Search This Blog

27.7.10

ஆரிய அலங்கோலம் பாரீர்!

இன்று நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள் (1876)
அதனை ஒட்டிய வரலாற்றுப் பொன்னேடு இங்கே
(24.5.1942 நாளிட்ட அண்ணாவின் திராவிட நாடு இதழிலிருந்து)

சோமசுந்தர பாரதியார்

திருக்கழுக்குன்றத்தில் நடந்தேறிய ஜஸ்டிஸ் மாநாட்டில், தலைமைதாங்கிய பேரன்பர் சோமசுந்தர பாரதியார் தமிழரின் தற்கால நிலை, முற்காலச் சிறப்பு, ஆரிய இயல்பு ஆகியவைபற்றி ஆராய்ச்சிமிக்க ஆற்றலுரை செய்தார்.

பாஞ்சாலி ஓர் கன்னி! கனி என்று குளிர்ச்சியாற் குளறினான் அர்ஜுனன். பகிர்ந்துகொள்வீர் என்றாள் மாதா. பாஞ்சாலி அய்வருக்கும் பெண்டானாள். ஆரிய அலங்கோலம் பாரீர்!

ஆரிய இராமனோ, சீதையைத் தேடச் சென்ற அனுமனிடம், அடையாளத்துக்காகக் கூறிய வர்ணனையில், சொல்லவும் கூசும் வர்ணனைகளைக் கூறுகிறான். ஆபாசத்தை அறிமின்!

காலச்சிறையில் கிடந்துழன்று ஆரியக் கற்பனைக்குப் புலமை மெருகிட்டான் கம்பன்! பித்தனென்பேன் அவனை.

இத்தன்மையான கற்பனைகள் தமிழருக்கு, பண்டை நாள்களிற் கிடையாது. ஆரியம் வந்தே அதனையும் கெடுத்தது.

ஆரியர்களின் கடவுளின் இலட்சணத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணனுக்கு எத்தனை மனைவிமார்? அத்தைமீதும் ஆசைகொண்டான். அதுமட்டுமா? கூட்டங் கூட்டமாகக் கோபிகைகளைக் கூடினான். இவர் கடவுள்!

சுயமரியாதைக்காரர்களைத் திட்டுகிறார்களே வைதீகர்கள், இத்தகைய கடவுட் கதைகளை வைத்துக் கொண்டிருக்கக் கூச்சம் இல்லையா! இதுவா மதம்! மதம் என்றால் திமிர் என்பதே பொருள். தமிழன் கண்டது நெறி. அந்த நெறியினின்றும் வழுவினான், தமிழன் இன்று வதைகிறான்.

தமிழனின் வாணிபம் ரோம் வரை பரவியிருந்தது. தமிழனின் வீரம் வங்கம், கலிங்கம், இமயம் வரை பரவிற்று. பழங்காலச் சங்க நூற்களிலே இவைகளைக் காணலாம். பிறகு வெளிவந்த நூற்கள், இடைச்செருகலும், ஆரியக்கலப்பும் கொண்டவை. அவைகளை நான் மதிப்பதில்லை. தமிழனின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வள்ளுவன் வழங்கிய குறள் போதுமே. குறளின் குணமறியின், குனியாது வாழுங் குணம் பெறுவர் தமிழர்.

விதி, விதி என்ற வீண்பேச்சு தமிழருக்குக் கிடையாது. தமிழன் சொன்னான், முயற்சியுடன் காரியத்தைச் செய்யத் தொடங்கினால், கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆண்டவன் ஓடோடிவருவார் என்று! ஊழ் என்ன செய்யும் என்று கேட்டான் தமிழன்! முயன்றால், ஊழைப் பின்னால் தள்ளிவிட்டு, நாம் முன்னேற முடியும் என்று கூறினான் தமிழன். அத்தகைய இனம் இன்று ஏங்கிக்கிடக்கிறது, ஜாதி என்ற சொல்லைக் கேட்டறியாத தமிழரிடையே இன்று எண்ணற்ற ஜாதிகள் காணப்படுகின்றன. நானும் காங்கிரசிலே பன்னெடுங்காலம் இருந்தேன். பணி பல ஆற்றினேன். என்றைய தினம், ஆரிய அமைச்சர், எனது தமிழ் மொழியிலே கை வைத்தாரோ, அன்றே நான் காங்கிரசைத் துறந்தேன்.

இந்த மடத்தனம் மிகுந்த நாட்டிலே, மதபோதனை செய்தால் தான் தலைவனாக முடியுமென்பதைத் தெரிந்துகொண்டுதான், காந்தியார் மகாத்மா பட்டம் புனைந்துகொண்டார். மகாத்மாவானால், மலைமீதேறித் தவங்கிடக்கட்டுமே! மகாத்மாவுக்கு அரசியலிலே, என்ன வேலை?

நீதிக்கட்சியினை பலப்படுத்தி, நமது நாட்டு ஆட்சி நம்மவருக்கு இருக்கும்படியான நிலைமையை உண்டாக்க வேண்டும். தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும்

பேரன்பர் பாரதியாரின் விரிவான சொற்பொழிவு, மக்களின் மனதைக் கொள்ளைகொண்டது. சீர்திருத்தக் கருத்துகளுக்கும், புத்துலக அமைப்புக்கும் ஒத்த கொள்கைகள் பண்டைத் தமிழ் நூற்களில் இருப்பதை, பாரதியார் பலப்பல மேற்கோள்களுடன் எடுத்துரைத்தது கேட்டுத் தமிழர் இன்புற்றனர். அஜானபாகுவான பாரதியார், முறுக்கிவிடப்பட்ட மீசையும், முறுவலும் துலங்க, ஆரிய ஆபாசத்தைப் புட்டுக்காட்டி, அட சனியனே! என்ற ஆலாபனத்தை அடிக்கடி நடத்தியது, கேட்டு ரசிக்கமுடியுமே தவிர, ஏட்டில் எழுதி விளக்க முடியாது. நகைச்சுவை ததும்ப, பொருட்சுவை பொலிவுற, உறுதியும் உத்வேகமும் மிளிர, பாரதியார் தமது பேருரையையாற்றினார்.

ஆம்! மிக வேகமான பேச்சு! அழகான ஆற்றலுரை! ஆனால் அடிக்கடி நிகழ்வதில்லையே என்று மக்கள் எண்ணினர்.

அவர்களின் குறைதீர, பேரன்பர் பாரதியார், இனி அடிக்கடி தமிழருக்கு விருந்தூட்டி, வீரம் செறிந்த நாட்டின் வேதனை தீர்க்க, அறப்போரை நடத்த முன் வருவாராக!

பெரியார்

திருக்கழுக்குன்றம் மாநாட்டைத் திறந்து வைக்க, பெரியார் ஈ.வெ.ரா. வந்திருந்தார். வெப்பத்தை நீக்கிடும் தென்றல்போல், தமிழரிடை பெரியார் இருக்கிறார். அவருடைய அரிய உரையிலே அன்று, புலவர்களும் புதுமையும் என்பது பற்றிய விளக்கம் அழகுற இருந்தது.

நமது புலவர்கள், பெரும்பாலும் வறுமையில் வாடிக்கிடந்தனர். வாழ்க்கைக்கு வழிதேடவே அவர்கள் பாடுபடவேண்டி இருந்தது. ஆகவே அவர்கள் புராணச் சேற்றிலேயே கவிச்செந்தாமரையை விளைவித்தனர். ஆரியரின் அடிமைகளாகவே இருந்து வந்தனர். நல்ல புலவர் என்றால், திருவிளையாடற் புராணத்துக்கு விரிவுரையோ, பெரிய புராணத்துக்குக் கருத்துரையோ எழுதியவராக இருப்பார். மேனாட்டிலே புலவர்கள், இப்படி, மதத்தைக் கட்டிக்கொண்டு அழுவதில்லை. புராணத்திலே புரளுவதில்லை. அவர்களின் புலமை, புத்துலக அமைப்புக்கு உதவிற்று.

தோழர் பாரதியார், இத்தகைய, மேனாட்டுப் புலவர் போன்ற தன்மையுடையவர். அவர், தைரியமாக, மனதிற் பட்டதை எடுத்துரைப்பவர். புராண ஆபாசங்களைக் கண்டிப்பவர். அத்தகையவரை, மாநாட்டுக்குத் தலைமை வகிக்க இசையச் செய்த மாநாட்டு நிருவாகிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

தமிழர்கள் ஆரிய ஆட்சியில் இருந்து பட்டுவரும் அவதிகள் அனேகம். அவை போகவே நீதிக்கட்சி பாடுபடுகிறது. திராவிடநாடு தனிநாடாக அமைந்தால், நமக்கு இந்தக் கஷ்டங்கள் இருக்காது. பிரிவினைக் கொள்கையை, பிரிட்டிஷாரும் ஒப்புக்கொண்டு விட்டனர். ஆச்சாரியாரும் இப்போது பாகிஸ்தானை ஆதரித்துவிட்டார்.

சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை ஆதரித்து நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி, நான் கொண்டுள்ள கருத்தை விளக்கி, ஏற்கெனவே ஒரு அறிக்கை, ஆங்கிலத்திலும் தமிழலும் வெளியிட்டேன். அதைத் தோழர்கள் பார்த்திருப்பீர்கள்.

நமது நாட்டுப் பிரச்சினையான, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைப் பற்றி, ஆச்சாரியார், வாய் திறவாமல், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் பேசி, முஸ்லீம்களைச் சரிப்படுத்தலாம் என்று கருதுகிறார். அது பலிக்காது.

திராவிட நாட்டுப் பிரிவினைக்கு, ஆதரவு பலமாகிக் கொண்டே வருகிறது. எதிர்பார்க்காத இடங்களிலிருந்தும் ஆதரவு கிடைத்த வண்ணம் இருக்கிறது. சர்.ஸ்டாபோர்டு கிரிப்சிடம் இதனை நாங்கள் வலியுறுத்திக் கூறினோம்.

தோழர் முத்துரங்க முதலியார், என்னைக் காங்கிரசுக்கு வந்துசேர்ந்து, திருத்தும்படி கூப்பிடுகிறார், ஒரு அறிக்கை வெளியிட்டு, காங்கிரசிலிருந்து பார்த்துவிட்டுத்தானே நான் வெளிவந்தேன். மறுபடி வருவது என்னத்திற்கு? தமிழ்நாட்டுக் காங்கிரசையே நாங்கள் கைப்பற்றினாலும், எவனாவது ஒரு ஆரியன் அகில இந்தியக் காங்கிரசைச் சரிப்படுத்திக் கொள்வான். தமிழ்நாடு காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது என்றும், இன்ன அய்யர், ஸ்பெஷல் ஆபீசராக நியமிக்கப்பட்டு விட்டார் என்றும், மேலே இருந்து உத்திரவு வரும். இதைப்போல முன்பொரு தடவை டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்கு நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தனியாகப் பிரியட்டும். அகில இந்தியக் காங்கிரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. அத்தகைய நிலைமை உண்டானால், நாங்கள் காங்கிரசில் சேர்ந்து, ஆச்சாரியாரைக்கூட எங்கள் இஷ்டம்போல் நடக்கச் செய்யமுடியும்.

பெரியாரின் சொற்பொழிவுக்கு, வியாக்யானம் தேவையா! நுணுக்கமான அரசியல் கருத்துகளையும், பெரியார், மிக எளியமுறையில் விளக்கினார். ஏற்கெனவே ஒரு முறை திருக்கழுக்குன்றம் வந்த பெரியார், மழை காரணமாக அதிக நேரம் பேசமுடியாது போய்விட்டதால் திருக்குழுக்குன்றம் மக்கள் கவலை கொண்டிருந்தனர். மாநாட்டன்று அவர்களின் மனமகிழ பெரியார் பேசினார்.

மாநாட்டில், ஆச்சாரியாரின் திட்டம், பதவி ஏற்கும் மற்றோர் சூழ்ச்சி. திராவிட நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமுன்னம் ஆச்சாரியார் அமைக்க விரும்பும் தேசீய சர்க்காரில் ஜஸ்டிஸ் கட்சி சேரக் கூடாது என்ற தீர்மானமும், திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கை ஜஸ்டிஸ் கட்சியின் மூலாதாரக் கொள்கையாக்கப்பட வேண்டுமென்று, ஜஸ்டிஸ் கட்சிக்கு இம்மாநாடு சிபார்சு செய்கிறது என்ற தீர்மானமும், நிறைவேற்றப்பட்டபோது, விசேஷ ஆர்வம் இருந்தது.

மாநாட்டுப் பந்தலில், ஆச்சாரியார், ஜனாப் ஜின்னாவுக்குச் சலாமிட்டு நிற்பது படந்தீட்டப்பட்டு, மாட்டப்பட்டிருந்தது. மக்கள் அதனை மிகவும் ரசித்தனர்.

-----------------------நன்றி:- “விடுதலை” 27-7-2010

0 comments: