Search This Blog

18.7.10

சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டாளா?

பகுத்தறிவைப் பரப்பும் சாதனங்களாகவே
கலைகள் மிளிர வேண்டும்


20.12.1955 அன்று ராசிபுரம் ரங்கவிலாஸ் தியேட்டரில் நாடகத் தலைமையேற்று தந்தை பெரியார் அவர்கள் பேசுகையில், குறிப்பிட்டதாவது:

இதுபோன்று நாடகங்களுக்குத் தலைமை வகிக்கவும், இரவில் அதிக நேரம் கண் விழித்துத் தூக்கம் இன்றி பேசுவதென்பதும், எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், என்னுடைய தொண்டின் மீது கொண்டுள்ள எல்லை கடந்த ஆவலின் காரணமாக எழும் ஊக்கம் அப்பேர்ப்பட்ட கஷ்டங்களை எல்லாம் பொருட்படுத்தாவண்ணம் செய்து விடுகிறது.

நம் நாட்டில் இதுவரை கலைகள் என்பனவெல்லாம் கடவுள் பிரச்சார முறையாகவே அமைந்திருந்தன. ஆனால், இப்பொழுது உள்ள காலமோ திருப்புமுனை என்று சொல்லக் கூடிய காலம் இதுவரை மனிதன் தனது மனிதத் தன்மையை இழந்து பகுத்தறிவற்றவானாகி மூடத்தன்மையிலேயே ஆழ்ந்து, காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்தான் மனிதன். அதற்கேற்ற வண்ணம் பாழாய்ப்போன கடவுள்களும், மத சாதனங்களும் உண்டாக்கப்பட்டு விட்டன.

சூழ்ச்சியில் வலுத்த பார்ப்பனர்கள் நம் நாட்டுப் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களிடம் காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைப் புகுத்திவிட்டார்கள். தன் சுயநலத்தையே பெரிதாகக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இதுவரை நம் மக்கள் அடிமைகளாக இருந்ததுமன்றி கீழ்ஜாதிகள், நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனரின் இழிமகன், பார்ப்பனரின் கூலி, எப்பொழுதும் உடல் உழைப்புக் கொண்டு வாழும் தொழிலாளி என்று ஆக்கப்பட்டு விட்டான்.

இந்நிலையை என்றைக்கும் நிலைநாட்டவும், அழியாமல் மேன்மேலும் இந்நிலை வளர்ந்து கொண்டே போகவும்தான் பார்ப்பனர்கள் தங்கள் மதம், கடவுள், புராணம் இவற்றை உண்டாக்க வேண்டியதாயிற்று. அவற்றைப் பிரசாரம் செய்ய பல வழிகளிலும் முயற்சி எடுக்கும் முறைகளில் ஒன்றுதான் கலைகள் என்ற பெயராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

கலைஞர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களைப் பற்றியே பிரசாரம் செய்பவர்களாக இருந்ததால்தான் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளின் பித்தலாட்டத்தையும் மதம், சாஸ்திர, புராணங்களின் அயோக்கியத் தன்மைகளையும் வெளியிடுபவர்கள் கலையில் சிறந்த வல்லுநர்களாக இருந்ததாலும், அவர்கள் நாஸ்திகர்கள், பார்ப்பனத் துவேஷிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏன்? இன்றைக்கும் எத்தனையோ கலைஞர்கள், புலவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் கூலிகளும், கடவுள் பிரச்சாரக்காரர்களும்தான் ஆவார்கள். மதப் புரட்டுகளையும், கடவுள் பித்தலாட்டங்களையும் வெளியிடுவார்களேயானால் அவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.

கலைகளில் நாடகம், நடனம், சங்கீதம், ஓவியம் இப்படி பல வகை இருக்கின்றன என்றாலும் அவை ஒவ்வொன்றிலும் மதத்தையும், கடவுளையும் புகுத்தி இருக்கிறார்கள். கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் புராணக் கதைகளை நடிப்பவர்கள்தான் நடிகர்கள். அப்படிப்பட்ட நாடகத்திற்குத்தான் அதிக மதிப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறது.

நடனக் கலையோ கடவுள் இப்படி ஆடினார்; கிருஷ்ணன் இன்னின்ன லீலைகள் செய்தான் என்பதைத்தான் சித்திரித்துக் காட்டப்படுகிறது. அதன்றி, அய்ந்து வயதுப் பெண்ணும் நடனம் ஆடுகிறதென்றால், காமமே உருவெடுத்தாற்போல் கண்ணனின் லீலா வினோதங்களை சித்திரித்து ஆடுகின்றனர். இப்படிப்பட்ட நடனக் கலையினால் அக்கலையைக் கைக்கொள்பவர்கள் மட்டுமின்றி, அதை ரசிக்கும் ரசிகனும் அவ்வித உணர்ச்சி கொள்ளும்படி ஆடுகிறான். சித்திரக்கலையும் அப்படித்தான். கடவுளின் உருவத்தை இப்படி அப்படி என்று இவர்களாக நினைத்துக் கொண்டான். அதை வரைந்து காட்டுவதுதான் சித்திரக்காரர்களின் திறமையாக இருக்கிறது.

இப்படிப் பலவிதமான கலைஞர்கள் என்பவர்களின் திறமையெல்லாம் மத சம்பந்தப்பட்டவற்றைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே அமைந்துவிட்டன. பகுத்தறிவற்ற கலைஞர்களும், பார்ப்பனர்களின் மாயையில் மூழ்கி அவர்கள் கூறுவதையே ஆராயாது பெரும் மடமையிலேயே ஆழ்ந்து கலையைக் கொலை செய்து விடுகிறார்கள்.

கலையின் பேரால் ஒரு விதத்திலாவது மக்களுக்கு நன்மை கிடைப்பதில்லை. நாகரிகம், பகுத்தறிவு, இவை வளருவதற்கு நம் நாட்டுக் கலைகள் பயன்படுவதற்கு வழி இன்றிப் போய்விட்டது. அன்றியும், மேன்மேலும் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தவும், அநாகரிகத்தை வளர்க்கவும், பொய்ப் புரட்டுகளை உண்டாக்கவும் தான் உபயோகப்படுகின்றன.

பாரதத்தில் வருகிற திரவுபதி என்று கூறப்படுகிற பலே கைகாரி மகாபத்தினி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு மனைவியாகியவள் அய்ந்து பேர்கள் கூடி தன்னை அனுபவிக்க இசைந்துள்ளதும் அன்றி, அய்ந்து பேர்களும் போதாது. ஆறாவதாகக் கர்ணன் என்பவன்மேல் ஆசை கொண்டிருந்தாளாம். இப்பேர்ப்பட்ட ஆபாசம் நிறைந்த கதை நாடகமாக நடிக்கப்படுகிறதென்றால், இதனால் என்ன அறிவு வளர முடியும்? திரவுபதியைப் போன்று ஒவ்வொரு பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும். அல்லது ஒருவன் மணந்த மனைவியை அண்ணன் தம்பிகள் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனைப் பேர்களும் அனுபவிக்கவேண்டும் என்பதா? இதில் என்ன கருத்து இருக்கிறதோ தெரியவில்லை. அன்றியும் பாரதத்தில் வருகிற பஞ்சபாண்டவர்கள் என்ற அத்தனை பேர்களுள் ஒருவராவது தன் தகப்பனுக்குப் பிறந்ததாகக் கூறப்படவில்லை. ஒவ்வொருவனையும் தனித்தனியே கள்ளப் புருஷனுக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்போன்று, இராமாயணம் என்ற புராணத்தின் ஊழலோ மிகவும் மோசமானது. அதில் வரும் பத்தினி என்று கூறப்படும் சீதையின் அயோக்கியத்தனமோ கொஞ்சமல்ல; தன் கணவனை எப்படியும் ஏமாற்றி விட்டு இராவணன் பின் செல்லவேண்டும் என்றே திட்டமிட்டு, தான் தனியாக இருக்கும் நிலையை ஏற்படுத்தவும், அது சமயம் இராவணன் தன்னைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக மானைப் பிடிப்பதற்கென்று ராமனையும், பிறகு ராமனுக்குத் துணை செய்ய லட்சுமணனையும் அனுப்பி இருக்கிறாள். முன் கூட்டியே செய்த ஏற்பாட்டின்பேரில் தயாராக இருந்த இராவணன்அங்கு வந்து அவளை அழைத்துச் சென்றிருக்கிறான்.

இந்த இடத்தில் சீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படவில்லை; சீதையே இராவணன் மேல் இச்சை கொண்டு அவன் பின்னால் சென்றிருக்கிறாள் என்பதை நன்றாகக் கூற முடியும். அப்படிக் கூறுவது என் சொந்தக் கருத்தல்ல; பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத்திலேயே ஆதாரம் எடுத்துக் காட்டுவேன்.

இராவணனுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டு சாபங்களின் காரணமாக, இராவணன் சீதையை, சீதை சம்மதமின்றி தொட்டு எடுத்திருப்பானாகில் அவன் தலை வெடித்திருக்க வேண்டும். அல்லது உடம்பு நெருப்புப் பற்றி எரிந்திருக்க வேண்டும். இரண்டு ஆபத்துகளில் ஒன்றும் நேரவில்லை. சீதையின் தொடையை ஒரு கையாலும், மறு கையால் கூந்தலையும் பிடித்து தூக்கிச் சென்றிருக்கிறான். இதற்கு இராமாயண பக்தர்கள் என்ன பதில் கூற முடியும்?
இராவணனுக்குக் கொடுக்கப்பட்ட சாபங்கள் கப்ஸா என்று கூற முடியுமா? அல்லது சீதை இசைந்திருக்கிறாள்; இராவணனின் மேல் ஆசைப்பட்டு அவனுடன் சென்றிருக்கிறாள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதுமட்டுமல்ல, இன்னமும் இராமாயணத்தை மேன்மேலும் படித்து, துருவித் துருவி ஆராய்ந்தால்தான் அதனுடைய முழு வண்டவாளங்களும் நாளுக்குநாள் மேன்மேலும் புலப்படுகின்றன.

தோழர் நடிகவேள் ராதா அவர்கள் நடித்த இராமாயண நாடகத்தில்கூட ஒரு சீன் காண்பித்தார். அதாவது, இராவணனிடமிருந்து மீட்டு வரப்பட்ட சீதை இராவணன் படத்தை வரைந்து கொண்டு அழுது கொண்டிருந்தாளாம். அதைக் கண்ட இராமன் கோபம் கொண்டு அவளைக் கொலை செய்ய முற்படுகிறானாம். இந்தக் காட்சியைப் பலர் என்னிடம் கூட, இல்லாததைக் கற்பனை செய்து காண்பிக்கிறார் என்பதாகக் குறை கூறினார்கள். ஆனால், நானும் அதைச் சரியாகக் கவனிக்காமல் அந்தக் காட்சியை (சீனை) எடுத்து விடும்படி கேட்கவும், தோழர் நடிகவேள் ராதாவும் இசைந்து அதன்படியே அதை எடுத்துவிட்டார்.

ஆனால், இப்போது பார்க்க அந்த இடம்தான் அவசியம் தேவை என்று தெரிகிறது. அந்தச் சம்பவம் இராமாயணத்தில் கூறப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தைவிட மேலான இராமாயணம் ஆனந்த இராமாயணம் என்று கூறுவார்கள். அதில் கூறப்படுவதை அப்படியே சி.ஆர். சீனிவாசய்யங்கார் கூறுகிறார்.:

இராவணன் வீட்டிலிருந்து சீதை மீட்கப்பட்டு இராமனுடைய அந்தப்புரத்தில் தனியாக இருக்கும்பொழுது அவளுக்குப் பழைய நினைப்பு வந்துவிடுகிறது; அதாவது இராவணனுடன் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் மனதில் தோன்றுகின்றன. அவள்தன் மனத்தில் இராவணனைச் சித்தரித்துக் கொண்டு இராவணனின் உருவத்தை சித்திரமாக வரைகிறாள். அதுசமயம் இராமன் அங்கு வந்து விடுகிறான். இராமனைக் கண்டவுடன் சீதை அந்தப் படத்தைப் படுக்கைக் கட்டிலின் கீழ் போட்டு விடுகிறாள். இதைக் கண்டு கொள்ளாத இராமன் சீதையிடம் சல்லாபங்கள் செய்ய முயற்சிக்கிறான். இருவரும் ஜாலியாக இருக்கும்பொழுது கீழே கிடந்த இராவணனின் சித்திரமானது தெய்விகசக்தி கொண்டதாகி படபடவென்று அடித்துக் கொண்டதாம். அப்போது இராமன், யாரடா இந்த வேளையில் சப்தம் செய்கிறவனென்று கட்டிலின் கீழ் கீழே குனிந்து பார்த்ததும் அங்கு இராவணனின் படம் கிடக்கிறது. அதை எடுத்து சீதையிடம் காண்பித்து, உனக்கு இன்னமும் அந்த புத்தி போகவில்லையே! எவ்வளவு துணிவிருந்தால் இன்னும் இராவணன் ஞாபகமாகவே இருப்பாய் என்று கடிந்துவிட்டு உடனே அவளைக் கொலை செய்து வரும்படி லட்சுமணனை அனுப்புகிறான். அவன் காட்டிற்குச் சென்று அவளை உயிருடன் விட்டு விட்டு ஏதோ ஒரு பொய்யான கை ஒன்றைக் கொண்டு வந்து இராமனிடம் காண்பித்து சீதையைக் கொலை செய்து அவள் கையை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஏமாற்றி விட்டான். இப்படி சீதையின் யோக்கியதை இருக்க அவள் எப்படி பதிவிரதைப் பட்டியலில் சேர்க் கப்பட்டிருக்கிறாள்?

இதனால், இராமன் ஒருவன் இருந்தான், அவன் மனைவி சீதை என்பவள் இருந்தாள் என்பதையோ நாங்கள் அப்படிப்பட்ட கதை ஒன்று நடந்திருக்கிறது என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை என்றாலும், அதன்மூலம் பார்ப்பனர்கள் யோக்கியதை என்ன? அன்று எழுதிய பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டவர்கள்? அவர்களில் ஒரு பெண் பதிவிரதை என்றால் அவளுடைய நடத்தை எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, புராணங்கள் நடந்ததாகக் கூறப்படுவது பொய் என்பதோடு, அதன்மூலம் பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் நாகரிகம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் நாகரிகத்திற்கும், நம் நாகரிகத்திற்கும் முற்றிலும் மாறுபட்டவை என்பதை உணர முடிகிறது. ஆகவேதான், இதுவரையிலும் அநாகரிகத்திலேயே மூழ்கி எதையும் பகுத்தறிவுடன் ஆராயாமல் இருந்ததால் பார்ப்பனர்களின் அநாகரிகம் நம்மிடம் புகுந்து விட்டன.

அவை எல்லாம் இப்போதுதான் விளங்குகிறது. இக்காலம் ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்கும் காலமாகி விட்டது. ஆராய்ச்சியின் பலனால் மனிதன் புதுப்புது அற்புதங்களைக் காண்கிறான். ஆராய்ச்சியின் பலனாக நாகரிகம் மிளிர்கிறது. அநாகரிகம் மறைகிறது. மின்சார சாதனங்களும், அதிசயிக்கத் தக்க விஞ்ஞானக் கருவிகளும் உண்டாக்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற உயர்நிலையை அடைவதெல்லாம் மேல்நாடுகளே தவிர, நம்நாட்டில் அடைய வழிஇன்றிப் போய்விட்டது. காரணம் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் நாஸ்திகர்கள் என்று தூற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் எங்களைப் போன்றவர்கள் நாஸ்திகர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் நாஸ்திகர்கள் தான் என்பதை ஒப்புக்கொண்டு, எதையும் துணிவுடன் செய்ய முற்படுகிறோம். நாஸ்திகம் என்பதற்கே அறிவைக் கொண்டு பார்ப்பனர்களின் மதம், கடவுள், சாஸ்திரம் இப்படிப்பட்டவற்றை ஆராய்தல் என்பது பொருள்; ஆகவே, நாஸ்திகன் என்பவன் பகுத்தறிவாளி என்பதுதான் பொருள். நாங்கள் பார்ப்பனப் புரட்டு களை நம்புகிறவர்கள் இல்லை; அவர்களின் வாழ்க்கைக்குச் சாதனமாக அமைத்துக் கொண்ட யாவற்றையும் ஆராய்கிறவர்கள். எனவே, நாஸ்திகம், நாஸ்திகன் என்பதைக் கண்டு பின்வாங்குகிறவர்கள் இல்லை.

பற்பல துறைகளிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். பற்பல தொல்லைகளும், சங்கடங்களும், கஷ்ட நஷ்டங்களும் உண்டான போதிலும் யாவற்றுக்கும் பின்வாங்காது எங்கள் கடமையைச் செய்து வருகிறோம். பல முறைகளில் ஒன்றுதான் நாடகத்தின் மூலம் பார்ப்பனப் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதாகும்.

நாடகம் என்பது சாயம் பூசிக் கொண்டு கூத்தாடவும், காசு சம்பாதிக்கவும் இருக்கிறதென்றால், அது மிகவும் முட்டாள்தனம் என்றே சொல்லுகிறேன். மக்கள் முன்னேற்றம் காணவும், உண்மை உணரவும் ஆன முறையில் இதுபோன்ற நாடகங்கள் நடிக்கப்படுவது அவசியம். ஆனால், முதலில் நாடகக் கலையைக் கைக்கொள்பவர்கள் பகுத்தறிவுக்கேற்ற வண்ணம் நடந்து நாடகம் நடித்து பெரும் புகழ் பெற்ற பிறகு, மாறிவிடுகிறார்கள். சுயநலத்திற்கும், காசு சேர்க்கவும் ஆன காரியத்தில் பிரியப்பட்டு மாறி விடுகிறார்கள்.

பல தோழர்கள் புகழ் பெற்றவுடன் பார்ப்பனர்கள் சொற்படி கூத்தாட ஆரம்பித்து விடுகிறார்கள். பணம் திரட்டும் முறையில் எதையும் செய்ய, தங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அவை யெல்லாம் அவர்களின் சுயநலத்தையும், மூடத் தன்மையையும் தான் வெளிப்படுத்துகின்றன.

அவ்விதமின்றி பல உண்மை உழைப்பு கொள்ளும் பொது நலத்தொண்டர்கள் முன்வர வேண்டும். சுயநலத்தையும், பணம் திரட்டும் ஆசையையும் விட்டுவிட வேண்டும். புராணங்களின் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். எப்பேர்ப்பட்ட துன்பம் கஷ்டம் வந்தபோதும் துணிவுடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் காலிகளும், கூலிகளும் எவ்வளவோ தொல்லை கொடுப்பார்கள். பண நஷ்டம் ஏற்படும். அவற்றுக்கெல்லாம் மனம் தளரக் கூடாது.

இதுவரை இப்படிப்பட்ட மன ஊக்கமுடன் கழகத்தின் கொள்கைகளையே பரவச் செய்வதற்கென்று பலவித இன்னல்களையும் பாராது பொருள் நஷ்டம் யாவற்றிற்கும் தளராமல் ஊக்கத்தைக் கொண்டு முயற்சித்து வருபவர் நடிகவேள் ராதாவைச் சொல்லலாம். அவரின் நாடகங்கள் முழுமையும் கழகக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதுவரை அவரும் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளாகி நாடகங்கள் நடைபெறாத வழியில் பலர் இடையூறுகள் செய்தாலும் ஒன்றிற்கும் தன்னுடைய மன தைரியத்தை விடாமல் மேன்மேலும் தீவிரமான முறையிலேயே தொண்டாற்றி வருதல் போற்றத் தகுந்ததும் பாராட்டத் தகுந்ததுமாகும். அதைப் போன்று பல இளைஞர்கள் முன்வர வேண்டும். நாடகங்களின் மூலம் புராணப் புரட்டுகளை வெளியாக்க வேண்டும். ஆங்காங்கே இலவசமாக யாவரும் பார்த்து உண்மை உணரும் வண்ணம் தெருக்களிலும், முச்சந்திகளிலும் நாடகங்கள் நடித்து, கழகக் கொள்கைகளைப் பரவச் செய்யும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதாகக் கேட்டுக் கொண்டு தமது சொற்பொழிவை முடித்தார்.

----------------- தந்தைபெரியார் - “விடுதலை”, 24.12.1955

5 comments:

Mohamed Faaique said...

இராமன் ஒருவன் இருந்தான், அவன் மனைவி சீதை என்பவள் இருந்தாள் என்பதையோ நாங்கள் அப்படிப்பட்ட கதை ஒன்று நடந்திருக்கிறது என்பதையோ ஒப்புக்கொள்வதில்

அ.முத்து பிரகாஷ் said...

அற்புதமான பதிவு தோழர் ! சீதையின் பாத்திரப் படைப்புக்கு பின்னாலுள்ள கருத்த மனங்களை தோலுரிக்கிறார் நமது ஆசான் ! கலைஞர்களுக்கு நமது பெரியார் கூறிய அறிவுரைகள் என்றைக்கும் பொருந்துபவை ,எந்த கலைஞர்களுக்கும் !எம் ஆர் ராதா அவர்கள் மீது மதிப்பு கூடுகிறது !வருகிறேன் தோழர் !

Unknown said...

மஞ்சள் எழுத்துக்கள்! நச்சு வார்த்தைகள்! தேவையற்ற இடுகை!தரமற்ற மனிதம்,கேடுகெட்ட அரிப்புகள்! எழுத்துச் சுதந்திரம் ஒரு (?). வெளியிட்ட தமிழ்மணம், எங்கும் சாக்கடை மணம்!

Unknown said...

கொள்கைப் பிரச்சாரம் வேறு! நிந்திப்பது வேறு! உங்களின் எழுத்துக்கள், உங்கள் தரத்தை நிர்ணயிக்கிறது! தரம் தாழ்த்திக் கொண்டீர்! இது சுய கேவலம்!

இந்த வகை எழுத்துக்களாலும்,இடுகைகளாலும், எதிர்வாதிகளையும் சேற்றில் இறங்கத் தூண்டுகிறீர்!

நம்பி said...

//Blogger ரம்மி said...

மஞ்சள் எழுத்துக்கள்! நச்சு வார்த்தைகள்! தேவையற்ற இடுகை!தரமற்ற மனிதம்,கேடுகெட்ட அரிப்புகள்! எழுத்துச் சுதந்திரம் ஒரு (?). வெளியிட்ட தமிழ்மணம், எங்கும் சாக்கடை மணம்!

July 19, 2010 9:59 PM//

//Blogger ரம்மி said...

கொள்கைப் பிரச்சாரம் வேறு! நிந்திப்பது வேறு! உங்களின் எழுத்துக்கள், உங்கள் தரத்தை நிர்ணயிக்கிறது! தரம் தாழ்த்திக் கொண்டீர்! இது சுய கேவலம்!

இந்த வகை எழுத்துக்களாலும்,இடுகைகளாலும், எதிர்வாதிகளையும் சேற்றில் இறங்கத் தூண்டுகிறீர்!

July 19, 2010 10:40 PM//

எது...? இதை எழுதிவைத்த பார்ப்பனனைத்தானே...அதைத்தான் பெரியார் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சிட்டாரே தனியாக பின்னூட்டமிட்டு ஏன்? இன்னொரு காட்டு காட்ட வேண்டும்...

இருந்தாலும் கேடுகெட்ட ஆபாச நாவலை அன்று எழுதிய பார்ப்பனர்களை திட்டத்தான் தோன்றுகிறது...என்ன செய்வது...இதைத்தான் ரொம்ப நாளாக ஓப்பேத்திக்கொண்டு வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

இப்பொழுது வருத்தப்பட்டு என்ன செய்வது இதை வைத்து பெண்களுக்கு நிறைய தொந்தரவுகளை இந்த சமூகம் கொடுத்தது...இவளைப்போல் இருக்கவேண்டும்...அவளைப் போல் இருக்கவேண்டும்...என்ற கொடுமைகள் வேறு.

சேற்றில் அல்ல சாக்கடையிலேயே ரொம்ப காலத்திற்கு முன்னமேயே இறங்கியாச்சு...அதற்கு காரணமே இந்த மாதிரி கேவலப் (இராமயண)புராண புருடாக்கள் தான். தப்பு செய்வதற்காகவே நூல் எழுதி வைச்சிகிட்டாங்க. இப்பொழுது திராவிடர்களைப் பொருத்தவரை இந்தக் கேவலம் தொடரக்கூடாது.

நாட்டில நடக்குற சின்ன குற்றத்தை கூட பெரிய விஷயமா சொல்லிகிட்டு இருக்கிறோம். இதில இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்குது.