Search This Blog

26.7.10

விஜயன் மற்றும் சோ மீது நடவடிக்கை உண்டா?விஜயன், விஜயன் என்ற ஒரு வழக்குரைஞர் இருக்கிறார். அவரின் வேலை என்ன தெரியுமா?

சமூக நீதி இடஒதுக்கீடு என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வாமை (Alargy) என்னும் கிருமி அவரின் ஒவ்வொரு வியர்வைத் துவாரத் திலும் புகுந்து அவரை ஆட்டம் போடச் செய்துவிடும். தானாகவே பேசிக் கொள்வார் சட்டப் புத்தகங்களையெல்லாம் அலமாரியி லிருந்து உருட்டி விடுவார்.

நீதிமன்றத்துக்குச் சென்று ஏதாவது சேட்டை செய்யாவிட்டால், அவரைப் பீடித்த ஒவ்வாமை நோய் அவரை உண்டு இல்லை என்று பார்த்து விடும்.

பார்ப்பனர் அல்லாத அதே நேரத்தில் உயர்ஜாதி மட்டத்தைச் சேர்ந்த இவருக்கு இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர் என்பதால், காதில் பூ சுற்றி ஆடுடா ராமா ஆடு! போடுடா ராமா போடு தோப்புக் கரணம்! என்று பார்ப்பன ஊடகங்கள் விளம்பரக் கோல் எடுத்து ஆட்டும். அவாள் எதிர் பார்ப்புகளுக்குக் கொஞ்சமும் துரோகம் செய்யாமல் குதியாட்டம் போடுவார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தயாரித்துக் கொடுத்த (31சி பிரிவின்கீழ்) சட்டம் அதன் காரணமாக தமிழ் நாட்டில் 69 விழுக்காடு பாதுகாப்பு உறுதிபட்ட நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர் இட ஒதுக்கீடு ஒவ்வாமை நோய்க்காரரான இந்த விஜயன்.

1994 முதல் ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதிமன்றத் திற்குப் படை எடுத்துச் சென்ற இந்தத் திருவாளரின் மண்டையில் இந்த முறை உச்ச நீதிமன்றம் ஆழமாகக் குட்டு வைத்துவிட்டது. ஆடிப்போய்விட்டார் மனிதர். ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லாவிட்டால் அவரின் வீரப் பிரதாபம் என்னாவது!

சூ காட்ட இருக்கவே இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர். விபீடணர்களுக்குப் பூ சூட்டி மேடை கொடுப்பதற்காகவே துக்ளக் இதழை நடத்திக் கொண்டி ருப்பவர் ஆயிற்றே!

இந்த வார துக்ளக்கில் (28-7-2010) திருவாளர் விஜயன் சும்மா பிளந்து தள்ளியிருக்கிறார்.

சமூக நீதிக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால், ஆணை பிறப்பித்தால், திராவிடர் கழகம் அதன் தலைவர் போர்க்கொடி தூக்குவதுண்டு இன்னும் சில நேரங்களில் தீர்ப்புகளையே எதிர்த்து தீயிட்டுக் கொளுத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சாம்பலை அனுப்புவது எல்லாம் கழகத்துக்குச் சர்வ சாதாரணம். அதற்காக சிறை சென்றதும் உண்டு.

அப்பொழுதெல்லாம் இந்த விஜயன் வகையறாக்களும், சோ ராமசாமி வட்டாரங்களும் எப்படியெல்லாம் தீப்பொறி பறக்க கட்டுரைகளைத் தீட்டுவார்கள் தெரியுமா?

நீதிமன்ற ஆணைகளை விமர்சிப்பதா? நீதிமன்ற தீர்ப்புகளைக் கொளுத்துவதா? இவர்களுக்குச் சட்டம் தெரியுமா? இவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று தரைக்கும் வானத்துக்கும் தாவிக் குதிப்பார்கள்.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? இந்த வார துக்ளக்கில் திருவாளர் விஜயன் தமது எழுது கோலை வால(ள)கச் சுழற்றித் தீர்த்திருக்கிறார்.

நீதிபதிகளைச் சாடு சாடு என்று சாடுகிறார்.

மறு ஆய்வு செய்ய தமிழக அரசு வேண்டுகோள் வைத்து, அந்த விஷமத்தனமான வேண்டுகோளின் அபத்தத்தை உணராது. அல்லது அறிந்தோ, அறியாமலோ, உச்ச நீதிமன்றம் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில், எந்த ஒரு தீர்ப்பும் கூறாமல், வழக்கையே தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் முடிவுக்கு (மறுபரிசீலனைக்கு) விட்டுவிட்டது. அதற்கு ஒரு வருட காலம் நிர்ணயமாக அளித்துள்ளது.

17 வருடங்கள் நிலுவையில் இருந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு ஒரு வழியாக எந்தத் தீர்ப்பும் சொல்லாமல், மீண்டும் வழக்கை திருப்பி அனுப்பியதன் மூலம், பிரச்னை அதன் முதல் கட்டத்திற்கே வந்து சேர்ந்தது. மீண்டும் நீதிமன்ற பரிசீலனைக்கு எடுத்துச் சென்றால், இன்னும் எத்தனை வருடங்கள் இந்த நிலையற்ற நிலை தொடருமோ? சீர்வாய் கூறியது போல், தீர்ப்பளிக்கத் தயங்கும் நீதிபதிகள் தாங்கள் ஏற்கும் பதவிப் பிரமாணத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள் என்றே அர்த்தம். முடிவெடுக்க வேண் டியவர்கள் முடங்கிக் கிடந்தால், நீதியும், தர்மமும் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இதன் மூலம் வழக்குரைஞர் விஜயன் என்ன சொல்லுகிறார்?

நீதிபதிகள் பதவிப் பிரமாணத்திற்கு முரணாக அதாவது சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார்கள். முடிவெடுக்கவேண்டிய நீதிபதிகள் முடங்கிக் கிடக்கிறார்கள் நீதியும், தர்மமும் கண்களைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவரும் (தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் ஆகிய மூவரும்) நீதிக்குப் புறம்பாக நடந்துகொண்டு விட்டனர். தர்மத்துக்கு விரோதமாகச் செயல்பட்டுள்ளனர் என்று குற்றஞ் சாற்றியுள்ளனர்.

கடைசியாக நீதிமன்றத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை என்று 5 குற்றப்பத்திரிகைகளையும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மீது படித்திருக்கிறார்.


--------------------------------------------------------------------------------------------------------------

நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்
அவர்களைச் சாடும் விஜயன்

17 வருடம் காத்திருந்ததற்குப் பிறகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை உரிமை பிரச்சினையை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்த்து வைக்காமல் மீண்டும் அரசியல்வாதிகள் கையில் (பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் கூட அரசியல்வாதிதான், பா.ம.க.வினை ஆதரிப்பவர்) கொடுத்துவிட்டது . வழக்குரைஞர் விஜயன் இவ்வாறு துக்ளக்கில் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைச் சிறுமைப் படுத்தியதோடு அல்லாமல், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களை பா.ம.க.வைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தியுள்ளார்.

இது நீதிபதியின் அந்தரங்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகும். இதன் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி நடவடிக்கை எடுக்கலாமே!
-------------------------------------------------------------------------------------------------

சோ மீதும் நடவடிக்கை உண்டா?

கேள்வி: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது பற்றி?

பதில்: தனது முந்தைய தீர்ப்பை ஒட்டி இப்போது தீர்ப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் தயக்கம் காட்டியிருக்கிறது. நீதிமன்றம் தனது பொறுப்பை பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பக்கம் தள்ளி விட்டிருக்கிறது. வக்கீல் விஜயன் சொல்வது போல, இது இப்போதைக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற வேலையாகத்தான் இருக்கிறது. வேண்டாத வாதங்களுக்கும், மேலும் குழப்பத்திற்கும்தான் இது வழி செய்யும்.

துக்ளக் 2872010 பக்கம் 10

சோவும் என்ன எழுதுகிறார் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை தட்டிக் கழித்துள்ளனர். குழப்பத்திற்கு இடம் கொடுத்து விட்டனர் என்று வெளிப்படையாக நீதிபதிகள் மீது பழி சுமத்தியிருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.

-----------------------------------------------------------------------------------------

தீர்ப்புகளை எதிர்த்து திராவிடர் கழகம் செயல் பட்டால் கழகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது சிறைக்கும் அனுப்பப்படுகின்றனர்.

வழக்குரைஞர் விஜயனோ, நீதிபதிகளை பொறுப் பற்றவர்கள் என்றும், நீதி தவறியவர்கள் என்றும், தர்மத்துக்கு விரோதமானவர்கள் என்றும் மிக வெளிப் படையாக எழுதியுள்ளாரே இவர்மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதிகளைக் குற்றவாளிகள் போல சித்திரிக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்ட துக்ளக்கின் மீதும் அதன் ஆசிரியர் சோ மீதும் என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசம்?

சட்டம் எல்லோருக்கும் பொது என்றால், திராவிடர் கழகத்திற்கு ஒரு நீதி இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாதே!

அரசு என்ன செய்யப்போகிறது? நீதித் துறை என்ன செய்யப் போகிறது?

எங்கே பார்ப்போம் !


-------------------- "விடுதலை” 25-7-2010


1 comments:

Unknown said...

தி.கவினர் இதை ஒரு புகாராக உச்சநீதிமன்ற பதிவரிடம் கொடுத்து இவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் என்று கோரலாமே.செய்ய வேண்டியதுதானே.
விடுதலையில் நீட்டி முழக்குவானேன்.