உரசிப் பார்க்க ஆசைப்படுகிறாரா - மருத்துவர்? கலி.பூங்குன்றன்
துக்ளக் இதழுக்கு (2.1.2013) மருத்துவர் திரு.ச. இராமதாஸ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த -
அவதூறு சொல்ல பார்ப்பனரல்லாதார்களில் யாரேனும் கிடைத்தால் பார்ப்பன ஏடுகள்
அவர்களுக்கு தலைப்பாகை கட்டி விடும்.
இதே துக்ளக்கில் திரு.ச. இராமதாஸ் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்ததுண்டு. (15.4.1988)
துக்ளக் கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்க போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆரம்பித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது?
டாக்டர் ச.இராமதாஸ் பதில்:
எல்லோருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார்
என்ற கோஷத்தை கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும் பொழுது
நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவது போல் இருந்தது என்று நினைத்தோம். ஆனால்
ஏமாந்தோம்
என்று தந்தை பெரியாரை இன எதிரியான பார்ப்பனரிடம் - அதுவும்
சோ.இராமசாமியிடம் காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்தவர்தான் இவர்.
பார்ப்பனர் எதிர்ப்பு என்று ஒன்று இல்லையானால் ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்தானே நடைமுறைக்கு வந்திருக்கும்?
அந்த நிலை என்றால் மருத்துவர்
திரு.ச.இராமதாசு கழுத்தில் ஸ்டெதாஸ் கோப்பா தொங்கும்? ஒரு கணம்
மனச்சான்றுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் - அப்படி ஒன்று இருந்தால்.
நன்றி உணர்ச்சியுடன் நினைத்துப் பார்க்க
வேண்டும் - அப்படியொரு உணர்ச்சி இருந்தால். பார்ப்பனர் எதிர்ப்பு
உணர்ச்சியின் அடிப்படையில் பிறந்ததுதானே சமூக நீதி உணர்ச்சி?
இந்த சமுதாய சீர்திருத்தம் முதற்படி
பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம்
கைப்பற்ற வேண்டியது என்பதைதான் A,B,C,D யாக கொண்டோம் - கொள்கிறோம்.
ஆனதாலேயே தான் நான் வகுப்புவாதி என்று
சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்பு வாத உருவமாகவே இருந்து
வருகிறேன். நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும்
சமுதாயத்துறையில் பார்ப்பனீய வெறுப்பு உள்ளவன் நான். அதுதான் என்னை
பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது (விடுதலை, 5.3.1968) என்றாரே
தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை
புரிந்து கொண்டவராக இருந்தால் பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால்
இந்த A,B,C,D யை இராமதாஸ் கற்றிருந்தால் பார்ப்பன எதிர்ப்பை
கொச்சைப்படுத்தி (அதுவும் ஒரு பார்ப்பனரிடம்) சபாஷ் பட்டம்
வாங்கியிருப்பாரா?
திராவிட இயக்கத்தினருக்கு
எதிர்ப்பானவர்கள் என்றால் அவர்களை கொஞ்சம் மூக்கு சொறிந்து காற்றடித்து
பலூனை பறக்க விடுவார்கள் பார்ப்பனர்கள்.
அன்றைய இராவணனை காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு தானே ஆழ்வார் பட்டம் கிடைத்தது. விசுவாசியாகிய கும்பகர்ணனுக்கு கிடைக்கவில்லை அல்லவா!
இந்த
பேட்டியில் கூட தோழர் திருமாவளவன் மீது குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் உயர்ஜாதி பெண்களை காதல் செய்து பிறகு பேரம்
பேசுகிறார்கள் என்று திருப்பித் திருப்பி சொல்கிறார்.
ஒரே ஒரு கேள்விக்கு மருத்துவர் பதில்
சொல்ல வேண்டும். எந்தத் தேதியில் இருந்து இந்தக் கருத்து இவருக்கு
உதித்தது? கடந்த சட்டமன்ற பேரவை தேர்தலுக்குப் பிறகு என்று கூட சொல்ல
முடியாதே!
இந்த ஆண்டு ஜனவரி மாததத்தில் கூட
(22.1.2012) தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் அனைத்து பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடி இன சிறுபான்மை சமுதாயங்களைச்
சேர்ந்த தலைவர்களைக் கூட்டி ஜாதி வாரி கணக்கெடுப்பு உட்பட பல தீர்மானங்களை
நிறைவேற்றவில்லையா? (பா.ம.க.வின் ஏடான தமிழ் ஓசை 23.1.2012, பக்கம் 4)
இந்த பத்து மாத இடைவெளியில் தான் தலித்கள் மேல்ஜாதி பெண்களைத் திடீரென்று
காதல் செய்யத் தொடங்கி விட்டனரா? தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றத்
தேர்தல்களில் சந்தித்த கடும் தோல்வி - அவரை விரக்தியின் எல்லைக்கு
விரட்டிய நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆளாகி,
கடைசியில் இந்த ஜாதி என்னும் - தமிழ்நாட்டில் செல்லுபடியாகாத மணற்கயிறை
பிடித்துத் தொங்க ஆரம்பித்துள்ளார் என்பதுதான் உண்மை.
தர்மபுரியில் பாதிக்கப்பட்ட
குடும்பத்தினரையோ, அங்குள்ள பிற சமுதாயத்தினரையோ சந்திக்காமல், தலித்
பகுதிக்கு மட்டுமே சென்று மூக்கை சிந்திவிட்டு வந்த லெட்டர்பேட் தலைவர்களோ,
இராமதாஸ் ஜாதி அரசியல் நடத்துவதாகக் கூறும் மற்றவர்களோ, ஜாதி மறுப்புத்
திருமணம் நடத்த புறப்பட்டுள்ள வீரமணி வகையறாவோ, திமுகவோ, கம்யூனிஸ்டுகளோ,
முதலில் தங்கள் குடும்பத்தில் ஜாதியை விட்டு ஜாதி மாறி பெண்கொடுப்பது
வழக்கமாக கொள்ளட்டும்.
தலித களுடன் கொள்வினை, கொடுப்பினை செய்ய
வேண்டும். அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். இதுதான் எங்கள் கொள்கை என்று இந்தத்
தலைவர்கள் அறிவிக்கத் தயாரா என்று கேட்கிறேன் என்று சவால் விட்டுள்ளார்
மருத்துவர்.
தருமபுரியில் பாதிக்கப்பட்டவர்களையும்
பாதிப்புக்குக் காரணமானவர்களையும் சம அளவில் பார்க்க வேண்டும் என்று
திரு.ச.இராமதாஸ் விரும்புவதிலிருந்தே அவரது நேர்மை சறுக்கி விழுந்து
விட்டது.
மேல் ஜாதியில் பாதிக்கப்பட்டவர் என்று
யாரைச் சொல்லுகிறார்? தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் என்பவர்
பாதிக்கப்பட்டவர் என்று சொல்ல முன்வருகிறாரா?
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து
தற்கொலை செய்து கொண்டவர் பாதிப்புக்கு ஆளானவர் என்று சொல்லுகிறாரா? இதில்
பார்க்கப்படவேண்டியது - இளங்கோவின் மகன் இளவரசன் என்ற தோழனை காதலித்து
விரும்பி திருமணம் செய்து கொண்டார் நாகராசனின் மகள் திவ்யா என்பது
நீதிமன்றத் திலேயே மணமகளின் வாக்குமூலம் உறுதிபடுத்தப் பட்டதே - அதற்குப்
பின் இதில் தலையிட பெற்றோர்களுக்கும் உரிமை கிடையாது. ஜாதிக் கொள்ளிக்
கண்களுடன் பார்ப்பவர்களுக்கு சட்டப்படியும் நியாயப்படியும் இடமில்லையே!
உண்மை இவ்வாறு இருக்கும் போது
பாதிக்கப்பட்ட மேல்ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்குப் போனார்களா?
போனார்களா? என்று புலம்பி அனுதாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பதைக் கண்டு
வேண்டுமானால் அனுதாபப் படலாம்.
வீரமணி வகையறாவாம்! மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள் கூறும் வீரமணி வகையறா என்பதற்கு என்ன பொருள்?
வீரமணி பாரம்பரியம் என்பது தந்தை பெரியார் அவர்களின் பாரம்பரியம். எண்பது வயதில் 70 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தமான பாரம்பரியம்.
40 முறைகளுக்கு மேல் சிறை சென்ற
பாரம்பரியம். (சிறைக்குள் இருந்த தன்னை விடுவிக்குமாறு முதலமைச் சரிடம்
தூது போகச் சொன்ன பாரம்பரியம் அல்ல) மருத்துவர் வீட்டுத்
திருமணத்துக்குக்கூட திருக்குறளாருடன் வீரமணி அவர்கள் வருவதுதான் பெருமை
என்று கருதப்படக்கூடிய வகையறா!
அந்த வகையறா - தோல்வியில் துவண்டவர்களுக்கான துன்பப் பாடலின் தொகையறாவாக மாறிவிட்டது போலும்!
வீரமணி வகையறாவின் விடுதலையின் தலையங்கங்களும், அறிக்கைகளும் தான் மருத்துவர் ராமதாசு உட்பட பலருக்கு
சமூகநீதிப்பாடம் சொல்லிக் கொடுப்பவை என்பதை மறந்து விடலாமா?
பார்ப்பனர்கள் கூட பயன்படுத்தத் தயங்கும்
வார்த்தையை அவர்களின் தொங்கு சதையாகி விட்டவர்கள் பயன்படுத்து கிறார்கள்
என்று புரிந்து கொள்ள முடிகிறது. (கோவையில் மருத்துவர் கூட்டிய அனைத்து
ஜாதி சங்க கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பார்ப்பன சங்கத்தின்
வாழ்த்து மடலை மருத்துவர் படிக்க, பலத்த கரவொலியாம்) அடடே! பார்ப்பன
எதிர்ப்பை ஒரு கட்டத்தில் எப்படியெல்லாம் முழங்கியவர்! தன் தொண்டர்களை
கருப்புச் சட்டை போட சொன்னவர், கேவலம் ஒரு தேர்தல் தோல்வியால் எல்லா
மானத்தையும் மூட்டைக் கட்டி பார்ப்பனர்களின் பாதார விந்தங்களில்
சமர்ப்பிக்க தயாராகி விட்டனர்- பார்த்தீர்களா?
இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி
கொள்கைக்காக நடக்குது எங்கள் கட்சி உட்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம்
ஒண்ணு தான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்த விகடனுக்கு (13.9.1998) ஒப்புதல்
வாக்குமூலம் கொடுத்தவர். வீரமணி அவர்களைப் பற்றி பேச அடிப்படை தகுதி
உண்டா?
இன்றைக்குத் தடித்த நாக்குடன் பேசும் மருத்துவரின் இன்னொரு ஒப்புதல் வாக்குமூலம் இதோ!
திராவிடர் கழகத்திற்கும், பாட்டாளி மக்கள்
கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இது ஓட்டு பொறுக்குகிற கட்சி
அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு
திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக
இருக்கிறோம் என்று சொன்ன வரும் சாட்சாத் இந்த திண்டிவனத்தார்தான்.
(6.11.1993 அன்று சென்னை பெரியார் திடலில் சமூக நீதி ஆதரவு - மதவெறி ஆதிக்க
எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் ஆற்றிய உரை)
திராவிடர் கழகத்தின் பின்னாலே எப்பொழுதும்
வரத் தயாராக இருப்பவர் தான் நமது மருத்துவர். இப்பொழுது ஏதோ விரக்தியால்
தடுமாறுகிறார். நாளையோ நாளை மறுநாளோ மானமிகு வீரமணி அவர்களின் தலைமையேற்று
திராவிடர் கழகத்தின் பின்னால் வரக்கூடியவர் என்று நம்புவோமாக!
இன்னொரு அணுகுண்டு கேள்வியைப் போட்டு அப்படி யே அதிர வைத்து விட்டார் போங்கள்.
வீரமணி வீட்டில் ஜாதி மறுப்பு திருமணம்
உண்டா என்பது தான் அந்த அணுகுண்டுக் கேள்வி. வீரமணி அவர்களின் அத்தனை
பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான். மானமிகு வீரமணி அவர்கள்
திருமணம் செய்து கொண் டதும் கூட ஜாதி மறுப்பு (விதவையரை) மணந்து கொண்
டவர்களின் மகளைத்தான். கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே மருத்துவர் -
அவர் வீட்டிலும்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருமகள் வரை உண்டே!
சவால் விடும் மருத்துவரை நோக்கி வினா எழுப்பும் நேரம் இப்பொழுது எங்களுக்கு.
பெரியாரை
நூற்றுக்கு நூறு பின்பற்றுவதாக முரசு கொட்டும் அய்யா மருத்துவரே - உங்கள்
வீட்டில் ஒரே ஒரு பிள்ளைக்காவது ஜாதி மறுப்புத் திருமணம் செய்தது உண்டா?
உங்கள் பேரப் பிள்ளைக்காவது அப்படி செய்ய உத்தேசம் உண்டா? சவால் விட்டே
கேட்கிறோம்!
ஆம், நான் ஜாதி வெறியன்தான் என்று
உளுந்தூர் பேட்டையில் (6.12.2012) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த வராயிற்றே!
இந்தக் கேள்விக்கு ஏது விடை அவரிடம்....?
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதைபோல தந்தை பெரியார் கருத்துக்கு வியாக்கியானம் செய்ய வேறு ஆரம்பித்து விட்டார்.
இவர்கள் பெரியாரை பற்றி
குறிப்பிடுகிறார்கள். பெரியார் பல பிரச்சினைகளுக்காகப் போராடினார்.
அவற்றில் ஜாதி மறுப்பும் ஒன்று என்று பேட்டிக் கொடுத்துள்ளார். இது
உண்மையா, பெரியார் பாடுபட்டவற்றுள் ஏதோ ஒன்றுதான் ஜாதி ஒழிப்பே?
தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக்
கொள்கை ஜாதி ஒழிப்பு. பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும் (குடிஅரசு,
11.11.1944) என்றார் தந்தை பெரியார்.
அந்த பேதத்தில் முதன்மையானது பிறப்பின்
அடிப்படை யிலான ஜாதி. அதனை ஒழிக்க புறப்பட்டபோது கடவுள், மதம், வேதம்,
இதிகாசங்கள், புராணங்கள் குறுக்கே வந்து படுத்தபோது காவல் நாய்களாக அவை
குரைத்த போது அத்தனையையும் ஒழிக்க முற்பட்ட மாபெரும் ஜாதி ஒழிப்பு
வீரர்தான் தந்தை பெரியார்.
இன்னும் சொல்லப்போனால் ஜாதியை
பாதுகாக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் என்றபொழுது அதனைப் பாதுகாக்கும்
பகுதியை எரிக்கும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) பத்தாயிரம் கருஞ்சட்டை
தொண்டர்கள் ஆறுமாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை வெஞ்சிறை சென்ற
வரலாறெல்லாம் மருத்துவருக்குத் தெரியுமா?
தந்தை பெரியாரை விமர்சிக்கும் பொழுது
நிதானம் வேண்டும். அவசரப்பட்டு விடக்கூடாதென்பார் பா.ஜீவானந்தம். அந்த
அறிவுரையையே மருத்துவருக்கு கூற விரும்புகிறோம். பெரியார் என்ற வார்த்தையை
உச்சரித்து விடுவதாலேயே பெரியாரைத் தெரிந்து கொண்டதாக மனப்பால் குடிக்க
வேண்டாம்.
தமிழ் ஓசை நாளேட்டை நடத்தி வந்தாரே பா.ம.க
நிறுவனர் திரு.இராமதாஸ். அதையாவது அவர் ஒழுங்காகப் படித்தாரா என்று
தெரியவில்லை. பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்ன என்பது அதில் வெளியாகி
உள்ளதே.
சமதர்மம் என்ற வார்த்தைக்கு
சமூகத்துறையிலும், பொருளாதார துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல்
சமத்துவமாக வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு
சமதர்மம் என்ற வார்த்தையை பிரயோகிக்கிறேன்.... நம் நாட்டிற்கு முதலில் சாதி
பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே
முதலில் செய்ய வேண்டி இருக்கிறது.
சாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான்
சமூக வாழ்க்கையில் சமதர்மமாக வாழ முடியும் என்று கூறினார் தந்தை பெரியார்.
(தமிழ் ஓசை, 9.2.2012, பக்கம் 4)
தந்தை பெரியார் அவர்கள் முதலில் ஒழிய
வேண்டியது சாதியே என்று பா.ம.க. நிறுவனர் ஏட்டிலேயே வெளி வந்துள்ளதே - இது
கூட புரியாமல் பெரியார் எத்தனையோ பிரச்சினைகளுக்காக பாடுபட்டார்.
அதில் ஒன்று சாதி என்று தன்னுடைய கருத்தை பெரியார் மீது ஏற்றிக் கூறுவது ஏற்புடையதுதானா?
காதல் என்று கூறப்படுவதை கடுமையாக
விமர்சித்து நிறைய பேசி இருக்கிறார் பெரியார். அதுபற்றி இவர்கள் எதுவும்
பேசமாட்டார்கள் என்று வேறு குற்றப்பத்திரிகை படித்திருக்கிறார். விமர்சனம்
என்பது வேறு - கருத்து என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல. காதலை பற்றி
தந்தைபெரியார் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
சுதந்திர காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு
நாடோ, ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரீகம், தாட்சண்யம் முதலியவைகளில்
பெருக்கமடையும். நிர்பந்த காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும்,
அடிமைத்தன்மையும் தான் பெருகும் (குடிஅரசு, 30.11.1929) என்று இன்றைக்கு 83
ஆண்டுகளுக்கு முன்பே காதல் பற்றி கருத்துச் சொன்னவர் பெரியார் ஆயிற்றே!!
கேள்வி: நீங்கள் தலித் அல்லாத பிற ஜாதியினர் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதின் நோக்கம் என்ன?
மருத்துவர் பதில்:
தமிழகத்தில் எந்த வகையிலும் தீண்டாமை இல்லை, ஆனால் என்னை ஜாதியைச் சொல்லி
திட்டினார் என்று புகார் கொடுத்தால் உடனே வழக்கு பதிவு செய்வது, கைது என்று
நடவடிக்கைகள் தொடர்கிறார். இந்த பி.சி.ஆர் சட்டத்தில் பதிவாகும்
வழக்குகளில் இரண்டு சதவிகிதம் தான் நிரூபிக்கப்படுகின்றன. தலித் அல் லாத பல
சமுதாயத்தினர் இந்த பிரிவால் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது மருத்துவரின்
இன்னொரு குற்றச்சாற்று.
எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் எந்த
வகையிலும் தீண்டாமை இல்லையென்று கூறும் மருத்துவர் இதே பேட்டியில்
பிற்பகுதியில் என்ன சொல்லுகிறார்?
கும்பகோணம் அருகே குடிதாங்கி என்ற ஊரின்
வழியாக தலித் மக்களின் பிணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்ததை
அறிந்து நானே அங்கு போய் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் பிணத்தை அந்தப் பகுதி
வழியாக சுமந்து சென்றேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தீண்டாமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவில்லையா? ஏன் இந்த முரண்பாடு?
இன்னும் பல கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாஸ்கள் இருக்கவில்லையா? சுடுகாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி,
கொட்டாங்கஞ்சி ஏந்தல் என்ற ஊராட்சிகளில் ஊராட்சி தேர்தலே பலமுறை நடத்த
முடியாத சூழ்நிலை இருந்ததை மருத்துவர் அறியமாட்டாதவரா? கலைஞர்
ஆட்சியில்தானே அதற்கு தீர்வு காணப்பட்டது?
அதற்காக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி பேசவில்லையா? வசதியாக இவற்றையெல்லாம் மருத்துவர் மறந்து விட்டாரோ?
மருத்துவர் ராமதாசு அவர்கள்
பொதுவாழ்க்கைக்கு எப்போது வந்தார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக நாம் களம் கண்ட நேரங்களில்
எல்லாம் இவர் எங்கிருந்தார்?
மண்டல் நாயகர் வி.பி.சிங்கை எப்படி
வர்ணித்தார்? மேல் ஜாதி (ராஜ புத்திரர்) வெறி பிடித்த விபிசிங் அழுகிக்
கொண்டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாதது போல் தோற்றமளிக்கும்
பகுதிதான், செல்லாத நாணயத்தில் ராஜிவ் ஒரு பக்கம் என்றால் விபிசிங்
மறுபக்கம் ஆவார் என்று தினப்புரட்சி ஏடு தலையங்கம் தீட்டவில்லையா?
இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7,8,9
ஆகிய நாள்களில் கருணாநிதியுடன் விபிசிங் பங்கேற்கும் தமிழ்நாட்டின்
நிகழ்ச்சிகளின் போது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர்
விலகியே நிற்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூட வீதிக்கு வரக்கூடாது எனக்
கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டவர்தானே இந்த பாட்டாளி?
அந்த விபிசிங் இல்லையென்றால், திராவிடர்
கழகம் இல்லையானால் (42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் அதற்காக
நடத்தியது) மத்திய அரசில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு
கிடைத்திருக்குமா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணை யை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோதும் எங்கிருந்தார் டாக்டர்?
69 சதவிகித இட ஒதுக்கீடு திராவிடர் கழகத்
தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் முயற்சியால் (31சி சட்டத்தையே எழுதிக்
கொடுத்தவர் இவர்தானே) பாது காக்கப்பட்ட போது அம்பாசங்கர் தலைமையில்
அமைக்கப் பட்ட குழு துரோகம் செய்த நேரத்தில் அதனை எதிர்த்து போர்க்கொடி
தூக்கியது யார்?
மாநாடு நடத்தியது யார்? அம்பாசங்கர்
வன்னியர் என்பதால் அவர் செய்த துரோகத்தை கண்டும் காணாமல் இருந்தவர் யார்?
இதற்காக திராவிடர் கழகம் சென்னை பெரியார் திடலில் கூட்டிய மாநாட்டில்
பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் மருத்துவர் ராமதாசு அவர்களை உரச
வில்லையா? யார் மறந்தாலும் கருஞ்சட்டைக்காரன் இந்த வரலாறுகளையெல் லாம்
மறக்க மாட்டான்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம்
படித்து இருக்க வேண்டும் என்ற தடையை திராவிடர் இயக்க ஆட்சி நீக்காமல்
இருந்தால் டாக்டராகி இருப்பாரா திரு.இராமதாசு அவர்கள்? இதை எல்லாம் மறந்து
இப்பொழுது திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப் படுத்துகிறார். இதில் இன்னொரு
பார்ப்பனத் தன்மை என்ன என்றால் பெரியாரை பாராட்டுவது போல் பேசுவதுதான்.
இரட்டை நாக்குடை....யார்?
இது 1991 இல்
கருணாநிதியின் இந்த
இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் தன்னாட்சி, ஈழப் பிரச்சினை, இடஒதுக்கீடு,
நுழைவுத் தேர்வு, தமிழ் வழிக் கல்வி இவற்றில் சரியான தீர்வு எடுக்கவில்லை.
அவரது அரசு தந்திட்ட 20 சதவிகித
இடஒதுக்கீடு (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) ஒரு மோசடி என்பதை நாம்
புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லியும், அதுபற்றிக் கவலைப்படாமல் ஏதோ
வன்னியர்களுக்கு மட்டும் அதிகம் செய்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம்
செய்வதில் முனைப்பாகச் செயல்பட்டார்
------------------- டாக்டர் ச. இராமதாஸ் அறிக்கை 31.1.1991
இது 1999இல்
இந்தியாவிலேயே எந்த
மாநிலத்திலேயும் அது மத்திய அரசனாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி,
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருக்கின்றதா? ஆனால் இந்தியா வில்
எந்த மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கென்று ஒருபிரிவு இல்லை
அந்தப் பிரிவை மிக மிக பின்தங்கிய மக்களுக்காக இடஒதுக் கீட்டை அள்ளித் தந்த
கலைஞர் அவர்களை சிறுபான்மை சமுதாயமான 107 சமுதாயமும் மறக்க முடியுமா?
அப்படி மறந்தால் அவர்கள் நன்றி கெட்டவர்களாவார்கள்
----------------அரியலூரில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட சமய நல்லிணக்க மாநாட்டில் டாக்டர் இராமதாஸ் - 9.7.1999
1991இல் குற்றப் பத்திரிகை
1999இல் நன்றி அறிவிப்பு
- இந்த இரட்டை நாக்குக்குப் பெயர்தான் டாக்டர் இராமதாஸ்.
---------------------------” 28-12-2012”விடுதலை”யில் கலி.பூங்குன்றன்அவர்கள் எழுதிய கட்டுரை