Search This Blog

9.7.10

ஜாதியில்லாத இந்து மதம் உண்டா?

சமத்துவத்திற்கு எதிரானது உமது இந்து மதம்
இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று எப்படி கூறுவீர்?
கரூர் மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்விக் கணை

சமத்துவத்திற்குச் சொந்தமானது திராவிடர் கழகம். சமத்துவத்திற்கு எதிரானது உன்னுடைய இந்து மதம், பார்ப்பன மதம்; இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று எப்படி கூப்பாடு போடுகின்றீர்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

கரூரில் 6.7.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

கரூரில் கருஞ்சட்டைக் கடல்

இந்த கரூர் மாநகரம் நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே ஒரு கருஞ்சட்டைக் கடலை சந்திக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு மாபெரும் எழுச்சி மாநாடாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

மிகுந்த உற்சாகத்தோடு, மகிழ்ச்சியோடு உங்களை சந்திக்கின்ற இந்த வேளையில் எங்களைத் துளைக்கின்ற துன்பமும் இல்லாமல் இல்லை. வருத்தமும் இருக்கிறது. இங்கே நம்முடைய தோழர்களுடைய படத்தைத் திறந்து வைத்தோம்.

மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் கே.கே.பொன்னப்பா, கரூர் ஏ.கே.சாமி, பசுபதி-பாளையம் மீசை கந்தசாமி, திருமாநிலையூர் பெருமாள், வேடிச்சிபாளையம் சவுந்தரபாண்டியன், கரூர் வணங்காமுடி என்று பட்டியலிலே இவர்கள் மறைந்தவர்கள் என்று சொன்னாலும், அண்மையிலே நம்மைவிட்டு இருபெரும் நண்பர்கள் மறைந்-திருக்கிறார்கள்.

கரூர் பி.ஆர்.குப்புசாமி

ஒருவர் பி.ஆர்.குப்புசாமி. அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிலே எவ்வளவோ நமக்கு மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு தலைசிறந்த சிந்தனைவாதி. அதோடு நீண்ட நெடுங்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு உளப்பூர்வமாகப் பாடுபட்ட அருமைத் தோழர். அவருடைய பெயரை இங்கே நினைவூட்ட வேண்டும் என்பதற்காக இன்று காலையிலே சென்று நம்முடைய அருமை கொள்கை குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஆறுதல் பெற்று வந்திருக்கக் கூடிய சூழல் நமக்கு.

வாசுகி முருகேசன்

அதுபோலவே அருமை சகோதரியார் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரிய செல்வங்களிலே, செயல்வீரர்களிலே, வீராங்கனைகளிலே ஒருவராக இருக்கக்கூடிய வரலாறு படைத்த அருமை சகோதரியார் தங்கை மானமிகு வாசுகி அவர்கள் இன்றைக்குப் படமாகி விட்டார்கள் என்று அவர்கள் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியபொழுது எப்படி பி.ஆர்.குப்புசாமி மறைவு என்பது கொஞ்சம் அவருக்கு உடல்நலம் குறைவு. பல்வேறு சூழல். அவர் எனக்கு கடிதம் எழுதிய பொழுதுகூட நீண்டநாள் என்னால் இருக்கமுடியாது என்றெல்லாம் எழுதியிருக்கின்றார்கள்.

ஆனால் துடிப்பு மிகுந்த சகோதரியான, கொள்கை வீராங்கனையான வாசுகி அவர்கள் இன்றைக்கு இல்லையே என்று நினைக்கின்றபொழுது அந்தத் துன்பத்தை, துயரத்தை, இந்த அதிர்ச்சியை எளிதில் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு தத்துவத்தை நிறுவிக் காட்டியவர்

ஏனென்று சொன்னால் வாசுகி அவர்கள் ஒரு தத்துவத்தை அழகாக நிறுவிக்காட்டியவர்கள். இது ஆணாதிக்க சமுதாயம். இன்னமும்கூட. ஒரு பெண்ணால் முடியும் என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவர்கள் மிகச்சிறப்பான அளவுக்கு இந்த இயக்கத்தின் பணியை செய்தவர்கள். தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதைப் போல இயற்கையின் கோணல்புத்தி நம்மிடமிருந்து பறித்துவிட்டது.

வீரவணக்கம்!

எனவே அத்தகைய சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு, அத்தகைய திராவிட இயக்கச் செம்மல்களுக்கு நம்முடைய வீரவணக்கத்தைத் தெரிவித்து நான் என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.

நண்பர்களே, இங்கு அற்புமதமாக கருத்துகளை எடுத்துச்சொன்னார்கள். வருத்தத்தைத் தெரிவிக்கிற இந்த நேரத்தில் நன்றியும் தெரிவிக்க வேண்டும்.

நம்மோடு இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி. திராவிடர் கழகத்திலே செயல்பட்ட நம்முடைய வீரர்களுக்கெல்லாம் நன்றி என்று சொல்லுவதைவிட நான் முதற்கண் நன்றி என்று சொல்லுவது யார் என்று சொன்னல் இந்து முன்னணி என்ற பெயராலே திராவிடர் கழக மாநாட்டை சரியாக விளம்பரப்படுத்தி ஒத்துழைத்த தோழர்களுக்கு மனமுவந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன் (கைதட்டல்).

அய்யா அவர்களுடைய காலத்தில்....

தந்தை பெரியார் அவர்கள் மாநாடு நடத்துவார்கள். வயதானவர்களும் இங்கே இருக்கிறார்கள். இளைஞர்களும் இருக்கிறார்கள்.

இளைய தலைமுறையினருக்கு இது தெரியாத செய்தி. அய்யாவை அறிந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்த செய்தி.

அய்யா அவர்கள் எவ்வளவு சிக்கனக்காரர் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அய்யா அவர்கள் சாதாரண சுவரொட்டி அடிப்பதற்கு அனுமதி வழங்கினாலே அது பெரிய சாதனை எங்களைப் பொறுத்த வரையிலே.

அய்யா மாநாடு நெருங்கிவிட்டது. விளம்பரம் செய்யவில்லையே என்று சொன்னபொழுது ஒவ்வொரு மாநாட்டிலும் அவர்கள் கடைசியாக சென்னையில் நடைபெற்ற மாநாடு உள்பட, ஒவ்வொரு மாநாட்டிலும் தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள்.

எதிரிகள் விளம்பரப்படுத்துவர்

அவசரப்பட்டுப் பணத்தை வீணாக்காதே. நம்முடைய எதிரிகள் நம்மை விளம்பரப்படுத்துவார்கள். விளம்பரப் பொறுப்பை நம் எதிரிகள் எடுத்துக்கொள்வார்கள். ஆகவே நாம் பணத்தை செலவு செய்ய வேண்டாம். பொறுத்துப் பார். இன்னும் ஓரிரு நாளில் நம்மை எதிர்த்து அறிக்கை விடுவார்கள். ஆகவே அதிலிருந்தே விளம்பரம் ஆகிவிடும்.

அந்த விளம்பரமே போதும். நாம் தனியாக சொல்லுவதைவிட, அவர்கள் விளம்பரப்படுத்துவார்கள் என்று சொல்லுவார்கள். அது அன்றிலிருந்து இன்று கரூர் வரையிலே பெரியார் அவர்களுடைய முன்வாக்கு தெளிவாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இங்கே பார்த்தேன்.

சுவரொட்டி அடித்தவர்களுக்கு நன்றி...!

நான் கரூருக்கு வந்தபொழுது நண்பர்கள் எல்லாம் சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள் என்று சொன்னார்கள். எனவே சுவரொட்டி அடித்த தோழர்களுக்கு எங்களுடைய தோழர்கள் ஒரு வேளை சரியாக விளம்பரம் செய்யவில்லையோ என்ற குறைபாட்டை நீக்கியவர்களுக்கு மனமுவந்த நன்றியை நான் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் இந்த ஒரு சுவரொட்டியோடு நிறுத்திவிடக்கூடாது. வாரம் ஒரு சுவரொட்டியை அடித்து ஒட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணியும் ரொம்ப வேகமாக இருக்கும்.

அப்பொழுதுதான் இதுபோன்ற மாநாடுகளை இன்னும் வேகமாக நடத்த வேண்டும் என்று நம்முடைய கே.சி.பழனிச்சாமி அவர்களும் சரி, நன்னியூர் ராஜேந்திரன் அவர்களும் சரி, பரமத்தியார் அவர்களும் சரி, இன்னும் வேக வேகமாக செய்வதற்கு நீங்கள் தூண்டுகோல்களாக இருப்பீர்கள் என்று சொன்னார்கள். இந்த இயக்கத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிக்க, அடிக்க எழும் பந்து போன்றது இந்த இயக்கம். எதிர்க்க, எதிர்க்கத்தான் இந்த இயக்கமே வளரும்.

கலைஞரைப் பார்த்து கேள்வி

ஒரு முறை நெருக்கடி காலத்திலே முதல்வர் கலைஞரைப் பார்த்து செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். தேசிய நீரோட்டத்திலே நீங்கள் கலக்கவில்லை. அதனால்தான் இப்படி நடந்தது. உங்களுடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்ட நேரத்திலே கலைஞர் பளிச்சென்று சொன்னார்.

ஏனென்றால் கேள்விக்கு பதில் சொல்வதில் ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவர்களைப் போல, இந்த இயக்கத்தைப் போல யாருமே கிடையாது.

பயிற்சியே கேள்வி-பதில்தான்

ஏனென்றால் இங்கு முதல் பயிற்சியே கேள்வி பதில் தான். அதிலும் கலைஞரைப் பொறுத்த வரையிலே கம்ப்யூட்டரில் பொத்தானை அழுத்தினால் அதுகூட கொஞ்ச நேரம் ஆகும் இயங்குவதற்கு. ஆனால் கலைஞர் அவர்களுடைய பதில் மின்னல்வேகத்தில் வரும். உடனே கலைஞர் சொன்னார், ஆம்! நான் தேசிய நீரோடு போகமாட்டேன். காரணம் ஈரோடு போனவன். ஈரோடு போனவர் யாரும் தேசிய நீரோடு போக மாட்டார்கள் என்று சொன்னார்.

எதிர்ப்பு என்று வந்தால்தான்

ஏனென்றால் நீரோடு போவதற்கு அதற்கு ஒன்றும் பெரிய துணிச்சல் தேவையில்லை. தானாகவே அது கொண்டு போய்விடும். ஆனால் எதிர் நீச்சல் அடித்தால்தான் நம்முடைய வலிமை என்ன? வல்லமை என்ன? வெற்றிக்கு ஆதாரமென்ன என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

அந்த வகையிலே எதிர்ப்பு காட்டுவீர்களேயானால் தான் எங்கள் தோழர்களுக்கும் அவ்வப்பொழுது பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படும். ஆகவே அடிக்கடி செய்யுங்கள். நாங்கள் மண்டல மாநாடு என்று போட்டோம். கமண்டலங்கள் வேகமாக வந்தன. மண்டலத்தைக் கண்டு கமண்டலங்கள் ஆத்திரப் படுவதிலே நியாயமிருக்கிறது.

கொள்கையின் வெற்றி

காரணம் என்னவென்றால் மண்டல மாநாட்டு வெற்றி என்றால் இந்த கொள்கையினுடைய வெற்றி என்பது அதற்குப் பொருளே தவிர, ஏதோ வேடிக்கைக்காக நடத்திவிட்டுப் பார்த்து விட்டுப் போகக் கூடியவர்கள் அல்லர். உலக வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழ்மொழியை செம்மொழி என்று ஆக்கினார் கலைஞர் அவர்கள். இதற்கு முன்னாலே நம்முடைய மொழிக்கு இருந்த அந்தஸ்து என்ன? எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்!

தமிழ் என்றால் அது நீச்சமொழி, சூத்திரமொழி. மிலேச்ச பாஷை என்று இப்படி எல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று எல்லோரும் பேசினபொழுது ஆத்திரப்பட்டார்கள் என்று இங்கு பேசுகின்ற நண்பர்கள் சொன்னார்கள் என்று.

காரணம் என்னவென்றால் அவனுக்கு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பொதுவாக சொல்விட்டுப் போய்விட்டால், அதைப்பற்றி அவன் கவலைப்படமாட்டான். இங்கும் தமிழ், இதிலும் தமிழ் என்று சொல்லுகிறோம் பாருங்கள். அங்கேதான் சிக்கலே வருகிறது.

இங்கும் தமிழ் இதிலும் தமிழ் என்றால் வீட்டிலே திருமணம். இதிலே தமிழ் இருக்க வேண்டும். கோவிலிலே தமிழ் அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும்.

கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியுமென்றால்..

நீண்ட காலத்திற்கு முன்னாலே அய்யா அவர்கள் சொன்னார்கள். கடவுளுக்கு எல்லா மொழியும் தானே தெரியவேண்டும். அப்படியானால் தமிழ் எப்படித் தெரியாமல் இருக்கும்? தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேட்டார். (கைதட்டல்).

அய்யா அவர்கள் சுற்றி வளைத்து எதையும் சொல்வதில்லை. நேரடியாகவே சொல்லிவிடுவார். கடவுள் இல்லை என்று ஊர்வலத்தில் ஒலி முழக்கம் கொடுத்துக்கொண்டு வந்தார்கள். இதை விளக்கமாக நமது பரமத்தியார் சொன்னார். நான் கடவுள் மறுப்பைப் பற்றி அதிகமாகப் பேச நேரமில்லை. ஏனென்றால் கடவுள் இல்லை என்பதை நாட்டிலே நாங்கள் நிரூபிப்பதை விட, ரொம்பத் தெளிவாக அதிகமாக அண்மைக் காலத்திலே யார் செய்திருக்கிறார்கள் என்றால் காஞ்சிபுரத்திலே ஒரு அர்ச்சகர்.

தேவநாதன் சம்பாதித்தது 80 லட்சம் ரூபாய்

உங்களுக்குத் தெரியும். அவர் பிராக்டிக்கலாக, நடைமுறைக்கு ஏற்ப ரொம்பத் தெளிவாக கருவறைக்குப்பின்னால்தான் ரொம்ப பாதுகாப்பான இடம் என்று தேர்ந்தெடுத்து வீடியோ காட்சிகள் மூலமாக 80 லட்ச ரூபாய் சம்பாதித்திருக்கின்றார், வளைகுடா நாட்டிற்கு அனுப்பி.

நடைமுறையிலே செய்து காட்டிய பெருமை

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்பதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்வதெல்லாம் தியரி கிளாஸ். இதெல்லாம் வகுப்பு பாடங்கள். ஆனால் அதை நடைமுறையில் செய்துகாட்டி நிலைநாட்டிய பெருமை காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனுக்குத்தான் உண்டு என்று நினைக்கின்றேன்.

காஞ்சிபுரம் என்றாலே சங்கராச்சாரியாருடைய பெருமை பெற்ற மிக முக்கியமான இடம் இவைகளுக்கு. நமக்கெல்லாம் காஞ்சி என்றால் அண்ணா ஞாபகம் வரும். ஆனால் எல்லா பக்தர்களுக்கும் காஞ்சி என்றால் தேவநாதன் ஞாபகம் வருகிறது. அதை வியாபாரமாக்குகிறான்.

கடவுள் என்று ஒருவர் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றால் அப்படி ஒரு கடவுளை யாராவது இந்து முன்னணித் தோழர்கள் ஏற்பார்களா? நேரமில்லாததினாலே துண்டு, துண்டாக சில செய்திகளைச் சொல்லுகிறேன்.

தடுப்புச்சுவர் இருக்கக் கூடாது

இந்துக்களே ஒன்று சேருங்கள். இந்துக்களை ஒன்று சேர்ப்போம் என்று சொல்லி ஒரு நண்பர் பாவம், இப்படி சேர்த்துக்கொண்டிருக்கின்றார்.

மனிதர்களை ஒன்று சேர்ப்போம் என்று சொல்லுகின்றோம். மக்களை ஒன்று சேர்ப்போம். அதற்கு இடையில் தடுப்புச் சுவர்கள் இருக்கக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லுகின்றோம்.

ஆனால் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொன்னால் என்ன தெரிகிறது? அதிலிருந்து இந்துக்கள் இன்னும் ஒன்று சேரவில்லை என்று தெரிகிறது. இந்துக்கள் எல்லாம் பிரிவாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அதனால்தான் கோபமாக போஸ்ட்டர் அடிக்கும் பொழுது கூட, பாவம் இன்னமும் அவர்களுக்குப் பயிற்சி இல்லை. எங்கிட்டவந்து பயிற்சி பெற்றால் நாங்களே சில கேள்விகளைக் கேட்பதற்குத் தயாராக இருக்கின்றோம். அய்யா அவர்கள் மெதுவாகப் பேசினால் எங்கள் தோழர்களே எழுதி அனுப்பு வார்கள். கொஞ்சம் வேகமாகப் பேச. அதுமாதிரி பயிற்சி எடுத்துக்கொடுப்பதற்குத் தயாராக இருப்போம். இதோ பாருங்கள் சமத்துவம் பேசும் தி.க.வே பதில் சொல். திராவிடர் கழகத்திற்கு இதைவிட நல்ல அறிமுகம், இதைவிட நல்ல விளம்பரம் வேறு ஏதாவது உண்டா?

திராவிடர் கழகம் என்றால் சமத்துவம் பேசக் கூடிய ஓர் இயக்கம் என்று கஷ்டப்பட்டு அவர்களுடைய செலவில் இதை விளம்பரப் படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்முடைய தோழர்கள் சரியாக விளம்பரம் செய்யவில்லை என்ற குறைபாடு நீங்கிப்போய்விட்டது.

திராவிடர் கழகம் சமத்துவம் பேசுகின்ற இயக்கம்தான். சமத்துவத்திற்கு ஒருவன் எதிரியாக இருக்கிறான் என்று சொன்னால் அவர்கள் இந்த உலகத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கு வாழ்வதற்குத் தயாராக இருக்கிறார்களா?

சமத்துவத்திற்கு எதிராக இருப்பது உன்னுடைய இந்து மதம்ஆரிய மதம் பார்ப்பன மதம். வேத மதம். வைதீகமதம் என்பதற்கு அடையாளம்தானே இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று.

பிரிந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவர்கள் பிரிந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று சேர்க்கலாம். எங்கே போய் சொல்ல வேண்டும்? கரூரில் மாநாடு போட்டு கூட்டம் போட்டு சேர்க்க வேண்டிய அவசியமில்லை. நேராகச் சென்று ஒவ்வொரு இடத்திலும் நம்முடைய தோழர்கள் உழைக்கிறார்கள் பாருங்கள். அங்கே போங்கள். அதேபோல கோவிலுக்குள் போங்கள் சொல்லுங்கள்.

கோவிலில் ஒருவன் வெளியே நிற்கிறான். சாமி பிரச்சாரத்திலே இன்னொருத்தன் நிற்கிறான். கனமாக மணியை அடிக்க நம்மாள் சட்டையைக் கழற்றிப்போட்டுவிட்டு அடிக்கிறான். பெரிய மணி நம்மாள் கையிலே இருக்கிறது. செட்டியார் கையிலே, நாடார் கையிலே, கவுண்டர் கையிலே, முதலியார் கையிலே இருக்கிறது. சின்ன மணியை ஆட்டுவதற்கு ரொம்ப வசதியாக ஒருவன் உள்ளே இருக்கின்றான்.

நமது பரமத்தியார் சொன்னமாதிரி பெரிய மூடியை எடுத்துக்கொள்வதற்கு ஒருவன் இருக்கின்றான். சின்ன மூடியை எடுத்துக் கொள்வதற்கு இன்னொருத்தன் இருக்கின்றான்.

இவர்களை ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உண்டு. எனவே ஜாதியை ஒழிக்கக்கூடிய கருத்துக்கு வரக்கூடிய அளவிற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

நாளைக்கு மேடை போடட்டும். ஒரே ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும். பேசட்டும். கருத்துக்கு கருத்துதான் மிக முக்கியம். நாளை மறுநாள் நாங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கும்.

இந்து மதம் (மைனஸ்)_வர்ணாசிரம தர்மம்- ஜாதி= என்னவிடை? பூஜ்ஜியம்தானே, ஜாதியில்லாத இந்து மதம் உண்டா?

(-தொடரும்)-------------9-7-2010

1 comments:

admin said...

இந்து மதம்தான் - திராவிட கட்சிகளின் விளம்பரப்பலகை!! - jeejix.com