Search This Blog

11.9.10

இந்து முன்னணியே ஓடாதே நில் ஒழுங்காக பதில் சொல்!


இந்துமுன்னணியே, ஓடாதே,நில்!


திண்டுக்கல்லில் கலவரத்தைத் தூண்டும் தி.க.வினர்மீது வழக்கு

குன்னூரில் விநாயகன் பற்றி துண்டு அறிக்கைககள் கொடுத்த மாவட்ட தி.க., தலைவர்மீது வழக்கு

ராஜபாளையத்தில் துண்டறிக்கை கொடுத்த தி.க.வினர் விசாரிக்கப்படுகின்றனர்.

என்கிற சேதிகள் நாளேடுகளில் வெளி வந்துள்ளன.

ஆமாம், திராவிடர் கழகத் தோழர்கள் செய்த குற்றம் என்ன? விநாயகன்பற்றி விழிப்புணர்வூட்டும் துண்டு அறிக்கைகளை பொது மக்களிடம் கொடுத்தார்களாம்.

திராவிடர் கழகத்தினர்களுக்கு பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பவும், மூடநம்பிக்கை இருளை விரட்டியடிக்கவும் உரிமை இல்லையா?

பக்தியை மட்டுமே பரப்பி மக்களின் புத்தியை நாசப்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா?

பக்தியின் பெயரால் புத்தியைக் கெடுத்துக் கொண்டு, பொருளையும் பொழுதையும் நாசப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

அவர்களைச் சிந்திக்க வைக்கும் சீரிய வழியில் பகுத்தறிவுப் பணிகளை மேற் கொள்ளக் கூடாதா?

இந்தப் பணியை திராவிடர் கழகம் இன்று நேற்றா செய்து வருகிறது _ 75 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறதே.

அப்பொழுதெல்லாம் இல்லாத சட்டம் இப்பொழுது மட்டும் ஆகாயத்திலிருந்து பொத்தென்று குதித்து விட்டதா? விநாயகன் கனவில் வந்து காவி உடை இந்து முன்னணியினர் கூறுவதை காக்கிச் சட்டை காவல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாரா?

துண்டு அறிக்கைகளில் கூறப்பட்டவை உண்மையற்றவை என்று விவாதிக்க முன் வரட்டுமே!. தி.க.வினர் வெளியிட்ட துண்டு அறிக்கையில் இந்தந்தத் தவறுகள் இருக்கின்றன என்று கூறி மறுத்து அறிக்கைகளை வெளியிடட்டுமே!

அதுதானே அறிவுடைமை? அறிவு வேலை செய்யாத இடத்தில் ஆத்திரம்தான் அலைமோதும். அந்த நிலையில்தான் இந்து முன்னணியினர் இருக்கின்றனர். இப்படிப் பட்ட காவிகளின் புகாரை ஏற்றுக் கொண்டு, காக்கிச் சட்டைகள் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது வழக்குத் தொடுப்பது என்றால், இது எவ்வளவு பெரிய பொறுப்பற்ற செயல்?

சேலத்தில் ராமனை செருப்பாலடித்த வழக்கே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதே! ராமன், சீதை, லட்சுமணன் உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டினார்களே (25.12.1974). விநாயகர் உடைப்புப் போராட்டத்தையே தந்தை பெரியார் நடத்தினாரே இவ்வளவுக்கும் அப்போது ஆச்சாரியார் முதல் அமைச்சர்; ஆண்டவனைக் காப்பாற்ற வேண்டும் என்று அவாளுக்கு இல்லாத அக்கறை, ராஜாவை விஞ்சும் விசுவாசிகளாக இருக்கும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு வந்திருக்கிறது போலும்.

விநாயகர்பற்றி அவன் பிறப்புப் பற்றி விநாயகர் புராணம் கூறுகிறது; கந்தபுராணம் பேசுகிறது - அபிதான சிந்தாமணி என்னும் புராணக் களஞ்சியம் புட்டுப் புட்டு வைக்கிறது.

தேவாரத்தில் திருஞான சம்பந்தனே பாடியிருக்கிறான்: சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் மருவிப் புணர்ந்து பிள்ளையாரை பெற்று எடுத்தார்கள் என்பது தேவாரம் கூறும் ஆதாரம் பிடியதன் உருவுமை கொள மிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

நாகை மாவட்டம் கீழ்வேளூர் திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வலிவலம் எனும் ஊரில் கோயில் கொண்ட சிவனைப் பற்றிதான் திருஞான சம்பந்தன் இப்படிப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அந்த வலிவலம் கோயிலிலேயே கூட பொறிக்கப்பட்டுள்ளதே!

இந்து முன்னணியினருக்கு எரிச்சல் வந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? விநாயகன் ஆபாசமாகப் பிறந்தான் என்று கூறும் தேவாரத்தை அல்லவா தீயில் போட்டுப் பொசுக்க வேண்டும்!

பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டவர் என்று சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் கூறப்பட்டுள்ளதே - இந்தப் புராணங்களையல்லவா பூமியில் போட்டுப் புதைப்பதற்கு முன் வர வேண்டும்.

சூரபத்மனை எதிர்த்த போரில் அண்ணன் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், தம்பியாகிய விநாயகன் களத்தில் குதித்தான் என்றும், அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டேயிருந்தனர் என்றும், வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அவர்கள் உற்பத்தியாகி வந்தனர் என்றும், விநாயகன் தன் துதிக்கையால் வல்லபையின் பெண்குறியை அடைத்தான் என்றும், அதனால்தான் விநாயகனுக்கு வல்லபை கணபதி என்று பெயர் வந்தது என்றும் கந்தபுராணம் கதைக்கிறதே மானம், வெட்கம், ரோஷம் இருந்தால் இந்த இந்து முன்னணிகள் கந்தபுராணத்தைக் கொளுத்தும் போராட்டத்தையல்லவா நடத்த வேண்டும்?

விநாயகர்பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள் என்று சைவ மெய்யன்பராகிய மறைமலை அடிகளார் அவர்கள் எழுதியிருக்கிறாரே! (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூலில் விநாயகனின் ஆபாசம் குறித்து வேதனையோடு எழுதியுள்ளாரே!)

மறைமலை அடிகள் என்ன கருஞ்சட்டைக்காரரா?

இந்தக் கணபதி ஓர் இறக்குமதிச் சரக்குதானே! கி.பி.641-42 இல் பல்லவ மன்னனின் சேனாதிபதியான பரஞ்சோதி படையெடுத்து புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியை வென்று, அதன் அறிகுறியாக அங்கு இருந்த இந்த விநாயகனைக் கொண்டு வந்து, திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரில் கோயில் கட்டி வைத்தான் என்று தமிழ் அறிஞர் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் எம்.ஏ; பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் எழுதியுள்ளாரே_

(பிறந்தது எப்படியோ? பாரி நிலையத்தார். வெளியீடு - 1951) மறுப்பு உண்டா?

சிவசேனா வீரர் பால்தாக்கரேயை விட வா இவர்கள் விநாயகர்களின் பக்தர்கள்?

1995இல் ஒரு விநாயக சதுர்த்தி யின்போது அவரின் மனைவி விநாயகப் பூஜையில் மூழ்கி இருந்த நிலையிலேயே மரணம் அடைந்தார்; எவ்வளவோ முயற்சித்தும் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. சீ... என்ன கடவுள் என்ன விநாயகன்? எல்லாம் பொய்! பொய்!! என்று கூறி வீட்டில் இருந்த விநாயகன் உள்பட சாமிப் படங்களையெல்லாம் தூக்கி வெளியில் எறிந்தாரே (தி வீக் 19.11.1993), அவர் என்ன நாத்திகரா?

கடவுளை அவமானப்படுத்தி விட்டனர் தி.க.வினர் என்று காவல்நிலையத்தில் படைஎடுக்கும் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்கிறார்கள்? விநாயகர் ஊர்வலம் நடத்தி அந்தச் சிலைகளை நீர் நிலைகளில் தள்ளி, ஏறி மிதித்து, அடி அடி என்று அடித்து மூழ்கடிக்கிறார்களே அது மட்டும் விநாயகன் அவமதிப்பு இல்லையா?

இந்து முன்னணியே, ஓடாதே நில் ஒழுங்காக நின்று பதில் சொல்!

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் வல்லபையின் குறியில் விநாயகனின் தும்பிக்கை இருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது. இது ஒன்றும் திராவிடர் கழகத்தரின் கற்பனையோ, வக்கிரப் புத்தியோ அல்ல.

எத்தனை எத்தனைக் கோயில் தேர்களில் இந்த உருவம் வடிக்கப்பட்டுள்ளது. எத்தனை எத்தனைக் கோபுரங்களில் இந்த வல்லபை கணபதி காட்சிப் படுத்தப்பட்டுள்ளார்!

வல்லபை கணபதி கோயிலே தருமபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறதே! ஆத்திரம் வந்தால் இந்து முன்னணி ஆத்திகப் பிரமுகர்கள் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் வல்லபை கணபதிக் கோயிலை இடித்துத் தள்ள வேண்டியதுதானே! தேர்களைக் கொளுத்த வேண்டியதுதானே! மானமுள்ள நம் தமிழச்சிகள் எந்த வகையில் எது கொண்டு வல்லபை கணபதியைச் சாத்த வேண்டுமோ அது கொண்டு சாத்த வேண்டியதுதானே!

மூலத்தை விட்டு விட்டு மூளை கொண்டு ஆராய்பவனைக் காய்ந்தால், காய்கிறவனுக்குக் கடுகளவும் புத்தியில்லை என்றுதான் பொருள்.

ஆத்திரப்படாமல், அருமைத் தோழா, ஒரே ஒரு நொடி ஆம் ஒரே ஒரு நொடி இந்த ஆபாசக் கடவுள்களின் பிறப்பு வளர்ப்பு செய்திகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

கண்டிப்பாகச் சீற்றம் வரும் இந்துமதக் கடவுள்கள்மீதும், அவற்றைக் கற்பித்த காட்டு விலங் காண்டிகள்மீதும். ஆறுவது சினம் அவ்வை வாக்கு!


சபாஷ், சரியான போராட்டம் தினத்தந்தி 10.9.2010

உண்மையிலே விநாயகன் சக்தியின்மீது இந்து முன்னணிக்காரர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், விநாயகனுக்குத்தான் தேங்காய் உடைத்து விட்டார்களே. தி.க.காரர்களை விநாயகன் பார்த்துக் கொள்வான் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே? ஏன் காவல்துறைக்குப் புகார் கொடுக்க ஓடுகின்றனர்? இவர்களுக்கே இவர்களின் விநாயகன்மீது நம்பிக்கை இல்லையோ!

கடவுளை மற - மனிதனை நினை

-_ தந்தை பெரியார்


வரவேற்கிறோம்

விநாயகர்பற்றி துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததால் பக்தர்களின் மனம் புண்பட்டதாக சில ஊர்களில் கழகத் தோழர்கள்மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம் வரவேற்கிறோம். வீதியில் விநாயகன் பற்றி சொன்னதை எல்லாம் விரிவாக நீதிமன்றத்திலும் சொல்லலாம் அல்லவா!


-------------------மின்சாரம் அவர்கள் 11-09-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


2 comments:

ஒசை said...

துண்டு அறிக்கைகளில் கூறப்பட்டவை உண்மையற்றவை என்று விவாதிக்க முன் வரட்டுமே!///

நாமும் பகுத்தறிவாளர்களுக்கு தோள் கொடுக்கிறோம். இதே போன்று செம்மொழி மாநாட்டின் போது துண்டு பிரசுரம் விநியோகித்த தோழர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது, வாயை மூடிக் கொண்டு பகுத்தறிவாளர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன்.


ஆளுக்கொரு நீதியா. அதிகாரத்தின் மீது பீதியா. .

தமிழ் ஓவியா said...

மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் உள்ளது உங்கள் விமர்சனம்.

எந்த விமர்சனத்தையும் வரவேற்பவர்கள் தான் பெரியார் தொண்டர்கள். ஆனால் அந்த விமர்சனம் உண்மையானதாக இருக்கிறதா? சரியானதா? என்பதே முக்கியம்.