Search This Blog

13.7.10

தமிழ் இன மீனவர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!


சீனா

ஜப்பான் பார்! ஜெர்மன் பார்! என்று பயாஸ்கோப் காட்டுவார்கள். அப்பொழுது காசு கொடுத்து குழந்தைகளும், பெரியவர்களும்கூட வண்ணக் கண்ணாடி மூலம் பார்ப்பார்கள். அதில் பல படங்கள் தெரியும். அது அந்தக் காலம்.

இப்பொழுது சீனாவைப் பார் என்று சொல்ல வேண்டியுள்ளது. சீன எல்லையில் மூன்று சீனர்களை வடகொரியக் காவல்படை சுட்டுக் கொன்றுவிட்டது. ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சீனாவின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. வடகொரிய அரசும், கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

தன் நாட்டைச் சேர்ந்தவர்களோ, இனத்தவர்களோ இன்னொரு நாட்டால் பாதிக்கப்படும்பொழுது கடுமையாக நடந்து கொள்வது சீனாவின் வழமையாகும். இது குற்றமான ஒன்றும் அல்ல. பாராட்டத்தக்க உணர்ச்சியுமாகும்.

திபேத் உரிமைக்காக பீஜிங்கில் தலாய் லாமாவின் கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட அமெரிக்கர்களை சீனா கைது செய்து சிறையில் அடைத்தது என்றவுடன், அமெரிக்க உடனே தலையிட்டது சீன அரசும் அவர்களை விடுதலை செய்தது.

உலகத்தில் உள்ள பல நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதுகாக்கும் உணர்வோடு நடந்து கொள்கின்றன.

இந்தியாவில்கூட தமிழர்களைத் தவிர மற்ற மாநில மக்கள், மற்ற மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கத்தான் செய்கிறது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் பெண்களுக்கு கன்னித்திரை (Virgin Test) சோதனை செய்தபோது இந்தியா கடுமையாக எதிர்த்து, அதனை முறியடித்தது.

சீக்கியர்களாக இருந்தாலும் தலைக்கவசம் (Helmet) அணிந்துதான் செல்ல வேண்டும் என்று பிரிட்டன் சட்டம் பிறப்பித்தபோது, சீக்கியர்களுக்காக இந்தியா கரிசனத்துடன் குரல் கொடுத்ததுண்டு.

ஆனால் இந்தப் பாழாய்ப் போன தமிழர்கள் இலட்சக்கணக்கில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டாலும் இந்தியா இரக்கம் காட்டாது. இரக்கம் காட்டாதது மட்டுமல்ல, தமிழர்களை அதிவேகமாகக் கொன்று தீர்ப்பதற்கு எதிராளிகளுக்கு நவீன ஆயுதங்களையும் கொட்டிக் கொடுக்கும் கொன்று குவிந்த ரத்த வாடை வீசும் இலங்கை அதிபருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்துக் குலாவும். பாரத நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான்.

---------------- மயிலாடன் அவர்கள் 13-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


குறிப்பு:-

நாளை நாகையில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

கழகத் தோழர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, மீனவ நண்பர்களே, தன்மான தமிழர்களே, நாளை (14.7.2010) காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! தமிழக-தமிழ் இன மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! நம் உயிர் நரம்பிலிருந்து கிளம்பும் உச்சக்கட்டமான ஆவேசக் குரல்! தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!! கண்மூடிக் கிடக்கும் கூட்டத்தைக் கண் விழிக்கச் செய்ய கத்தும் கடல்சூழ்ந்த நாகையில், கடல் அலைகளை விஞ்சும் அரிமா குரல் கொடுப்போம்-திரள்வீர்! திரள்வீர்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்


1 comments:

Adirai khalid said...

நல்ல கட்டுரை ! வாசகர்கள் இதையும் படிக்கத்தான் வேண்டும்
இன்று மக்கள் ஆடம்பாரம், கேளிக்கை, கூத்து, போன்றவைகளுக்கு முக்கியம் கொடுத்து படிக்கின்றனர். இந்தப் போக்கு எங்கு போய் முடியுமோ தெரியவில்லை

வாழ்த்துக்கள்