Search This Blog

25.7.10

இராமாவதாரத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?

திராவிட மக்களை இழிவுபடுத்தும்
புராணங்கள் ஒழிக்கப்படவேண்டும்!

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித் தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும், நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய இழி மக்களாக, சூத்திரர்கள், பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டு மென்றால் மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய, முழுப் போராட்டமாகவோ, முடிவான போராட்டமாகவோ ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியில் மேம்பாடும், வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடாது. மேலும் இவ்விழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல், சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும் அதாவது வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரா முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும், தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தான்!

இவர்கள் எல்லோருமே இன்றில்லையானாலும், நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க, அதற்காக புரட்சி செய்ய ஒன்றுபடப் போவது நிச்சயம். எனவேதான் நாம் பல எதிர்ப்புகளுக்கிடையேயும் திராவிடர் கழகம் என்கிற பேராலேயே தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த ஆரியர் _ திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியரால் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்து கலாச்சாரத்திற்கு அதாவது ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.

எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிடர் கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. திடமான உறுதியுண்டு.

வெள்ளையனுடைய சுமார் 200 வருட கால ஆட்சியும், நமது அய்ந்து வருட கால பகுத்தறிவுப் பிரசாரமும், ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை, குறிப்பிட்டத்தக்க அளவுக்குக் குறைத்திருக்கின்றன. சமுதாய உயர்வு, தாழ்வுகள் இன்று அவ்வளவாக மக்கள் மனதைப் பீடித்து நிற்கவில்லை. முன்பெல்லாம் ஓர் உயர் ஜாதிக்காரனுக்கு ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு வயிறெல்லாம் வேதனைப்படும்.

இன்று அப்படிக்கில்லை. யார் கடையிலும் டீ சாப்பிடுவதும், யார் கையாலும் தண்ணீர் குடிப்பதும் சகஜமாகி விட்டது. இன்னார் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதே தனக்குப் பெருமை என்று இருந்தது போய், இப்போது தனக்கு அது மரியாதைக் குறைவு என்று நினைக்கும்படிக்கும் அருகிலுள்ளவரும் இன்னும் இந்தக் காட்டுமிராண்டி காலப் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவும் ஆன நிலை ஏற்பட்டிருக்கிறது. குருகுலப் போராட்டத்தின்போது பார்ப்பனர்களுக்கு தனி இடமும், தனி உணவும் இருக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தது போய், அவர்களே பெரும்பாலோர் இன்று ஜமபந்தி போஜனம் பற்றியும், சம உரிமை பற்றியும் பேச முன்வந்திருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா மாணவ உணவு விடுதிகளிலுமே ஒரே சமையல், ஒரே இடத்தில் எல்லோரும் சமமாய் உட்கார்ந்து சாப்பிடல் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண் கொள்வது கொடுப்பது என்பது தவிர்த்து மற்ற எல்லாவற்றிலுமே ஓர் அளவுக்காவது சமத்துவம் வந்திருக்கிறது. அதிலும் பார்ப்பனருக்கு சகிப்புத்தன்மை வந்து இருக்கிறது. மனு தர்மத்தைப் பற்றிப் பேசினால் எங்கு தம் நிலை இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாகிவிடுமோ என்று பார்ப்பனர்களே மனுதர்மத்தைப் பற்றிப் பேச அஞ்சும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடவுள் விஷயத்திலும் முன்போல் யாரும் பக்தி செலுத்துவதில்லை. அதுவும் கோயிலில் தாசிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் இருபாலிலும் வெகுவாகவே குறைந்துவிட்டது. தேர் திருவிழாக்களிலும் மக்கள் முன்போல் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. கடவுள் பக்தி குறையவே, கடவுளுக்குக் கோவில் கட்டுவதும், மானியம் கொடுப்பதும் குறைந்துபட்டு, பள்ளிக்கூடம் கட்டவும், ஆராய்ச்சிக் கல்லூரிகள் அமைக்கவும், ஆஸ்பத்திரி கட்டவும் பணம் உதவப்பட்டு வருகிறது.

என்றாலும் இவையே போதுமானதாகிவிடாது. இன்னும் புராணங்கள் மதிக்கப்பட்டு வருகின்றன. புராணப் பாத்திரங்களே நமக்குக் கடவுள்களாகவும், புராணக் கருத்துகளே நமக்கு மதக் கருத்துகளாகவும், பண்டிகை விரதங்களாகவும் இன்னும் இருந்து வருகின்றன. பழங்காலத்தில் சரித்திரத்துக்கு முந்திய காலத்தில் ஆரிய கலாச்சாரத்தை யார் யார் எதிர்த்தார்களோ, அவர்களை இழித்தும், பழித்தும் பேசி அவர்கள் ஒழிக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறும் கதைகளே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும். ஆரியத்தை எதிர்ப்பவன் இன்ன கதிக்குள்ளாவான் என்பதை எடுத்துக்காட்டி, மக்களைப் பயமுறுத்தி ஆரியத்தின் உயர்வில் நம்பிக்கை கொள்ளுமாறு செய்வதற்கென்றே எழுதப்பட்டனவாகும். அவைகள் ஆரியத்தை எதிர்த்தவர்கள் அத்தனை பேருமே நம்மவர்கள்; திராவிடர்கள். அவர்கள் அத்தனை பேருமே ஒழுக்க ஈனர்களாக, அயோக்கியர்களாக ஆரியத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத் திராவிடர்களை ஒழித்த எல்லாருமே நமக்கு கடவுளர்களாக ஆக்கப்பட்டு, அவற்றை நாம் இன்றும் தொழுது வருகிறோம். இராவணனை அழித்த இராமன் நமக்குத் தெய்வம். இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் நமக்கு ஆழ்வார். இரண்யனை ஒழித்த நரசிம்மாவதாரம். நமக்குக் கடவுள், நரகாசுரன் ஒழிக்கப்பட்ட தினம், நமக்குப் புண்ணிய தினம். இப்படிப்பட்ட கதைகளே தான் நம் புராணங்கள். என்னே அறியாமை!

நம்மவரின் முன்னேற்றத்திற்காக, நம்மவரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட நம் மன்னர்கள் ஒழிக்கப்பட்ட தினங்களா நமக்குப் புண்யதினங்கள்? நம்மவரை வென்ற கதாபாத்திரங்களா நமக்குத் தெய்வங்கள்?

இவ்வறியாமையிலிருந்து நாம் என்றுதான் மீட்சி பெறுவது? மதம் என்றால் மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.

இஸ்லாம் மதத்தைப் போன்றோ, பவுத்த மதத்தைப் போன்றோ, கிறித்தவ மதத்தைப்போன்றோ நல்லொழுக்கத்திற்கான சில கோட்பாடுகளைக் கொண்டதாக நம் நீதியும், புராணங்களும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மதத்தை சிலர் ஏற்று நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால், நாம் இன்று கடைப்பிடித்து வரும் மதம் அப்படிப்பட்ட மதம் அல்லவே.

உலகிலுள்ள மற்றவர்களெல்லாம் உருவமற்ற கடவுளை வணங்கும்போது, நம் கடவுளர்களுக்கு உருவங்கள் பலப்பல. அதற்கு பெண்டுகளும், சுற்றமும் ஏராளம். ஆடை, துணிமணி, சோறு, படையல் ஏராளம். அவற்றின் பேரால் பிழைத்துவரும் சோம்பேறிக் கூட்டங்கள் பல ஆயிரம். இவற்றில் நம் மடமைக்கு எல்லை காணவே முடியாதே?

புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல நீதி, நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள் நாலு பேருக்கு ஏதேனும் உதவி செய்து, உனக்கு அடிமையாக்கிக் கொள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இன்றும் பார்ப்பனர்கள் நன்மையடைந்து வருகிறார்கள். இராமன், இராவணனைக் கொன்றது விபீஷணன் உதவியால்; வாலியைக் கொன்றது சுக்ரீவன் உதவியால், விஷ்ணு இரண்யனைக் கொன்றது பிரகலாதன் உதவியால், இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவேதான் இன்றும் நம்மவர்கள்களான ஓட்டாண்டிகள் பலருக்கு தகர போணிகள், சிலருக்கு பதவிகள், உயர் உத்தியோகங்கள், லைசென்சு, பர்மிட்கள், தியாகி மான்யங்கள் கொடுத்து நம் மீது உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள்.

பணம், பதவி என்றால் மானங்கெட்ட மக்களுக்கு ஆசை ஊறத்தானே செய்யும்? சுலபத்தில் அந்நியருக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். அதனாலேயே ஆரியம் இன்னும் இந்நாட்டில் கொட்டம் அடிக்கிறது.

முஸ்லிம்கள் ஒரு சமுதாய மக்கள். அவர்களில் யாரேனும் ஒருத்தர் ஏதேனும் சொன்னால், இது நமது நன்மைக்கு உதவும் என்று தெரிந்தால், உடனே அவர்களில் பெரிதும் எல்லோரும் அதை ஏற்று ஒற்றுமையோடு அதைப் பின்பற்றுவார்கள். பார்ப்பனர்களும் அப்படித்தான். தன் சமுதாய நன்மைக்கான காரியம் ஏதேனும் சொல்லப்படுமானால், அதனை எல்லோருமே ஏற்று அதன்படி நடப்பார்கள். அதனால்தான் பார்ப்பனர் நினைத்தாலும், முஸ்லிம்கள் நினைத்தாலும் உடனுக்குடன் வெற்றி பெறும் காரியங்கள், நாம் நினைத்தாலும் அதற்காக அரும் முயற்சிகள் பல செய்தாலும், வெற்றி பெறாமல் இருந்து வருகின்றன.

நம்மவருக்குள் ஒற்றுமையில்லை. பொறாமை அதிகம். சுயநலமே நமக்கு பெரிதாய் இருந்து வருகிறது. சகோதரியை, தாயை, மகளை தாசியாக விட்டு வாழும் வாழ்க்கை இன்னமும் திராவிடரில்தான் உண்டு. எனவேதான் நாம் பலகாலமாகவே அந்நியருக்கு ஆட்பட்டுக்கிடக்கிறோம். நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

ஒவ்வொருத்தனும் சமுதாய நலனையே பெரிதாகக் கொண்டு அந்நிய கலாச்சாரத்திலிருந்து, அந்நிய ஆதிக்கத்திருந்து விடுபட முயற்சி செய்தல் வேண்டும்.

தமிழர்கள்தான் ஆதி முதல் ஆரியத்தை வெறுத்தவர்கள் என்று பேர். ஆனால், அவர்கள்தான் இன்று ஆரியத்தை, ஆரியக் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். கம்பராமாயணம் நம்மை இழிவுபடுத்தும் நூல். அதில் வரும் இராமன் மகா கொடியவன். நாணயம் அற்றவன். அதில் வரும் இராமனின் சுற்றத்தார் மகா பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் 25 வருடமாகக் கத்தி வருகிறோம். என்றாலும் நம்மவரே அதிலும் மகா மகா புத்திசாலிகளே, இராமாயண விழா, கம்பர் விழா நடத்துவதில் முனைந்திருக்கிறார்கள். அந்த இராமாயணத்தை யானை மீது வைத்துக்கொண்டு ஊர்வலம் வருகிறார்கள்.

இராமாவதாரத்திற்குக் காரணம் என்ன தெரியுமா? மகாவிஷ்ணு மகா அழகியான ஓர் அசுரனுடைய மனைவி மீது மோகம் கொண்டாராம். அவள் சம்மதிக்கவில்லையாம். அந்த அசுரனை சிவனைக் கொண்டு சாகடித்து அந்த உடலில் புகுந்து கொண்டு, அவளை அனுபவித்தாராம். அதை அவள் எப்படியோ தெரிந்து கொண்டு, நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இன்னொருத்தன் கொண்டு சென்று அனுபவிக்க, நீ வேதனைப்பட வேண்டும் என்று சபித்தாளாம். அந்த சாபத்தை அனுபவிக்கத்தான் விஷ்ணுவுக்கு இராமாவதாரம் ஏற்பட்டதாம். கடவுள் அவதாரம் ஆயிற்றே ஒழுங்காகவாவது அவதரிக்கக் கூடாதா? யாரோ தசரதனாம், அவனுக்கு 60,003 பேர் மனைவிகளாம். எங்காவது அடுக்குமா? இது தினத்திற்கு ஒரு மனைவி என்று முறை வைத்துக் கொண்டால்கூட, ஒரே மனைவியை இரண்டாம் முறை சந்திக்க 150 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுமே. அவர்கள் குடியிருக்க ஒரு பெரிய முனிசிபாலிடியே போதாதே! அவன் 60,000 வருடங்கள் அரசாண்டானாம். இருந்தும் ஒரு பிள்ளைகூட பிறக்கவில்லையாம். என்னே வெட்கக் கேடு? அதற்காக யாகம் செய்கிறார். தன் மனைவிகளை புரோகிதர்களிடம் ஒப்படைக்கிறார். அவர்கள் பிள்ளைகள் கொடுத்து அதற்கு கைம்மாறாக பொன் பெற்றுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களாலா கடவுளானவர் அவதரிப்பது? கடவுளாக அவதரித்த அந்த இராமனின் யோக்கியதை எப்படிப்பட்டது தெரியுமா? பரதனுக்குரிய பட்டத்தை தான் அடைய தன் தகப்பனாரோடு சூழ்ச்சி செய்கிறான். பரதன் வருவதற்குள்ளாகவே பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று தகப்பன் கூறியதற்கே அவனோடு ஒத்துழைக்கிறான். அவன் மட்டுமல்ல, அவர்களின் குலகுருவான வசிஷ்டனும் உடன் ஒத்துழைக்கிறான். ஆகவே, திருமணத்தின் போதோ ஜப பட்டம் அவர்களுக்கு உரிமையாக்கப்பட்டதென்பதையும், தசரதன் அவளுடைய பிரதிநிதியாகவே அரசாண்டு வந்தான் என்பதையும் நன்றாக உணர்ந்தும்கூட, வசிஷ்டன் ஒத்துழைக்கிறான். போகட்டும். இராமன் காட்டிலிருந்து திரும்பி வந்து அரசாட்சி செய்கிறானே, அப்போதாவது ஒழுங்காக அரசாள்கிறானா? எவனோ ஒரு வண்ணான் எவனோடோ ஓடிப் போயிருந்த சீதையை இவன் அழைத்து வந்து விட்டான்; அவள் கர்ப்பவதியாகி இருக்கிறாள் என்று கேவலமாகப் பேசினான் என்பதற்காக தன் மனைவியின் கற்பில் சந்தேகம் கொண்டு உடனே கர்ப்பத்தோடு காட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறான்.

--------------------------------------------------------------
இந்த ஆரியர் திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியரால் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்து கலாச்சாரத்திற்கு அதாவது ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.

எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிடர் கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. திடமான உறுதியுண்டு.
------------------------------------------------------------

ஒரு மன்னன் நீதி செலுத்தும் முறையா இது? அதிலும் கடவுள் நடத்தும் நீதியா இது? எவனோ தெருவில் போகிறவன் குறை கூறினான் என்று தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பக் கூடியவனும் எங்காவது நீதிமானாக ஆக முடியுமா? கடவுளாக முடியுமா? அவன் தம்பி அவளை பொய் சொல்லி ஏமாற்றி, நந்தவனத்திற்கென்று அழைத்துச் சென்று, காட்டில் தனியே விட்டு விடுகிறான். என்ன என்று அவள் கேட்டபோது, அண்ணன் அவள் மீது சந்தேகப்பட்டு, அப்படி காட்டில் விட்டு விட்டு வரும்படி சொல்லியதாகக் கூறி விடுகிறான். அவள், அப்படியா சங்கதி, இதே பார். நான் இப்போதே கர்ப்பவதியாகத்தான் இருக்கிறேன். அப்புறம் யாருக்கோ உண்டாயிருக்கிறேன் என்று சொல்லி விடப் போகிறார் என்று தன் வயிற்றைக் காட்டி, தன் கணவனிடம் அதைச் சொல்லும்படி கூறி அனுப்புகிறாள். என்னே கேவலம்? எத்தனை தடவை தான் இம்மாதிரியான தொல்லைக்குள்ளாவது? ஏ பூமாதேவி! நான் உன்னோடு கலந்து விடுகிறேன். கொஞ்சம் வழி விடு! என்று ஏதோ குழியில் விழுந்து சாகிறாள். கடைசி வரை சீதை தன்னை ஒரு பதிவிரதை என்று ஒப்புக் கொள்ளவே இல்லை. இராவணனிடமிருந்து சிறை மீட்டுச் சென்றபோதும், என் சரீரத்தைப் பற்றிக் கேட்காதே. என் மனம் இன்னொருத்தனை நாடவில்லை என்பதற்காகத்தான் செல்கிறாள். இராவணன் பராக்கிரம வீரன். அவனிடம் சிக்கிக் கொண்டு விட்டேன். நான் பெண். என்ன செய்ய முடியும்? என்று கூறினாள்.

தன் மனைவி மீது சந்தேகப்படுபவனும், மோசத்திலும், பித்தலாட்டத்திலும் கைதேர்ந்தவனும் ஆன இராமனா நமக்குக் கடவுள்? அவனுடைய அப்படிப்பட்ட மனைவியையா நம் தொழுவது?

பின்னாடியாவது யோக்கியனாக அரசாண்டிருக்கிறானா இந்த இராமன்? யாரோ ஒரு பார்ப்பனப்பிள்ளை இறந்துவிட்டது என்பதற்காக எங்கோ ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் என்ற திராவிடனை வாளால் வெட்டிக் கொல்கிறான். இப்படியெல்லாம் நடந்திருக்குமென்று நாம் கருத முடியாது என்றாலும், இப்படிப்பட்ட ஆபாசமாய் கடவுள் கதை எழுதலாமா? மெய்யென்றாலும், நம்பலாமா? இந்தப்படியான கதையில் வரும் பாத்திரங்களும், நடப்பும் நமக்குக் கடவுளும், கடவுள் நீதியும் ஆகலாமா என்றுதான் சொல்கிறேன். இது அறிந்தும் ஏனோ நம் மக்களுக்கு புத்தி வரவில்லை. ஆரிய மோகம் இன்னும் அழிந்தபாடில்லை.

ஆகவே, தோழர்களே, இப்படிப்பட்ட மடமை, இழிவு நீங்கிய தமிழ்ப் பணியை வளர்ப்பதே, தமிழ்க் கலாச்சாரத்தை வளர்ப்பதே, உங்களது முக்கியக் கருத்தாகக் கொண்டு நீங்கள் பாடுபட வேண்டும். ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டாலொழிய நமக்கு நல்வாழ்வில்லை; முன்னேற்றமில்லை. நம் தமிழர்களுக்கும் ஆரிய கலாச்சாரத்துக்கு அடிமைப்பட்டு, ஆட்சி செலுத்தி கோயில், குளம், சத்திரம், வேத பாடசாலை கட்டிய வீணர்களே ஆவார்கள். நமக்கு இலக்கியங்கள் என்பவைகளும் பெரிதும் இப்படிப்பட்டவைதான். ஆதலால், எல்லாத் துறைகளிலும் ஆரிய ஆதிக்கம் அகல நீங்கள் பாடுபட வேண்டும் என்பதுதான் தமிழ் இளைஞர்களாகிய உங்களுக்கு எனது வேண்டுகோள். இதைவிட இந்நாட்டைப் பொறுத்தவரை வேறு முக்கிய பொதுநலத் தொண்டு நமக்கில்லை. எனவே இதில் ஊக்கம் காட்டுங்கள் என்று கூறி முடித்தார்.

24.1.1950இல்
சென்னை ராபின்சன்பார்க் கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை (விடுதலை 26.1.1950)

2 comments:

Anonymous said...

நான் ஓரு பாா்ப்பனனல்லாதவன். தீண்டாமை,பாா்ப்பனா்களின் குறுகிய மனப்பாண்மை,மூடபழக்கவழக்கங்கள்,சாதி,மத,பண பேதங்களை ஒழிக்க சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். கடவுள் பற்றிய கட்டுக்கதைகள் வேண்டுமானால் சித்தரிக்கப் பட்டவையாக கூட இருக்கலாம்.ஆனால் உலகில் எந்த கடவுளுமே இல்லை என்று சொல்வது ,,, - போலீஸ்கார்களில் சிலர் பேர் தவறு செய்கிறாா்கள் என்றவுடன், போலீஸே இருக்கக் கூடாது - என்பது போல் ஆகிவிடும். போலீஸ் இல்லை என்றால் இன்றைய நாட்டு நடப்பில் ”தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” போல் ஆகிவிடும். கடவுள் இருக்கிறாா் என்று பலபேர் நம்புவதால்தான், இன்று நிறைய பேர் தன் வேலையை மட்டும் செய்து விட்டு, பாவம் செய்யாமல் இருக்கிறாா்கள். மனிதன் நல்ல குணத்துடன் வாழவாவது, கடவுளை கொஞ்சம் விட்டு வையுங்கள்.நன்றி!!!

Unknown said...

கடவுளை உண்டாக்கியதே செய்யும் பாவ காரியங்களுக்கு சப்பை கட்டு கட்டத்தான்.