Search This Blog

28.7.10

சிவனைவிட திருமால் பெரிய கடவுளா?


கொசுவுக்குப் பிறந்தன யானைக் குட்டிகள்!

ஆன்மிக இணைப்புகள் என்று நாளேடுகள் ஒவ்வொரு வாரமும் மூடக் குப்பைகளை வாரிக் கொட்டுகின்றன. வியாபாரப் போட்டி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இதில் இல்லை யார் அதிகமாகப் பொய்ப் புளுகுவது - யார் ஆபாசமாகக் கயிறு திரிப்பது என்பதில்தான் போட்டா போட்டி.

பக்தி என்னும் சகதிக்குள் மூச்சு முட்டக் கிடக்கும் படித்த படிக்காத பாமர மக்களோ இருக்கவே இருக்கிறார்கள் - இந்தக் கசுமாலங்களைக் காசு கொடுத்து வாங்குவதற்கு.

இவர்கள் அள்ளிவிடும் கதைகள்பற்றி விவரம் அறிந்த சைவர்களோ - அல்லது வைணவர்களோ ஏற்பார்களா என்பது வேறு கதை.

சைவ வைணவ சண்டை என்பது சாதாரண மானதல்ல; வைணவத்துக்குள்ளும், வடகலை, தென்கலை சண்டைதான் சாதாரணமா?

இதோ ஒரு தகவல்: ஆன்மிகச் சிறப்பிதழிலிருந்து...

திருமால் பெற்ற சக்கரம்

முற்காலத்தில் சிவபெருமான் சலந்தரன் என்ற அசுரனை சக்கரத்தால் வதைத்தார். அந்தச் சக்கராயுதத்தை பெற திருமால் விரும்பினார். இதற்காக அவர் திருவீழிமிழலையை அடைந்து பெருமானை வழிபட்டு வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.

ஒருநாள் சிவபெருமான் அருளால் ஒரு பூ குறைந்தது. தாமரை மலருக்குப் பதிலாகத் தனது வலது கண்ணைப் பறித்து சிவனின் திருவடியில் சமர்ப்பித்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் திருமால் முன் தோன்றி சலந்தரனை வதைத்த சக்கரபடையை வழங்கினார். பின்னர் திருமால் சிலகாலம் அங்கே தங்கி வழிபட்டு இருந்தார். தன் பெயரால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கினார். அந்தத் தீர்த்தம் இப்போது விஷ்ணு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இதுதான் ஆன்மிக இதழின் சரடு!

சிவபெருமானை திருமால் - அதாவது மகா விஷ்ணு வணங்கினார் தினமும் அர்ச்சனை செய்தார்; சிவனின் திருவடியில் பெருமாள் தனது கண்ணைப் பறித்துச் சமர்ப்பித்தார் என்று அளந்து கொட்டியுள்ளார்களே - இதனை அகோபில மடத்து வைணவத் தலைவர் ஏற்றுக்கொள்வாரா?

திருவரங்கம் கோயில் கட்ட காஞ்சி சங்கராச்சாரி யார் பண உதவி செய்துள்ளாரே சிவன் கோயில் திருப்பணிகளுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்களா? என்று அகோபில மடத்து அதிபரான ஜீயரான அழகிய சிங்கரிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார்?

நான் சிவன் கோயில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராய ணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்த வர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்ட வர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும்... அதனாலே சிவன்கோயில் திருப் பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டேன்...

(கல்கி, 11.4.1982)

அகோபில மட ஜீயர் கூறுவதிலிருந்து என்ன தெரிகிறது?

சிவனைவிட நாராயணன் (திருமால்) தான் பெரிய கடவுள் என்கிறார் ஜீயர்.

நாம் எடுத்துக்காட்டும் ஆன்மிக இதழ் என்ன கூறுகிறது? சிவன் காலில் தன் கண்ணைப் பிடுங்கி சமர்ப்பித்தான் நாராயணன் என்கிறது.

இதில் எது உண்மை? ஒருக்கால் ஆன்மிக இதழில் அளந்து கொட்டியவர் சங்கராச்சாரியாரின் சிஷ்யராக இருப்பாரோ!

நம்புகிறவன் மடையனாக இருக்கும் பட்சத்தில் கொசுவுக்கு நான்கு யானைக் குட்டிகள் பிறந்தன அதற்கு நான்தான் பிரசவம் பார்த்தேன் என்று எழுதமாட்டார்களா?

---------------------- நன்றி:- “விடுதலை” 28-7-2010

4 comments:

Thamizhan said...

கிரேக்க இதிகாசங்களில் பல்வேறு கதைகள் வீரம்,விவேகம்,அசிங்கம்,ஆபாசம்,காமம்,காதல் என்று எல்லாம் உள்ளன.படித்து ரசித்துச் சிரித்து மகிழ்ந்தனர்,மகிழ்கின்றனர்.
"இந்து மதத்தில்" தான் மூஞ்சுறுக்குக் கோயில்,அதன் மீது யானையை ஏற்றி அதற்குக் கோயில்,அசிங்கத்துக்கு,ஆபாசத்துக்கு எல்லாம் கோயில்,நேரம்,பொருள் வீணாக்குதல் எல்லாம்.
அந்தக் காலத்தில் சினிமா கிடையாது,கண்டபடிக் கதை சொல்லி நேரத்தைப் போக்கி வாழ்ந்தனர். இந்தக் காலத்து சினிமா நடிகர்களைப் படித்த கல்லூரி மாணவர்கள் கோவில் கட்டித் தொழுவது போல அந்தக் காலத்துக் கடவுள்கள். இதை இன்னும் உண்மை என்று கதைகட்டி சேதுக் கால்வாய் திட்டத்தைத் தடுப்பது,கக்கூசில்லாதவர்களுக்குக் கக்கூசைக் கட்டாமல் கோவிலைக் கட்டிக் கோவிலைக் கக்கூசாக்குவது இதெல்லாம் வேறெங்கும் நடக்காது. சரஸ்வதியை நாக்கில் வைத்திருக்கும் நாட்டில்தான் படிக்காதவர்கள் அதிகம். படித்த அறிஞர்களும் வக்காலாத்து வாங்குவதுதான் வேதனையின் உச்சக் கட்டம்.

vijayan said...

சிவன் பெரியவனா பெருமாள் பெரியவனா என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பிரச்சினை.நமக்கு தான் அந்த நம்பிக்கை இல்லையே ,நாம் சில்லறை அடிக்கும் வேலையில் கவனம் செலுத்துவோம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சிவன் பெருமாள் விசயத்தில் கவணத்தை செலுத்திவிட்டு நம் தமிழ் மண்ணில் வாழ்ந்து பெரியவர்களை வணங்கும் முறையை மக்கள் மறந்துவிட்டனர்.

http://sagotharan.wordpress.com/

நம்பி said...

//vijayan said...

சிவன் பெரியவனா பெருமாள் பெரியவனா என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பிரச்சினை.நமக்கு தான் அந்த நம்பிக்கை இல்லையே ,நாம் சில்லறை அடிக்கும் வேலையில் கவனம் செலுத்துவோம்.
July 29, 2010 8:14 AM //
இதுதான் காசுக்காக...இதை வைச்சுதான் காசே...எல்லாத்தையும் தான் இங்கேயே மணியாட்டிட்டு வாரிக்கிறேயே...அப்புறம் என்ன தனியா சில்லரை அடிக்க முடியும்... ...மொத்த காசையும் இந்த கல்லை வைச்சுதானே வசூல் பன்ற...உழைச்சவ காசையும் சேர்த்து...தட்டு வச்சு காசு பார்க்கற...உண்டியல் வச்சு காசு பார்க்கற...வரிஏய்ப்பு செய்து காசு பார்க்கற...எல்லோர் வயித்திலேயும் அடிச்சு புனிதமான பாலையும் தயிரை கல்லுக்கு ஊற்றி காசு பார்க்கறே..(கடைசியில பசியில செத்தவனுக்கு இரண்டு சொட்டு பாலை வாயில ஊத்தற..).இத பார்க்கறதுக்கு அர்ச்சனை சீட்டு வேற விக்கற..இத பன்றதுக்கு ஒட்டுமொத்த மக்களோட வரிப்பணத்தை சம்பளமாக வாங்கி காசுபார்க்கற..எம்பளோட வரிப்பணமும் இருக்குது இல்ல....இது போதாது என்று சாமி முன்னாடியே லஞ்சம் வாங்கற..சாமிக்கே லஞ்சம் கொடுத்தா தான்யா உள்ள விடறா....இந்த கல்லுக்கு எதுக்கய்யா லஞ்சம்....சமூகம் யா தனி ஆள் இல்லை...மூன்று தலைமுறைக்கு முன்னாடி போய் பார்...யார் யாரோ யார் யாரோடவோ தொடர்பு ஆவாங்க...

இந்த மாபெரிய ஊழலுக்கு எண்ணை ஊத்தாதே..உன் நாட்டாமை இங்கு செல்லுபடியாகாது...கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்...நீ ஒதுங்கிக்கோ...