Search This Blog

7.9.10

அரசு அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதை தடுத்திடுக!


விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலைய சுவர்மீது எழுப்பப்பட்டுள்ள விநாயகர் கோயில். (தினமலர், 31.8.2010, பக்கம் 16)



கோயில்

அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையில், பல சீர்திருத்தங்களை மேற்கொண் டார். முதலாவதாக அரசு அலுவலகங்கள் மதச்சார்பற்ற தன்மை உடையதாக விளங்க வேண்டும் என்று எண்ணினார். சட்ட நிலையும் அதுதானே?



அதற்கான ஆணையினையும் பிறப்பித்தார் (நினைவுக் குறிப்பு எண் 7553/66-2 நாள்: 29, ஏப்ரல் 1968).

இந்த வகையில் மய்ய அரசின் ஆணைகளும், சுற்றறிக்கைகளும் உண்டு.

குஜராத் மாநிலத்தில் பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் கோயில்கள் எழுப்பப்படுவது குறித்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு (பெஞ்ச்) மிக அருமை யான தீர்ப்பினை வழங்கியது.

பொது இடத்திலோ, அரசு இடத்திலோ எந்த ஒரு கோயில் கட்டப்பட்டாலும் அந்த இடத் திற்குத் தொடர்புடைய அதிகாரி தண்டிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மிகவும் கறாராக ஆணை பிறப்பித்துள்ளது. அரசு இடங்களில் கோயில் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது; விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் துல்லியமாக உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது (4.5.2006).

இதற்குப் பிறகும் அரசு அலுவலக வளாகங்களுக்குள் கோயில்கள் கட்டப்படுகின்றன என்றால், அதைவிடக் கேலிக் கூத்து என்னவாக இருக்க முடியும்? அரசு ஆணைகளை யும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் எட்டி உதைக்கும் அதிகாரிகளைத் தண்டிக்கவேண்டாமா?

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் வாஸ்து முறைப்படி விநாயகர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாம் தினமலர் (31.8.2010, பக்கம் 16) கூறுகிறது. (படம் காண்க).

எதற்காக இந்த விநாயகர் கோயிலாம்? அதை நினைத்தால் இவர்கள் காவல்துறை அலுவலர்களா? காத்தவராயன் கோயில் பூசாரிகளா? என்று நகைக்கத்தான் தோன்றுகிறது.

தியாகதுருகம் காவல் நிலையம் இருக்கும் சுற்றுவட்டாரங்களில் மர்மச் சாவுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். இதனால் அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றுவோர் கலக்கம் அடைந்துவிட்டார்களாம்.

வாஸ்து சாஸ்திரப்படி தெரு முடியும் இடத்தில், அதற்கு எதிரில் காவல் நிலையம் அமைந்துள்ளதால் அதற்குப் பரிகாரமாக விநாயகர் சிலையை காவல் நிலையம் எதிரில் பிரதிஷ்டை செய்தால், பிரச்சினை தீரும் என்று சிலர் ஆலோசனை சொன்னார்களாம். அதன் பேரில் காவல் நிலைய சுற்றுச் சுவர்மீது (காம்ப்வுண்ட்) விநாயகர் சிலை சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினந்தோறும் பூஜைகள் நடத் தப்பட்டு வருகின்றன என்கிறது தினமலர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப் படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கலாம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால்தான் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் கோயில்களைக் கட் டலாம் என்று துணிவு கொள்ளும் அதிகார வட்டாரத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஒரு சந்தேகம். தியாகதுருகம் வட்டாரத்தில் மர்மச் சாவுகள் நிகழ்கின்றன என்றால், அதன் பின்னணியை, உண்மையைக் கண்டுபிடிப்பதற்குத் தானே காக்கிச் சட்டை - காவல் நிலையம். அதைச் செய்யாமல் பிள்ளையார் கோயில் கட்டினால் தீர்வு கிடைக்கும் என்றால், அந்தக் காவல் நிலையத்தை இழுத்து மூடிவிடலாமே!

புதிய தலைமைச் செய லாளர் இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, அரசு அலுவலகம், வளாகங்களில் கோயில் கட்டும் இந்தக் கேலிக் கூத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலி யுறுத்துகிறோம்.

------------------- மயிலாடன் அவர்கள் 7-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

kaja nazimudeen said...

Very good article! Appreciated.