கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள்.
பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான்.
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?
முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது , கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்கவேண்டும்!
மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல் , நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!
இப்போது நீ நினைத்துப்பார் ! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்!
நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. " தானாக சுயம்புவாகத்தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதி யாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும்.
அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.
--------------------- தந்தைபெரியார்.-"உண்மை" 14.-3-70
Search This Blog
30.3.08
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
i disagree this post
Post a Comment