Search This Blog

24.7.10

பெரியார் சொத்து யாருக்கு?


பூனைக் குட்டி வெளியில் வந்தது!

நேற்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது.

பெரியார்தம் சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை; அப்படி எழுதி வைக்கப்படாத நிலையில், அந்தச் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை!

அப்படி அரசு எடுத்துக் கொள்ளவில்லையென்றால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம் என்று கழகத்தால் விலக்கப்பட்ட ஒருவர் பேட்டியளித்ததாக அந்தத் தனியார்த் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதன்மூலம் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது; அவர்களின் ஆற்றாமையும் அப்பட்டமாகவும் தெரிந்து விட்டது.

திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை சரியாகப் பரப்பவில்லை; பெரியார் நூல்களை வெளியிடவில்லை; நாங்கள்தான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னவர்களால் பெரியார் சொத்துக்களை நாங்கள்தான் கைபற்றுவோம். மிகமிக வேகமாகப் பெரியார் கொள்கைகளைப் பரப்புவோம் என்று கூறும் திராணி நாணயம் தங்களிடத்தில் அறவே இல்லை என்பதை இதன்மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்களா இல்லையா?

அக்மார்க் முத்திரைத் துரோகம்!

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இதற்கு முன்புகூட சில துரோகிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஊளையிட்டதுண்டு. வழக்கு மன்றம் சென்று மூக்கறுபட்டதும் உண்டு. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். அய்யங்கார் போன்றவர்கள் துப்பிய அந்த எச்சிலைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் சீடர்கள் இப்பொழுது சிலம்பம் ஆட முன்வந்து தங்களது அக்மார்க் முத்திரைத் துரோகத்தை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.

இதுவும் ஒரு வகையில் நன்மைதான். பெரியார் கொள்கையை எங்களால்தான் பரப்ப முடியும் என்று மார்தட்டியவர்கள் இப்பொழுது பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதன்மூலம் இவர்களின் நோக்கம் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதல்ல பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உண்மையான அமைப்பைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பதுதான் என்பதைப் பொது நிலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே!

காஞ்சிமடமும் கைலாகு கொடுக்கும்

உச்சநீதிமன்றம் வரை செல்லுவார்களாம். அந்த அளவுக்குப் பொருளாதாரப் பின்னணி அவர்களுக்கு இருக்கிறது இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் காஞ்சிமடம் வரை கைலாகு கொடுக்கமாட்டார்களா?

பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டாதா? அந்த விளம்பரத்தால் ஒருவருக்கொருவர் சந்தித்து கைகொடுத்துக் கொண்டு அற்ப சந்தோசம் அடைய லாம் அல்லவா!

தந்தை பெரியார் அவர்கள் கழகத்திற்கு வாரிசு ஏற்பாடு என்று செய்ததையும், அன்னை மணியம்மையார் அவர்கள் தமக்குப் பிறகு பெரியார் அறக்கட்டளையின் ஆயுள் செயலாளர் யார் என்பதையும் திட்டவட்டமாக சட்ட ரீதியாக எழுதி வைத்துத்தான் ஏற்பாடு செய்துதான் சென்றிருக்கிறார்கள். சொத்துக்களைச் சரியாகப் பதிவு செய்துதான் சென்றுள்ளனர்.

இதுபோல புல்லுருவிகள் தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சுபவர்கள் வரக்கூடும் என்ற தொலைநோக்கோடு தான் அந்த ஏற்பாடுகளை அவர்கள் துல்லியமாகச் செய்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் போலும்!

தீட்டிய மரத்தில் கூர்பாய்ச்சுவதா?

எந்த இயக்கத்தால், எந்தத் தலைவரால் ஆளாக்கப் பட்டார்களோ, விளம்பரப்படுத்தப்பட்டார்களோ, அந்தத் தலைவர் மீதே கட்டாரியை வீசும்போது குறைந்தபட்சம் கறுப்புச் சட்டையைக் கழற்றிவிட வேண்டும்.

இதே பெரியார் அறக்கட்டளைக்காக ஒரு கால கட்டத்திலே வாதாடியதைக்கூட மறந்துவிட்டு, அதற்கு முரணாக முண்டா தட்டுவது என்றால், கூலிக்காக மாரடிப்பது என்கிற ரகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றுதானே கருதப்படவேண்டும்.

பெரியார் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவேண்டும் அதன்மூலம் தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நாளேட்டை நிறுத்தவேண்டும்; பகுத்தறிவு இதழான உண்மையை ஊத்தி மூடவேண்டும்.

கழக வெளியீடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதன்மூலம் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் ஆழ்வார் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துடியாய்த் துடிப்பதை தமிழர்கள் பார்ப்பனர் அல்லாத கோடானு கோடி மக்கள் சமூகநீதி தேவைப்படும் கோடானு கோடி அண்டை மாநில மக்கள்கூடப் புரிந்துகொள்ளமாட்டார்களா?

எத்தனையோ வழக்குகளைச் சந்தித்தவர்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே புதிய சட்டம் ஒன்றை 31சியின் இணைப்பதற்குக் காரணமாக இருந்தவர்.

முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்களால் நிகழ்ந்தது என்றால் 76 ஆவது சட்டத் திருத்தம் 31பியின் கீழ் அவரின் நம்பிக்கைக்குரிய சீடர் வீரமணி அவர்களால் ஏற்பட்டது என்பதை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும்.

ஆணவத்தின் சேட்டை!

ஏதோ ஒன்றில் தற்காலிக வெற்றி பெற்றுவிட்டதால், வானத்தின் கூரையே தங்கள் கைவசம் வந்துவிட்டதாக அதிகம் ஆடுவது ஆணவத்தின் சேட்டைக் குணமே!

ஒருவகையில் மகிழ்ச்சிதான். இவ்வளவு சீக்கிரம் தங்களை அங்க மச்சத்தோடு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்களே என்கிற வகையில் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்!

---------------------------------------

விநாசகாலே...

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டு விடுதலையை நாள்தோறும் அரசு வெளியிடும்.

கடவுள் இல்லை, இல்லவேயில்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அரசு பிரச்சாரம் செய்யும் நம்புங்கள்.

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று அரசாங்கம் எழுதும் என்று நம்பித் தொலையுங்கள்!

பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று அட்சரம் பிறழாமல் அப்படியே அப்பட்டமாக தலையங்கம் தீட்டும் இதனையும் அதிகமாகவே நம்புங்கள்! நம்புங்கள்!!

தமிழர்களே, உங்கள் சூத்திரப்பட்டம் ஒழிய, கோயிலுக்குப் போகாதீர்கள்; நெற்றிக் குறிகளை இடாதீர்கள்! மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்! பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்! என்று கண்டிப்பாக கால் புள்ளிகளை மாற்றாமல் அரசு கட்டுரை தீட்டும் என்று கண்டிப்பாக நீங்கள் நம்பியே ஆகவேண்டும்.

அட பைத்தியங்களே, எங்கே தொடங்கி, எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

விநாசகாலே விபரீத புத்தி!
---------------------------------------

தங்களுக்குக் கிடைக்காதது நாசமாகப் போக வேண்டும் என்று கருதுகிற பார்ப்பன மனப்பான்மை பார்ப்பனர் அல்லாதாரிடம்கூட தொற்றுநோயாக ஒட்டிக்கொண்டு விட்டதையும் இத்தகைய அனுபவங்கள்மூலம் அறிய முடிகிறது.

தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர்களையும் மறைமுகமாகத் தாக்க ஆரம்பித்துள்ளவர்கள், அவர்கள் ஏற்பாட்டைக் கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டார்கள். அடுத்து வெளிப்படையாகவே களம் இறங்கத் தயாராகி விடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

பெரியார் சொந்த புத்தியில்லாதவராம்

ஏற்கெனவே கோவையில் அவர்கள் வெளியிட்ட நூலில் அதில் தந்தை பெரியார் சொந்தப் புத்தி இல்லாதவர் என்றும், அன்னை மணியம்மையார் பாண்டிமாதேவி என்னும் சூழ்ச்சிக்காரப் பெண்மணி என்றும் குறிப்பிட்டு ஆழம் பார்த்துள்ளவர்கள்தானே!

பெரியார் கொள்கைகளைத்தானே அவர்களும் பரப்புகிறார்கள் என்று மேம்போக்காக அனுதாபம் காட்டிய பொதுவானவர்கள்கூட இப்பொழுது முகம் சுளிக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது காலங்கடந்த நிலையில் அத்தகைய வர்கள் உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி! (பலரும் தொலைப்பேசி வழியாக இந்த நிலையைக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க நற்செய்தியாகும்).

பெரியார் சொத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் அதன்மூலம் பெரியார் கொள்கைகள் முடக்கப்படவேண்டும் என்கிற திசையில் வெறிபிடித்துக் கிளம்பி உள்ளவர்கள் தங்களைத் தாங்களே குடலைக் கிழித்துக் கொண்டு அடையாளம் காட்டியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!

மன்னிக்கமாட்டார்கள் தமிழர்கள்

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று கிளம்பி, இப்பொழுது பெரியார் சொத்துக்களையே அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுவர் ஏறிக் குதிப்பவர்கள் மீது, வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது சுயமரியாதைக்காரர்களும், பகுத்தறிவாளர்களும், இனவுணர்வாளர்களும், பொது நிலையில் உள்ள தமிழர்களும் எரிச்சல் கொள்வார்கள், ஏளனமும் செய்வார்கள் ஏன் மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை!

அரசு எடுத்துக்கொண்ட பல அறக்கட்டளைகளின் நிலை கதி என்னவாயிற்று என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியுமே!

கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்.சென்னை

---------------------"விடுதலை” - 24.7.2010

1 comments:

பரணீதரன் said...

/* இப்பொழுது பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதன்மூலம் இவர்களின் நோக்கம் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதல்ல பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உண்மையான அமைப்பைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பதுதான் என்பதைப் பொது நிலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே! */

இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் மக்கள்...துரோகிகளின் துரோக செயலை....இவர்கள் தான் பெரியாரை எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல போகிறார்களாம்? நல்ல வேடிக்கை. வாயால் சிரிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி அய்யாவின் அடிச்சுவட்டில் வந்த ஆசிரியருக்கு நிகர் தலைமை யார்? சவால் விட்டு கேக்கிறோம் பேனா புடிக்க தெரியவதர்வகள் தலைமையம்? அவர் பின் ஒரு குழுவாம்...அது பெரியாரின் சொத்தை அரசுடமை ஆக்க கூக்குரல்...நரி ஊளையிட்டு பொழுது விடியுமா என்ன?