Search This Blog

8.7.10

அவசரமாய் தீர்க்கப்பட வேண்டிய கொடுமைகள் இரண்டு


இனியாவது புத்தி வருமா? பெண்களுக்கு சொத்துரிமை

இந்திய நாட்டில் அநேகமாய் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும் மனிதத்தன்மைக்கும் நியாயத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் அவற்றுள் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லவென்பதையும், மனிதத் தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள மற்ற பெரும்பான்மை யான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றி தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்ஷி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் முக்கியமானதாகவும் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவது எதுவென்றால் இந்திய மக்களிலேயே பல கோடி ஜன சங்கியையுள்ள பல சமூகங்களை பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து அவர்களை பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும். இரண்டாவதானது எதுவென்றால் பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க “கடவுளாலேயே” சிருஷ் டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரை க்ஷணம் கூட இருக்க விடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேயேதான் நாம் மேற்கண்டவிஷயங்கள் இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் கேட்ப தோ இந்தியாவின் பாதுகாப்பையும் ஆக்ஷி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் தாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லுவதோ மற்றும் இந்தியாவுக்கு அந்நியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாமென்று சொல்லுவதோ ஆகிய காரியங்கள் முடியாததென்றும் அவை சுத்த அறியாமைத்தனமானதென்றும் இல்லாவிட்டால் சுயநல சூக்ஷியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்கு பயமோ சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான் இவ்வித முட்டாள்தனமானதும் சூக்ஷி யானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயு மிருக்கின்றோம்.

ஏனெனில் தங்கள் சமூகத்தாரென்றும் தங்கள் சகோதரர்களென்றும் ஜீவகாருண்யம் என்றும் கூட கருதாமல் தங்கள் நாட்டு மக்களையே சுதந்திரமளிக்காமல் மனிதர்கள் என்று கூட கருதாமல் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் மக்களிடம் மற்றும் அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலையையோ ஒப்புவிப்பதென்றால் கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகளை ஒப்புவித்த தாகுமே தவிர வேறல்ல என்று கருதுவதால்தானே ஒழிய வேறல்ல. இந்தத் தத்துவ மறியாத சில தீண்டப்படாதவரென்று தாழ்த்தப்பட்ட மக்களும் சுதந்திரம் அளிக்கப்படாதவர்கள் என்று அடிமைப்படுத்தப்பட்ட பெண்களும் தங்களுக்கு மற்றவர்களால் இழைக்கப்பட்ட கொடுமையையும் இழிவை யும் கருதிப் பாராமல் “இந்தியா சுதந்திரம்” “விடுதலை” என்னப்பட்ட கூப்பாடுகளில் கலந்து கொண்டு தாங்களும் கூப்பாடு போடுவதைக் காண்கின்றோம். ஆனாலும் அவர்களுக்கு உண்மை சுதந்திரம் விடுதலை என்ப வைகளின் பொருள் தெரியாததாலும் தெரிய முடியாமல் வைத்திருந்த வாசனையினாலும் அப்படி அறியாமல் திரிகின்றார்கள் என்றே கருதி இருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்தில் இருக்கும் கொடுமையும், மூடத் தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால் அதை மன்னிக்கவோ, அலட்சியமாய் கருதவோ “நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இப்போது அதற்கு என்ன அவசரம்” என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடந் தருவதில்லை. ஒருவன் அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால் இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அநுபவிக்கும் கொடுமைகள் என்பவைகள் போதாது என்றும் சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும் சதா ராணுவச் சட்டம் அமுலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால்தான் இம்மாதிரி கொடுமைப் படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து புத்தி வருமென்றும் நமக்கு சிற்சில சமயங்களில் தோன்று வதுமுண்டு. ஆனால் இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல் மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால் இன்னமும் எவ்வளவு இழிவும் கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான கஷ்டத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும் என்றா லும் இந்நிலை மாறுதலடையக்கூடும் என்ற உறுதியை உண்டாக்கத் தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

அடுத்ததான பெண்கள் விஷயத்திலும் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது இது போலவே இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும் அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக் கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படியெனில் இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சை வாதிகள், தேசீய வாதிகள், மக்கள் நல உரிமை வாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும் மேற்கண்ட கூட்டத்தார்களில் 100க்கு 99 பேர்களுக்கு மேலாக சுயநலங்கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் இவர்களது முயற்சி இல்லாமலும் சில சமயங்களில் மேற்கண்ட சுயநல சூட்சிவாதிகளின் எதிர்ப்புக்கும் இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அநுபவிக்கும் மேற்கண்ட இருவகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம். அதாவது இந்திய சுதேச சமஸ் தானங்கள் என்று சொல்லப்படும் மைசூர், பரோடா, காஷ்மீர், திருவநந்த புரம் முதலிய சமஸ்தானங்கள் இந்த கொடுமைகளை ஒழிக்க ஒவ்வொரு துறையில் ஒவ்வொன்றுமாக முன் வந்திருக்கின்றன என்பதாகும்.

காஷ்மீர் சமஸ்தானத்தில் எந்த விஷயத்திலும் தீண்டாமையைப் பாவிக்கக் கூடாதென்றும், தீண்டப்படாதார் என்னும் வகுப்பாருக்கு மற்றவர்களைப்போல் சகல உரிமையையும் அளிக்கப்பட்டிருப்பதோடு கல்வி விஷயத்தில் அவர்களுக்கு சாப்பாடுப் போட்டு இலவசமாய் கற்றுக் கொடுப் பதென்றும் தீர்மானமாயிருக்கும் விஷயம் முன் தெரிவித்திருக்கிறோம்.

மற்றும் பரோடா சமஸ்தானத்தில் பெண்கள் கல்யாண ரத்து விஷய மாய் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பற்றியும் முன்னர் தெரிவித் திருக்கிறோம். மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களைக் கடவுள் பேரால் விபசாரிகளாக்கி கோவில்களின் ஆதரவுகளைக் கொண்டு அவ் விபசாரத்தன்மையை நிலை நிறுத்துவதையும் அநுபவத்தில் நடத்து வதையும் ஒழிக்கச் சட்டம் நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்ததையும் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம்.

இப்போது மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் விஷயமாக யோசனை செய்யப்பட்டு அவ் யோசனையை அரசாங் கமும் ஜனப் பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டு அதற்காக ஒரு கமிட்டியும் நியமித்து அக்கமிட்டியார் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கலாம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொண்டு ஏகமனதான ரிபோர்ட்டு அனுப்பியிருப்ப தாயும் “திராவிடனி”ல் வெளியாக்கப்பட்டிருக்கிறது.

அதன் முக்கிய பாகம் என்னவென்றால்:-

1. “பெண்கள் வாரிசு சொத்து உரிமை அநுபவிக்கத் தகுதியுடை யவர்கள் அல்லவென்பது கொடுமையும் அநீதியுமாகும். 2. பெண்கள் ஸ்ரீதனம், நன்கொடை முதலிய சொத்துக்கள் அடைந்து அவைகளை வைத்து நிர்வகித்து வரத்தக்கவர்கள் என்ற உரிமையும் வழமையும் இருக்கும்போது வார்சு சொத்து அடைய ஏன் தகுதி யுடையவர்களாக மாட்டார்கள்? 3. பெண்களுக்கு வார்சு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பதோடு பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயுமிருக்கிறது. 4. ஆகவே இவற்றிற்கான சட்டம் செய்ய வேண்டியதும் பெண்கள் என்கின்ற காரணத்திற்காக அவர்களுக்கு எவ்வித சிவில் உரிமை யையும் தடுப்பது கூடாது என்று திட்டமாய் முடிவு செய்து விட வேண்டியதுமான காலம் வந்து விட்டது. 5. எந்த விதமான ஸ்ரீதன சொத்தையும் பெண்கள் தங்கள் இஷ்டப்படி விநியோகித்துக் கொள்ளலாம்.” என்பவைகளாகும். இவைகள் ஒரு புறமிருக்க மற்றொரு விஷயத் திலும் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் அளிக்க அக்கமிட்டி சிபார்சு செய்தி ருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

அவை யென்னவெனில்:-

“புருஷன் மேக வியாதிக்காரனாகவாவது கொடிய தொத்து வியாதிக் காரனாகவாவது இருந்தாலும், வைப்பாட்டி வைத்திருந்தாலும், தாசி, வேசி வீடுகளுக்குப் போய்க் கொண்டிருப்பவனாயிருந்தாலும், மறு விவாகம் செய்து கொண்டவ னாயிருந்தாலும், கொடுமையாய் நடத்தினாலும், வேறு மதத்திற்கு போய்விட்டாலும், புருஷனைவிட்டுப் பிரிந்திருக்கவும் புருஷனிடம் ஜீவனாம்சம் பெறவும் பூரண உரிமையுண்டு.” என்பதாகும். அதோடு மேற்படி இந்த விஷயங்களை அநுசரித்து ஒரு மசோதாவும் தயாரிக்கப்பட்டிருக்கின்ற தாகவும் காணப்படுகின்றது.

ஆகவே இந்தச் சட்டம் அநேகமாக கூடிய சீக்கிரம் மைசூர் சமஸ் தான சட்டசபையில் நிறைவேறி சட்டமாக்கப்படுமென்றே நம்பலாம். இவற் றில் சொத்துக்களின் அளவு விஷயங்களில் ஏதாவது வித்தியாச மிருந்த போதிலும் பெண்களுக்கு சொத்துரிமை கொள்கையும் பெண்கள் புரு ஷனை விட்டு விலகி இருந்து கொள்ளும் கொள்கைகளும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கும் விஷயம் கவனித்து பாராட்டத்தக்கதாகும்.

இந்தப்படி இந்தியாவிலுள்ள சுதேச இந்து சமஸ்தானங்களெல்லாம் ஒப்புக் கொண்டு சட்டம் செய்து கொண்டு வரும்போது பிரிட்டிஷ் இந்தியா விலுள்ள தேசீயவாதிகளுக்கும் பூரண சுயேட்சை வாதிகளுக்கும், ஜன நல உரிமைவாதிகளுக்கும் மாத்திரம் இக் கொள்கைகள் அவசியமானவைகள் என்றோ சட்டம் செய்யத்தக்கது என்றோ தோன்றப்படாமலிருப்பதானது இக்கூட்டத்தார்களின் நாணயக் குறைவையும் பொறுப்பற்றத் தன்மை யையும் நன்றாகக் காட்டுவதற்கு ஒரு அறிகுறியாகும்.

சாரதா சட்டம் (குழந்தை மணத் தடுப்பு சட்டம்) என்கின்ற ஒரு சட்டம் பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் பாசாகியும் இந்திய தேசியவாதிகளாலும் பூரண சுயேட்சை முயற்சியாலும் அது சரியானபடி அமுலுக்கு வரமுடியா மல் முட்டுக்கட்டைப் போடப்பட்டிருக்கிறது மிகவும் வெட்கக் கேடான காரியமாகும்.

மற்றும் அச்சட்டத்தை ஒழிப்பதாக தெரியப்படுத்தினவர்களை ராஜாங்க சட்ட சபைக்கும் இந்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைக்கும் நமது பிரதிநிதிகளாக அனுப்பியது இன்னமும் மானக்கேடானக் காரிய மாகும்.

நமது தேசியவாதிகள் என்னும் அரசியல் வாதிகள் இம்மாதிரி காரியங்களைச் சிறிதும் கவனியாமல் இருப்பதோடு நாம் ஏதாவது இவற்றிற் காகப் பிரசாரம் செய்தால் “இது தேசியத்திற்கு விரோதம்” “சுயராஜ்யம் கிடைத்து விட்டால் பிறகு சட்டம் செய்து கொள்ளலாம்” என்று சொல்லு வதும் வேறு யாராவது இவைகளுக்காக சட்டம் செய்ய சட்டசபைக்கு மசோ தாக்கள் கொண்டு போனால் “சீர்திருத்தங்கள் சட்டங்களின் மூலம் செய்ய விட முடியாது. பிரசாரத்தின் மூலம்தான் செய்ய வேண்டும்” என்று சொல்லு வதுமான தந்திரங்களினால் மக்களை ஏமாற்றி காலம் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

ஆகவே இந்த நிலைமையில் முதலில் நமது கடமை என்ன என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.

---------------- தந்தை பெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 05.10.1930

0 comments: