Search This Blog

29.3.08

வைப்பாட்டிக் கதை

சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் வந்துவிட்டால் பார்ப்பனரல் லாத சிறீகளை பார்ப்பனர் தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதாகவும், அது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானமாய் விட்டதாகவும், சிறீமான் சீனிவாசய்யங்கார் ஒரு கூட்டத்தில் நீலிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து அவரது இரண்டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும் பின்பாட்டுப் பாடி தங்கள் சமூகத்திற்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக் கொண்டார்கள். இவர்கள் உண்மையிலேயே நாயக்கர் சொன்னதற்காக மாரடித்துக் கொண்டார்களா? அல்லது அய்யங்காரின் உப்புக்காக மாரடித்துக் கொண்டார்களா? என்பதைக் கவனிப்போம். பார்ப்பனரல்லாதார் சிறீகளைப் பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக இருக்க சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு. இதற்கு முன்னமே அந்த சட்டம் அமுலில் இருக்கிறதை இவர்கள் அறிந்தும் இன்றுதான் இதை நாயக்கர் சொல்லக் கேட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள். இந்து உலகத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்துவாயிருந்தால் பிராமணன், சத்திரியர், வைசியர், சூத்திரன், பஞ்சமர் என்கிற ஐந்து வகுப்பில்தான் சேர வேண்டும். "கலியுகத்திலோ ட்சத்திரியரும் வைசியரும் இல்லை" என்கிறார்கள். ஓட்டல்களிலும் பிராமணன் சூத்திரன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆதலால் மீதி இருப்பது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய மூன்று வகுப்பார்கள். இதில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் தங்களை பிராமணர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அய்யங்கார் சிஷ்யர்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்றும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே இவர்கள் சூத்திரர் என்பதை மறுக்க முடியாது. சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்திற்கும் வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள். இது ஏன்? நமது நாட்டில் சில பாகத்தில் மாத்திரம் அமுலில் இல்லை என்றால் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் இல்லாததால்தான் என்கிற பொருள் கொண்டே அன்று சொன்னோம் என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சில பாகத்தில் இன்னமும் அமுலில் வைத்துக் கொண்டும் நமது சகோதரிகளை தங்கள் வைப்பாட்டி களாக்கிப் பிள்ளைகள் பெற்று உலகத்திலுள்ள ஓட்டல்களுக்கும் காப்பிக் கடைகளுக்கு மெல்லாம் எச்சில் எடுக்கவும், எச்சில் கிண்ணம் கழுவவும் அடிமைகளை வினியோகித்துக் கொண்டுதான் வருகிறார்கள். இதனால் இந்த சிங்கங்களுக்கு மானக்கேடு வரவில்லையா? அந்த சகோதரிகள் இவர்களுடைய சகோதரிகள் அல்லவா? கிராமத்து ஜனங்கள் இந்தியன் பினல்கோட் சட்டத்தைப் பற்றி வேடிக்கையாய்ப் பேசிக் கொள்வார்கள். அதாவது, ஒரு மனிதனை ஒரு மனிதன் செருப்பாலடிப்பதாய்ச் சொன்னால் ஆறு மாதம் தண்டனை. அடித்து விட்டால் ஒரு மாதம்தான் தண்டனை என்பார்கள்.(அதென்னவென்றால் அடித்தால் அது அசால்ட்டு குற்றமாய் விடுகிறதாம். சொன்னால் அது மான நஷ்டக் குற்றமாகி விடுகிறதாம்.) அதுபோல் நமது சகோதரிகளை வைப்பாட்டிகளாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேல் கோபமில்லாமல் அவர்கள் பின்னால் திரிந்து வயிறு வளர்த்துப் பெருமை பெற்றுக் கொண்டு இக்கொடுமையை வெளியிலெடுத்துச் சொன்னவன் மேல் கோபப்படுவதானால் இந்த சிப்பாய்களின் கோபத்தின் மதிப்பென்ன? என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும். சட்டசபையில் மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி சிறீமான் கே.வி. ரெட்டி அவர்கள் பேசும் போது "நமது பெண்கள் ருதுவானால் அவர்களை முதல் முதல் பார்ப்பனர்தான் புணர வேண்டும் என்கிற சட்டம் மலையாள நாட்டில் அமுலில் இருக்கிறது" என்று சொன்னாரே அதைக் கேட்ட போது இந்த வீரர்களுக்கு மானக்கேடு ஏற்படவில்லையா என்று நாம் கேழ்க்கிறோம். இந்த சிப்பாய்களை பார்ப்பனர் காசும் பார்ப்பனர் தயவும் இன்னம் என்ன என்ன செய்யச் சொல்லும் என்பதை பொறுமையுடன் கவனிப்போம்.

----------------தந்தைபெரியார் - "குடிஅரசு"- 5.9.26

0 comments: