Search This Blog

12.7.10

கருஞ் சட்டையின் உரிமைக்குரல் ராஜபக்சேக்களின் செவிப்பறைகளைக் கிழிக்கட்டும்!

அணிதிரள்வீர்!ஆர்ப்பரிப்பீர்!

தோழர்களே, தோழர்களே நாகையில் நாளை மறுநாள் (14-7-2010) புதன் காலை அவிரித் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

ஏனிந்த ஆர்ப்பாட்டம்? தமிழக தமிழின மீனவர் பாரம்பரியம் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்த பகுதிகளில் மீன் பிடிக்கக்கூடாதாம்.

சொல்லுவது யார்? தமிழக மீனவர்களைக் கொல்லுவது யார்?

இலங்கை அரசு - அப்படியென்றால் சிங்கள அரசு. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமா?

சிங்களர்கள் தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறார்கள். 1983 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை, 2,15,000 - இது உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளி விவரம். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களைப் படுகொலை செய்வதோடு மட்டும் அல்லாமல் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களை தமிழ் மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறார்கள். இதுவரை இப்படிப் படுகொலை செய்யப் பட்ட தமிழின மீனவர்கள் பற்றி மதிப்பீடுகூட செய்ய முடியாத அளவுக்கு எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழர்கள் கொந்தளித்து எழுவதும், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதும், மத்திய அரசு கவனிக்கிறேன் என்பதும், குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிப்பது என்பதும் ஒரு சடங்காச்சாரமாகவே பழகிப் போய்விட்டது. கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது.

இந்த முறை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் சுருக்கென்று தைப்பது போலவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

போதும் போதாதற்கு தமிழர் பகுதியில் சீனர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை சிங்கள அதிபர் ராஜபக்சே அனுமதி கொடுத்துவிட்டார்.

இது ஓர் அடுத்த கட்ட ஆபத்து - பேராபத்து!

ஏற்கெனவே சீனாவால் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் உலகம் அறிந்த ஒன்று.

இலங்கைக்கு இந்தியா அனுப்பியதை விட சீனா அனுப்பியுள்ள ராணுவ ஆயுதங்கள் அதிகம்! அதிகம்!

பிரதமராக இருந்த நேரு அவர்கள் தொலை நோக்கோடு ஒன்றைக் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒரு கேந்திரமாக உள்ளது. அது எதிரி பக்கம் சேர்ந்தாலும், நடுநிலை வகித்தாலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கும் என்றார்.

இது இப்பொழுது என்ன நடந்துவிட்டது? சாலைகள், மின்நிலையங்கள் போன்ற இலங்கையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்வதில் சீனாவின் பங்கு நாளும் அதிகரித்து வருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவை சுலபமாகத் தாக்கும் தொலைவில் முக்கிய அணு மின் நிலையங்கள் வந்துவிட்டன.

இதற்கு முன் சீன யுத்தத்தின் போதும், பாகிஸ்தான் போரின் போதும், இந்தியாவின் எதிரியின் பக்கம்தானே இலங்கை இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு இலங்கை வழங்குகிறது என்றால் இதன் பின்னணியில் பெரும் சதி இருக்கக்கூடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கப்பல் படையால் தாக்கப்படுவது போதாது என்று இனி சீனாவின் கப்பற்படையாலும் தாக்கப்படும் பயங்கர நிலை.

இலங்கை என்னும் சிங்கள அரசால் இந்தியாவிற்கு நாளும் ஏற்பட்டு வரும் ஆபத்தைப் புரிந்து கொள்ளவில்லையா இந்தியா?

இன்னும் ராஜபக்சே வகையறாவுக்குச் சிவப்புக் கம்பளம் ஏன்?

இதற்கு முன் ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாகவும் பலமுறை அறப் போராட்டங்களை பேரணிகளை நாம் நடத்தியதுண்டு.

இப்பொழுது நாகையில் நாம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம் மேலும் கூடுதல் காரணத்துக்காக என்பதைக் கழகத் தோழர்களே, மறந்துவிடாதீர்கள், மறந்துவிடாதீர்கள்!

தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல; இந்தியா-வுக்கும் சேர்த்து சூழ்ந்துள்ள ஆபத்தினைச் சுட்டிக்காட்டும் நோக்கமும் இதில் பொதிந்-திருக்கிறது. ஆர்த்தெழுவீர் தோழர்களே!

கத்தும் கடல் சூழ்ந்த நாகையிலே கருஞ் சட்டை கொடுக்கும் உரிமைக்குரல் ராஜபக்சேக்களின் செவிப்பறைகளைக் கிழிக்கட்டும்!

இந்திய அரசின் கேளாக் காதுகளையும் கேட்க வைக்கட்டும்!

அணிதிரள்வீர் - அணி திரள்வீர்!

ஆர்ப்பரிப்பீர் - ஆர்ப்பரிப்பீர்!

----------------- மின்சாரம் அவர்கள் 12-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Anonymous said...

கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இத தாண்டி நாம போக கூடாதே. ஆட்சியாளர்கள் கோபத்துக்கு ஆளாக கூடாதே.

தமிழ் ஓவியா said...

அட இவ்வளவு பெரிய அறிவாளியை (நெருப்பு)இத்தனை நாள் பதிவுலகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதோ.

ஆட்சியளர்களின் அடக்குமுறைகளால், தடா போன்ற கொடுஞ்சட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது கருஞ்சட்டைகள் என்ற வரலாறு உரிமைபேசும் நெருப்புக்கு தெரியாமல் இருப்பது வரலாற்றுப் பிழையே.