Search This Blog

24.7.10

உண்மையான தமிழிசை மும்மணிகள் யார்?


தமிழிசை மும்மணிகள்!


5ஆம் முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அடிப்படையாக பண்பாட்டு மறுமலர்ச்சித் திசையில் காலத்தை வென்று நிற்கும் அரும் பணிகளை ஆற்றி விட்டார்!

எந்த அரசு எதிர்காலத்தில் வந்தாலும் இவற்றில் கை வைக்க முடியாது என்பதான எழிலார்ந்த, ஏற்றமிகு சாதனைகள் இவை.

1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை _ தமிழில் வழிபாட்டு உரிமை.

2) தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கச் செய்தது.

3) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்

4) தீட்சிதர் கைகளில் சிக்குண்டு கிடந்த சிதம்பரம் நடராசன் கோயிலை அரசின் துறைக்குக் கீழ் கொண்டு வந்தது.

5) வடலூர் இராமலிங்க அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்ட சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றி, தமிழர் கையில் நிலை நிறுத்தியது.

6) ஏற்கெனவே தம்மால் தொடங்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை மேலும் விரிவாக்கி, ஒவ்வொரு சமத்துவப்புரத்திலும் தந்தை பெரியார் சிலை நிறுவியது.

7) இத்துடன் ஏழாவது அம்சமாக தமிழிசை மூவருக்குச் சீர்காழியில் 1.51 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டும் திட்டம்.

மொழி உணர்வும், இனவுணர்வும் கொண்டவர்கள் எந்த முகாம்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, இவற்றிற்காக மானமிகு கலைஞர் அவர்களுக்கு மகத்தான நன்றியையும் மாசுமருவற்ற பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழிசைக்கு வித்திட்ட உண்மையான மூவேந்தர்கள் _ மும்மணிகள் சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_1600) அருணாசலக்கவி கவிராயர் (1711_ 1779); தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712_1787)

காலத்தால் மூத்த இந்த மும்மணிகள்தான் தமிழிசையை வளர்த்தவர்கள் என்கிற உண்மை இருக்க... பொய்யை விதைத்தே பொய்யை அறுவடை செய்யும் பார்ப்பனக் கும்பல் இவர்களின் பிற்காலத்தவர்களான தியாகையர் (1767_1847); சாமா சாஸ்திரி (1763); முத்துசாமி தீட்சிதர் (1775) ஆகிய பார்ப்பனர்கள்தான் தமிழிசையின் தா(த்)தாக்கள் என்று பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தியாகையர் பெயரில் ஆண்டுதோறும் திருவையாறில் தியாகபிர்மம் என்றுகூறி, ஊரில் உள்ள இசை வாணர்களை எல்லாம் கூப்பிட்டு கச்சேரி மழையைப் பொழியச் செய்து, உண்மையான தமிழிசை மன்னர்களான தமிழர்களை இருட்டடித்து வருகின்றனர். தமிழ்நாட்டில்தான் திருவையாறு இருக்கிறது. அங்கு நடைபெறும் தியாகையர் விழாவில் தமிழில் பாடக் கூடாதாம்! தமிழ் நீஷப் பாஷையாம் அப்படிப் பாடினால் தியாகையர் சந்நிதானம் தீட்டுப்பட்டு விடுமாம்.

இன்றைய தினம் நமது மானமிகு முதல் அமைச்சர் தமிழிசை மூவருக்கும் சீர்காழியில் மணிமண்டபம் கட்டுவதன் பின்னணியில் மிக முக்கியமான வரலாறு இருக்கவே செய்கிறது.


தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை, சீர்காழி அருணாசலக் கவிராயர், சீர்காழி முத்துத்தாண்டவர்

1945 இல் திருவையாறு தியாகராஜ அய்யர் உற்சவத்தில் இசையரசு தண்டபாணி தேசிகர் அவர்கள் சித்தி விநாயகனே! என்ற தமிழ்ப் பாடலைப் பாடினார் என்பதற்காக, அடுத்தபடி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமாஜானு அய்யங்கார் தேசிகர் தமிழில் பாட்டுப் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் இந்த மேடையில் பாட மாட்டேன் என்று கூச்சலிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

சந்நிதானத்தைக் கழுவி சடங்குகள் செய்து தீட்டுக் கழித்ததற்குப் பிறகேதான் அரியக்குடி அய்யங்கார் பாடினாராம்.

அதுகுறித்து கலைஞர் அவர்கள் அப்பொழுதே குடிஅரசு இதழில் (9.2.1945 பக்கம் 7) தீட்டாயிடுத்து! எனும் தலைப்பில் துணைத் தலையங்கம் ஒன்றினை எழுதினார்.

இது இன்று நேற்றல்ல, மனுமந்தாதா காலத்திலிருந்து தமிழ் பாஷை நீச்ச பாஷை என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும்வரை தமிழ் பேசக் கூடாது என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு, அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்துவிட்டது. தமிழ் நாட்டிலே தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு! ஆங்கில அரசாங்கமல்ல ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக அனுமார்களாக வாழ்வதுதான். தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய் விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக்குடிவர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

நம்ப வேண்டாம்!

பெரியார் அவர்களின் சொற்பொழிவுகள் தேசிய தினசரிகளில் பெரும்பாலும் திரித்தும் மறைத்தும் கண்டபடி பிரசுரிக்கப்படுகின்றன. எங்கும் பார்ப்பனர்களே நிருபர்களாயிருப்பதே இதற்குக் காரணம் ஆகையால் அவைகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் சமாதானம் எழுதிக் கொண்டிருக்க முடியாததால் இதை எழுத நேர்ந்தது என்று அத்துணைத் தலையங்கத்தில் கலைஞர் அவர்கள் எழுதினார்.

இளவயதில் ஈரோட்டுப் பகுத்தறிவுப் பால் குடித்து வளர்ந்தவர் அல்லவா அந்த இனமான உணர்வினை பவள விழாவைத் தாண்டினாலும் கொஞ்சம்கூட மறந்து விடாமல், நெஞ்சப் பேழையில் பூட்டி வைத்து இன்றைக்கு உண்மையான தமிழிசை மூவேந்தர்களான தமிழர்களின் நினைவை நிலைநாட்டும் வண்ணம் மணி மண்டபத்தை உருவாக்குகிறார்.

தமிழில் இசைப் பாடல்கள் கிடையாது; அவை தெலுங்கிலும், கன்னடத்திலும், சமஸ்கிருதத்திலும்தான் குடி கொண்டு இருக்கின்றன என்று பார்ப்பனர்கள் தங்கள் ஊடகங்களால் பிரச்சாரப் புழுதி செய்து வந்துள்ளனர்.

அது உண்மையானதுதானா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிபாடலில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையும் இசையோடு பாடக் கூடியவையாயிற்றே!

பாடல்களைப் பாடியவர்கள் பெயர் மட்டுமன்றி, ஒவ்வொரு பாட்டின் கீழும் அதற்குரிய வண்ணம், தூக்கு (இராகம், தாளம் போன்றவை) ஆகியவையும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

அண்மைக் காலத்தில்கூட கோபாலகிருஷ்ண பாரதி, மதுர கவி பாஸ்கரதாஸ், விசுவநாததாஸ் சங்கரதாஸ் சுவாமிகள் எத்தனையோ பேர் இசைப் பாடல்களை யாத்துள்ளனரே!

நாட்டுப்புறப்பாடல்களுக்குத் தமிழில் பஞ்சமா? தெம்மாங்கு, கும்மி, கோலாட்டம் ஏற்றப்பாட்டு என்று நீண்ட வரிசை உண்டே!

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்ட 1929 முதல் மாநாடுகளை நடத்தத் தொடங்கிய நிலையில் தமிழிசை மாநாட்டையும் சேர்த்து நடத்தினார்!

ஈரோட்டில் 1930, மே 12ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற தமிழ் மாகாண சங்கீத மாநாட்டில் 4000 பேர் கூடியிருந்தனர். அம்மாநாட்டை தொடங்கி வைத்து தந்தை பெரியார் உரையாற்றுகையில், சங்கீதக் கலையிலும், நம்மவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்றும், அந்தக் கலைகளை உடைய நம்மவர்கள் எந்தக் காரணத்தினாலும் தங்களுடைய சுய மரியாதையையை இழக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். எனக்குச் சங்கீதத்தில் எவ்வித ஞானமும் கிடையாது. சங்கீத வித்தையிலும் நம்மவர்களுடைய சுய மரியாதை குறைக்கப்பட்டிருப்பதனால், அதை நம்மவர்கள் தேடிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட் டிருக்கிறது என்று பேசினார் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய பொன் வரிகளாகும்.

கலைஞர் அவர்கள் வரலாற்றில் இன்னொரு தடம் நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும்.

சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் சார்பில் 21.12.1989 அன்று அரசர் அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. அவ்விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்விழாவில் மானமிகு கலைஞர் அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் யார் யார் தெரியுமா? செம்மங்குடி சீனிவாசய்யர், கல்கி சதாசிவம் அய்யரின் அருமை வீட்டுக் கிழத்தியான எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோராவர்.

நல்ல சந்தர்ப்பம் அல்லவா நழுவ விடுவாரா நமது இனமானக் கலைஞர்?

1945இல் திருவையாற்றில் நடந்த அந்தப் பழைய மலரும் நினைவுகளை அவருக்கே உரித்தான முறையில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

அன்று அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் காட்டிய தமிழ் வெறுப்பை இன்று பக்கத்தில் அமர்ந்திருந்த செம்மங்குடி சீனிவாசய்யர் அறியும்படி இடித்துரைத்தார். என்ன செய்வார் செம்மங்குடி? நெளிந்தார். அவ்வளவு தான்!

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாருக்கு என்ன சங்கடம்? நீராரும் கடலுடுத்த என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் வாழ்த்தாகப் பாடிக் கொடுக்கும்படி முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சுப்புலட்சுமி அம்மையாரைக் கேட்டுக் கொண்டார்.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பவர் சூத்திரப் பெண் மணியானா லும் இப்பொழுது கல்கி சதாசிவ அய்யர்வாளின் சம்சாரம் ஆயிற்றே! புடவை கட்டு முதல் மடிசார் ஆயிற்றே! பேச்சிலும் அவாள் இவாள் வந்தாச்சே!

ஒத்துக் கொள்வாரா?

தமிழ் வாழ்த்தை கடவுள் வாழ்த்துக்கு இணையாகப் பாட முடியாது என்று கறாராகவே கூறிவிட்டார்.

விழாவில் தமிழக முதல் அமைச்சர் தமிழிசையைப் பற்றி பேசிய போது அம்மையார் உள்ளத்தில் எத்தனை எத்தனை முள்கள் சுருக் சுருக்கென்று தைத்திருக்கும். ஒரு தமிழர் அதுவும் பெரியார் வழி தமிழர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததால் தான் காலங்கடந்தேனும் தமிழர்களான தமிழிசை மூவருக்கும் சீர்காழியில் மணிமண்டபம் எழுந்திட உள்ளது.

திருவையாற்றில் தியாகப்பிர்மம் நடப்பதையும் தாண்டி, சீர்காழியில் தமிழிசை விழா பெரு மழையாகக் கொட்ட வேண்டும் அதில் புதுமை மணம் வீசும் பாடல்கள் முக்கியமாக இடம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு!

மானமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்களுக்கு மீண்டும் ஒரு தன்மான வணக்கமும், இனமான நன்றியும், பாராட்டும் உரித்தாகுக!

--------------------- மின்சாரம் அவர்கள் 24-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: