Search This Blog

14.7.10

தீண்டாமையின் சின்னம் அகற்றப்படட்டும்!சிதம்பரம் நடராசன் கோவிலில் இன்று முதல் இன்னொரு போராட்டம் தொடங்கப்படுகிறது. இதற்குமுன் நடைபெற்ற சில போராட்டங்களில் ஆதிக்க ஜாதியினர் தோற்றுப் போனார்கள்.

சிதம்பரம் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட அனுமதியில்லை என்று அடாவடித்தனம் செய்தனர். ஓதுவார் ஆறுமுகசாமி என்பவர் கோவிலுக்குள் தமிழில் பாடினார் என்பதற்காகத் தீட்சதர்ப் பார்ப்பனர்களால் கடுமையான முறையில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.

களப்போராட்டம், நீதிமன்றம் மூலமும் வழக்கு என்கிற வகையில் இறுதியில் போராடும் மக்களுக்கு வெற்றி கிட்டியது.

பெரியவர் ஆறுமுகசாமி அவர்களுக்கு மாதம் ரூபாய் 3000 உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் அளவிற்கு அந்த வெற்றி பூரணத்துவம் பெற்றது.

தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த அந்த கோவில், நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழே வந்தது என்பது மகத்தான வெற்றியாகும். என்றாலும் தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பை எதிர்த்துச் சென்றுள்ளனர்.

கோவில் வருமானம் பற்றி தீட்சதர்கள் கொடுத்த கணக்கிற்கும், அரசு கட்டுப்பாட்டிற்குக்கீழ் வந்த நிலையில் அரசு கொடுத்த கணக்கிற்கும் இடையில் உள்ள வேறுபாடு தீட்சதப் பார்ப்பனர்களின் பகற் கொள்ளையை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டது. அம்பலவாணர் கோவிலில் வெளியான இந்த அம்பலம் பொதுவாகப் பார்ப்பனர்களின் நாணயமற்ற தன்மைக்கும், கோவில் சுரண்டலுக்கும், ஊழலுக்குமான மொத்த குத்தகைதாரர்கள் பார்ப்பனர்கள் என்பதைப் பக்தர்கள் மத்தியில்கூட நிலை நிறுத்திவிட்டது.

இப்பொழுது இன்னொரு கட்டப் போராட்டம் நடத்தும்படியான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனார் நுழைந்ததாகக் கூறும் தெற்கு வாயில் தீண்டாமையின் சின்னமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த அடைப்பு அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயமும், தீண்டாமை ஒழிப்புத் தத்துவமும், மனித உரிமைக் கோட்பாடும் நிரம்பவே யிருக்கின்றன.

கோவில்கள் என்பவைகளே பொதுவாக ஜாதியைப் பாதுகாக்கும் சின்னங்களாகவே இருந்து வருகின்றன. குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சகர் ஆகலாம், மற்றவர்கள் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டாகிவிடும் தீட்டுக் கழிக்கவேண்டும் என்பதெல்லாம் ஜாதியின் ஆதிக்க ஆணவத்தன்மை என்பதல்லாமல் வேறு என்னவாம்?

உண்மைப் பக்தரான நந்தனார் நடராசரை வேண்டிக் கொண்டபோதுகூட அந்த நடராசர் நந்தனாரை உள்ளே வா என்று அழைக்கவில்லையே நந்தியைத்தானே விலகி இருக்கச் சொன்னதாக எழுதி வைத்துள்ளனர்.

இது கதைதான் என்றாலும் அதிலும்கூட இந்தச் சூழ்ச்சிதானே சூள் கொண்டிருக்கிறது?

அது அந்தக் காலகட்டத்திலே எடுபட்டு இருக்கலாம். மனித உரிமைகள் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாடு உச்ச கட்டத்தில் கொழுந்துவிடத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் நந்தன் நுழைந்த தெற்கு-வாயிலை தீண்டாமையின் குறிப்புச் சின்னமாகப் பராமரிக்கும் போக்கு ஏற்கத்தக்கதல்ல.

அரசு கட்டுப்பாட்டின் கீழ் கோவில் வந்துள்ள நிலையில். அரசே இதனை முன்னின்று செய்துவிடலாமே.

மானமிகு கலைஞர் அவர்கள் இதனைச் செய்யாவிட்டால், வேறு யாரால்தான் செய்யமுடியும்?

-------------------- “விடுதலை” தலையங்கம் 14-7-2010

0 comments: