Search This Blog

12.3.08

திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்

தமிழ் ஆங்கில ஊடகங்களில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருபவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆங்கிலப் பத்திரிகைகளில் திராவிடக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆரம்பத்தில் தமிழில் திசைகள் பத்திரிகையிலும், ஆங்கிலத்தில் Sunday observer பத்திரிகையிலும் பின்னர் Illustrated weekly, Frontline, Business India, Outlook எனப் பல பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக Panos South Asia நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து...



உங்கள் பின்னணி குறித்து?

சென்னை அயனாவரம் தான் சொந்த ஊர். என் பெயரில் உள்ள A அயனாவரத்தைத்தான் குறிக்கும். 90 வருடங்களுக்கு முன்னர் தாத்தாவிற்கு பெண்பார்க்கும்போது மேடவாக்கம் அருகே பொன்மார் என்ற கிராமத்தில் பார்த்திருக்கிறார்கள். ‘ரொம்பவும் தெற்கே போய் பெண் எடுத்ததாக’ அதற்கே என் குடும்பத்திற்குள் சண்டை நடந்துள்ளது. இப்படிப்பட்ட பின்னணிதான் என்னுடையது. பள்ளி, கல்லூரி எல்லாமே சென்னையில் தான். கல்லூரியில் இயற்பியல் படித்தேன்.

மாலனின் ‘திசைகள்’ பத்திரிகையில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். அதே நேரத்தில் ‘Sunday observer’ இதழில் ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினேன். எழுத ஆரம்பிக்கும்போது அரசியல் குறித்து எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்ததில்லை. இந்திய அறிவியல் அமைப்பில் உள்ள மனிதத்தன்மையற்ற செயல்களில் தான் முதலில் அதிக கவனம் செலுத்தினேன். 1984ல் போபால் விஷவாய்க் கசிவு நடந்தபோது அது குறித்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினேன்.

அப்போது தமிழகத்தில் இலங்கைப் பிரச்சனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் அதிகளாக தமிழகத்திற்கு அதிக அளவில் வரத்தொடங்கினர். நான் தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான தமிழ் அறிக்கைகளை மொழிபெயர்த்துத் தருமாறு ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்து கேட்பார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான் முழுநேர பத்திரிகையாளனாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரே பத்திரிகையில் முழுநேர வேலையில் சேராமல், அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் வராமல் இருக்க அறிவியலைத் தவிரவும் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுத வேண்டி வந்தது. ஒவியர்கள், படைப்பாளிகள் குறித்து தொடர் எழுதினேன். இதன்மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் தொடர்புகள் கிடைத்து எழுத ஆரம்பித்தேன். பிரண்ட்லைன் பத்திரிகையிலும் என் கட்டுரைகள் வெளிவந்தன.

1987ல் இந்திய இலங்கை அரசு ஒப்பந்தம் ஏற்பட்டு, 1988ல் அதன் முதல் ஆண்டு கொண்டாட்டத்தின் போது நான் 43 நாட்கள் இலங்கையில் இருந்தேன். ‘யுத்த பூமியில் 43 நாட்கள்’ என்ற தலைப்பில் அது தொடராக விகடன் குழுமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட்டில் வெளிவந்தது. இலங்கை நிலவரம் குறித்து ‘Illustrated weekly’ பத்திரிகையிலும் விரிவாக எழுதினேன்.

ஃபிரீலான்சராக பணியாற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. பல நாட்கள் கஷ்டப்பட்டு, பல ஊர்கள் பிரயாணம் செய்து, ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு நான்கைந்து மாதங்கள் கழித்துதான் பணம் கிடைக்கும். அதற்கிடையே அடுத்த பயணத்திற்கு காசு வேண்டும். இதைத் தவிர்க்க, 1988 நவம்பரில் Business India பத்திரிகையில் correspondent ஆக முழுநேர வேலையில் சேர்ந்தேன். 1995 வரை அங்கு வேலை செய்தேன். அதில் வேலைசெய்தாலும், தமிழ்ப்பத்திரிகைகளிலும், Business Indiaவின் வியாபாரத்தை பாதிக்காத வகையில் இதர ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது.

பாவைச்சந்திரன் குங்குமத்தில் ஆசிரியராக இருந்தபோது தமிழிலக்கியம் தொடர்பாக நிறைய விஷயங்களை குங்குமத்தில் என்னால் எழுத முடிந்தது. 1991ல் பாவை குங்குமத்தை விட்டு வெளியேறிய பிறகு தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது குறைய ஆரம்பித்தது.

1995ல் வினோத் மேத்தா அவுட்லுக் ஆரம்பித்தார். அவரின் அழைப்பை ஏற்று நான் அதில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் பத்திரிகைக்குப் பெயர் கூட சூட்டப்படவில்லை. 2001 வரை அங்கு வேலை செய்தேன்.

2001ல் தமிழகத்தில் தி.மு.க.தோல்வியடைந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் சன் டி.வி.யில் மேனேஜிங் எடிட்டராக சேர்ந்தேன். அடுத்து 2004ல் வந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து தி.மு.க. வெற்றி பெற்ற நாளில் சன் டிவி வேலையில் இருந்து விலகினேன். Panos South Asia வாய்ப்பு காரணமாக சன் டி.வி. வேலையை விடவேண்டி வந்தது. ‘Panos’ல் 2004 பிப்ரவரி மாதமே வேலை கிடைத்து விட்டது என்றாலும், தேர்தல் நேரத்தில் சன் டிவி வேலையை விடுவது சரியல்ல என்ற காரணத்தால் அது முடியும்வரை அங்கு வேலை பார்த்தேன். தேர்தல் முடிந்த நாளே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.

இந்த மாறுபட்ட வேலைகளுக்கிடையில் உங்களுக்கான அரசியல் எங்கு கட்டமைக்கப்பட்டது? வாசிப்பின் மூலமாகவா அல்லது மீடியாவில் பணிபுரிந்ததால் ஏற்பட்ட தாக்கமா?

என்னை மாதிரியான பின்னணியில் இருந்து வருகிறவர்கள் மக்கள் இயக்கங்களுக்கு எதிரான நிலையை மிகச்சுலபமாக எடுத்து விடுவார்கள். தன்னுடைய வேலை காரணமாக மிகச் சவுகரியமான ஒரு நிலையில் இருந்து கொண்டு, மக்கள் அரசியலுக்கு எதிரான நிலையை எடுக்கும் குணம் பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். பார்ப்பனர்கள் வெற்றி பெற்ற பிறகு அதற்கு காரணமானவற்றை மறந்து விடுவதில்லை. பார்ப்பனரல்லாதவர்கள் தங்களுக்கு ஒரு சவுகரியமான நிலை வந்தவுடன், ‘இனி எதுக்கு சாதியைப் பத்திப் பேசணும் அதெல்லாம் அந்தக்காலத்து விஷயம்’ என்று சொல்லி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள்.

எனக்கு இதெல்லாம் மிக உறுத்தலான விஷயமாக இருந்தது. 67ல் தி.மு.க. ஆட்சி அமையவில்லையென்றால் பார்ப்பனரல்லாதவர்களில் இத்தனை பேர் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? ரத்தினவேல் பாண்டியன் உச்சநீதிமன்ற நீதிபதியாகியிருக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தது. பார்ப்பனர்களை விட, பார்ப்பனரல்லாதார் அதிகமாக தகுதி, தரம், திறமை குறித்துப் பேசும்போது எனக்கு எரிச்சல் அதிகமாகியது. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் நம் அறிவியல் கொள்கை குறித்து நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தகுதி, தரம் என்பது பற்றிய எந்தவொரு மயக்கமும் எனக்கு ஏற்படாமல் போகச்செய்தது. நம்முடைய அறிவியல் துறையில், உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் உயர்ஜாதியினர் தான். அவர்களிடம் நேர்மை என்பது துளிகூட இருப்பதில்லை. இதை நேரில் கண்டதால்தான் விஞ்ஞானத்தையும் பொருளாதாரத்தைம் அரசியல் பார்வை இல்லாமல் பார்க்க முடியாது என்பதும் தெரிய வந்தது.

இதற்கு உங்கள் வாசிப்பு எந்தவகையில் உதவி செய்தது. நீங்கள் சின்ன வயதில் இருந்து எந்த மாதிரியான புத்தகங்களை வாசித்தீர்கள்?

வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் நேர்க்கோட்டில் இருந்ததில்லை. 1978ல் நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது எமர்ஜென்சி காலகட்டம். அரசியல் அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் நான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது கு.அழகிரிசாமி கதைகள் தான். அதன்பிறகு புதுமைப்பித்தன் படைப்புகள் உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கியங்களைப் படித்தேன்.

பின்னர் அரசியல் ரீதியான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரையும் போல முதலில் எனக்கும் மார்க்சியம் தொடர்பான புத்தகங்களில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது. 1980ல் சி.பி.ஐ., சி.பி.எம்., இரண்டு கட்சிகளும் எம்.ஜி.ஆருடன் கூட்டு வைத்தன. இது எனக்கு மிகவும் கோபத்தை வரவழைத்தது. இந்த நேரத்தில் தான் ‘கோட்பாடுகளும் கொள்கைகளும் வேறு, அரசியல் கட்சி என்பது வேறு’ எனப் புரிய ஆரம்பித்தது. எழுத ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டம்தான்.

அந்த நிலைப்பாடு இப்போதும் இருக்கிறதா?

ஆமாம், கட்சிகளைத் தாண்டி, மேலே நிற்பது இயக்கங்களும், அவற்றின் கொள்கைகளும்தான். அதற்காக கட்சிக்குள் இருப்பவர்கள் இயக்கவாதிகள் இல்லையென்று அர்த்தமல்ல. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க., பெரியார் திராவிடர் கழகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தாலும் அதற்கு மேலே இருப்பது பெரியார் ஆரம்பித்து வைத்த சுயமரியாதை இயக்கம். அதேபோல் சி.பி.ஐ.,சி.பி.எம்., எம்.எல். என எத்தனை கட்சிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேலே இருப்பது இடதுசாரி இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களும் கட்சிகளை விட பெரியதாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

கட்சிகளை விட இயக்கம் பிரம்மாண்டமானது என்கிறீர்களா?

கொள்கைகளால் ஏற்படும் தாக்கமும் அது கொண்டு வரக்கூடிய பயனும் கட்சிகளுக்கு மேற்பட்டது. ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை நான் எந்த ஒரு நல்ல வார்த்தையும் பேசியதோ, எழுதியதோ இல்லை. அப்படி சொல்லும்படியான சூழ்நிலையை அவர் ஒரு நாளும் உருவாக்கியதில்லை. அத்தகைய ஜெயலலிதா சங்கராச்சாரியாரை கைது செய்த போது தமிழ்நாடு முழுவதும் ‘அது சரிதான்’ என்கிற மாதிரியான ஒரு மனநிலை இருந்தது. அது அ.தி.மு.க ஏற்படுத்திய மனநிலை அல்ல, பரந்துபட்ட திராவிட இயக்க மனநிலையாகும்.

அதேதான் மார்க்சியத்திற்கும் மார்க்சியம் சார்ந்த விஷயங்களுக்கும். நந்திகிராம் விஷயத்திற்காக சி.பி.எம்.,கட்சியை எதிர்ப்பதோ, எமர்ஜென்சியை ஆதரித்ததற்காக சி.பி.ஐ., கட்சியை இடதுசாரி இயக்கம் இல்லை என்று சொல்வதோ அந்தந்த காலகட்டத்திற்கான குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். இவற்றை மட்டுமே வைத்து இடதுசாரி இயக்கம் இவ்வளவுதான் என்று கூற முடியாது.

கட்சிகளை மீறி சிறந்த கொள்கைவாதிகளாக விளங்கும் அரசியல்வாதிகள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அடிப்படை விஷயங்களில் அவர்கள் நீர்த்துப் போகமாட்டார்கள். எதிர்காலத்தில் நல்லக்கண்ணு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.வாக செயல்படுவார் என்று சொன்னால், அதை நான் நம்பத் தயாராக இல்லை. காரணம் கட்சியைத் தாண்டி அவரிடம் இருக்கும் இயக்கத்தின் தாக்கமும் அதனால் அவரிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும்தான்.

இங்குள்ள அரசியல்வாதிகள் மீது பலவிதமான விமர்சனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர்களைத் திட்டுவதை விட அவர்களை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறேன்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

ஓர் இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன, அதைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் கையாண்ட முறை என்ன, அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் - இந்த மூன்றில் இருந்து தான் அந்த இயக்கத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடியும்.

திராவிட இயக்கத்தினர் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதான். அதாவது சாதிக்கு எதிரான போர் அல்லது அனைவருக்கும் சமவாய்ப்பு. இதை திராவிட இயக்கம் சாதித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் 67 சதவீதம் என்பதைத் தாண்டி ஒரு கட்சியால் அரசு என்ற அமைப்பின் மூலமாக வேறெதுவும் செய்துவிட முடியாது. இது வெற்றி தான். இதற்குள் குறைகள் இல்லையா என்று கேட்டால் அது procedural பிரச்சினை. அது கட்சியின் பிரச்சனை அல்ல.

இட ஒதுக்கீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வரும் முரண்பாடுகள் சில இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இட ஒதுக்கீடு வெற்றி பெற்று விட்டது.

மற்றொரு கருத்து இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை திணித்து விட்டதாக சொல்லப்படும் கருத்து. இது முழுக்க முழுக்க அரசியல் பார்வையே இல்லாத குற்றச்சாட்டு. இங்கு யாரும் ஆங்கிலத்தை திணிக்கவில்லை. தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பத்தினால். இந்தி திணிக்கப்பட்டது, அதை எதிர்த்தார்கள். ஆங்கிலம் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

சுய விருப்பம் தான் அரசியல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய அரசு இங்கே இருக்கிறது. அந்த சுய விருப்பத்தையே தவறு என்று சொன்னால் சொல்பவர்களுடைய அரசியல் பார்வையே தவறு என்றாகி விடுகிறது. தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது எனக்கு இருக்கக்கூடிய வருத்தமே இதுதான். விரும்பி ஏற்றுக் கொள்வதற்கும், மிரட்டி திணிப்பதற்குமான அடிப்படை வேறுபாடே அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

அடுத்து, இன்று யாரும் மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்வதில்லை. தமிழ்நாடு என்று தான் சொல்கிறார்கள். எந்த தமிழ்ப் பத்திரிகையும் உபாத்தியாயர் என்று எழுதுவதில்லை ஆசிரியர் என்று தான் எழுதுகின்றன. எல்லாவற்றிலும் தமிழ் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். இன்று வட இந்தியர்கள் ‘தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது’ என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சமூக, பொருளாதார மாற்றங்களால் மற்ற மாநிலங்களை விட அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள் தான். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

1950ல் இந்தியா குடியரசான பிறகு முதல் அரசியல் சட்டத்திருத்தமே இட ஒதுக்கீடுக்கானது. இதைச் சாதித்தது தமிழ்நாட்டின் திராவிட இயக்கம்தான். ஓமந்தூராரும், காமராசரும் நேருவை வற்புறுத்தி அதைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திராவிட இயக்க பாதிப்புடையவர்களாகவே இருந்தனர். அவர்களை நான் திராவிட இயக்கத்தினராகவே பார்க்கிறேன். இதைத்தான் கட்சியைத் தாண்டி இயக்கம் இருக்கிறது என்று சொன்னேன்.

இதை தொடர்ச்சியாகவே பார்க்கலாம். இந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இலவச ஆரம்பக்கல்வி தமிழ்நாடு முழுவதும் வருகிறது. மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப்படுகிறது. அடுத்தபடியாக தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு அரசுக்கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. உயர்கல்வியும் இலவசமாக்கப்படுகிறது.

அடுத்தபடியாக 80களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகத் தொடங்கின. என்ன படித்து விட்டு வெளியே வந்தாலும் அடுத்து மேலே படிப்பதற்கு வசதியாக உயர் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார்கள். இவையெல்லாம் வெவ்வேறு கட்சியினரால் வெவ்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்டவை என்றாலும், அதற்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது திராவிட இயக்கமும், அதன் கொள்கைகளும்தான்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகள் தற்கொலை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாயத்தை மட்டுமே நம்பி யாருமில்லை. Non farm activities 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதற்குக் காரணம் திராவிட இயக்கத்திலிருந்து வந்த தி.மு.க.தான். 1967 முதல் 76 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்து செயல்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்கள்.

மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் பெரிய தொழிற்சாலைகள் இருக்குமிடம் மும்பை. அடுத்து புனே, நாக்பூரை குறிப்பிடலாம். இந்த மூன்று நகரங்களைத் தவிர வேறெங்கும் தொழிற்சாலைகள் கிடையாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னையைத் தவிரவும் ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஓசூர், கரூர், கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி, சிறுசேரி, கடலூர், மறைமலைநகர், திருச்சி, மதுரை, நெல்லை என தொழிற்சாலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் (இராமநாதபுரம் மாவட்டத்தைத் தவிர) ஒன்று அல்லது இரண்டு தொழிற்பேட்டைகள் இருப்பதைப் பார்க்க முடியும்.

இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒரு விஷயம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.

ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளுக்கேற்ப இயக்கங்களும், தலைவர்களும் தோன்றியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ராஜாராம் மோகன்ராய் விதவைகள் மறுமணம், கோவில் நுழைவு உரிமை இவற்றைத் தாண்டி இயங்கவில்லை.

கேரளாவில் சமூகத்தை சீர்திருத்த வந்த நாராயணகுரு ஈழவத்தலைவராகவும், மஹாராஷ்டிராவின் ஜோதிராம் புலே தலித் தலைவராகவும் சுருங்கி விட்டார்கள். இதில் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். 3 Vs 97 (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

சேது பாலம் விவகாரத்தில், ஜெயலலிதா கருணாநிதியிடம் ‘தைரியமிருந்தால் இதே கருத்தை வட இந்தியாவில் பேச முடியுமா?’ என்று கேட்கிறார். பெரியாருக்குப் பிறகு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் அவரது கருத்துகளை இந்தியா முழுவதும் கொண்டு சென்றிருந்தால் இந்த மாதிரியான கேள்விகள் எழுந்திருக்காது அல்லவா?

திராவிட இயக்க வரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாறல்ல. 1917ல் தியாகராயர், நடேசன் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் தேதிவாரியாக சொல்ல முடிகிற, நம் கண்முன் நடந்த வரலாறு. மிக சமீபத்தில் நடந்த விஷயம் எவ்வளவு வேகமாக மற்ற இடங்களுக்குப் பரவ முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

அடுத்ததாக, உங்களுடைய முக்கிய பணி உங்கள் ஊரிலா அல்லது வேறு ஊரிலா என்று கேள்வி வந்தால் உங்கள் ஊருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி தான். அவர் ஒரு வட மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு, பூரி சங்கராச்சாரியாரைக் கைது செய்துவிட்டு தொடர்ந்து அங்கே முதல்வராக இருந்துவிட முடியுமா? இங்கு முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இது பெரியார் பிறந்த மண். 1920களில் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் தான் சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு இங்கு மதக்கலவரமோ, இனக்கலவரமோ நடக்காமல் தடுத்தது.

ஜெயலலிதாவிடம் இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை அவர் யாரிடமும் உரையாடுவதற்கோ, விவாதத்திற்கோ வருவதில்லை. யாரோ எழுதியதை படித்துவிட்டுச் சென்று விடுவார். அதுதான் பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு உரையாடலில் அவர் அமர்ந்தாலே போதும். ஐந்தாவது நிமிடத்தில் அவரது எல்லா முரண்பாடுகளும் வெளிப்பட்டு விடும்.

திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா? இல்லை வெறும் மொழி அரசியலாக சுருங்கி விட்டதா?

பெரியார் மிகப்பெரிய அளவில் செயல்பட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பெரியாருக்குப் பிறகு வந்த அவரது இயக்கத்தினர் அவரது எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர் அளவுக்கு வீச்சாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இன்றைக்கு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு இயக்கம் உருவானதற்குப் பிந்தைய சமூகம். அந்த இயக்கத்தின் தாக்கம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் நாத்திகர்களாக இருக்கிறார்கள், சிலர் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள், சிலர் மொழிப்பற்று உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெரியார் வைத்த அடிப்படைக் கருத்து என்பது அதிகாரப் பங்கீடு, அதிகாரப் பரவலாக்கல்.

சனாதன தர்மம் அதிகாரத்தை ஒரு சாராரிடமே குவிக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவமரியாதை ஏற்பட்ட போது சுயமரியாதை இயக்கம் தோன்றியது. எனக்கு இன்றைக்கு அவமரியாதை இல்லை என்று தோன்றும்போது, அன்றைக்கு இருந்த வீச்சோடு இன்றைக்கும் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது.

இன்று அதிகாரத்தில் இருப்பது நாம்தான், முக்கிய முடிவுகளை எடுப்பதும் நாம்தான் எனும்போது அந்த அளவுக்கு வீச்சு தேவையில்லை.

அதிகாரப் பரவலாக்கம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை. இந்த அதிகாரப் பகிர்வு பரவும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்தது போலத் தோன்றும். எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களே இருக்கும்போது அதை எதிர்த்து அதிகமாக இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று மாற்றங்கள் வந்திருக்கிறது. நமக்கான முடிவுகளை நாமே எடுக்க முடிகிறது எனும்போது இன்றும் அதே அளவு கூர்மையுடன் எப்படி செயல்பட முடியும்? அப்படி செயல்பட்டால் அது நமது வெற்றியை நாம் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.

67ல் அரசியல் அதிகாரம் வந்தது. 80களில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் வருகிறது. முன்பு பார்ப்பனர்களின் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக செட்டியார்களின் தொழில் நிறுவனங்கள் தான் இருக்கும். இன்று நிலைமை மாறி 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பார்ப்பனர், செட்டியார் அல்லாதவர்களிடம் தான் இருக்கிறது. இன்று அவமரியாதை குறைந்திருக்கிறது. அவமரியாதை குறைந்திருக்கும் போது சுயமரியாதை இயக்கம் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

திராவிட இயக்கம் என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்டதல்ல, சமூக, பொருளாதார காரணிகளின் மீது கட்டப்பட்டது. இப்போது அந்தக் காரணிகள் மாறியிருக்கும்போது இயக்கம் மட்டும் எப்படி அதே வீச்சோடு இருக்க முடியும்? அந்த வீச்சு மாறக்கூடாது என்று சொல்பவர்கள், ‘மாற்றம் என்பதே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் முன்வைக்கும், இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முழுமையாக பதிவாகாமல் போனதற்கு என்ன காரணம்? இன்றைக்கு இருக்கிற ஒரு சில பதிவுகள் பெரும்பாலும் தனிநபர்களின் விருப்பத்தினால் ஏற்பட்டதுதானே?

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். 67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். மற்ற இயக்கங்களைப் பற்றி போதுமான அளவுக்கு அகடாமிக் பதிவுகள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் வேறு. உதாரணத்திற்கு காங்கிரஸ் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் பெரிய பலம் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போதே ஓரளவுக்கு கல்வியறிவுடன் வருகிறார்கள்.

நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.

நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக நாம் வருத்தப்படவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை. நாம் 80களில் இறுதியிலே ஆரம்பித்து அதிலிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. வந்தபிறகு நம்முடைய வேலையை நாம் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம். அவர்கள் அளவுக்கு எல்லாவற்றிலும் நாம் சரிக்குச் சமமாக இருப்போமேயானால், இந்த இயக்கம் தோன்றியதற்கான அவசியமே இல்லையே? எனவே நாம் ஒன்றுமே செய்யவில்லை என நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பல்கலைக்கழகத்தில் நுழைய இடம் கேட்பவனிடம், ‘நீ எழுதிய புத்தகம் ஏன் பல்கலைக்கழகத்தில் இல்லை’ என்று கேள்வி கேட்டால் அந்தக் கேள்வியிலேயே உள்முரண்பாடு உள்ளது. இங்கு எதுவும் நடைபெறவில்லை என புலம்பிக் கொண்டிருப்பதால், நடக்கும் விஷயங்களைக் கூட ஒருவர் மற்றவரிடம் பரிமாறிக் கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

சுயமரியாதை இயக்கப் பெண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் எழுதிய ஸ்ரீலதா பற்றியோ, வ.கீதாவின் பங்களிப்பு பற்றியோ, எஸ்.வி.ஆர். பெரியார் கட்டுரைகள் அனைத்தையும் இணையத்தில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையோ, தங்களிடம் இருக்கும் பெரியாரின் படைப்புகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவார் என்பதையோ நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்வதே இல்லை. சொல்லிவிட்டோம் என்றால், ‘நாம ஒண்ணுமே பண்ணலே’ன்னு இனி ஒப்பாரி வைக்க முடியாது என்பதால் சொல்லாமல் இருக்கிறோமா?

சுயமரியாதை இயக்கத்தில் இருக்கும் நாம் ஏன் நம்முடைய வெற்றிகளை சுயமரியாதையுடன் கம்பீரமாகக் கொண்டாடுவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அப்படிக் கொண்டாடியிருந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கான அவசியமே இருந்திருக்காது.

பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். இதனால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?

என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு. காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள். மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.

நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி. அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.

வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம். தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்குமான அமைப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இருந்தன. ஆனால் நாளடைவில் சிறுபான்மையினரும், தலித்துகளும் அதிலிருந்து விலகி தங்களுக்கென தனி அமைப்புகளையும், கட்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். இன்று தலித் இயக்கங்கள் எதிர்நிலையில் இருந்து திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற அளவுக்கு சென்றுவிட்டனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

தமிழ்நாட்டு தலித் மக்கள் மட்டும் இப்படி சென்றுவிடவில்லை. அம்பேத்கர் நூற்றாண்டிற்குப் பின், இந்திய அளவில் தலித் மக்களிடையே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பெரியார் என்ற iconக்குப் பதிலாக அம்பேத்கர் என்ற icon-ஐ முன்வைத்தால் தலித் இயக்கங்களுக்குக் கிடைக்கக்கூடிய சாதகம் வேறுமாதிரியானது. இதுவும் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் தான்.

அதேபோல் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்ட மாற்றமும். ஆரம்பத்தில் தமிழ் அடையாளமும், இஸ்லாமிய அடையாளமும் வேறாக இருந்ததில்லை. உமறுப்புலவரில் ஆரம்பித்து உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் இவர்களும் ‘உலக அளவில் முஸ்லிம்கள்’ என்ற குடைக்குள் சென்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கம் என்பதும் தமிழ்நாடு என்பதும் சுருங்கிய இடமாகவும், இஸ்லாம் என்பது விரிந்த பரவலான ஒரு தளமாகவும் தெரிகிற ஒரு பிரச்சனை இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு அவர்களது பிரச்சினைகள் சிலவற்றையாவது சரிசெய்தார்கள் என்பதும் உண்மை.

திராவிட இயக்கங்கள் தலித், சிறுபான்மையினர் நலனில் முழு அக்கறை செலுத்தாதது மட்டுமே அவர்கள் விலகிச் சென்றதற்கான காரணமல்ல. அதை விட Pan Indian Dalit mobilization, Pan Islamic mobilization என்கிற உலகளாவிய பார்வையால்தான் அவர்கள் தங்களுக்கென ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் 19 சதவீத தலித் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 19 சதவீதம் என்பது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிக எண்ணிக்கை தரக்கூடிய பலம், நம்பிக்கை பெரியது இல்லையா? அதை எப்படி தலித் மக்கள் இழப்பார்கள்? அப்படி எதிர்பார்ப்பதும் சரியல்லவே!

அதனால் தான் தி.மு.க.வின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த கிருஷ்ணசாமியும், தி.மு.க. உறுப்பினராக இருந்த திருமாவளவனும் தனித்தனி கட்சி ஆரம்பித்து தலித் தலைவர்களாக ஆகியிருக்கின்றனர். இந்திய அளவில் இருக்கிற தலித் மக்களின் எண்ணிக்கை தருகிற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். இதை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கு மீதி பேருக்கு உரிமையில்லை.

அம்பேத்கரை முன்வைப்பதா, புலேவை முன்வைப்பதா என்று கேட்டால் அவர்கள் அம்பேத்கரை முன்வைக்கிறார்கள். அம்பேத்கரை முன்வைத்தால் கூடுதல் பலம் கிடைக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை அல்ல. இங்கு பள்ளர், பறையர், அருந்ததியர் என்று மூன்றே பிரிவு தலித்துகள் இருப்பதால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வடக்கே செல்லச்செல்ல இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகியிருப்பது தெரியும். பீகாரில் மட்டும் தலித்துகள் எட்டு பிரிவுகளாக இருக்கின்றனர். அங்கு தலித் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது அவர்களுக்கு நல்லதுதானே!

ஒரு தலித் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில்தான், இன்று கிருஷ்ணசாமி அத்வானியையோ, சோனியாவையோ சந்தித்துப் பேச முடிகிறது. வெளிப்படையாகப் பேசினால், கிருஷ்ணசாமியோ, திருமாவளவனோ வேறு கட்சிகளில் இருந்து கொண்டு ‘எங்களுக்கு இந்த மாவட்டங்களில் தலித் மக்களிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வைக்கிறோம், நாடாளுமன்றத் தொகுதியில் 6 சதவீத வாக்குகளை பெற்றுத் தருகிறோம்’ என்று சொன்னால் வாய்ப்பு கொடுத்து விடுவார்களா?

இவர்களுக்கு பரந்துபட்ட அங்கீகாரத்தை தலித் என்கிற அடையாளம் தருகிறது. நான் தலித் தலைவர் என்று சொல்லும்போது அகில இந்திய அளவில் ஓர் இடம் கிடைக்கிறது. வேறொரு கட்சியில் இருந்து கொண்டு, ‘திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரை வரை எனக்கு செல்வாக்கு இருக்கிறது. தாமிரபரணி கன்னியாகுமரியைத் தொடும் இடத்தில் என்னுடைய செல்வாக்குப் போய்விடும்’ என்று கிருஷ்ணசாமி சொன்னால் அவருக்கு என்ன மரியாதை இருக்கும்? கருப்பசாமி, பி.ஹெச்.பாண்டியன் போல அவரும் வட்டார அரசியல்வாதியாக சுருங்கி விடுவார்.

ராமதாஸ் மொழி, கலாச்சாரம் குறித்து திடீரென்று பேச வேண்டிய அவசியம் என்ன? அவருடைய செல்வாக்கு என்பது விழுப்புரம் தொடங்கி சின்னசேலம் வரைதான். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் அவரும் பொன்முடியும் ஒன்றாகி விடுவார்கள். அதனால் தான் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வேறு விஷயங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. இது அரசியல் நிர்ப்பந்தம். இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே தேர்தல் அரசியலை எதிர்கொள்ள முடியும்.

நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும், திராவிட இயக்கங்களிலிந்து வெளியேறி தங்களுக்கென ஒரு அமைப்பைத் தொடங்கியவர்கள், திராவிட இயக்கத்தின் பங்களிப்பை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அதைக் கண்டித்து, எந்த திராவிட இயக்க அரசியல்வாதியும் பேசுவதில்லை. பேசினால், தங்களை தலித் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறதா?

தலித் விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அச்சம் மட்டுமே பதில் சொல்ல விடாமல் என்னைப் போன்றவர்களைத் தடுக்கவில்லை. எவ்வளவு விமர்சித்தாலும் பிரச்சனை என்று வரும்போது இவர்களும் நம்முடன் இணைந்து தான் செயல்படப் போகிறார்கள். விமர்சிப்பதன் மூலம், இவர்களையும் எதிராளியாக மாற்றிவிட வேண்டாம் என்கிற ஒரு பார்வை இருப்பதுதான் காரணம்.

உதாரணமாக ரவிக்குமார் பெரியாரை விமர்சித்தபோது, அதற்கு எதிராக சர்வதேசப் பத்திரிகைகளில் என்னால் எழுதியிருக்க முடியும். இவர் மாதிரியான எழுத்தாளர்கள் எழுதுவது குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. அதற்குப் பதில் எழுதினால், பெரியார் தலித் மக்களுக்கு விரோதியா என்ற விவாதம் மேலும் பல இடங்களுக்குப் போகும். அதை நான் விரும்பவில்லை.

திராவிட இயக்கத்தை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆட்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டம் தலித்துகளின் காலகட்டம். நாளை சிறுபான்மையினர் விமர்சித்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. இதற்காக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

மற்றொருபுறம் விமர்சிப்பவர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்றிவிட வேண்டாம் என்ற எண்ணமும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. இன்று தலித்களுக்காக கண்ணீர் விட்டு உருகி, ‘நீயும் இந்துதான்’ என்ற போர்வையில் நிற்பது ஆர்.எஸ்.எஸ்.ம், பார்ப்பனர்களும் தான். நாம் இந்த மாதிரியான தலித் எழுத்தாளர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை இன்னமும் பார்ப்பனர்கள் பக்கம் தள்ளிவிட வேண்டுமா?

திராவிட இயக்கங்களை விமர்சிப்பது ஒருபுறமிருக்க, இப்போது ‘தலித் - பார்ப்பனக் கூட்டணி’ என்ற ஒன்றை ரவிக்குமார், அவுட்லுக் ஆனந்த் போன்றவர்கள் சொல்கிறார்களே, இது எந்தளவிற்கு வெற்றி பெறும்? எந்தளவிற்கு சரி?

குஜராத்தில் நரேந்திரமோடியின் வெற்றியை வேறு எந்த மாநிலத்திலும் பரப்பிவிட முடியாது. அது குஜராத்தில் மட்டும்தான் சாத்தியம். அதேபோலத் தான் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி செய்ததை தமிழ்நாட்டில் செய்துவிட முடியாது. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி எல்லாமே எண்ணிக்கை என்ற அடிப்படையில் வந்து நின்று விடும்.

உத்திரப்பிரதேசத்தில் 12 சதவீதம் பார்ப்பனர்களும், 19 சதவீதம் தலித்துகளும் இருக்கிறார்கள். தேர்தலில் நடைபெறும் மும்முனை அல்லது நான்குமுனைப் போட்டியில் யார் முப்பது சதவீதம் வாங்குகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட முடியும். தமிழ்நாட்டில் 3 சதவீதம் மட்டுமே பார்ப்பனர்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது வெற்றி பெறும் கூட்டணியாக இருக்காது. தலித் பார்ப்பனக் கூட்டணி மீது சிலருக்கு இருக்கும் மயக்கமெல்லாம், ஒரு தேர்தலில் போட்டியிட்டு தோற்றால் தானாக தெளிந்துவிடும்.

ஒரே தேர்தலில் தெளிந்து விடக்கூடிய பித்தத்துக்கு நாம் ஏன் மருந்து கொடுக்க வேண்டும்? தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தான் ஒன்று சேரமுடியும்.

இதுபோல தலித் அரசியலில் வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அரசியல் என்பதே பன்முக அடையாளங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நான் ஒரு ஆண், பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவன், நகரத்தில் வளர்ந்தவன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் என எனக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன.

ஆனால் ‘தலித் என்கிற ஒரு அடையாளம் போதும், மொழியும் தேவையில்லை, இடமும் தேவையில்லை’ எனும்போது நீங்கள் எங்கே செயல்படப் போகிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. அதாவது ஒரு போராட்டம் என்று வரும்போது அது யாருக்கானது, எங்கே நடக்கிறது, எந்த மாதிரியாக நடைபெறுகிறது என்பது மிக முக்கியம்.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. திராவிடர்களை மேலும் முன்னேற்றவே திமுக உருவானது என்ற பொருள் அதில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தாலும், அவர்களது போராட்டக்களம் இங்கேதான் என்பதைத் தெளிவாக்கினார்கள்.

தலித்துகளைப் பொறுத்தவரை அவர்கள் போராட்டத்துக்கான இடம் என்பது இங்கு இல்லை. அகில இந்திய கட்டமைப்பை முன்வைக்கிறார்கள். அகில இந்திய கட்டமைப்பு ஒன்றா என்றால் இல்லை, அதற்குள் பல முரண்பாடுகள் இருக்கின்றன. இதை எதிர்கொள்ளாமல் இருப்பது தலித் அமைப்புகளின் பிரச்சனை. இதை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அருந்ததியர் நிலையும், தேவேந்திரகுல வேளாளர் நிலையும் ஒன்றா? இரண்டும் ஒன்றே எனக் கூறி இருதரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படிப் பேசினால், தலித் ஒற்றுமை பாதிப்படையும் என்று கூறுவது சரியல்ல. உள்முரண்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, பன்முகத்தன்மையுடன் இயங்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்குள் இருக்கும் பிரச்சனையும் இந்த ‘ஒற்றை அடையாளம்’ தான். உருது பேசுகிற முஸ்லீமும், தமிழ் பேசுகிற முஸ்லீமும் ஒன்றா? பாகிஸ்தான் முஸ்லிமும் இந்திய முஸ்லீம்களும் ஒன்றா? ஒஸாமாவும் மற்றவர்களும் ஒன்றா?

உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் என்பது சரிதான். ஆனால் அப்படி சேரும்போது, அந்தந்தப் பகுதி முஸ்லீம்களின் அடையாளங்கள் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சூஃபி இயக்கத்தின் கூறுகள் மிகவும் செழுமையானவை. ‘Pan Islamic mobilization’ என்றபோது, இத்தகைய கூறுகள் அடிபடத் தொடங்குகின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது.

தலித்களோ, முஸ்லீம்களோ, யாரெல்லாம் தங்களுடைய அடையாளத்தை நிலப்பரப்புக்கு அப்பால் விரித்துக்கொள்கிறார்களோ அப்போதெல்லாம் பிரச்சனை வரத்தான் செய்யும். இங்கே, இந்துத்துவா சக்திகள் ‘ஏக இந்தியா’ என்று சொல்வதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பல முரண்பாடுகளை மறைத்து ஒன்றை கட்டமைக்க விரும்பினால் அந்த முரண்பாடுகளே உங்களை உடைத்து விடும். ஒரு தலித்துக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முதலில் அவன் ஒரு தமிழன், கலைகளோடு சம்பந்தப்பட்டவன். அவனுக்குப் பாடத் தெரியும், மருத்துவம் தெரியும். இந்த மண்ணின் உயிர்ப்பு சக்தியாக அவன் இருந்திருக்கிறான். இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் தலித் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

திராவிட இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஏராளமான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதன் மூலம் கருத்துகளை பரவலாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் இன்றைக்கு அந்த இடத்தை பார்ப்பன ஊடகங்கள் பிடித்துக்கொண்டு, இட ஒதுக்கீடு முதலான சமூக நீதிப் பிரச்சினைகளுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகின்றன. அதே நேரத்தில் இன்றைக்கு திராவிட இயக்கங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் கூட இயக்கக் கருத்துகளை பேசுவது கிடையாது. இயக்க தொலைக்காட்சிகளும் முழுவதும் வணிக நோக்கில் தான் செயல்படுகின்றன. திராவிட இயக்க கருத்துகளை முன்வைப்பதற்கு இடமில்லாததுபோல் தோன்றுகிறதே?

இதே கேள்வி என்னிடம் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, ‘நீங்கள் எதிலாவது எழுத முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா, கருத்து சொல்வதற்கு முன்வந்து இடமில்லாமல் போயிருக்கிறதா’ என்று. அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை.

என்னிடம் நிறைய பேர் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். அலுவலக வேலை காரணமாகவும், நேரமில்லாததாலும் என்னால் எழுத முடியவில்லை. என் நண்பர்களும், ‘அந்தப் பத்திரிகையில் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். என்னால்தான் முடியவில்லை’ என்று சொல்கிறார்கள்.

பத்திரிகைகள் வணிகமயமாகி இருக்கிறது என்று சொன்னால், அது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பிரச்சினையல்ல, உலகம் முழுவதும் இருக்கிற பிரச்சினை. அதையும்மீறி, எழுதத் தெரிந்தவர்களுக்கு அவர்களது கருத்துகளைச் சொல்ல இடம் இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு format இருக்கிறது. அதற்கு உட்பட்டு நாம் எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்து பத்திரிகையில் புத்தக விமர்சனம் என்றால் 900 வார்த்தைகள்தான். அதை மீறி, 5000 வார்த்தைகளில் எழுதினால் போடமாட்டார்கள்.

40, 50களில் புத்தகங்கள் இல்லை. பத்திரிகைகள் தான் கருத்துகளைப் பரப்புவதற்கு அடிப்படையான விஷயம். ஆனால் இன்றைக்கு அத்தகைய கருத்துகள் அடங்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு சராசரி மனிதர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார். கருத்துகள் புத்தகங்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இப்போதும் பத்திரிகைகள் 40, 50 காலகட்டங்களில் வெளிவந்ததைப் போல் வரவேண்டிய அவசியமில்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியத் தொலைக்காட்சிகள் அலறிக்கொண்டிருக்கின்றன. இதை நம்முடைய தொலைக்காட்சிகள் எதிர்கொள்வதில்லையே?

பிரச்சனையின் தளம் இங்கில்லாதபோது நாம் ஏன் அதை எதிர்கொள்ள வேண்டும்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு ஒரு பிரச்சனையே கிடையாது. இங்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜெயலலிதா, இல.கணேசன் கூட பேசிவிட முடியாது. டெல்லிவாழ் உயர்குடிகளின் பிரச்சனை அவர்களைச் சார்ந்திருக்கிற மீடியாவுக்குப் பிரச்சனை. அதனால்தான் அவை அப்படி அலறுகின்றன.

இடதுசாரி இயக்கங்கள் புதிதாக வரும் தொண்டர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. ஆனால் திராவிட அரசியல் கட்சிகள் பெரியாரை சுவரொட்டியில் மட்டும்தானே பயன்படுத்துகிறார்கள். அவரின் கருத்துகளை தொண்டர்களிடம் ஏன் கொண்டு செல்வதில்லை?

இடதுசாரிகள் கட்சித்தொண்டர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் கட்சி இன்னும் வளரவில்லையே? அதேநேரத்தில் இடதுசாரி சிந்தனை உடையவர்கள் நாட்டில் குறையவும் இல்லை. இதற்குக் காரணம் கட்சியைய் தாண்டி இடதுசாரி இயக்கம் பரவியிருக்கிறது.

இயக்கம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் அதை கட்சிக்குள் தேட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மு.ராமசாமியின் ‘கலகக்காரத் தோழர் பெரியார்’ நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்திற்கு வந்ததில் முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

சத்யராஜ் என்ற நடிகர் சம்பளம் வாங்காமல் பெரியார் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்? பெரியார் படம் எப்படி வெற்றிகரமாக ஓடியது? தமிழ் சினிமாவில் பார்ப்பன முகத்தோடு வருகிற மாதவனோ, அர்விந்தசாமியோ வெற்றிபெறுவதே இல்லை. விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்தியராஜ், விஜய் என நம்மைப் போன்றவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராக, சேது கால்வாய் திட்டத்திற்கு எதிராக இங்கே எந்த ஒரு போராட்டமும் நடைபெறுவதில்லை.

இந்த மாற்றம் எங்கேயிருந்து வந்தது? ஒரு பொதுப்புரிதல் இல்லையென்றால் இவையெல்லாம் இங்கே சாத்தியமா? பொதுப்புரிதல் ஏற்பட்டுவிட்ட பின்பு, பயிற்சி வகுப்புகள் எதற்கு?

இடதுசாரிகளின் கொள்கைகள் அந்த பொதுப்புரிதல் என்கிற தளத்துக்கே செல்லாததால் அவர்கள் வகுப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

திராவிட இயக்கம் தொடக்கத்தில் இருந்தே பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் வெளியில் தெரிகிற மாதிரி பெண்கள் ஏன் உருவாகவில்லை?

எல்லா இயக்கங்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தும். இன்றைக்கு இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, இந்துத்துவா தலைவி உமாபாரதி, தலித் தலைவி மாயாவதி, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தவிர குறிப்பிடும்படி வேறு பெண்கள் இல்லை. இடதுசாரி இயக்கத்திலும் குறிப்பிடும்படி பெண் தலைவர்கள் யாரும் இல்லை. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. ஆனால் மாறவேண்டும். எல்லா மாற்றங்களும் நம் கண்முன்னே சாத்தியமாகி வருவதைப் போல இந்த மாற்றமும் விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


---------நன்றி: "கீற்று" இணையதளம்

1 comments:

HK Arun said...

சிறந்தக் கருத்துக்களை அழகாக தொகுத்து வருகின்றீர்கள்.

மகிழ்ச்சி! பாராட்டுக்கள்!