Search This Blog

22.7.10

கீதையும், குறளும்! - 2


மக்களுக்குக் கேடான மூட நம்பிக்கைகளை நாம் தடை செய்ய வேண்டும்!

தஞ்சை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

நல்லவைகளை அனுமதிக்கின்ற நாம் மக்களுக்கு, நாட்டுக்குக் கேடான மூடநம்பிக்கைகளை தடை செய்யவேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்தார்.

தஞ்சையில் (9.7.2010) அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடப்பதோ அது நல்லதாகவே நடக்கும் என்றா சொல்வது? இது கீதையில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கேளுங்கள். அப்படி ஒரு பகுதியை நீங்கள் எளிதில் பார்க்கவே முடியாது. ஒரு முறை லயோலா கல்லூரியில் நான் பேசச் சென்ற பொழுது அப்பொழுது காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரை கைது செய்திருந்தார்கள். அவர் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனார்.

லயோலா கல்லூரியில் என்னோடு மாறுபட்ட பல கருத்துள்ளவர்களை அழைத்தார்கள். மதத்தை எதிர்க்கக் கூடியவரின் சிந்தனை என்கிற முறையிலே என்னையும் அழைத்தார்கள். பா.ஜ.க. முன்னாள் தலைவர் திருப்பூர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். எல்லோரும் பேசி முடித்துவிட்டோம். அடுத்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும். நேர நெருக்கடியிலே ஒருவர் திடீரென்று கேட்டார்.

கீதையைப்பற்றி என்னிடம் ஒரு கேள்வி

கீதையைப்பற்றி நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே என்று கேட்டார். இன்னொருவர், இன்னொரு பக்கத்திலே எழுந்திருந்து சங்கராச்சாரியார் கைதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்றெல்லாம் கேட்டார். நான் உடனே சொன்னேன். இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தலைவர் அனுமதி கொடுத்தால் பதில் சொல்வேன் என்று சொன்னேன்.

அது திறந்தவெளி அரங்கமல்ல. மேடையில் உட்கார்ந்திருக்கின்ற தலைவருக்கு சிரமம் வந்துவிடக்கூடாது. தலைவர் அவர்கள் அனுமதித்தால் சுருக்கமாக விடை சொல்லிவிட்டு அமர்கிறேன் என்று சொன்னேன். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர், தாராளமாக பதில் சொல்லுங்கள் என்று சொன்னார்.

நான் சொன்ன பதிலுக்கு ஒரே சிரிப்பு

நான் பதில் சொன்னேன். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க வேண்டுமோ அது சிறப்பாக நடக்கவேண்டும் என்று சொன்னவுடன் பா.ஜ.க. ராதாகிருஷ்ணன் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோருமே சிரித்து விட்டனர்.

ரொம்ப சிக்கலான விசயத்திற்கே பதில் சொல்லி விட்டீர்களே என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் சொன்னார்கள். அதுபோலவே, நீ கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே இதுதான் சர்வ சாதாரணமாக சொல்வது. நம்முடைய புலவர் அய்யா அவர்கள் ரொம்ப அற்புதமாக கையாண்டிருக்கிறார். சாதாரணமாக சிந்தித்துப் பாருங்கள். தேர்வு எழுதுகிற மாணவரிடம் போய் கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே.

வேலை செய்துவிட்டு சம்பளம் பெறக் கூடிய ஊழியரைப் பார்த்து அல்லது புலவரைப் பார்த்து, தமிழாசிரியரைப் பார்த்து எங்களுக்கு ஊதியம் வேண்டும் என்று கேட்டால் கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னால் சரியா?

சுரண்டப்படுகிறவனை மயக்கத்தில் வைப்பதற்காக...

இதுமாதிரி எப்பொழுது வந்தது? சமுதாயத்தை சுரண்டக் கூடியவன்,. சுரண்டப்படுகிறவனை மயக்கத்தில் வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல். அந்த சொல்லைத்தான் இன்றைக்கும் பயன்படுத்துகின்றார்கள். எந்த இடத்தில் சொல்லுகிறார்கள் என்பது பலபேருக்குத் தெரியாது. அடிப்படையாக எண்ணிப் பார்த்தால் கீதை என்று ஒன்று இருந்திருக்க முடியுமா? இது அறிவியல் காலம். எத்தனை பேர் யோசனை பண்ணினார்கள்?

மூட நம்பிக்கையை தடை செய்யவேண்டும்

இந்த அறிவியல் காலத்திலே 21ஆம் நூற்றாண்டிலே நாம் இருக்கிறோம். அதைத்தான் அய்யா அவர்கள் சொல்லுகிறார். மூட நம்பிக்கைகள் என்று தெரிந்தால் அதை தடை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றார். நல்லதை அனுமதித்தால், உற்சாகப்படுத்தினால் மட்டும் போதாது, அல்லதை தடை செய்யவேண்டும். பழையன கழிதல் புதியன புகுதல் ஆனால் தமிழனைப் பொறுத்தவரையிலே புதியன புகுதல் உண்டு. பழைய கழிதல் கிடையாது. பழையவற்றையும் சேர்த்து புதியவற்றைக் கெடுப்பதுதான் நம்முடைய திருப்பம், ஒவ்வொரு நாளும். அதுவும் எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் படித்தவர்களோ அவ்வளவுக் கவ்வளவு இந்த சிக்கலை அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றவர்கள். ரொம்ப சுருக்கமாக கீதையைப்பற்றி சொல்லுகிறேன் நேரமில்லை.

ஒரிஜினல் பாரதக் கதையில் உண்டா?

எதிரெதிரே இரண்டு படைகள் நிற்கிறது. ஒன்று கவுரவருடைய படைகள். மற்றொன்று பாண்டவருடைய படைகள். போராடுவதற்காக களத்திலே நிற்கிறார்கள். இதில் ரத, கஜ, துரகபதாதிகள் யானைப்படை, குதிரைப்படை என்று சொல்லக் கூடிய படைகள் எல்லாம் இருக்கின்றன. கிருஷ்ணன் பார்த்தசாரதியாக வந்து அவரே தேர் ஓட்டி வருகிறார். இது பாரதத்தில் இருக்கிறது; ஆனால் ஒரிஜினல் பாரதத்தில் உண்டா? என்று கேட்டால் இல்லை. பாரத ஆராய்ச்சி அறிஞர்கள் சொல்லுகிறார்கள் கீதை இடைச் செருகலே தவிர, பலநூற்றாண்டு காலம் இது கிடையாது.

அந்த கீதை என்னவென்றால், பகவான் கிருஷ்ணன் காதோடு காதாக சொன்னது. யுத்தத்தில் போர்ச் சங்கு ஊதியாகிவிட்டது. இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் அம்பை எடுத்து வீசுவதற்குத் தயாராகிவிட்டான். உலகத்திலேயே வில்லுக்கு விஜயன்தான். வேறு யாரும் கிடையாது.

அர்ஜுனன் அம்பு எய்ய முனைகிறான். திடீரென்று தயக்கம் ஏற்படுகிறது. போர்க்களத்தில் எதிரே நிற்கிறவன் எல்லாம் நம்முடைய உறவுக்காரனாயிற்றே அவனை அழிக்கலாமா? அது முறையா? என்று அவர் யோசித்து கொஞ்சம் தயக்கம் காட்டும்பொழுது, உடனே இல்லை... இல்லை... போரினுடைய தர்மம் அது இல்லை. ஆகவே, அவனைத் தயார் படுத்து வதற்காக அந்தக் களத்திலே தயங்கிய அர்ஜுனனை மீண்டும் போராட வேண்டும் என்பதற்காக அவன் களத்திலே வருவதற்காக கிருஷ்ணன் அர்ஜு னனுடைய காதோடு காதாக சொல்லுகிறான் கிருஷ் ணன் உபதேசத்தில் சொல்லியவைதான் கீதை.

காதோடு காதாக சொன்னது எப்படி வெளியே வந்தது?

காதோடு காதாக சொன்னதை யார் எடுத்துக் கொடுத்தார்கள்? யாருக்குத் தெரியும்? ஒன்று அர்ஜுனனுக்குத் தெரியும். அர்ஜுனன் சொல்ல வேண்டும். அல்லது கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணன் சொல்ல வேண்டும். கிருஷ்ணன் சொன்னான் என்று வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். சரி, எப்படியோ வந்துவிட்டது. அந்த ஆராய்ச்சியைக்கூட விட்டு விடுவோம். அதற்கு அடுத்தக் கட்டம் ஒன்று இரண்டு அல்ல. 700 ஸ்லோகங்களை சொல்லி யிருக்கின்றான் கிருஷ்ணன். போரில் எதிரிகள் அப்படியே நிற்கிறார்களா? இன்னும் கீதா உபதேசம் முடியவில்லை என்று பார்த்துக் கொண்டிருக் கின்றார்களா?

கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே!

ஏனென்றால் இப்பொழுதுதான் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று இப்படி எல்லாம் சொன்னால் இதை நம்புவதற்கு ஆள் உண்டா? அதுவும் கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னதினுடைய விளைவு என்ன? அதற்குக் காரணம் என்ன? உன்னுடைய குலதர்மத்தைக் காப்பாற்றியாக வேண்டும். நீ எதிரிகளை அழித்துவிட்டால் பெண்கள் மிஞ்சு வார்கள். பெண்கள் மிஞ்சினால் வேறு குலத்தின ரோடு அவர்களுக்குத் தொடர்புகள் ஏற்படும். வேறு குலத்தினருடன் ஏற்பாடு நடந்தால் உடனடியாக இந்த சமுதாயம் அழிந்துவிடும். வர்ண தர்மம் அழிந்துவிடும். குலதர்மம் அழிந்துவிடும்.

ஆகவே, இதனுடைய நோக்கம் என்ன? ஜாதியைக் காப்பாற்றுவது. வர்ணத்தைக் காப்பாற்றுவது. கிருஷ்ணன் சொல்லுகிறான். நால் வர்ணங்களையும் நானே உருவாக்கினேன் என்று. சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நான்கு ஜாதிகளை நான்தான் உருவாக்கினேன் என்று கிருஷ்ணன் சொல்லு கின்றான். கடவுள் உண்டாக்கியதை யாராலும் மாற்ற முடியாது என்று எழுதி வைத்து விட்டார்கள்.

எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

ஜாதிக்கு ஆதரவாக இந்தக் கருத்து இருக்கும்பொழுது எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? ஆகவே உள்ளே போய் சிந்திப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரு பெரியாரோ அவருடைய இயக்கமோ, அவருடைய சிந்தனையாளர்களோ இதை எடுத்துச் சொல்லக்கூடிய அளவிலே இருந்தார்கள்.

புலவர் வீரையன் இந்த நூலிலே எழுதுகின்றார், இனிமேலாவது கீதையும் குறளும் ஒன்று என்று கருத்தை விடுங்கள். இதில் என்ன கொடுமை என்றால் கீதையைப்பற்றி பேசுவதைவிட கீதையும், குறளும் ஒன்று என்று சொல்லுகிறார்கள். அதைத்தான் அவர் நிலவும், இருளும் ஒன்றாகுமா என்று கேட்டார்.

இமயமும், குப்பைமேடும் இணையாகுமோ?

சந்தனமும், சாக்கடையும் சமமாகுமோ, இமயமும், குப்பை மேடும் இணையாகுமோ, குதிரையும், கழுதையும் நேராகுமோ, குறளும், கீதையும் நிகராகுமோ என்று வீரையன் கேட்டார், பாருங்கள். இதை எழுதுவதற்கு அவ்வளவு சுலபமாக எந்தப் புலவருக்கும் நம்முடைய நாட்டிலே இன்றைக்குகூட துணிச்சல் வராது. வாய்ச் சோற்றைப் பெரிதென்று நாடலாமோ? ஏ பாடகர்காள்! என்று புரட்சிக் கவிஞர் கேட்டார்.

மனிதனுக்கு வயிறு மட்டுமல்ல...

சில பேரை கேட்டால் வயிற்றைத் தட்டிக் காட்டுவார்கள். மனிதனுக்கு வயிறு மட்டுமல்ல, மூளையும் இருக்கிறது. காலாவதியான மருந்துகள் இன்றைக்கு வேட்டையாடப்படுகின்றன, நல்லது. காலாவதியான உணவுப் பொருள்களைத் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள். அதைத் தவிர்க்க வேண்டுமென்று நினைக்கின்றார்கள், நல்லது.

ஆனால் அதைவிட கொடுமையானது, கெடுதலானது எது என்றால் காலாவதியான கொள்கைகள்தான். அது மனிதனுடைய மூளையைக் கெடுக்கும்; அறிவைக் கெடுக்கும். அதைத் தடுக்க வேண்டிய பணியைத்தான் நம்முடைய புலவர் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார். அவர் தன்னுடைய நோயைப்பற்றிக் கவலைப்படாமல், சமுதாயத்தில் இருக்கின்ற நோயைப்பற்றி கவலைப்பட்டிருக்கின்றார். பல கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.

முன்னுரையில் சொல்லும் பொழுதுகூட சொல்லியிருக்கின்றார். புலவர் என்றால் கம்பனைப் பற்றி பேசினால்தான் பெருமைப்படுவார்கள் என்று கருதினார்கள்.

கம்பரைப்பற்றி அண்ணா

அண்ணா போன்றவர்கள் கம்பரைப் பற்றி எழுதுவதோ மற்றவர்கள் சொல்லுவதையோ அவர்களுக்கு இராமாயணத்தைப் பற்றியே தெரியாதது போல மற்றவர்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப்பற்றியும் இந்த நூலின் முன்பகுதியிலேயே நூலாசிரியர் வீரையன் மிக அருமையாகச் சொல்லுகின்றார்கள். கம்பன் நம்முடைய தமிழ்ச் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய சங்கடத்தை உருவாக்கினான் என்பதை எல்லாம் விளக்கியிருக்கின்றார்கள்.

மேலும் டி.கே.சி. அவர்கள் சொன்னதை எடுத்துக் கையாளுகிறார்கள். கம்ப ராமாயணத்திலே இருக்கிற பாடல்கள் பல, கம்பனால் எழுதப்பட்ட தல்ல என்று அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

இடைச் செருகலும், இலக்கியமும்

எனவே இடைச் செருகலும், இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்தால் அது பல தொகுதிகளாக எழுத வேண்டியிருக்கும். எனவே அவர்களைப் போன்ற ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களாக இருந்தவர்கள், நல்லஆய்வு செய்கிறவர்கள் எழுத வேண்டும்.

சிவ.வீரையன் அவர்களுக்கு இந்த நோய் தாக்கிக் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்பொழுது அந்த நோய்மீது நமக்கு வருகிற கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.

ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் சமுதாயத் திற்குக் கிடைப்பதே அரிது. இப்படிப்பட்டவர்கள் முன்வருவதே அரிது, அப்படி வரும் பொழுது அவர்கள் தன் நோயைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் இந்த கருத்துகள் பரவ வேண்டும் என்பதைத் தான் தன்னுடைய நூலிலே எடுத்துச் சொல்லுகின்றார்கள்.

கோயில் என்றால் மன்னன் இல்லம்...!

தமிழன் என்றும் ஏமாளி என்ற நூலை எனக்கு இங்கே வந்த பிறகுதான் கொடுத்தார்கள்.

நான் அவசர, அவசர மாகப்புரட்டினேன். அதிலே ஒரு கருத்து பளிச் சென்று பட்டது. நம்முடைய நாட்டிலே இருக்கக் கூடிய மக்கள் எப்படி எல்லாம் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் சொல்லும்பொழுது அழகாகச் சொல்லுகிறார்கள்.-இதிலே ஒரு பகுதி 67ஆம் பக்கம் கோயில் என்றால் மன்னன் இல்லம். வாழ்ந்த அரண்மனை என்னும் பொருள். அது மறைக்கப்பட்டது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் எழுதிய குடும்ப விளக்கிலே அய்ந்தாவது பகுதி முதியோர் காதலைப் பற்றிச் சொல்லுகின்றார். இந்த முதியோர் காதல் பகுதியிலே ஒரு சுவையான நிகழ்வு இருக்கிறது. புரட்சிக் கவிஞர் சொல்லுகின்றார். பேரப் பிள்ளைகள்தான் தாத்தாக்களோடு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றன.

---------------------தொடரும் ... “விடுதலை” 22-7-2010

0 comments: