Search This Blog

19.9.12

ராஜபக்சேஇந்திய வருகையும்!-தமிழ் இளைஞனனின் தற்கொலையும்!

சேலத்து விஜயராஜ் தீ வைப்புகள் தொடரவேண்டாம்! தற்கொலைகள் தீர்வாகாது! அனைவரும் ஒன்றுபட்டு பொது எதிரியை வீழ்த்துவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு பொது எதிரியை வீழ்த்தவேண்டுமே தவிர தற்கொலைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.நா.வால் போர்க்குற்றவாளியென குற்றம் சுமத்தப் பெற்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நாளைய இந்திய வருகை, உலகத் தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

கறைபடிந்த அத்தியாயத்தினை இந்திய அரசும், அதற்கு உடந்தையாக இருப்பதும், பா.ஜ.க. என்ற இரட்டை வேட ஆரியக் கட்சியும் (அழைப்பு விடுத்த கட்சி அவர் வருகைக்கு இப்போது அங்குள்ள பா.ஜ.க. அரசும், மத்திய பிரதேச பா.ஜ.க. முதலமைச்சரும் சிவப்பு கம்பள வரவேற்பும் தருவதும்) மத்தியில் உள்ள காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரச்சினையில் வேடங்கட்டி ஆடுபவர்களே தவிர, உண்மையான அனுதாபம் கொண்டவர்கள் அல்லர் என்பதை அவர்கள் இதன்மூலம் பிரகடனப்படுத்துகின்றனர்!

2008 இல் சொன்ன வாக்குறுதி எங்கே?

2008 இல் தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. விடு தலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று மார்தட்டிய பிறகும்கூட அந்நாட்டின் குடிமக்களில் நான்கில் ஒரு பங்கு தமிழர்களை - கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர் களின் எண்ணிக்கை போக, எஞ்சியவர்களை - இன்னமும் ஏன் முள்வேலிக்குள் அடைத்து வைத்து சிக்கிச் சீரழிக்கவேண்டும்?

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏன் இன்னமும் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழேயே தொடரவேண்டும்?

வன்னிப் பகுதி யுத்தப் பாதுகாப்புப் பகுதி என்று மக்களுக்குக் கூறி, அவர்களை அங்கு வரவழைத்து விட்டு அவர்கள்மீதும் சிங்கள இராணுவம் குண்டுமழை பொழிந்து அழித்தும், மாண்டவர் பல்லாயிரவர் போக, எஞ்சிய தமிழர் இல்லங்கள் புதுப்புது சிங்களக் குடியேற்றங் களாக, ராஜபக்சே அரசால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாற்றப்படும் கொடுமை தொடர்கதையாக உள்ளது. மிகுந்த வேதனைக்குரியதல்லவா?

தற்கொலைகளில் இறங்காதீர்!

இரத்தக் கறை படிந்த இட்லரின் வாரிசு புத்த பூமிக்கு வரத் தகுதி படைத்தவரா? வரவேற்க லாமா மனித இதயம் படைத்தோர்?

தமிழர் விரோத நிலைப்பாடு - தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் குரலின் முழக்கம் ஓங்கி ஒலித்தும், இதை அலட்சியப்படுத்தி, அந்த கொடுங்கோலனை வரவேற்பதால், மனம் நொந்து, பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஒரு தமிழ் இளைஞன் விஜயராஜ் நேற்று மரணத்தைத் தழுவிவிட்டார்!

தமிழர் காவு கொடுக்கப்படும் படலம் இங்கேயுமா தொடரவேண்டும்?

உணர்ச்சிவயப்பட்டு இளைஞர்களே இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கிவிடாதீர்கள்!

நாம் வாழ்ந்து, இந்த நவீன ஹிட்லர்களின் தர்பாரை முடிவுக்குக் கொணர்ந்து, தனி ஈழம் மலர நாம் உலகத்தாரிடம் நீதி கேட்டு, வெற்றி பெற்று, ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நனவாக்கி அரண் அமைக்கவேண்டும்.

தற்கொலைகள், இந்தக் கொடுங்கோலர் களின் கண்களைத் திறக்காது; கருத்துகளை உருவாக்காது - தீர்வும் ஆகாது!

வீண் விமர்சனக் கச்சேரிகள் வேண்டாம்!

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையாய் இருக் கும் தமிழர்களின் அவல நிலை போக்கி ஒன்றுபடுத்தி நின்று, உரிமைப் போராட்ட வெற்றிக்கு உழைத்திட சூளுரைப்போம்!

பொது எதிரியை (ராஜபக் சேவை) மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இங்கே விமர்சனக் கச்சேரியில் ஈடுபடும் வீணானவர்களே, உங்களுக்கு விவேகம்தான் எப்போது பிறக்கும்?

நாம் எல்லோரும் தனித்தனிதானா?

புரட்சிக்கவிஞர் முன்பு கேட்டதுபோல,

எல்லோரும் அங்கே தனித்தனிதான், ஏகமனதாகி இவர் நம்மை எதிர்ப்பதெங்கே? என்ற நிலை இன்னும் எத்தனைக் காலம் தொடருவது?

நம் உணர்வுகள் ஓரணியில் திரண்டால், இராஜபக்சேக்களை வரவழைக்குமா மத்திய, மாநில அரசுகள்? (மத்திய பிரதேச பா.ஜ.க.) இனம் இனத்தோடு சேருகிறது.

நம் இனம் இன்னும் தன்முனைப்புக்குப் பலியாகும் தாழ்ந்த தமிழர் கூட்டமாகிறது!

இளைஞர்களே, உறுதியோடு எழுந்து நிற்போம்! வெல்வோம் என்ற நிலைப்பாட்டில் நில்லுங்கள்!

சேலத்து இளைஞனுக்கு வீரவணக்கம்!

வரலாறாகிவிட்ட சேலத்து தமிழ் இளைஞன் - விஜயராஜுவிற்கு வீர வணக்கம்! அவரது குடும்பத்தவருக்கு கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்!

அரசுகள் இவைகளுக்குப் பதில் சொல்ல காலம் விரைவில் வரும்; வந்துகொண்டுள்ளது என்பதே இத் துக்க நாளில் நமது பதிவுகள்.

சென்னை   
19.9.2012-------------------------------கி.வீரமணி  தலைவர்,திராவிடர் கழகம்.

12 comments:

தமிழ் ஓவியா said...

பிறந்த நாள் செய்தி

தந்தை பெரியார் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல முக்கியமான கருத்துகளையும், திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை யொட்டி ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் விடுதலை பிறந்த நாள் மலரில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமெங்கும் பரவச் செய்வது என்பது ஒன்று; இந்த ஒரு ஆண்டு மட்டுமல்ல, கடந்த பல ஆண்டு களாக கூட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் முயற்சியால், அமெரிக்கா போன்ற நாடுகளில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; வேறு நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்களும் இதில் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் மதவாதம் தலைதூக்கி நிற்கும் நிலையில், அரசியல் என்பது மதவாதத்தின் அடிப்படையில் என்னும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள ஒரு தருணத்தில், மதமற்ற உலகம் என்ற கோட்பாடு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து, மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே! அது - சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்திற்கும், சகஜ - சமனிய வாழ்வுக்கும், அமைதிக்கும் விரோதமானது, எதிரானதே!

இந்த நிலையில், மதமற்ற ஓர் உலகிற்கு பகுத்தறிவுச் சிந்தனையை அளிக்கக் கூடியதாக தந்தை பெரியார் அவர்களின் வழிகாட்டும் கருத்துகள்தான் அமைந்திருக்கின்றன.

நாட்டுப் பற்றோ, மதப் பற்றோ, மொழிப் பற்றோ எனக்குக் கிடையாது. மனிதப் பற்றுதான் எனக்கு என்று கூறியுள்ள தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் நாடு, எல்லை, இனம், மொழிகளைத் தாண்டி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குத் தேவைப்படுபவையே!

உலக மக்கள் தொகையை எடுத்துக்கொண் டாலும், 110 கோடி மக்கள் மத நம்பிக்கையற்ற நாத்திகர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்துவா என்ற ஒரு வாதம் நாட்டை அரற்றிக் கொண்டு தான் உள்ளது. முஸ்லிம் - கிறித்தவர் என்ற இரு மதங்களும் யுத்தி பிரிந்து மோதும் நிலையும் உலகில் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இனவாதம் என்ற ஒன்று தலைதூக்கி நிற்கிறது என்றாலும் - மதவாதமும் மேலோங்கியே நிற்கிறது. இலங்கையில் அதிபராகப் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர்தான் வர முடியும் என்பதை சட்ட ரீதியாகவே ஆக்கி விட்டனர்.

பவுத்தம் என்பது ஒரு மார்க்கம், நெறி என்பதுதான் அடிப்படை என்றாலும், அது மதமாக வெறியூட்டப்பட்டுள்ளதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்றார் - தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைப் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இந்த ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலும் (தலைநகரான அக்காராவில்), கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை இந்திய ஹை-கமிஷனர் திறந்து வைத்துள்ளார் என்ப தெல்லாம் சாதாரணமானதல்ல.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை உலக அளவில் கொண்டு செல்லுவதற்கான முயற்சி களில் திராவிடர் கழகம் ஈடுபடும். 21 ஆம் நூற்றாண்டு தந்தை பெரியார் நூற்றாண்டே என்று நிரூபிப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!! 18-9-2012

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பேணித் தமரா கொளல்

பெரியாரைப் போற்றித் தமக்கு சுற்றத் தினராகக் கொள்ளுதல், வாய்ப்புகளில் எல்லாம் தலையானதாகும். திராவிடத் தால் வீழ்ந்தோம் எனக் கூறி, கொள்கைக் குழப்பம் ஏற்படுத்தும் வீணர்களை வீழ்த்துவோம்.

திராவிடர் இயக்கம் என்னென்ன சாதனைகளை சாதித்தது எனப் பட்டியலிடுவதைவிட, சுருக்கமாகக் கூறின், மனிதனை மனிதனாக்கியது. இன்றைக்கு, பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை, திராவிடக் கொள்கையால் பயனடைந்த சில சூத்திரர்கள், தமிழ்த் தேசீயம் என்ற பெயரால் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் துரோகிகளின் செயலை முறியடித்து, இவர்களின் முகமூடியை கிழித்தெறிவோம் என்று தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.

மருத்துவக் கல்வி படிப்பதற்காக சமஸ்கிருதம் தேவை என்றிருந்த நிலையை மாற்றியது யார் உழைப்பு? - எந்த இயக்கத்தின் உழைப்பு என்பதை, இந்த அறிவுக் கொழுந்துகள் அறிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இல்லை யெனில், அவதூறு பேசுவோர் அறிவு பெற்றிருப்பார்களா?

தந்தை பெரியார் கொள்கை உலகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலேயே சில மேதாவிகள் பெரியாரைக் குறை கூறு வதை இனியும் பொறுத்துக் கொள்ளக் கூடாது; சரியான பதிலடி கொடுக்க அறைகூவல் விடுப்போம். தந்தை பெரியாரின் கொள்கையை விளங்கிக் கொண்டதன் விளைவுதான், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை. அத் தகைய சீர்மிக்க விழாவில், கலந்து கொண்ட ஆந்திர அமைச்சர்கள் சூட்டிய புகழாரமாகும். தந்தை பெரியாரின் கருத்துக்கள் தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.

எச். நரசிம்மையா

கருநாடக மாநிலத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாரின் தொண்டர்களால், அய்யா வின் கருத்துக்கள் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட் டன. 1982ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தோழர்கள் பெங்களூரிலிருந்து மைசூர் சென்று, அந்நூல்களை வெளியிட்டனர்.

மைசூரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க, அன்றைய பெங்களூர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் எச். நரசிம்மையா சிறப்புரையாற்றினார். அந்த விழாவில் பேசிய துணைவேந்தர், பெரியாரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால், தமிழகத்தில் சில துரோகிகள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற வாதத்தை தூள் தூளாக்குவோம்.

உத்தரப்பிரதேசத்தில்...

சில ஆண்டுகளுக்குமுன்பு, உத்தரப் பிரதேசத்தில், முதல்வராகயிருந்த பொழுது செல்வி மாயாவதி அவர்கள் தந்தைபெரியாருக்கு பெரியார் மேளா என்ற பெயரில், விழா எடுத்து தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர். ஏனெனில், செல்வி மாயாவதியின் அரசியல் ஆசானான கன்ஷிராம் அவர்கள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டுதான், பகுஜன் சமாஜ் கட்சி என்ற அமைப்பை உருவாக் கினார். இன்றைய உத்திரப்பிரதேச அரசியல் மாற்றத்திற்கே காரணம் பெரியார் என்கிற விதைதான்.

உலகமயமாகும் பெரியார்

கடந்த மே மாதம் கருநாடக மாநிலத்தில் சரவண பெலுகோலா என்ற ஊரில் நடைபெற்ற கருநாடக ராஜ்ய விச்சாரவதிகளு ஒக்கூட்டு (கருநாடக மாநில பகுத்தறிவாதிகளின் கூட்டமைப்பு) மாநாட்டு நிகழ்வில், பேசிய கன்னடத் தைத் தாய்மொழியாகக் கொண்ட தோழர்கள் அனைவரும் பெரியாரைப்பற்றி பேசிய கருத்துக்கள், என்னை மெய் சிலிர்க்க வைத்தன. அத்துணைத் தெளிவாகப் பேசினர்.

இச்செயல்கள் எல்லாம் பெரியார் உலகமயமாக்கப் பட்டதன் விளைவாகும். தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிராகப் பேசும் வீணர்கள் அங்கு சென்று, இந்தியில், கன்னடத்தில், தெலுங்கில் பேசி பெரியா ரையும், திராவிடத்தையும் வீழ்த்த முடியாது.

பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
அமைப்புச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் 19-9-2012

தமிழ் ஓவியா said...

நாளை - முழு அடைப்புக்கு திராவிடர் கழகம் ஆதரவு! பொதுச்சொத்துக்கு நாசமின்றி அமைதியாக நடக்கட்டும்! திராவிடர் கழகத் தலைவர் அறிக்கைமத்திய அரசின் அண்மைக்கால அறிவிப்பான, டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீடு - இவற்றைக் கண்டித்து நாளை (செப்.20) நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்குத் திராவிடர் கழகம் ஆதரவு தரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் அண்மைக்கால முடிவுகள் - டீசல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ.5, வெளிநாட்டு சில்லறை வர்த்தகங்களுக்கு 51 சதவிகித பங்கு அனுமதி போன்ற பலவும் வெகுமக்கள் விரோத நிலைப்பாடுகள் ஆகும்!

மத்தியில் நடைபெறுவது காங்கிரஸ் கட்சியின் தனித்த ஆட்சி அல்ல; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) அரசு என்றாலும், அக்கட்சி அதை அறவே மறந்துவிட்டு, தன்னிச்சையான முடிவுகளை - பொருளாதார நிபுணர்களின் மதியுரை என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திடீர் முடிவுகளை எடுப்பது, கூட்டணி அரசியல் நெறிக்கே முற்றிலும் மாறானது.

இதை நாம் நமது 14.9.2012 நாளிட்ட அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியிருந்தோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசி, விவாதித்து பிறகு முடிவுகளை மேற்கொண்டிருந்தால் இன்றுள்ள பரிதாப நிலை ஆட்சித் தலைமைக்கு ஏற்பட்டிருக்காது!

நாடு முழுவதிலும் நாளை (செப்டம்பர் 20) நடைபெறவிருக்கும் முழு அடைப்பு - வேலை நிறுத்தம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், வெளிநாட்டவர்கள் குறிப்பாக அமெரிக்க அரசும், வரவிருக்கும் தனியார் - முதலாளிகளும் புரிந்துகொள்ள உதவும் என்பதால், அந்த முழு அடைப்பை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது.

பொதுச் சொத்துக்குச் சேதமில்லாமல், அறவழிப்பட்ட போராட்டமாக இது அமையவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

சென்னை
19.9.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு: கலைஞர்சென்னை, செப்.19- நாளை நடக்க உள்ள முழு அடைப்பு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலை ஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் என்று அனைத்துத்தரப்பினர் மீது மேலும் பளுவினை சுமத்துகின்ற வகையில் மத்திய அரசு டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுவுக்கான உச்சவரம்பு மற்றும் சில்லறை வணிகத்தில் அன் னிய முதலீட்டிற்கான அனுமதி போன்றவைகளை அடுத்தடுத்து அறிவிப்பு செய்திருப்பதை கண்டித்து நாடு தழுவிய அளவில் 20 ஆம் தேதி அன்று பொது வேலைநிறுத்தம் (பந்த்) நடத்த அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பையொட்டி திரா விட முன்னேற்ற கழகமும், மற்றும் தொ.மு.ச. பேரவையின் அனைத்து இணைப்பு சங்கங்களும், இந்த வேலை நிறுத்த முழு அடைப்பிலே கலந்து கொண்டு, அவற்றை வெற்றிகரமாக வும் அமைதியாகவும் நடத்துவதற் கான முழு ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டுமென்று அறிவிப்பதோடு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் இதற்கான ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


நாமம்!

செய்தி: ஞானமே வடிவமான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் நாடு எங்கும் நலமும், வீடு எங்கும் வளமும் பெருகட்டும்!

- மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா

சிந்தனை: விநாயக பெரு மானின் திருவருளால் நலமும், வளமும் கிட்டும் என்றால், ஆட்சி எதற்கு? முதலமைச்சர் எதற்கு?

வாழ்க அண்ணா நாமம்! 19-9-2012

தமிழ் ஓவியா said...

தேங்காய் விலை ரூ.50 ஆயிரம் ஒருதரம்! இரு தரம்!!தேங்காய் விலை ரூ.50 ஆயிரமா? என்ன அக்கி ரமம்? எங்கே? எந்த ஊரில்? கேள்விகள் எழத்தான் செய்யும்.

இதையே பக்தி என்ற முகமூடி போட்டு ஒரு தேங்காய் விலை ரூ.50 ஆயிரம் ரூ.60 ஆயிரம் என்று சொன்னால் பணம் கொடுத்து ஏலம் எடுக்க எத்தனை எத்தனை பக்திப் போதைக்காரர்கள் நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா?

திருப்பதி கொடை என்ற பெயரால் வசூல் கொள்ளை ஓகோ என்று நடைபெறுகிறது. அண்மை யில் இந்தப் பகல் கொள்ளை தடுக்கப்பட்டது.

இப்பொழுது ஒரு புதிய யுக்தியைக் கடைபிடித்துள் ளார்கள். ஒரு மூட்டை தேங்காய்களைக் கொண்டு வருகிறார்கள். அந்தத் தேங்காய் முழுவதும் மஞ்சளைத் தடவி, இது தெய்வாம்சம் பொருந்தியது என்று பிரச்சாரம் செய்து அந்த ஒரு மூட்டை தேங்காய் களையும் ஏலம் விடுகிறார்கள். கடந்த ஆண்டு முதல் தேங்காய் ரூ.60 ஆயிரத்திற்கும் கடைசி தேங்காய் ரூபாய் 15 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

சென்னை பாரிமுனையில் தொடங்கும் இந்தத் திருப்பதிக் குடை கந்தசாமி கோயில் உட்பட சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து இந்தப் பகல் கொள்ளையை நடத்துகிறது.

ஏழுமலையானே நாமக் கடவுள்! ஏழுமலையான் பெயரிலேயே பக்தர்களுக்கு நாமம் போடும் இவர்கள் பலே கில்லாடிகள்தான்! காவல்துறை வழக்குப் பதிவு செய்து இந்த மோசடிக்காரர்களைக் கைது செய்ய வேண்டாமா? 19-9-2012

தமிழ் ஓவியா said...

புதிய மைல்கல்! - கானா நாட்டில் பெரியார் - ஆப்பிரிக்க நிறுவனம் தொடக்கம் கிராமப்புற வளர்ச்சிக்கும், பெரியார் கொள்கையை பரப்புரை செய்வதற்கும் பாடுபடுவதாக அறிவிப்புபெரியார் - ஆப்பிரிக்க அமைப்பின் புரவலர் எஸ்.எஸ். பாட்டால் அவர்கள் பெரியார் பிறந்த நாள் கேக்கை வெட்டினார். உடன் இந்த அமைப்பின் தலைவர் கே.சி.எழிலரசனும், செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார் அவர்களும் உள்ளனர் (அக்கரா, 16.9.2012)

அக்கரா, செப். 19- கிராமப்பு வளர்ச்சிக்கும் பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதற்கும் கானா நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் ஆப்பி ரிக்க நிறுவனம் (PAF) பாடுபடும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. நாட்டு முன்னேற்றத்திற்காக கிராமப்புற சமூக மக்களின் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதற்கு உதவி செய்ய, பெரியார் - ஆப்பிரிக்க நிறுவனம் என்ற பெயர் கொண்ட ஓர் இந்திய அமைப்பு அக்காராவில் தொடங்கப்பட்டது.இந்திய நாட்டுக்கான கானா நாட்டின் முன்னாள் தூதர் பென்டர்ன் வில்லியம்ஸ் பாராட்டுரை வழங்குகிறார்.

கானா நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூக மக்களிடையே நிலவும் வறுமைக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப விவசாயிகளுக்கு, நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது, கிராமப்புற சமூகத்திற்கு அதிக அதிகாரங்கள் அளிப்பது என்ற நோக்கத்தைக் கொண்டது இந்த அமைப்பு.

பெரியாரின் கொள்கைகள் பரப்புரை

ஜாதி நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என்னும் அடையாளமே இல்லாதபடி சமூகத்தை மாற்றி அமைக்கவும் சோர் விலாமல் பாடுபட்ட, நீதிக் கட்சியின் முன் னாள் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர் களின் கொள்கை களை, பணிகளைப் பற்றி பரப்புரை செய் வதும் இந்த அமைப் பின் நோக்கமாகும்.லிபேரியா நாட்டு தூதர் கிளவண்டா பிரைட் பார்க்கர் பாராட்டுரை வழங்கினார்

அனைத்துலக மனித உரிமை மாநாட் டின் அடித்தளமாக விளங்கும் மனித உரிமைகளை நிலை நாட்டும் பணிக்கு தந்தை பெரியார் அவர்களின் முயற்சிகள் வழிகோ லின. பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்று அய்க்கிய நாடுகள் மற்றும் அதன் அமைப்புகள் பின்பற்றுவதற்கான ஓர் அடிப்படை ஆவணமாக விளங்கும் மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார்

இந்த அமைப்பின் தொடக்க விழாவில் பேசிய பெரியார் ஆப்பிரிக்க அமைப்பின் செயலாளர் சாலை மாணிக் கம் அம்மையார் அவர்கள், கிராமப்புற சமூக விவசாயி கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தீர்வு காண ஆக்கபூர்வமான, நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள அனைத்து நாடு களிலும் கானா நாட்டை இந்த அமைப்பு தேர்ந்து எடுத்துள்ளதற்கு, கானா இந்திய நாடுகளுக்கிடையே நிலவி வரும் பலமான உறவே காரணமாககும் என்று அவர் கூறினார். கானா நாடு இந்தியாவுக்கு ஒரு நல்ல நட்பு நாடாக விளங்குகிறது. கானாவின் கிராமப் புற சமூகங்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான உதவிகளை அவர்களது வீட்டு வாசல் களுக்கே கொண்டு சென்று அளிப்பது எங்களது பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மனித குலத்திற்குத் தேவையானவை!

கானாவில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிறகு, ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளிலும் இந்த அமைப்பு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்று கூறிய மாணிக்கம் அம்மையார், இந்தியாவில் செய்ததைப் போல கானா நாட்டின் கிராமப் புறப் பகுதிகளில் நிலவும் வறுமையைக் குறைப் பதற்காக இந்த அமைப்பு அளிக்க முன்வந்திருக்கும் உதவிகளை கானா நாட்டு மக்கள் வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

1879 ஆம் ஆண்டில் பிறந்து, 1973 இல் காலமான தந்தை பெரியார் அவர்களின் 134 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதாகவும் இந்த விழா அமைந்தது. இந்த ஆயிரம் ஆண்டின் எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு மாபெரும் சமூகப் புரட்சி யாளரான தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட ஜாதிய நடைமுறையை ஒழிப்பதற்கான முயற்சிகளும், அனைத்து மக்களுக்கும் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது முயற்சிகளும் மனித குல வரலாற்றில் ஈடு இணையற்ற செயல்களாக விளங்குவனவாகும்.

இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தால் 1920 - 1923 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழை யாமை இயக்கத்துக்காகவும், அதன் கட்டுமான செயல் திட்டங்களுக்காகவும் அளவற்ற தியாகங் களைச் செய்தவர் தந்தை பெரியார். சமூக சமத் துவத்துக்காக நவீன இந்தியாவில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட அமைதி வழியிலான போராட்ட மான வைக்கம் போராட்டம் (1924-25) பெரு வெற்றி பெறுவதற்கு தந்தை பெரியார் அவர்களின் பங் களிப்பே முக்கியமானதாக விளங்கியது.

புத்துலக தீர்க்கதரிசி

தனது எழுத்துகள், பேச்சுகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய தந்தை பெரியார், சுதந்திரமாக சிந்தித்து, பகுத் தறிவு சிந்தனை, அனுபவம் மற்றும் சமூக நலன் ஆகி யவற்றை சீ தூக் கிப்பார்த்து எது ஒன்றையும் மதிப் பிட வேண்டும் என்று அவர் களுக்கு அறி வுறுத்தினார்.

புத்துலகின் தீர்க்கதரிசி அவர் என்று யுனெஸ்கோ நிறு வனம் மிகவும் பொருத்தமாக வும், சரியாகவும் விவரித்துள்ளது. தனது செல்வம் பொதுமக்கள் வழங்கிய நன் கொடைகள் ஆகிய அனைத்தையும் ஒரு பொது அறக் கட்டளை நிறுவி மனித குல நலனுக்காகவே ஈந்தவர் தந்தை பெரியார் அவர்கள் என்றும் குறிப்பிட்டார். 17-9-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனா சக்தியற்றவன்

தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.

பெரியார்-(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் கைக்கூலியாக மாறலாமா திருவரங்கம் காவல்துறையினர்?திருவரங்கத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பார்ப்பனர்களை பற்றி பேசக் கூடாது என கழக பேச்சாளர் பெரியார் செல்வன், மாவட்ட தலைவர் மு.சேகர் மற்றும் நிருவாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காவல்துறையினர்.

திராவிடர் கழகம் சார் பில் நேற்று முன் தினம் திரு வரங்கத்தில் டெசோ மாநாடு தீர்மான விளக்கக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் காவல் துறையினரே இடையூறு செய்து பார்ப் பனர்களின் கைக் கூலியாக செயல் பட்டனர். இத னால் கழகத் தோழர்கள் ஆவேச மடைந்தனர். ஈழத்தமிழர்கள் பிரச் சினையில் தமிழர்கள் உரி மை பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்போடு செயல்படுகின்றனர் பார்ப் பனர்கள்.

தமிழர்களின் வாழ்வுரி மைக்காக நடத் தப்பட்ட டெசோ மாநாடு தீர்மான விளக்கக் கூட்டத்தில் தேவையில்லாமல் பிரச் சினையை ஏற்படுத்தி, ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக காவல் துறையினர் நடந்து கொண் டனர்.

காவல் உதவி ஆணை யர் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் பால்சாமி, காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் ஆகிய மூவரும் நடந்து கொண்ட விதம் பொது மக்கள் மற் றும் நடுநிலையாளர் மத்தி யில் எரிச்சலை ஏற்படுத் தியது. அரசியல் சட்ட அமைப்பின் அடிப் படைக் கடமையே! அறி வியல் மனப்பான்மையை வளர்ப்பதுதான். அதனை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் திராவிடர் கழக கூட்டங் கள் நடைபெறுகின்றன.

ஆனால் இந்த கூட்டத் தை காவல்துறையினர் கொச் சைப்படுத்தி அரசியல் சட்ட விரோத தன்மை யோடு நடந்து கொண் டனர். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே தொடக்கம் முதல் முடியும் வரை கழகப் பொறுப் பாளர்களை அழைத்து பேச்சாளரை பேச விடா மல் தடுக்கும் வண்ணம் தொந்தரவு செய்தனர். சட்டம் ஒழுங்கை பாது காக்க வேண்டிய காவல் துறையினரே தேவையில் லாமல், பார்ப்பனர்களிள் கைக்கூலியாக மாறி வேண் டுமென்றே திட்டமிட்டு பிரச்சினையை ஏற்படுத் தியது மிகுந்த வெட்கக் கேடு.

முதல்வர் தொகுதியாம்!

எதற்கெடுத்தாலும் முதல்வர் தொகுதி என் றும் இதைப் பேசாதீர்கள், அதைச் செய்யாதீர்கள் என்று எழுதப்படாத சட் டத்தை காவல்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

முதல்வர் தொகுதியில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி நடந்த வண்ணம் இருக்கிறது. முதல்வர் தொகுதி எனக் கூறும் காவல் துறையின ரால் இவைகளை தடுக்க முடிந்ததா? கழகக் கூட் டத்தை மட்டும் தடுக்க முன் வந்திருக்கிற கார ணம். பார்ப்பனரைப் பற்றி பேச்சாளர் பெரியார் செல்வன் பேசிவிட்டா ராம். பாப்பனரைப் பற்றி பேசாதீர்கள் என்று காவல்துறையினர் கங் கணம் கட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். பேச்சாளர் பெரி யார் செல்வனோ நான் பேசியதில் தவறு இருக்கு மானால் சட்டப்படி வழக் குப் போடுங்கள். வழக்கை சந்திப்போம்.

தேவை யில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என பதிலடி கொடுத்தார். பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே! என பார்ப்பன பாரதியாரே பாடியுள்ளார். ஆனால் காவல்துறை யினரே பார்ப்பனரை பற்றி பேசக் கூடாது என கூறி யது யார்? எவர் சொல்லி காவல் துறை யினர் இப்படி நடந்து கொண்டனர்.

தமிழர்களின் உரிமை யைப் பாதுகாக்க இந்திய ராணுவத்தையே அனுப்பு வதற்கு ஏற்பாடு செய்வேன் என கூறிய முதல்வர் ஜெயலலிதா. அவரது கருத்துக்கு விரோதமாக முதல்வர் தொகுதியில் ஈழத்தமிழர் களின் நலனுக்காகவும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவும் நடை பெற்ற டெசோ மாநாடு விளக்க கூட்டத்தில் முதல் வர் தொகுதியின் காவல் துறையினரே இவ்வாறு நடந்து கொண்டது சரி தானா? 19-9-2012

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே இந்தியா வருவதை ஏற்க முடியாது கலைஞர் அறிக்கைசென்னை, செப்.19- ராஜபக்சே இந்தியா வருவதை ஏற்க முடியாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அறிக்கை வருமாறு:-

கேள்வி:-தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறதே?

பதில்:-தமிழ்நாட்டில் 10,400 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டிலே இயங்கி வருகின்றன. தற்போது இவற்றுக்கு தேர்தலை நடத்த புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியினர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகிறார்களாம்.

எனவே அரசு கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்காமல், ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களை கொண்டு; நீதிமன்ற தீர்ப்பையும் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 97ஆவது திருத்த சட்டப்பிரிவினையும் மனத்திலே கொண்டு, தேர்தல் நடத்துவதற்கென்று தனி ஆணையத்தை உருவாக்கி, ஜனநாயக உணர்வோடு கூட்டுறவு தேர்தலை நடத்திட முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கேள்வி:-ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜ் என்பவர் 36 பக்கங்களுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து மாண்டிருக்கிறாரே?

பதில்:-மிகவும் துயரமான, அதிர்ச்சியை தரக்கூடிய நிகழ்ச்சியாகும். இந்த உயிர் தியாகத்திற்கு பிறகாவது மத்திய அரசு பலமுனை எதிர்ப்புக் கிடையே ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை பற்றி அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இலங்கையில் நடந்து முடிந்த போரையொட்டி, நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வினை அய்.நா.மன்றத்தின் மனித உரிமை ஆணையம் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங் களில் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அந்த ஆய்வினை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை இந்த கால கட்டங்களில்தான் அய்.நா.மன்றத்திடம் நாம் ஒப்படைக்கவிருக்கிறோம். அய்.நா.மன்றத்தில் நடைபெறவுள்ள ஆய்வின்போது இந்தியா என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போகிறது என்பதை உலகத்தமிழர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையின் அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்பதையும் தமிழனாக பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மனதிலே கொண்டு, இந்திய அரசாங்கம், ராஜபக் சேயின் வருகையை தடுத்து நிறுத்துவதோடு, அய்.நா. மன்றத்தின் ஆய்வின்போது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்து கிறேன்.

கேள்வி:-நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சித்து, அமெரிக்காவில் ஒரு திரைப்படம் வெளிவந்திருப்பதால், அதனை கண்டிக்கும் வகையில் சென்னையில் இஸ்லாமியர்கள் அமெரிக்க தூதர கத்திற்கு முன்னால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?

பதில்:-நானும் அந்த செய்தியைப் படித்தேன். நபிகள் நாயகத்தை மிகக் கடுமையாக விமர்சித்து அந்தப் படம் அமெரிக்காவில் வெளிவந்திருப்பதாக தெரிகிறது. இதைப் பற்றி இஸ்லாமிய சகோதரர் களை சமாதானப்படுத்தும் வகையில் அந்த படத்தை கண்டித்து அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டும். இந்திய அரசும் அதனை வலியுறுத்தி அமெரிக்க அரசுக்கு எழுதிட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையை வளர்த்து விட்ட குற்றத்திற்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற மத உணர்வுகளை புண் படுத்தும் நிகழ்வுகளை அனைத்து தரப்பினரும் நிச்சயமாக தவிர்த்திடுவதே இணக்கமான சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

-இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ராஜபக்சேவை எதிர்த்து தீக்குளித்த இடத்தில் ஆட்டோ டிரைவர் உடலுக்கு மக்கள் அஞ்சலி


சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜின் உடல் அவர் தீக்குளித்த இடத்திலேயே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் நேற்று முன்தினம் தீக்குளி்ததார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும், உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய கடிதத்தை ஒப்படைக்க வேண்டும், அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜபக்சே மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மரண வாக்குமூலத்தை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க முடியாது என்று கூறினர்.

பின்னர் போலீசார் முதல் தகவல் அறிக்கை நகலைக் காட்டியதுடன், விஜயராஜ் எழுதிய கடிதம், கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றை கொடுத்தனர். ஆனால் பிரதமர் மற்றும் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்வது எளிதல்ல என்பதை விளக்கினர். அதன் பிறகே அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்தனர்.

உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விஜயராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் அவர் தீக்குளித்த சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

---------------http://tamil.oneindia.in/news/2012/09/19/tamilnadu-people-pay-respect-self-immolated-vijayaraj-161753.html