Search This Blog

21.3.08

திருக்குறளும்-பெரியாரும்

"பெரியார் ஒருமுறை என்னிடம் திருக்குறளுக்குப் புத்துரை எழுதும்படித் தூண்டினார். அப்போது கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்றும் கூறினார்.

நான் திருவள்ளுவரையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களையும் உயர்வாக மதிக்கிறேன். உங்களுக்காக திருவள்ளுவரின் கொள்கையைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. அதேபோல், திருவள்ளுவருக்காக உங்களுடைய கொள்கை யையும் பொய்ப்பிக்கவும் நான் விரும்பவில்லை. உங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்று என்று நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது எழுதுகிறேன் என்று பெரியாரிடம் சொன்னேன்.

இதை நான் பாரதிதாசனிடம் கூறியபோது, பெரியார் சொன்னது கிட்டத்தட்ட சரிதான். முழுக்கவும் சரி இல்லை. ஆனால் பெரியார் சொன்ன குறிக்கோளின் அடிப்படையிலேயே தொடக்க கால சித்தாந்தமே அடங்கி இருக்கிறது. நடுவில் ஆரியம் கலந்ததால் அதன் தோற்றங்களெல்லாம் மாறி இருக்கின்றன. சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் என்று குறிப்பிட்டார். பாரதிதாசன் கூறிய இந்த விளக்கம், எனக்குப் பிற்காலத்தில் கை கொடுத்து உதவியது. இந்த அடிப்படையில் தான், நான் திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினேன்.

பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால், அந்த உரையை விரும்பி வரவேற்றிருப்பார். நல்ல குறிக்கோளை நாடிச் செல்லும் உள்ளப்பண்பு தான், நாகரிகத்தின் வளர்ச்சியாக அமைந்தது என்று காந்தியடிகள் லண்டனில் குறிப்பிட்டார். கடவுளுக்கு அவர் கொடுத்த விளக்கமும், திருக்குறளில் கடவுள் வாழ்த்துக் கொள்கையும் ஒன்று தான் என்பது என் கருத்து.

-க.அப்பாதுரையார், (நூல்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் 306.)

0 comments: