Search This Blog

3.7.10

திராவிடர் கழக கொடி ஏற்றப்பட்ட வரலாற்றுச் சுவடுகள்

கரூர் என்றால் சாதாரணமா?

கரூர் கழகத்தின் கருவூலம் தந்தை பெரியார் அவர்களின் பாடிவீடு எத்தனை எத்தனைச் சுயமரியாதை வீரர்கள் சுடர் விட்ட பூமியது! எத்தனை எத்தனைக் கருஞ்சட்டைச் சிங்கங்கள் செம்மாந்து வீர நடைபோட்ட கொள்கை விளை நிலம் அது!

பி.கே. அய்யா என்ற பெருந்தொண்டர் வைக்கத்திற்கே சென்று தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தில் பங்குகொண்ட பகுத்தறிவுச் சுடர்!

தவிட்டுப்பாளையம் பழநிமுத்து, கோம்புப்பாளையம் கே.கே. பொன்னப்பா, வழக்கறிஞர் வீர.கே. சின்னப்பன், பெரியார் பெருந்தொண்டர் வீரண்ணன், பசுபதிபாளையம் மீசை பெ. கந்தசாமி, கரூர் ஏ.கே. சாமி, திருமாநிலையூர் அ. பெருமாள், கே.ஆர். கண்ணையன், சீலமிக்க சேது, வேடிச்சிப்பாளையம் சி. சவுந்தரபாண்டியன், நேஷனல் லாட்ஜ் ராமசாமி, நெரூர் வணங்காமுடி என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு. கரூர் பசுபதிபாளையத்தில் தந்தை பெரியாரின் உரை பார்ப்பனர்களைக் கிடுகிடுக்க வைக்கவில்லையா? தந்தை பெரியார்மீது பக்தவத்சலனார் வழக்குக் கணையைத் தொடுக்கவில்லையா?

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்றால், அதைக் கரூரில் பார்க்கவேண்டும் அப்படியொரு கண்கொள்ளாக் காட்சி!

எடைக்கு எடை பெட்ஷீட் கொடுப்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணம்.

நகரும் குடில் நல்கிய விழா நடந்ததும் சாட்சாத் இதே கரூரில்தான்! (6.10.1968).

நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு எத்தனை எத்தனை மாநாடுகள் கரூரிலும், அதன் சுற்றுவட்டாரத்திலும்!

1945 ஆகஸ்டு 2 ஆம் தேதி கரூர் வட்ட சுயமரியாதை மாநாடு அம்பிகா டாக்கீஸில்; தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற பெருமக்கள் எல்லாம் பங்குகொண்டனர்.

அம்மாநாட்டில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் இந்தக் காலகட்டத்துக்கும் கூடப் பொருந்தக்கூடியதே!

திராவிட சமுதாயத்துக்கும், மனிதத் தர்மத்துக்கும் மாறான கருத்துகளைப் புகுத்தும் சாஸ்திரம், புராணம், இதிகாசங்கள் என்பவைகளையும், மேற்கண்ட தத்துவம் கொண்ட இசை, சித்திரம், நடிப்பு ஆகியவற்றையும் வெறுப்பதோடு, மக்கள் அவைகளைப் பகிஷ்கரிக்கவேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது

என்று இன்றைக்கு 65 ஆண்டுகளுக்குமுன் கரூர் வட்ட சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அதே தீர்மானம் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில்தான் நாடு நிர்மூலப்பட்டிருக்கிறது.

சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், ஏடுகளும், இதழ்களும், இன்னும் பழைய அழுக்கு மூட்டைச் சமாச்சாரங்களைத்தான் பளபளக்கும் பேழைகளில் விநியோகம் செய்துகொண்டு இருக்கின்றன.

இதனை இடித்துக்கூற, நடுவீதியில் போட்டு மிதித்துக்காட்ட ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமேதான் ஆம், இவ்வியக்கம் மட்டுமேதானிருக்கிறது.

இன்னொரு சிறப்பும் கரூருக்கு உண்டு. 3.2.1946 இல் கரூர் வட்டம் தவிட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கரூர் வட்ட திராவிடர் கழக 4 ஆவது மாநாட்டில்தான் தோழர் கரூர் என். ரத்தினம் அவர்களால் நமது கழகக் கொடி முதன்முதலாக (இப்பொழுது உள்ளது!) ஏற்றப்பட்டது!

(குடிஅரசு 23.2.1946, பக்கம் 5)

இந்த வகையிலும் கழகக் கொடி சரித்திரத்தில் கரூர் கம்பீரமாகக் கொடிகட்டிப் பறக்கிறது.

கரூர் வட்ட சமுதாய சீர்திருத்த மாநாடு கரூர் வட்டம் வேலாயுதம்பாளையத்தில் நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கி இருக்கிறார்.

1981 மே 9, 10 ஆகிய இரு நாள்களிலும் முப்பெரும் மாநாடு கரூர் இராசலிங்கம் மன்றத்தில் நடைபெற்றது. பார்ப்பனர்கள் அல்லாதாரை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தும், பெண்களைக் கேவலமாகக் காலில் போட்டு மதிக்கும் மனுதர்ம சாத்திரத்தை எரிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டதும் இந்த மாநாட்டில்தான் (10.5.1981).

அதன்படி தமிழ்நாடெங்கும் கழக மகளிரே தலைமை தாங்கி மனுதர்ம எரிப்பு போராட்டத்தை நடத்தினர் (17.5.1981) என்பது சாதாரணமாதா?

கடைசியாக 2004 ஜூலை 31 ஆம் நாள் இதே கரூரில் திராவிடர் எழுச்சி மாநாடுமுழு நாள் மாநாடாகக் கணீர் கணீர் என ஒலித்ததே!

இன்னும் எத்தனையோ சொல்லலாம். இது ஒன்றும் பழம்பெருமைப் பாட்டல்ல கழகம் நடந்து வந்த அரிமா பாய்ச்சலை கருஞ்சிறுத்தை இளையோர் சேனைக்குத் தெரிவிக்கத்தான்!

அன்று எட்டடி பாயந்தது இந்தச் சேனை என்றால், இன்று பதினாறடி பாயவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதே!

வீதிக்கு வந்து வீண் வம்பு வளர்க்கும் அளவுக்கு வேதியக் கூட்டத்துக்குத் தைரியம் வந்து இருக்கிறதே!

ஒருமுறை மத்தியில் இவர்கள் ஆட்சியில் வந்துவிட்டனரே அந்தத் தைரியமா?

கரூரில் நாம் கொடுக்கும் கணீர் குரலால் காலம் காலத்திற்கும் இந்தக் கழிசடைகள் வெளியில் தலைகாட்டக் கூடாது.

ஊர்வலம் என்று நினைத்துப் பார்க்கக்கூடாது மாநாடு என்று மனத்தால்கூட எண்ணிப் பார்க்கக்கூடாது!

தன்மான தோழர்களுக்கு தடயங்களைச் சொல்லவேண்டுமா? காரணங்களை விளக்கவேண்டுமா?

ஜூலை 6 இல் கரூர் கனக்கட்டும் கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, தன்மானமிக்க தமிழர்களே, திரள்வீர்! திரள்வீர்!!

-------------- மின்சாரம் அவர்கள் 3-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: