா?

விடுதலையை பலப்படுத்துங்கள்! - தோழர்களே!

சென்னை
16.9.2012

கி. வீரமணி

விடுதலை
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்

அறிவுரைமகன்: இளம் விளை யாட்டு வீரர்களுக்கு அறிவுரை சொல்லியி ருக்கிறாரே சச்சின் டெண்டுல்கர்.

அப்பா: ஹி...ஹி... ஹி... ஹி.... முதியவர் களுக்கு அனுபவத்தைச் சொல்லுவதுதான் இந்தக் கால கட்டத்தில் சச்சினுக்கு பொருத்த மாக இருக்கும். 16-9-2012

தமிழ் ஓவியா said...

யாருக்குத் தன்மானமில்லை? நான் மானமிகு சுயமரியாதைக்காரன்! விழுப்புரத்தில் கலைஞர் இடித்துரைவிழுப்புரம், செப்.16-தந்தை பெரியார் வழிவந்த எனக்கு யாரும் தன்மானத்தைப் பற்றி செல்லிக் கொடுக்க வேண்டாம்; நான் மானமிகு சுய மரியாதைக்காரன் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

விழுப்புரத்தில் நேற்று (15.9.2012) நடை பெற்றமுப்பெரும்விழாவில் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தன்மானம் என்றால் என்ன?
பெங்களூருவிலே இருந்து வருமா?

கருணாநிதிக்குத் தன்மானம்இல்லை என்று தன்மானம் உள்ள ஒரு அம்மையார் பேசியதாக பத்திரிகைகளிலே பார்த்தேன். தன்மானம் என்றால் என்ன, அதை அளந்து கொடுப்பார்களா? நிறுத்துக் கொடுப்பார்களா? அது கடையில் கிடைக்குமா? அதை தெருவிலே விற்பார்களா? பெங்களூருவிலே இருந்து வருமா? என்றெல்லாம் விவரம் தெரியாமல் தன்மானத்தைப் பற்றிப் பேசக்கூடாது.

தன்மானம் சாதாரண விஷயமல்ல. என்னுடைய இயக்க உணர்வு, பெரியாரிடத்திலே பற்று, அண்ணாவிடத்திலே அன்பு இவைகளெல்லாம் எனக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்னைப் போன்ற அந்தக் காலத்திலே இளைஞர்களிடத்திலே பரப்பி, வளர்த் ததற்குக் காரணமே தன்மானம்தான் (பலத்தகை தட்டல்). எனக்குத் தெரியும், நான்இசை மரபிலே உள்ள குடும்பத்திலே பிறந்தவன்.


தமிழ் ஓவியா said...


இசை மரபிலே பிறந்தவன் - பிற பெரிய ஜாதிக்காரர்களுக்கு, சொல்லப்போனால் நம்முடைய பேராசிரியர் முதலியார் என்றால், அந்த முதலியாரில் அவர் பெரியவர் என்றால் நான் போட்டு இருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும். அதெல்லாம் பேராசிரியருடைய தாத்தா விற்கு தாத்தாவுடைய காலம். இந்தக் காலத்தில் பேராசிரியர் அப்படிப்பட்டவர். அல்ல. சுய மரியாதைச்சுடராக, சமத்துவக் குன்றாக விளங்கக் கூடியவர்.

ஆனால் அந்தக் காலத்திலே மேல்ஜாதி, பெரிய ஜாதி, பணக்கார ஜாதி என்று இருந்த சில சமுதாய ஊழல்கள், நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவோ இடர்ப்பாடுகள் உள்ளாகியிருக்கிறது. நான் இன்றைக்கு சொற்பொழிவாளராக உங்கள் முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன். தலைவராக உங்களால் மதிக்கப்படுகிறேன். தொண்டனாக உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இயக்கத்திற்காக தியாகம் செய்தவனாக, தியாகியாக உங்களால் போற்றப்படுகிறேன்.

ஆனால் நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவுதான் இசையை கற்றவர்களாக இருந்தாலும், சங்கீத வல்லுநர்களாக இருந்தாலும் அவர்கள் எப்படி மதிக்கப்பட்டார் கள்? எப்படி இழித்துரைக்கப்பட்டார்கள் என்றால், உங்களுக்குத் தெரியும் ராஜரத்தினம் பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை என்று இந்த மகாவித்வான் களை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். இன்றளவும் உங்கள் தாத்தா, பட்டனார், அப்பா, அம்மா இவர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்க ளெல்லாம் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும், மேல் ஜாதிக்காரர்களைக் கண்டால், சாமீ! கும்பிடுகிறேன் என்று சொல்வது மாத்திர மல்ல, தான் விலை கொடுத்து வாங்கி தோளிலே போட்டிருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையிலே நான், திருவாரூர் பள்ளியிலே படித்து என்னுடைய கிராமத்திற்கு வரும்போதெல்லாம் என்னுடைய சட்டைக்கு மேலே ஒரு துண்டு இருக்கும். ஊர்ப் பெரியவர்கள் என்னப்பா, அக்ரகாரத்திலே ராமகிருஷ்ணன் அய்யர் வருகிறார், நீ துண்டை தோளில் போட்டுக்கொண்டு இருக்கிறாய்? என்று சொல்லி, அந்தத் துண்டைப் பிடுங்கி இடுப்பிலே கட்டிக்கொள் என்பார்கள். இதை ஒரு நாள் பார்த்தேன். இசைப் பயிற்சிக்கு முழுக்குப் போட்டேன். வீட்டிலே கேட்டார்கள்.

ஏனப்பா இசைப் பயிற்சியை விட்டு விட்டாய் என்று. இசைப் பயிற்சிக்குப் போனால் என்னுடைய தன்மானம் போகிறது, சுயமரியாதை போகிறது, மனிதனுக்கு மனிதன் நான் வாங்கிய துண்டை, நான் விலை கொடுத்து வாங்கிய துண்டை போட்டுக் கொள்ளக்கூடாதா எனக்கு இந்த ஊரிலே உரிமை இல்லை என்றால், எதற்காக இந்த இசைப் பயிற்சி என்று சொல்லி, அன்றைக்கு இசைக் கருவிகளை தூக்கி எறிந்தவன்தான். அன்றைக்கு திருக்குவளை யிலிருந்து திருவாரூர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றவன்தான், அதற்குப் பிறகு நான் எந்த வித்வானையும் பார்த்து பரிச்சயம் செய்து கொள்ள வில்லை.

அதற்குப் பிறகு நான் பார்த்த வித்வான்க ளெல்லாம் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இந்த வித்வான்கள்தான் எனக்குத் தெரியுமே தவிர, இவர்களையெல்லாம் விட மகா வித்வான் அறிஞர் அண்ணா அவர்களைத் தெரியுமே தவிர, நான் இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டியவன் என்ற சுயமரியாதை அற்ற தன்மைக்கு, அந்த இளம் வயதிலேயே என்னுடைய தலைவணங்க மறுத்த காரணத்தால்தான் இன்றளவும் தன்மான இயக்கத் தொண்டனாக நான் இருக்கின்றேன்.

மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் என் மகன் ஸ்டாலின்

என்னை நிருபர்கள் கேட்டார்கள், உங்களு டைய உரிமைப் பற்றி, உங்களுடைய தன்மைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், ஒரே வரியிலே கேட்கிறீர்களா? நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று குறிப் பிட்டேன் (பலத்த கைதட்டல்). அந்த மானத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன் என்றால், மானம் என் மகன் கேட்ட தாலாட்டு, மரணம் அவன் ஆடிய விளையாட்டு. உண்மை தானே! என் மகன் ஸ்டாலின், மானம் என்ற தாலாட்டைக் கேட்டவன் அல்லவா (கைதட்டல்).

மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் அல்லவா? தம்பி சீத்தாபதிக்குத் தெரியுமே! சிட்டிபாபு புத்தகமாகவே எழுதியிருக்கிறாரே! துரைமுருகனைப் போன்றவர்கள், ரகுமான்கானைப் போன்றவர்கள் இன்றைய தினம் கழகத்தினுடைய காவலர்களாக, பேச்சாளர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களெல்லாம் அடிபடாதவர்களா? சிறைச் சாலைக்கு உள்ளாகாதவர்களா? கல் வீச்சுக்களை சந்திக்காதவர்களா? அவர்களுடைய வீடு புகுந்து போலீசார் அடிக்கிறார்கள் என்ற நிலையெல்லாம் ஏற்பட்டது இல்லையா? என்னை அடித்து இழுத்துக் கொண்டு சிறைச்சாலைக்குப் போனார்களே, நான் தன்மானத்தைப் பற்றி கவலைப்படாமல், அய்யா என்னை விட்டுவிடுங்கள், இனிமேல் நான் எதுவும்செய்ய மாட்டேன்.

தமிழ் ஓவியா said...


இனி நான் அ.தி.மு.கவுக்கு விரோதமாகப் பேசமாட்டேன் என்று சொன்னால், எனக்கு அன்றைக்கு அந்த அடியும் கிடையாது, உதையும்கிடையாது. இன்ன மும் என்னுடைய கையை தூக்க முடியாமல் இருக்கின்ற அந்த வலியும்கிடையாது. முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தில் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் மூன்று சக்கர வண்டியில் வந்து கொண்டிருக்கின்றேனே, இந்த நிலையும் கிடையாது.

நான் அன்றைக்கே இவற்றையெல்லாம்விட்டு விடுகிறேன் என்று சொல்லியிருந்தால், அதற்கு என்ன பொருள்? சுருக்கமாகச் சொன்னால், என்னுடைய தன்மானத்தை விட்டு விடுகிறேன் என்று அர்த்தம்.

தன்மானத்தை நான் விலை கூற மாட்டேன். விலை கூறுகின்ற வழி யில் நான் நடக்கவும் மாட்டேன் என்று உறுதியாக இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதா, கருணா நிதிக்கு தன்மானம் இல்லை என்று சொல்கிற அளவுக்கு நான் வரவில்லை. அவர்களும் வரவில்லை. தமிழ்நாடு வந்துவிட்டது.

இராவணன் பரம்பரை!

ஒரு மனிதனைப் பார்த்து தன்மானம் இல்லாத வன் என்று சொன்னால், அதை பொறுத்துக் கொண்டு போவதற்கு என்ன காரணம்? இங்கே என்னுடைய மகன் இந்த கட்சியினுடைய இளைஞர் அணியின் செயலாளர், ஆகா, இப்படி தந்தையைப் பார்த்து தன்மானம் இல்லாதவர் என்று சொல்லி விட்டார்களே என்று ஆத்திரப்பட்டடால், அது இன்னும் கொஞ்சம்மென்மையாக பேராசிரியர் அவர்களால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது, பேசிய அத்தனை பேரும் அந்த சொல், தன்மானம் இல்லாதவர் கருணாநிதி என்று ஆட்சியில் இருப்ப வர்கள் சொன்ன அந்த சொல், எத்தனை பேரைக் குத்திக் குடைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நாம் பொறு மையாக இருக்க வேண்டும். இருந்தாலும் பதி லுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

தன் மானத்தைப்பற்றிப் பேசுகின்றவர்கள், தங்களுடைய உருவத்தைக் கண்ணாடியிலே பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி கிடைக்காவிட்டால், ஒரு குளத்தில் தண் ணீர் நிழலிலே முகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். குளத்திற்கும் சென்று பார்க்க முடியாவிட்டால், வீட்டிலே ஒரு நீர் தொட்டியை கட்டியாவது அங்கே தலைகுனிந்து பார்த்துக் கொள்ளட்டும்.

யார் தன்மானம் உள்ளவர்? யார் தன்மானம் இல்லாதவர்கள் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அவர்களே பார்த்துக் கொண்டால் தான், நாம் கருணநிதியைப் பற்றி சொன்னது தவறு. நம்முடைய முகத்தைப் பார்க்காமல், அவருடைய முகத்தைப் பார்த்துச் சொன்னது தப்பு என்று அப்போதாவது அவர்களுக்குப் புரியும்.

இராவணன் பரம்பரையிலே வந்த தமிழர்களே நான் உங்களைக் கேட்கிறேன், சேரன் செங்குட்டுவன் சந்ததியிலே வந்த தமிழர்களே நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். தந்தை பெரியாரால் உணர்ச்சியூட்டப்பட்ட தமிழர்களே நான் உங் களைப் பார்த்துக் கேட்கிறேன்.

அண்ணன் தளபதி அழகிரிசாமியால் உணர்ச்சியூட்டப்பட்ட நண்பர் களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன், தந்தை பெரியாரால் அவர்களுடைய தளபதிகளால் எழுச்சி யூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத் தமிழர்களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன். நான் தன்மானம் இல்லாதவனாம். இருக்கலாம். தன்மானம் இல்லாத காரணத்தால்தான் இதுவரையிலே தாங்கிக்கொண் டிருக்கிறேன். எனக்காக அல்ல. இந்த நாடு அமளிக் காடாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக பலத்த கைதட்டல், உணர்ச்சிமிகு ஆரவாரம்.)

-இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

ஆ.விசயரத்தினம்-வி.அம்பிகா ஆகியோரின் மகன் வி.முகிலனுக்கும், ஏ.செல்வம்-மல்லிகா ஆகியோரின் மகள் செ.நந்தினிக்கும் உறுதி மொழி கூறி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கி குறிப்பிட்டதாவது:

இந்த மணவிழாவை செல்வர்கள் முகிலன் - நந்தினி ஆகியோருடைய வாழ்க்கை இணை ஏற்பு விழா நிகழ்வை நடத்தி வைப்பதிலே நாங்கள் எல்லோருமே பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

காரணம், மணமகனது தந்தையார் விஜயரத்தினம் அவருடைய வாழ்விணையர் ஆகியோரும் கழகக் குடும்பத்தவர்களே. தங்களின் அருமை மகன் முகிலன் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் காட்டிய வழியில் சுயமரியாதைத் திருமண முறையில் நடத்துகிறார்கள்.

இந்த மணவிழா சீர்திருத்தத் திருமணம் மட்டு மல்ல, தன்மான உணர்வை தமிழர்களுக்கு ஊட்டக் கூடிய ஒரு மணவிழா. இதற்கு முன்னாலே தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இதனை நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு இந்தக் கேள்விக்கு விடை காணவேண்டும்.

நம் நாட்டில் என்ன நிலை இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை உருவாக்கினார்கள். அந்தச் சமூகப் புரட்சியின் தொடர்ச்சியாகத்தான் திராவிடர் இயக்கம். திராவிடர் இயக்கம் இந்த ஆண்டு நூறாண்டு காணுகின்ற ஓர் அற்புதமான வாய்ப்புள்ள ஒரு காலத்திலே இந்த மணவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

விஜயரத்தினம் அவர்கள் ஒரு மாநாடுபோல் இத்திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த அழைப்பிதழைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மணமகன் முகிலன் அவர்கள் பி.எஸ்சி., படித்து விட்டு ஓட்டல் மேனேஜ்மெண்ட் பொறுப்பில் உள்ளார்.

மணமகள் நந்தினி அவர்கள் எம்.ஏ., பி.எட்., தாய்மார்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், ஒரு அய்ம்பது வருடத்திற்கு முன்னால், கிராமத்தில் யாராவது படித்திருப்பார்களா? அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பெதற்கு? என்றுதானே சொன்னார் கள். பெரியார் இயக்கம் வந்ததால்தானே இன் றைக்குப் பெண்கள் படிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது.

பெரியார் கருத்தை காமராஜர் செயல் படுத்தியதால் தானே எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வந்தது. இன்றைக்கு திராவிடர் இயக்கத்தைத் தொடர்ந்து கலைஞர் காலம் வரையிலும் இன்று வரையிலும் தொடர்கிறதே, யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே?

ஆகவே, இன்றைக்குப் பெரியாருடைய இயக்கம் செய்திருக்கிற புரட்சி அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சியாகும். விஜயரத்தினம் குடும்பம் இந்த முறையில் திருமணத்தை நடத்துவது ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் பெண் எடுத்திருக்கின்ற அவருடைய சம்மந்தி அவர்களின் குடும்பத்தை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொன்னார் புரட்சிக்கவிஞர். அதுபோல் நீங்கள் சிறப்பான முறையில் வாழுங்கள். திருமணத்தை நடத்தி வைக்கக் கூடிய அய்யர் சொல்லக்கூடிய மந்திரம் சமஸ்கிருத மொழியிலே இருக்கிறது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு வைதீகத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். ஒரு இள வயது டைய அய்யர் திருமண விழாவில் சமஸ்கிருத மொழியில் மந்திரத்தை சொல்லுகிறார். அப்போது பாரதியார் அவர்கள் சத்தமாக நிறுத்து! நிறுத்து!! என்று கோபாவேசமாக சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்த அய்யரை குடுமியைப் பிடித்து கன்னத்தில் ஒரு அரை விட்டார்.

எல்லோரும் சோமசுந்தர பாரதியாரை கோப மாகப் பார்த்து, உங்களுக்குப் பிடிக்கவில்லை யென் றால் நீங்கள் இப்படி முரட்டுத்தனமாக நடக்கலாமா? அய்யரை அடிக்கலாமா? என்று கேட்டு எல்லோ ரும் சண்டைக்கு வந்தனர். உடனே பாரதியார் அவர்கள், கொஞ்சம் பொறுங்கள். எதற்காக நான் இப்படி நடந்து கொண்டேன் என்று சொன்னால் தான் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றார்.

அந்த அய்யரைப் பார்த்து பாரதியார் கேட்டார், இவ்வளவு நேரமாக மந்திரம் சொன்னாயே, அதற்கு அர்த்தம் என்னவென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார். உடனே அந்த இள வயது அய்யர் மிரண்டு போய்,
இல்லீங்க அய்யா, இரண்டு மந்திரத்தை எங்க அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதையே தான் மாற்றி மாற்றி நான் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறேன். அதற்கு அர்த்தம் எல்லாம் எனக்குத் தெரியாது என்றார். உங்களில் யாருக்கும் சமஸ்கிருதம் தெரியாது; எனக்கு சமஸ்கிருத மொழி தெரியும். இவன் சொன்ன மந்திரம் கருமாதிக்குச் சொல்லவேண்டிய மந்திரமாகும். அதனால்தான் நான் அவரை அடித்தேன் என்றார். அப்படியானால், நன்றாக அடியுங்கள் என்று எல்லோரும் கூறினார்கள்.

தமிழ் ஓவியா said...

இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், தமிழன் வீட்டு மணவிழாக்களை தமிழர்களே நடத்தவேண்டும், தமிழ் மொழியிலே நடத்த வேண்டும். இதுதான் மிக முக்கியம். இதில் யாருக்காவது மறுப்பு இருக்க முடியுமா?

தயவு செய்து நீங்கள் எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அருமையான வகையில் படித்து முன்னேறக்கூடிய, உழைக்கக் கூடிய ஆற்றல் படைத்த மணமக்களே, நீங்கள் நல்ல முறையில் உயர்வீர்கள். சிக்கனமாக வாழுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று அண்ணா அவர்கள் சொல்லியிருக்கிறார். அதுமாதிரி ஒருவருக்கொருவர் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை இனிமை உள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது என்ன வென்றால், உங்களை வளர்த்து, ஆளாக்கி, உங்க ளுக்காகத் தியாகம் செய்திருக்கிறார்களே, உங்கள் பெற்றோர்கள் அவர்களிடத்தில் பாசம் காட்டத் தவறாதீர்கள்; நன்றி காட்டுங்கள். இன்றைக்குப் படிப்பு வளருகிறது; அதே நேரத்தில் பண்பு வளரவில்லை. பாசம் வளரவில்லை. நீங்கள் எந்த நிலைக்கு வந்தாலும், உங்கள் பெற் றோர்களை மதியுங்கள்; நன்றி காட்டுங்கள். உங்களுக்கு யார் யார் உதவினார்களோ, அவ்வளவு பேரையும் கைதூக்கி விடுங்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. இல்லறத்திற்கு அடுத்தபடியாக துறவறத்தைத்தான் சொல்வார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் தொண்டறம் என்று சொன்னார்.

இல்லறம், துறவறம்; இல்லறத்தை விட்டால்தான் துறவறம். ஆனால், இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறத்தை நாம் மேற்கொள்ளலாம். ஆகவேதான் நீங்கள் உங்கள்வரையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், உலகப் பார்வையோடு வாழுங்கள். அதுதான் மிக முக்கியம். மனிதநேயத் தோடு வாழுங்கள். மதவெறி தவிர்த்து, மனித நேயத்தைப் பெருக்குங்கள்.

ஜாதிக்கு இங்கே இடமில்லை. இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவரையும் எனக்கு பல ஆண்டு களாகத் தெரியும். ஜெயகிருஷ்ணன், ஆசிரியர் கோவிந்தராஜ், விஜயகுமார், பன்னீர்செல்வம் போன்றவர்களை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஆனால், யார் என்ன ஜாதி என்று எங்கள் யாருக்கும் தெரியாது. இதுக்குப் பெயர்தான் திராவிடர் கழகம். இதுதான் பெரியாருடைய சாதனை. எங்களுக்கு ஜாதி, ரத்த சம்பந்தமான உறவுகளைவிட, கொள்கை உறவுதான் என்றைக்கும் வலிமையான உறவு. அந்த உறவைத்தான் பெரியார் உருவாக்கினார். கழகக் குடும்பம், கொள்கைக் குடும்பம்போல் உருவாகி இருக்கிறது. நம் இளை ஞர்களுக்கு சொல்வது என்ன வென்றால், நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது;

வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற துணிச்சலோடு ஒவ்வொரு அடியும் எடுத்து வையுங்கள்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.16-9-2012

தமிழ் ஓவியா said...

ஆறாம் ஆண்டு தொடக்கத்தில் மகிழ்கிறோம்!

1935 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர் களால் தோற்றுவிக்கப் பட்டு சென்னையிலும், பின்னர் ஈரோட்டிலும், மீண்டும் சென்னையில் இருந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டி ருக்கும்விடுதலை நாளிதழ் பல வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ளது. குறிப்பாக நேரில் கண்டவன், ஒரு நிருபர், கவனித்தவன், எவன் எழுதினால் என்ன? , அணுகுண்டு, ஈட்டி, ஊர் சுத்தி, யார் கூறினால் என்ன? , ஸ்குரு, லூஸ், புழுகு மூட்டை, தேச துரோகி, ஒரு சந்தேகி, வந்தே மாதரம், சித்திர புத்திரன், போன்ற பல புணை பெயர்களில் தந்தை பெரியார் அவர் கள் எழுதிய தலையங்கத் தை தாங்கி வந்த சிறப்பு விடுதலை நாளிதழக்கு உண்டு.

அவ்வாறு சிறப்பு வாய்ந்த விடுதலையின் கிளை பதிப்பாக திருச்சி யில் தொடங்கப்பட்டு, அய்ந்தாண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டு தொடங்கியுள்ளது. தமிழர் தலைவர் கி.வீரமணியின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, நாகம்மையார் குழந்தை இல்ல வயது 50 விழா, உலகநாத்திகர் மாநாடு, 50 ஆயிரம் விடுதலை சந்தா சேர்த் தல், தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆம் ஆண்டு ஆகிய விழாக் களை கொண்டாடி மகிழ்ந்துதிருச்சிப் பதிப்புவீறுநடை போட்டுவருகிறது.

மேலும் சுயமரியாதைப் பிரச்சார இயக்க 60 ஆம் ஆண்டு விழாவையும், தமிழர் தலைவரின் முத்துவிழாவினையும், திருச்சிப் பதிப்பின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவினையும் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இரா.கலைச்செல்வன்
முதல்வர், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,திருச்சி 16-9-2012

தமிழ் ஓவியா said...

வாழ்க விடுதலையின் பெரும் பணி!

இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு விடுதலை போராட்டங்கள் நடந்தன. ஒன்று அரசியல் விடுதலை, இன்னொன்று சமூக விடுதலை.

200 ஆண்டுகால அரசியல் அடிமைத் தனத்திலிருந்து நடந்த விடுதலை போராட்டத்தைவிட 2500 ஆண்டு கால சமூக அடிமைத் தளத்திலிருந்து மக்களை விடுதலை செய்ய நடத்திய போராட்டமே வரலாற்று சிறப்பு மிக்கதாகும். அப்படிப்பட்ட மாபெரும் போராட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றவர் தந்தை பெரியார் அறிவுக்கான தடையை உடைத்து அறிவு விடுதலையை முன்நிறுத்திய தந்தை பெரியாரின் போர்வாளே விடுதலை நாளேடு!

தந்தை பெரியார் உருவாக்கிய அந்த மாபெரும் பணியின் தேவையை நிறைவு செய்வதே விடுதலையின் திருச்சிப் பதிப்பாகும். திருச்சிப் பதிப்பின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியதாகும். திருச்சியை போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதலை பதிப்புகள் வந்தால் சமூகத்தில் ஒற்றுமை நிலவும். வேற்றுமைகள் மறையும்.

வாழ்க விடுதலையின் பெரும் பணி!

பேராசிரியர். க.நெடுஞ்செழியன்,திருச்சி

தமிழ் ஓவியா said...

சில்லறை வர்த்தக அந்நிய முதலீடும்; சில்லரைத்தனமான விளக்கங்களும்மத்திய அய்.மு.கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை விசு வாசத்துடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. வெள்ளியன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவை எடுத்த முடிவுகளைக் கண்டு பாரக் ஒபாமா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். இனி அவர் மிக தைரிய மாக இரண்டாம் முறையாக அதிபர் ஆவதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வார்.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங் களும் மன்மோகன்சிங் அரசின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. படுபாதாளத்தில் இருக்கும் அமெரிக்க பொருளா தாரத்தை தூக்கிநிறுத்த படாதபாடு பட்டு வரும் ஒபாமா சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு செயல்படும் விதம் போது மானதாக இல்லை.பொருளாதார சீர்திருத்தங்களை விரைந்து அமலாக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித் திருந்தார்.அது மறைமுகமாக மன்மோகன் சிங் அரசுக்கு விடுத்த எச்சரிக்கைதான். அமெரிக்காவின் நலனுக்கு எது முக் கியம் என்பதை ஒபாமா நன்கு அறிவார். மன்மோகனும், அமெரிக்கா என்ன விரும்புகிறது என்பதை அறிவார்.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால் இந்தியாவிற்குச் செல்லும் வெளி வேலை ஒப்பந்தங்களை (அவுட் சோர் சிங்) வெட்ட வேண்டும் என்று கூறியவர் தான் ஒபாமா. இந்தியா சில சீர்திருத்த நடவடிக்கைகளைச் செய் தாக வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு, முன்னர் புஷ் அரசும் பின்னர் ஒபாமா அரசும் நிர்ப்பந்தம் அளித்து வந்திருப்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை உயர்த்தப்பட்ட பின்னணியில், இங்குள்ள சில அரசியல் கட்சிகளிடையே சில அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சொந்த பல மற்ற மன்மோகன்சிங் அரசுக்கு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ் வாதி கட்சியும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அரசு கவிழ வேண்டியது தான்.

இந்த இரு கட்சிகளும் தங்களது மாநில அரசியலில் மக் களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அய்முகூட்டணி அரசு மூழ்கிக்கொண்டிருக் கும் நிலையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கட்சிகள் எந்த நேரத்தி லும் ஃபீஸ் ஒயர் பிடுங்க தயங்காது என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் வெளியேறுவதற்கு முன்னர் அவசர அவசரமாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கும் முடிவை மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துள் ளனர் என்று கூறப்படுகிறது.

பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை 51 விழுக்காடு வரையும் ஒற்றைப் பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 விழுக்காடு வரையும் அந்நிய முதலீடுகளை அனு மதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையும் தரச்சான்றிதழ் அளிக்கும் ஸ்டாண்டர்டு அன் பூவர்ஸ், பிட்ச் அன்ட் மூடி ஆகிய நிறுவனங்களும் என்ன சொல்லியிருக்கின்றன தெரியுமா? உலகளாவிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு கவிழ்ந்து விட்டது என்று கூறியுள்ளன. அந்த உலகளாவிய நிர்ப்பந்தம் என்பது உண்மை யில் அமெரிக்க நிர்ப்பந்தம்தான் என விளக்க வேண்டியதில்லை.

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு அதிகப்படியான விலையை பெறுவார்கள் என்றும் கிரா மப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்படும் என்றும் சிலர் வாதிடு கிறார்கள். ஆனால் ஏற்கனவே சில்லரை வர்த்த கத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்த நாடுகளில் இருந்து வரும் அதிகாரபூர்வ தகவல்கள் அவர்களின் கூற்றைத் தள்ளுபடி செய்கின்றன.


தமிழ் ஓவியா said...

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு களை அதிகரிப்பதால் நோஞ்சானாக உள்ள வேளாண்துறை எழுந்து ஒடும் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இது உண்மையா? சாத்தியமா? அமெரிக்காவில் உள்ள விவசாயிகளை, அந்நாட்டில் சில்லரை விற்பனையில் பெருமளவு முதலீடு செய்துள்ள நிறு வனங்கள் காப்பாற்றவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அமெரிக்க அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் வேளாண் மசோதா ஒன்றை கொண்டுவந்துதான் அவர்களை காப்பாற்ற வேண்டிய தாயிற்று.மேலும் அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு விவசாயி களுக்கு 307 பில்லியன் டாலர் நிதியுதவி தரும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டியதாயிற்று.

எனவே சில்லரை வர்த்தகத்தில் வரும் நேரடி அந்நிய முத லீடுகளால் விவசாயிகளுக்கு ஒரு பய னும் இல்லை என்பதற்கு அமெரிக்க விவசாயிகளே சாட்சி. மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வந்தால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அந்த நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்று லாபம் ஈட்டமுடியும் என்று ஆசை காட்டப் படுகிறது. அய்ரோப்பிய நாடுகளின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்த பின்னரும் விவசாயி களுக்கு அந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் மானியம் அளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

அதன் பின்னரும் நிமிடத்திற்கு ஒரு விவசாயி விவசாயத் தொழிலை விட்டுச் செல்வதாக பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் கொள்கை குறித்த ஆய்வாளர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். மிகப்பெரிய நிறு வனங்கள் வந்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் விவசாயிகள் நேரடியாக பயன டைவார்கள் என்றும் ஒரு சிலர் வாதிடு கிறார்கள். அதுவும் எவ்வளவு மோசடி யான வாதம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தங்களது வேளாண் பொருட்களை விற்ற அமெரிக்க விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு மாறாக கடந்த நூற்றாண்டி லேயே 70 விழுக்காட்டிற்கு கீழ் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அது மேலும் மோச மாகி கடந்த 2005ஆம் ஆண்டு 4 விழுக்காடாக குறைந்து விட்டது. இதன் பின்னர் விவசாயத்தில் ஈடுபடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் மளமளவெனச் சரிந்தது.

இடைத்தரகர்கள் இல்லைதான். ஆனால் அவர்களது இடத்தில் தரக் கட்டுப் பாட்டாளர், தரப் பராமரிப்பாளர், சான்றிதழ் முகவர், பதனிடுபவர், பேக் கேஜிங் ஆலோசகர் என பல தரகர்கள் தோன்றி விட்டனர்! அவர்களையெல்லாம் சமாளித்தால்தான் ஒரு விவசாயி வருவாயை ஈட்டமுடியும். ஆனால் மிக வும் நவீன முறையில் விவசாயம் செய்யும் அமெரிக்க விவசாயி களுக்கே இது கட்டுப்படியாகவில்லை.

கடைசியில் அவர்கள் அரசின் மானியத்தை வைத்து தான் பிழைப்பை ஓட்டவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பிறகெங்கே அப்பாவி இந்திய விவசாயிகள் வளம் பெறுவது? பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வருவதால் விலை குறைந்து நுகர்வோரும் பலனடைவர்கள் என்று நுகர்வோருக்கும் வலைவிரிக்கப்படுகிறது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதியில் அங்கு விற்கப்படும விலையை விட திறந்தவெளிச் சந்தையில் பொருட்களின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

எனவே சில்லரை வர்த்தகத்தால் நுகர்வோருக் கும் பயன் இல்லை. கடைசியாக பன்னாட்டு சில்லரை வணிக நிறு வனங்கள் மிகப்பெரிய குளிர் பதன கிடங்குகளை வைத்திருக் கின்றன. எனவே இதனால் இந்தியா போன்ற இத்தகைய வசதி குறைவான நாடுகளில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அழுகாமல் பாதுகாக்கப் படும் என் றும் அழுகி வீணாவது தவிர்க்கப்படும் என்றும் வாதிடப்படுகிறது. அதிலும் உண்மையில்லை. காரணம் ஏற்கனவே உணவுக் கிடங்குகளை கட்ட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதி அளித்து பல ஆண்டுகளாகிறது.

ஆனால் முதலீடு களைதான் காணவில்லை.அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகுமா? இந்திய சில்லரை வணிக சந்தையின் மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கோடியே 20லட்சம் சில் லரை வணிகர்கள், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். உலக பகாசுர நிறுவனமான வால்மார்ட்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் 420 பில்லியன் டாலர்கள். இந்திய சில்லரை வணிகத்தின் ஒட்டுமொத்த மதிப்பை விடசற்று அதிகம். ஆனால் அந்த நிறுவனம் அளித்துள்ள வேலை வாய்ப்போ அதன் கிளைகள் உள்ள எல்லா நாடுகளிலுமாக வெறும் 21 லட்சம்தான்.


தமிழ் ஓவியா said...

சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை மாநில அரசுகளின் விருப்பத்திற்கே விடுவதாக மன்மோகன் சிங் அரசு கூறி யுள்ளது. ஆனால் இது சாத்தியமா? மாநில அரசுகளால் இத்துறையில் அந் நிய முதலீடுகளை தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். ஒரு நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றால் அது தேசிய அளவிலான அனு மதியே தவிர மாநில அளவிலான அனுமதி அல்ல. மேலும் சர்வதேச வணிக நெறி முறைகள் படி உறுப்பு நாடு தனது வணிகத்தை முழுவதுமாக திறந்து விட வேண்டும்.

மேலும் இரு தரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (பிஅய்பிஏ) கையெழுத்திட வேண்டும். எனவே இந்தியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான அனுமதி அளிக்கப் பட்டதாகவே கருதப்படும். இந்த ஒப்பந்தத்தில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டன. எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனும திக்க மறுக்கும் மாநில அரசுகளை சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக ஏக போக நிறுவனங்கள் எளிதாக வளைக்க முடியும். சில்லரை வணிகத்தில் ஒரு பெரிய நிறுவனம் நுழைந்தால் எப்படி பாரம்பரிய சிறுவணிகர்கள் அழிந்து போகிறார்கள் என்பதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக காட்டமுடியும்.

மெக்சிகோவில் வால்மார்ட் நுழைந்த பிறகு பத்தாண் டுகளில் 50 விழுக்காடு சில்லரை வணி கத்தை விழுங்கி விட்டது என்று நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் கவனமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் மெக்சி கோவில் மானியம் என்ற பெயரில் உள்ளே நுழைந்த வால்மார்ட் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து 2011இல் 431 கிளைகளை துவக்கி தனது வணிகத்தை நிலை நிறுத்திக் கொண்டதுதான். அமெரிக்காவில் ஆர்க் கான்சாஸ் மாகாணத் தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உள் தணிக்கையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தனது கடையை விரிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் வால்மார்ட் மட்டும் 52 கோடி ரூபாயை லஞ்சமாக சிலருக்கு கொடுத்துள் ளதாக அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள் ளனர். ஒரு நிறுவனத்தின் லஞ்சமே இவ்வளவு என்றால் இந்தியாவில் நுழைய காத்திருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நேரம் எவ்வளவு கொடுத்திருப்பார்கள். அவர்கள் எத் தனை லட்சம் கோடி ஆதாயம் அடைவார்கள் என்பதை எவரும் ஊகிக்கலாம்.

எனவே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தால் அது இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும் காப்பாற்றப் போவதில்லை. வணிகர் களையும் வாழவைக் காது. எனவே நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும் காங்கிரஸ் - திமுக-திரிணாமுல் கூட்டணி அரசுக்கு பாடம் கற்றுத் தர மக்கள் நல அரசியல் இயக் கங்களும் மக்களும் களத்தில் இறங்க வேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.

-அ.விஜயகுமார்
நன்றி: தீக்கதிர் - 16.9.2012

தமிழ் ஓவியா said...

தினமலரின் குறும்பு

தி.க. தலைவர் வீரமணி: என்றைக்கு நரசிம்மராவ் பிரதமராகி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆலோசனைப்படி, நிதித் துறை கொள்கை வகுக்கப்பட்டதோ, அன்றே உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்ற ஒட்டகம், இந்திய கூடா ரத்தில் நுழைந்தது. அதன் மூலம், புறத்தோற்றத் துக்கு இந்தியா வளர்வதைப் போலத் தெரிந்தாலும், நேரு அமல்படுத்திய சமதர்மக் கொள்கைகள், மெல்ல மெல்ல விடை பெறத் துவங்கின.

டவுட் தனபாலு: உங்க அரசியல் குரு கருணா நிதி, 1996ல் இருந்து மத்திய அரசு, முக்கிய கூட்டாளியா இருக்காரு... இந்த, 16 வருஷ கால கட்டத்துல, சமதர்மக் கொள்கைகள் மெல்ல மெல்ல விடைபெற்றதைத் தடுக்க, அவர் என்ன நடவடிக்கை எடுத்தாருங்கிறது தான் என்னோட, டவுட்!'

- தினமலர், 16.9.2012

கொஞ்ச நாளாக நம் பக்கம் திரும்பாமல் இருந்த தினமலர் சாரை விறுவிறுத்து நம் பக்கம் திரும்பியிருக்கிறது.

உலக மயம், தாராளமயம், தனியார் மயம் திரிசூலங்களைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருவதுதான் திராவிடர் கழகம்; திராவிடர் கழகத்துக்கு அரசியல் குரு என்று யாரும் கிடையாது. திராவிடர் கழகத்துக்கு ஒரே குரு தந்தை பெரியார்தான்! திராவிடர் கழகம் அரசியல் கட்சியும் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாமல் பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்களே... ஹி.... ஹி....

ஆமாம் அவர்கள் குரு சங்கராச்சாரியார் கதை சந்தி சிரிக்கிறதே! இதைப்பற்றியும் கொஞ்சம் சிலாகிக்கலாமா?16-9-2012

தமிழ் ஓவியா said...

விதவைத் துயரம்
எழுத்துரு அளவுஎன்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தா திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீ யாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்! கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள்காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா -இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்; மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

-_ தந்தை பெரியார் (குடிஅரசு, 27.10.1929)

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 17

இந்நாள் உலக மானுட வரலாற்றில் ஒப்பற்ற திருநாள். மதமற்ற ஒப்புரவு உலகிற்கான ஒளி கிடைத்த நாள்.

தமிழ் மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாதிச் சழக்குகளில் பிணைத்துக் கொண்டு தாம் ஓரினம் என்ற உணர்வைப் பறி கொடுத்த திராவிட மக்களை மீட்டுத் தந்த ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த வரலாற்றில் குறிப்பு நாள்!

வரலாற்றை ஒழுங்காக எழுத விரும்புவோர் தமிழ்நாடு - பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் எழுதப்பட வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பாகும்.

அறிஞர் அண்ணா மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெரியார் ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பமாகும்.

தந்தை பெரியார் அழகாக - சரியாகச் சொன்னதுபோல இதுவரை பிறக்காத கடவுள்களுக்குத் தான் விழா எடுத்துள்ளார்கள்.

பிறப்பு - இறப்பு அற்றவன் கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள்களுக்குப் பிறந்த நாள் என்று சொல்லி கோயில் திருவிழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடிக் கொண்டிருப்பது முரண்பாடானது என்றாலும், மக்களை பக்தி பிடியிலிருந்து விலகிச் செல்லாமல் கட்டிப் போடுவதற்கும், அவர்களின் பொருளைச் சுரண்டுவதற்கும் அவை தேவைப்படு கின்றன.

இந்த மோசடியை அம்பலப்படுத்தவந்த அறிவுலக ஆசான்தான் தந்தை பெரியார்.

உலகில் யாரையும் மன்னிக்கலாம்; ஆனால் அறிவை நாசப்படுத்துபவர்களை மன்னிக்கவே கூடாது - முடியாது என்று பெரியார் சொன்னதில் மிகப் பெரிய உண்மையும், வாழ்வியல் தத்துவமும் நிமிர்ந்து நிற்கின்றன.

மதவாதிகள், பழைமைவாதிகள், ஆதிக்கவாதிகள் இன்று வரை தந்தை பெரியார் அவர்களையும் அவர் வழி செயல்படும் தலைவர்களையும், பெரியார் வகுத்துத் தந்த கொள்கைக் கோட்பாடுகளையும் இன்றுவரை கடித்துக் குதறுவதற்குக் காரணமே தங்களின் சூழ்ச்சி அஸ்திவாரம் நொறுக்கப்படுகின்றதே என்கின்ற ஆத்திரம்தான்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை, அவர் பட்டபாடு இயக்கச் செயல்பாடுகளின் அருமை எப்பொழுது புரியும் என்றால், தமிழ்நாட்டைக் கடந்து பிற பகுதிகளில் நிலவும் சமூகச் சுரண்டலைப் பழுதறத் தெரிந்து கொள்ளும்போதுதான்.

நேற்றோ, அதற்கு முன்போ பெரியார் தேவைப்பட்டு இருக்கலாம்; இன்று தேவையா என்றுகேள்வி எழுப்பும் - அப்பாவி அறிவாளிகள் சமூகத்தின் வேர் போன்ற பிரச்சினைகள் பற்றி நுனிப்புல் மேய்ந்து திரிவது பரிதாபம்தான்.

ஜாதியை எடுத்துக் கொள்ளலாம். இதனை வெளிப்படையாக ஆதரிக்கும், பிரச்சாரம் செய்யும் துணிவு - இந்நாட்டில் சங்கராச்சாரியார்களுக்குக்கூட கிடையாது.

அதே நேரத்தில் ஜாதியை கட்டிக் காக்கும் அம்சத்தில் அவர்கள் மிகவும் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்.

ஜாதி - தீண்டாமை என்பதெல்லாம் இன்று வரையிலும்கூட சட்டப்படி சாஸ்திரப்படி பாதுகாப்பாக இருக்கும் இடம் கோயில் கர்ப்பக் கிரகம்தான். அதற்கு வெடி வைத்தவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள்(?) இதற்குப் பச்சைக் கொடி காட்டியிருக்க வேண்டாமா? மூதறிஞர் என்று பார்ப்பன வட்டாரம் போற்றும் ராஜாஜியே இதனை எதிர்த்து வாதாட பரிந்துரை கடிதம் கொடுத்து, பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தாரா இல்லையா?

இன்றைக்கு ஆவணி அவிட்டத்தை - பூணூலைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியை - மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

இன்றைக்கும் மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் பார்ப்பனர் பகுதிகளில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகை கொடுத்துக் குடியிருக்க அனுமதி அளிக்கப்படுவதில்லையே!

சமூக நீதி என்றால் எதிர்ப்பது ஏன்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றால் ஏற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழ் செம்மொழி என்றால் ஆத்திரப்படுவது ஏன்? - கிண்டல் செய்வது ஏன்?

தமிழ்ப் பண்பாட்டுத் தளத்திலும் எந்த ஒரு கூறாவது பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் வெற்று முழக்கம்தான். உண்மையில் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு மூலமான ஜாதியை ஒழிக்க வேண்டாமா? அந்த ஜாதியை இந்திய அரசமைப்புச் சட்டம் அடைகாத்துக் கொண்டுதானே இருக்கிறது.

இது மாற்றப்பட வேண்டாமா? அதற்குத் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும் அவர் வழி பயணங்களும் தொடரப்பட வேண்டாமா?

அரசு மக்கள் அரசாக இல்லாமல் தனியார் வயப்படும் முதலாளித்துவத்தை முதுகில் சுமந்து செல்கிறதே - இதனை முறியடிக்கவும் - இந்த நாட்டுக்கான பொருளியல் கண்ணோட்டத்தில் பெரியாரியல் தானே தேவைப்படும்.

எல்லா வகையான முற்போக்குப் பயணத்திற்கும் சாதனைகளுக்கும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தேவைப்படுகிறார் என்பதை மறக்க வேண்டாம்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!17-9-2012

தமிழ் ஓவியா said...

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்
இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும்
மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் !

வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று
விவேகமாக என்றும் பேசிய வல்லவர் !

ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம்
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !

தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில்
தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் !

பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து
பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் !

மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு
மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் !

உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள்
உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் !

பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் !

இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம்
எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் !

அறியாமை இருளை அகற்றி விட்டு
அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் !

பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்
பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் !


சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர்
சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் !

பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் !
பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி