Search This Blog

18.7.10

தமிழர் முன்னேற வழி - பெரியார் அறிவுரை

தமிழர் முன்னேற வழி

தமிழர் முன்னேற வழி என்ற தலைப்பில் கலை பொங்கல் விழாமலருக்கு ஒரு கட்டுரை எழுதித்தரும்படி கலை ஆசிரியர் நண்பர்கள் பாலு சகோதரர்கள் ஆசைப்பட்டார்கள். எனக்கு இருக்கும் கவலைகளுக்கு இடையிலும், வேலைத் தொந்தரவுகளுக்கு இடையிலும், உடல் நலக் குறைவு. மறதி, வாழ்வில் சலிப்பு ஆகியவற்றிற்கு இடையிலும் கலை போன்ற உயர்ந்த பத்திரிகைகளுக்கும், மலர்களுக்கும் கட்டுரை எழுதி அனுப்புவது என்றால் அது எனக்கு மிகுதியும் சங்கடமான காரியமாகும்; என்றாலும் பாலு சகோதரர்கள் விஷயத்தில் மறுப்பது என்பது எனக்கு, அதைவிடக் கஷ்டமான காரியமாக இருப்பதால் நான் எழுதுவது கலைக்குப் பயன்பட்டாலும் படா விட்டாலும் நண்பர்கள் திருப்திக்காவது பயன்படச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் ஏதோ எழுத முன் வருகிறேன்.

அதிலும் நான் 81 ஆம் வயது நடக்கும் கர்னாடகப் பேர்வழி என்பதோடு அழகு செய்வதன் மூலம் உண்மையில் இருந்து வரும் அவலட்சணங்களை மறைத்துக் காட்டுவது என்பதில் சிறிதும் விரும்பாத நபர் ஆனதால் நான் எழுதுவது வாசகர்களுக்கு சுவையானதாக இருக்காது என்பதாலும், பெரிதும் கசப்பாகவும் இருக்கக் கூடுமானதாலும், இக்காரியங்களிலிருந்து நழுவிக் கொள்ளவே தோன்றுவது இயல்பு என்றாலும் ஏதோ எழுதுகிறேன்.

தமிழர் முன்னேற வழி

தமிழர் முன்னேற வழி என்பதைப் பற்றி எழுதத் தொடங்குவதற்கு முன்பு முன்னேற வேண்டிய தமிழர்களை (தமிழ் மக்களை) இரு கூறாகப் பிரித்து அதில் ஒரு கூறு மக்களுக்குத் தேவையானதை எழுத ஆசைப்படுகிறேன்.

இதில் நான் இரு கூறாக்கப்பட்டிருப்பவர்கள் யார் யார் என்றால். ஒன்று முன்னேற வேண்டும் என்று கருதி ஆசைப்படும் மக்கள்.

மற்றொன்று முன்னேற வேண்டியது ஒன்றும் இல்லை என்றும், முன்னேற வேண்டியது இருந்தாலும் அதைப்பற்றி நமக்கென்ன கவலை, ஏதோ திருப்திகரமான வரையில் நாள் கடந்தால் போதும் என்று கருதி கவலையற்று இருக்கும் மக்கள்.

இவர்களும் நான் காணும் மக்கள் பெரும்பாலும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாகவே காணப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் என்று கருதுவதால் இக்கட்டுரையில் பெரிதும் அவர்களைப் பற்றியே எழுத ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறுவதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா நல்வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர்களின் மொழி தமிழர் அல்லாதவர்களுடைய மொழிகளைவிட சிறந்த மொழியாகும்.

தமிழர்களின் இயற்கை அறிவுத் திறன் தமிழரல்லாத மற்ற மக்கள் பல்லோரையும் விட வளர்ச்சிக்கேற்ற நல்ல அறிவுத்திறன் ஆகும். ஆனால் உலகில் தமிழன் கீழ் மகனாகவும். அறிவாராய்ச்சியற்ற மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டியாகவும் இருந்து வருகிறான். தமிழர்களை தூர வெளிநாட்டார் அஞ்ஞானிகள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும்தான் அழைப்பது வழக்கம், நான் ஒரு அளவுக்கு உலகம் அதாவது மூன்று கண்ட நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் தன்மைகளை உணர்ந்து வந்தவன்.

இந்த மூன்று கண்ட நாடுகளிலும் நமது உப கண்டமாகிய இந்தியா வைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை அஞ்ஞானி, காட்டுமிராண்டி மக்கள் என்றுதான் அழைக்கிறார்கள். கருதியிருக்கிறார்கள். அந்நாடுகளில் உள்ள இலக்கியங்களிலும் அந்தப்படியே குறித்திருக்கிறார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழர்களைப் பற்றி அந்தப்படியேதான் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்கள். மேல் நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் இந்தியா- இந்தியர்களைப் பற்றிய இலக்கியங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவர்களது பொருட்காட்சி சாலைகளில் நமது கடவுள்கள். நம் வைதீகர்கள், நம் மாணவர்கள், நம் பாபம் நீங்கும் கோயில் தீர்த்தம், குளங்கள், கோவில் புரோகிதர்கள் ஆகியவர்கள் பற்றி உருவங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இவற்றை நான் நேரில் பார்த்து வந்திருக்கிறேன்.

ஆகவே, நாம் வெளிநாட்டார் கண்களில், கருத்துக்களில் எப்படி காணப்படுகிறோம் என்பது பற்றி யாரும் விவாதிக்க இடமில்லாமல், கீழ் மக்களாக, மூடபக்தி, காட்டுமிராண்டிகளாக இருந்து வருகிறோம். இன்று ஏறக்குறைய இந்த உலகம் முழுவதி லும் உள்ள பெரிய அரசாங்கங்கள் நம் நாட்டின் அஞ்ஞானமும், மூட மத காட்டுமிராண்டித்தனமும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதையே உள் கருத்தாக வைத்து நமக்கு பண உதவி, கல்வி உதவி, பொருள் உதவி செய்து வருகின்ற உதவி ஒன்றே போதும் நமது நிலையை விளக்க, மற்றும் இப்படிப்பட்ட நம் நிலைக்கு காந்தியார் முதல் இராசகோபாலாச்சாரியார் வரை உள்ள குறிப்பிடத்தக்க பெரியார்கள் என்னும் மக்களின் எண்ணம், நடத்தை, பேச்சு, ஒழுக்கம் முயற்சி ஆகியவைகளை கூர்ந்து பார்த்தாலும், அதன் பலன்களை அறிந்தாலும் நமது நிலை அறிய அவையே போதுமானதாகும்.

இப்படிப்பட்ட இந்த நிலையில் உள்ள தமிழர் முன்னேற நமக்கு முதலாவதாக வேண்டியது என்ன என்று பார்த்தால், நல்ல அறிவு, ஆராய்ந்து பார்க்கும் துணிவு, ஆராய்ச்சியின் முடிவை ஏற்கும் நாணயம் ஆகியவைதான் முக்கியமாக வேண்டியனவாகும். தமிழர்களுக்கு அறிவு இருக்கிறது. ஆராயும் சக்தியும், அனுபவ உண்மை அறியும் சக்தியும் இருக்கிறது; ஏற்று நடக்கும் துணிவும், நாணயமும் தான் இல்லை, பலருக்கு ஆராயும் சக்தி உணரும்படி சக்தி என்பது கூட இல்லை. இதைக் கற்பிக்க தமிழர்களுக்கு மதம் (சமயம்) இல்லை, கலை இல்லை. நீதி நூல் இல்லை.

தமிழன், பெரிதும் அரசர்கள் ஆண்டிகள் வரையில் தெய்வீகத் தன்மை பெற்றவர்கள் உட்பட பிறவியில் இழிமகனாய், அறிவில் காட்டுமிராண்டியாய், தன்மையில் மானமற்றவனாய் இருந்து வந்தது வருவது நேற்றல்ல; இன்றல்ல இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டு காலமாக என்றுகூட கூறலாம், இந்த பழங்காலந்தொட்டு இன்றுவரை இந்த இழி நிலை மாற முயற்சித்து தீவிர தொண்டாற்றிய தமிழன் யாராவது உண்டா என்று பார்த்தால் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. முயற்சியோ கிளர்ச்சியோ செய்ய முடியாத அளவுக்கு தமிழனை அழுத்தி வைத்து விட்டது அவனது சமுதாய அமைப்பு.

தமிழன் கடவுளைக் கும்பிடும் பொழுது கூட தான் ஒரு ஈனப் பிறவி என்பதை ஒப்புக் கொண்டு எட்டி நின்றே வணங்கிக் கும்பிடுகிறான். எப்படி என்றால் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலும் அது எப்படிப் பட்டதானாலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை என்றாலும், எப்படிப்பட்ட நாயன்மார்களால் பாடப்பட்டவை என்றாலும் அக்கோயில்களில் சென்று கடவுளை வணங்கும் போதுதான் இழிஜாதி ஈனப்பிறவி ஆனதால், கடவுள் உள்ள அறைக்குள் புகக்கூடாது. புகுந்தால் கடவுளுக்கு கடவுள் சக்தி போய்விடும். தனக்கும் பெரிய தோஷம் சம்பவிக்கும் என்று கருதிக் கொண்டு கடவுள் அறைக்கு வெளியில் எட்டிநின்றே வணங்குகிறான். இந்தப்படி கும்பிடுகிறவர்களுடைய அறிவின்படி. ஆராய்ச்சிப்படி இவன் கடவுள்கிட்டே நெருங்க முடியாத இழி பிறவி என்பதை மெய்ப்பிக்க முடியுமா? இன்றைக்கும் தமிழனுடைய ஆராய்ச்சியும் கடவுள் வணக்கம் விஷயத்தில் கடவுள் வணக்கத்திற்குரிய பிரார்த்தனைச் சொற்களை தமிழில் சொல்ல வேண்டும். அதுவும் ஒரு மேல் பிறவியான் சொல்ல வேண்டும் என்கிற அளவுக்குத்தான் போகிறதே ஒழிய அந்த கடவுள் இருக்கும் அறைக்குள் தான் ஏன் செல்லக் கூடாது. தான் ஏன் தீண்டத்தகாதவனைப் போல் எட்டி நிற்க வேண்டும்? என்கிற அளவுக்கு எவனும் சொல்வதே இல்லையே. காரணம் என்ன? இது போலத்தான் சமயத்துறையிலும் தன்னை நாயேன் என்றும், அடியேன் என்றும் கூறிக்கொள்வதுடன் தமிழன் ஏற்றுக்கொண்ட சமய நூல்கள், சமய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் தமிழன் பிறவியில் கீழ் மகன் நாலாம் பிறவி என்றிருப்பதை ஒப்புக்கொண்டு அவற்றில் தன்னையும் அப்படியே ஆக்கிக் கூறிக்கொண்டு அதன்படியே நடந்து வருகிறான். சமய நூல், இலக்கிய நூல் ஆகியவைகளில் உள்ளபடி ஏன் தன்னை சூத்திரன் என்றும், மாற்றானை தன்னைவிட கீழ்த்தரமான குணம் செய்கை உள்ளவனை உயர்ந்தவன் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இந்தப்படியே தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் நடந்து வருகின்றார்கள். இதற்குக் காரணம் என்ன?

இத்துறைகளில் தமிழனுக்கு அறிவும், ஆராய்ச்சியும், மான உணர்ச்சியும் ஏற்படாத வரையில் தமிழன் முன்னேற வழி எப்படி ஏற்படும்? இதைத்தவிர தமிழனுக்கு முன்னேற முதன்மையான வழி வேறு ஏது என்று சொல்ல முடியும்? ஆகவே தமிழன் முன்னேற வேண்டுமானால். தமிழன் பிற்படுத்தப்பட்டிருப்பதன் காரணம் என்ன என்பதை உணரவேண்டும். தமிழன் இயற்கையில் இயல்பில் பிற்பட்டவன் அல்லன். அவன் என்றைய தினம் தன்னை பிற்படுத்தத்தக்க மூடப்பழக்கங்களை ஏற்றுக் கொண்டானோ, ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டானோ. அன்று முதல்தான் தமிழன் பிற்படுத்தப்பட்டவன் ஆனான். ஆகவே அவன் முன்னேற வேண்டுமானால் தன்னை பிற்படுத்தப்பட்டவைகளில் இருந்து விலக வேண்டும், வெளியேற வேண்டும், அதற்கு மான உணர்ச்சியையே ஆயுதமாய்க் கொள்ள வேண்டும். அப்படி வெளியேறிய கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் இன்று சமுதாயத் துறையில் முன்னேறியிருப்பதே இதற்கு எடுத்துக்காட்டாகும்.

------------------தந்தைபெரியார் “விடுதலை” 13.1.1960

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு !

அறுபதுகளில் தந்தையவர்கள் பேசியது இன்னமும் பொருந்துகின்றது என்பதை எண்ணி பெருமைப் பட முடிய வில்லை தோழர் ...மான உணர்ச்சியே ஆயுதமாய் ...மான உணர்ச்சியே ஆயுதமாய் ...பல முறை சொல்லிக் கொள்கிறேன் ...ஆம் ...மான உணர்ச்சியே ஆயுதமாய் ...

வருகிறேன் தோழர் !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி