Search This Blog

11.3.08

கடவுள்களின் நாச வேலைகள்

பெரும் மழையினால் பயிர்களுக்குக் கேடு, நாசம் என்பது ஒரு புறமிருந்தாலும், மற்றும் ஜீவப்பிராணிகள், கால்நடைகளுக்கும், வீடுகளுக்கும் பெருஞ் சேதங்கள் ஏற்படுகின்றன. இதுபோலவே பூகம்பங்களாலும் மக்கள் உட்பட ஜீவப் பிராணிகளும் மாள்வதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தும், மறைந்தும் நாசமாகிப் போகின்றன. அதுபோலவே இடி-பேரிடி விழுவதாலும் மக்களுக்கும், ஜீவன்களுக்கும் வீடுகளுக்கும் பெரும் சேதங்கள் உண்டாகி விடுகின்றன.


போதாத குறைக்கு பெரும் புயல் காற்றுகள் ஏற்பட்டு இவை போன்ற பெருங்கேடுகளும், சேதங்களும், நாசங்களும் ஏற்பட்டு விடுகின்றன.


இதில் சிந்திக்கும்படியான விஷயம் என்னவென்றால் மேற்கண்ட கேடுகளில், தேசங்களில், நாசங்களில், ஜீவ அழிவுகளில் எந்த ஒரு சிறு அளவுக்கும் ஆறு அறிவு படைத்த மனிதவர்க்கத்தால் எந்தவிதமான பாதுகாப்பும் செய்து கொள்ள முடியாத நிலையில் அனுபவித்தே தீர வேண்டியதாகவும், பலவற்றைப் பற்றி, நிகழும்வரை தெரிந்துகொள்ளவே முடியாததாகவே இருப்பதேயாகும்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? கடவுள் சித்தம் என்பது தானே? அது உண்மையாய் இருக்குமானால் இதிலிருந்து கடவுளையோ, கடவுள் சக்தியையோ எவ்வளவு அயோக்கியத்தனமானவன் என்று கருத வேண்டியிருக்கிறது. இந்நிலையில் கடவுள் இருப்பானேயானால் அவன் உலகத்தைப் படைத்ததே முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்த மாபெரும் உலகத்தைப் படைத்து, அதில் ஏராளமான ஜீவன்களைப் படைத்து அவை திருப்தியாய் வாழ்வதற்கில்லாமல் பசி, பட்டினி, நோய், துன்பம், தொல்லை, வேதனைகள் உண்டாக்கி நாசமடையச் செய்வது என்றால் இதில் அறிவுடைமையோ, கருணை உடைமையோ, நேர்மை - ஒழுக்கம் உடைமையோ என்ன இருக்கிறது?

இப்படிப்பட்ட கடவுளால், இப்படிப்பட்ட நாச வேலைகள் ஏற்படுவதல்லாமல் நல் காரியங்கள் என்று சொல்லப்படுபவையால் எது செய்யப்படுகிறது?


இதை ஏன் எடுத்துக்காட்டுகிறேன் என்றால், இந்த நிலையில் உள்ள ஒரு (இல்லாத) கடவுளுக்காக என்று ஆறு அறிவு (பகுத்தறிவு) உடைய மனிதனால் எவ்வளவு பொருள், நேரம், ஊக்கம், முயற்சிகள் செலவழிக்கப்படுகின்றன? கடவுள் பெயரைச் சொல்லி எத்தனை மக்கள் முட்டாள்களாக்கப்பட்டு ஏய்க்கப்படுகின்றனர்? இவை எல்லாம் முட்டாள்கள் என்பதாக அல்லாமல் க்ஷ.ஹ., ஆ.ஹ., னுச., விஞ்ஞான மேதாவி, தத்துவஞானி மேதாவி, புலவர், வித்வான் முதலிய படித்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மகான்கள், மகா மேதாவிகள் என்பவர்களால் செய்யப்படுகின்றன, சொல்லப்படுகின்ற, பிரச்சாரம் செய்யப்படுகின்றன என்றால் இவர்களையெல்லாம் எப்படி அறிவாளிகள், யோக்கியர்கள், உண்மையானவர்கள் என்று கூற முடியும்? கருத முடியும்? நம்ப முடியும்?

ஆறறிவுடைய மக்கள் நாட்டில், மனித சமுதாயத்தில் ஒரு கடவுள், அதற்கு வீடு, சோறு, பெண்டாட்டி, பிள்ளை, சேலை, நகை, வைப்பாட்டி விபச்சாரம் செய்தல், கோபம், தாபம், பழிவாங்குதல், கொல்லுதல் போர் செய்தல், போரில் அடிபடுதல், மூர்ச்சை ஆதல் மற்றும் எத்தனையோ கீழ்த்தர மக்கள் தன்மைகளையெல்லாம் பொருத்தி அந்தப்படி பொருத்தப்பட்ட செலவழித்து பாழாக்கப்படுவதென்றால் கடுகு அளவு சிந்தனை அறிவுள்ள யார்தான் இதை யோக்கியமான காரியம் என்றோ, உண்மையான நம்பிக்கையுடைய, காரியமென்றோ கருத முடியும்?


இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து பல்கலைக் கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல ஆயிரக்கணக்கான பள்ளிகளை வைத்து `கல்வி கற்பிப்பதைவிட பகுத்தறிவுப் பள்ளிகள் என்னும் பேரால் ஒரு சில பள்ளிகளை மாத்திரம் வைத்து ``நிர்வாணமான'' சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும், எந்தப் பற்றும் அற்ற வகையில், சொல்லும்வரை, சிந்தித்து, முடிவுக்கு வர கற்பிப்போமானால், நாட்டினில் இன்றைய வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெரும் அளவுக்கு மீதமாகி, மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்த ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம் அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து, இவற்றுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ``குறைவற்ற செல்வத்துடனும்'', நிறைவுற்ற ஆயுளுடனும்'' வாழ்வார்கள் என்பது உறுதி.


----- "விடுதலை" 16.12.1969 இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

0 comments: