அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்து விட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்க சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதிபெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர்.
உதாரணமாக, தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில், குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமல் போன பிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயாரால் காப்பாற்றப்பட்டவரும், பள்ளிக்கூடமே இன்னதென அறியாதவரும், 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல்லுடைப்பு வேலை செய்யவுமாய் இருந்து வந்தவரும், 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்போகிறவருமான வெங்கிட்ட நாயக்கருக்கு நெருங்கிய பந்து உறவு காரணமாக வாழ்க்கைப் படுத்தப்பட்டவர்.
அம்மை செல்வக்குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்தாலும், வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு வெங்கிட்ட நாயக்கர் தரித்திர வாழ்வு அம்மையாரையும் பீடித்து அம்மையார் செங்கல், ஓடு முதலியவைகளை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டிடம் கட்டுபவர்களுக்குக் கூலிக்கு கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கி பிழைத்து வந்தவர். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும், பெண்ஜாதிக்கு தினம் 0-0-8 பைசா கூலியுமாக சம்பாதித்து வந்தவர். பிறகு புருஷனுக்குக் கல்சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 0.12.0 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்கு போகாமல் இருக்க நேர்ந்தது.
ஆனபோதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக்கொண்டு அடிக்கடி வெளியூர்-களுக்குப் போவதைச் சகிக்காத அம்மையாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப்பேட்டையில் வைத்தால் தன்னுடன் தோழர்களாய் இருந்த வண்டிக்காரர்கள் தன்னிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி சட்டி பானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் பொடி, விறகு முதல் சகல சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள். இந்தக் கடைக்கு வேண்டிய சகல சாமானும் அம்மையாரும், அம்மையாரின் மாமியாரான கெம்பு அம்மாளும் வீட்டில் தயார் செய்து கொடுத்து வருவார்கள். இந்த சமயம் 2, 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.
இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்ததாலும், பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அதை விடுத்து அந்தக் கடையை அப்படியே மற்றொருவனுக்கு விற்று விட்டு லாபப்பணத்தையும், கைம்முதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக் கடை வைத்தார். அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி வண்டிக்கார வெங்கிட்ட நாயக்கனாகி, அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கிட்ட நாயக்கனாகி, பிறகு மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் 3 வருஷத்திலேயே மற்றவர்கள் பொறாமைப்படும் படியான லாபமடைந்தார். ஒரு சிறு குச்சு அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசையை மாற்றி ஓட்டுவில்லை கட்டிட வீடும், 2 ஏக்கரா விஸ்தீரணமுள்ள நல்லவயல் நிலமும் உடையவ ரானார்.
இது சமயம்தான் அம்மையாருக்கு முன்பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் ஸ்தல யாத்திரைகள், தவங்கள் செய்து வரடி கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிட்டு, சன்யாசிகளின் எச்சில் சாப்பிட்டு, வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.ராமசாமியையும் பெற்றெடுத்த காலம் என்றாலும், அம்மையாருக்குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்குப் போதுமென்று கருதி அதற்கே தனது முலைப்பால் முழுதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தையில்லாத அம்மையாருக்கு அதாவது தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும் சிறிது நிலமும் இருந்த காரணத்துக்காக அவர் களையே வளர்த்துக்கொள்ளும் படி இனாமாய்க் கொடுத்துவிட்டார்கள்.
அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராமசாமி, பள்ளிக்கு அனுப்பாமல் தெருத்தெருவாய் சுற்றவும் கேள்வி கேட்பாடு இல்லாமல் அலையவும், கம்மநாட்டி வளர்ப்பது கழுதைக்குட்டிதான் என்ற பெயருக்கேற்ப ஒரு உருவாரமாய் இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய் செல்வமாய் வளர்க்கவும் ஆன நிலையேற்பட்டது. ஆனால் இந்தச் சமயம்தான் அதாவது இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம் தான் வெங்கிட்ட நாயக்கருக்கு பெரிய செல்வம் பெருக சந்தர்ப்பமும் பெருகி வந்த காலமாகும். அதாவது கடைசியில் சொன்ன மளிகை கடை வியாபாரமானது வலுத்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும், பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமாய் இருந்த காலத்தில் எப்படியாவது மளிகைக்கடை நடக்கும் கட்டடத்தை பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்குமென்று கருதி சிலர் அந்தக் கடையை கட்டடக்காரனிடம் அதிக வாடகை வைத்து கேட்க ஆரம்பித்தார்கள்.
அம்மையாரும் - புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்பவர்களுக்கு கொடுத்து விடுவதாய் விலை கூறினார். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார் புருஷன். உடனே மண்டிவெங்கிட்ட நாயக்கரானார். சின்னத்தாயம்மையாரும் மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்டதோடு எப்படியோ நாணயமுமேற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக் கொள்வதில் இருவர்களும் சமர்த்தர்கள்.
அந்தக் காலங்களில் பணம் படைத்தவர்களுக்கு பணம் போட்டு வைக்க பாங்கி இல்லாததால் நாணயத்தில் பேர்பெற்ற சின்னத்தாயம்மாளும், வெங்கிட்ட நாயக்கரும் ஒரு சேவிங் பாங்கி ஆகிவிட்டார்கள். பணம் ஏராளமாய் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும். தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கி விட்டார்கள். மண்டிவெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல் குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் வீட்டில் எப்போதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே தானும் வருஷா வருஷம் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்கு கொடுத்தே வருவார்கள்.
பணம் சேர்ந்தவுடன் மத பக்தி, மத சின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தியுடையவரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் நாமம் பலமாக பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இந்த மத்தியில் வீட்டில் செல்வமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது மண்டி வைத்து மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததுக்கு மேல் லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்ன பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக இனாமாக (தத்து கொடுத்து விட்ட அம்மாளிடமிருந்து) பிடுங்கிக் கொண்டார்கள்.
ராமனை வளர்த்த அம்மாள் ஊர் பஞ்சாயத்துக் கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்தாயம்மாள், 2 கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ! என்று சொல்லிவிட்டார்கள். முடிவில் ராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும் அவள் விதவை வளர்த்த பிள்ளையாய், ஊர்சுத்தியாய், லோலனாய்த் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான்.
இருந்த போதிலும் பள்ளியில் வைத்து வீட்டு வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன் சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி, கடைசியாய் உபாத்தியாயரை வைவதில்லை பிள்ளைகளை அடிப்பதில்லை என்கின்ற வாசகம் ஆயிரம் தடவை, அய்ந்தாயிரம் தடவை தண்டக் காப்பி எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, மண்டிக்கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய், ஏலம் கூறும் வேலையில் போட்டார்-கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயாரிடம் போய்விடுவானோ என்றுச் சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்கு சிறிது சலுகைக் காட்டி பொய் அன்பாவது காட்டிவருவார்கள்.
எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும். இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கன் என்ற பெயர் மாறி நாயக்கரானதும் சின்னத் தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கர் அம்மாள் என்ற பெயர் ஏற்பட்டதுமாகும். அம்மையாருக்கு தெய்வ பக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாகவேண்டும். பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்து-விட்டார்கள். கண்ட விடமெல்லாம் காடுமேடெல்லாம் கோவில், சத்திரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகழுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஒவ்வொரு கல்யாணத்தின் போது தருமக் கல்யாணங்கள் செய்வார்கள். நன்றாய் இருக்கும் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் நீங்கள் பணம்கொடுக்க வேண்டியதில்லை. என் பணத்தில் செய்யுங்கள் என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடுவார்கள். வீட்டில் வாரம் ஒரு காலட்சேபம், ராமாயண பாரத வாசகம், அங்குத் திரியும் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும் சதாசர்வகாலம் உலையில் நீர் கொதித்த வண்ணமாய் இருக்கும் படியான தண்டச் சோத்து சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்தது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட சொம்பு, டம்ளர், ஆகியவைகளை கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ஜாதி கெட்ட பயலாய் விளங்கினான். ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டிற்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். ராமனுக்கு தினமும் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாணமானவுடன் அவனுடைய அனாச்சாரத்துக்கு ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.
சதா சர்வ காலம் தன் வயற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்கு துக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய் சம்பாதித்து நன்றாய் செலவு செய்தவர்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள். அளவுக்கு மீறி ஆச்சாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாய் அம்மையார் இடம் கொடுக்கவில்லை. கடைசி வயதில் கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம் என் மகன் ராமனை சிறிது பார்த்துக் கொள்ளுங்கள் இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என்று ஆவலாதி சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலானாக்கள் ஷவ்கத்தலி, மகமதலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தை சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப் படையாய் எடுத்துக்காட்டி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படிச் செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னை தொட்டுவிடுவார்களோ என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்று தான் அவர்களுடன் பேசுவார். மூடநம்பிக்கைகளுக்கும். குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்ந்து முடிவெய்தி விட்டார். எனக்கு அவர் முடிவெய்தியதைப் பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை - எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. எனது கோரிக்கை - எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திடவேண்டு-மென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!!
---------------------தந்தை பெரியார் - "குடிஅரசு", (இரங்கல் கட்டுரை-2.08.1936