Search This Blog

20.3.08

பார்ப்பனர்கள் டாக்டருக்கு படிக்கலாமா?

சோமயாகம் நடைபெறும் செய்தி கேட்டு விஷ்ணு அங்கே வருகிறார். யாகமே உருவான விஷ்ணு தனுஸோடு அதாவது வில்லோடு வந்து நிற்கிறார். எப்படித் தெரியுமா?
வில்லின் வளைந்த மூங்கில் பாகத்தின் ஒருமுனை தரையில் இருக்கிறது. இன்னொரு முனை விஷ்ணுவின் தாடையில் இருக்கிறது. இந்த முனைகளுக்கிடையே தான் நாண் எனப்படும் கயிறு இழுத்துக் கட்டப்-பட்டுள்ளது. வில்லை தன் தாடை மூலமாகவே நிலைநிறுத்தி ஸ்டைலாக நிற்கிறார் விஷ்ணு.

அவரது கோரிக்கைதான் என்ன?.... யாகத்தின் சோமரஸம் முழுவதும் எனக்கே கிடைக்கணும். மற்ற தேவதைகளுக்குக் கொடுக்கக்கூடாது..
என்னடா இது... விஷ்ணுவே இப்படி பண்ணுகிறாரே.... என யாகம் நடத்துபவர்கள் முழிக்க...

அந்த நேரத்தில் தான் சில கறையான் பூச்சிகள் வில்லின் மீது ஏற ஆரம்பித்தன.
விஷ்ணுவுடைய வில்லின் நாண் வழியாக ஏறத் தொடங்கிய கறையான்கள், மெல்ல, மெல்ல ஏறி... விஷ்ணுவின் தாடைப் பகுதியை நெருங்கின. அந்த இடத்தில் மூங்கிலோடு நாண் பிணைக்கப்பட்டிருந்ததல்லவா?

கறையான்கள் சரசரவென நாணை தின்ன ஆரம்பிக்க.. திடீரென நாண் அறுந்தது. இழுத்து வளைத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் மூங்கில் படாரென மேல் நோக்கி வேகமாக விசையோடு எழும்ப...
அஷ்வனஸ் யய்யஸ்ய சிரப்பரதிததாம்
அவாப்யேமஸ வஷுட்கார...
அதாவது அந்த கணத்திலேயே விஷ்ணு-வின் தலை மூங்கில் மேலெழும்பிய வேகத்தில் மேல் நோக்கி பிய்த்து எறியப்பட்டது.

யாகத்தின் உருவே ஆன விஷ்ணுவின் தலை கழுத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மேலே பறந்தது. இதைப் பார்த்தவர்களுக்கு அய்யோ... அபச்சாரம் ஆகிவிட்டதே... விஷ்ணுதான் யாகம். யாகம் தான் விஷ்ணு. அப்படிப்பட்ட விஷ்ணுவின் தலையே தனியே போனது என்றால் யாகம் பாதியிலேயே சிதைத்து போய்விடும்... என்ற கலக்கம், பயம்.
சோமயாகம் மறுபடிஎந்த பங்கமும் இல்லாமல் தொட வேண்டுமென்றால்.. விஷ்ணுவின் பிய்ந்த தலை மறுபடி கழுத்தோடு ஒட்ட வைக்கப்பட வேண்டும். அதற்கு வைத்யம் பார்க்க வேண்டும். யார் வைத்யம் பார்ப்பார்கள்?....

வேதத்தில் வேதகாலத்தில் வைத்யம் பார்ப்பதெற்கென்று தனியாகவே இருந்தனர். அவர்கள் அஸ்வினிகுமாரர்கள் என அழைக்கப்-பட்டனர். இவர்கள் அஸ்வினி தேவதை-களாகவும் கருதப்பட்டனர்.

யாகம் நடத்தும் பிராமணர்கள் நேராக அஸ்வினி குமாரர்களிடம் ஓடினார்கள்.
இதுபோல விஷ்ணுவின் தலை அவருடைய தனுசு அறுந்ததால் மேல் நோக்கி பிச்சுண்டு போயிடுத்து. தயவு செய்த உபகாரம் பண்ணணும் என விண்ணப்பித்தனர்.

அஸ்வினி குமாரர்கள் வேத டாக்டர்கள். நூற்றுக்கணக்கான வைத்ய முறைகளையும்.. இப்போது சொல்கிறோமே ஆபரேஷன் அது போன்ற பல வைத்ய சாஸ்த்ரம் அறிந்தவர்கள். அப்பேர்ப்பட்ட வைத்தியர்கள் ஃபீஸ் வாங்காமல் இருந்து விடுவார்களா என்ன?....
சரி.. நாங்கள் தைல வைத்ய சாஸ்திரப்பட விஷ்ணுவின் தலையை ஒட்ட வைக்கிறோம். யாகத்துக்கு மறுபடி எந்தத் தடங்கலும் வராம பாத்துக்கறோம்.

ஆனா, இதுக்குப் பிரதியுபகாரமாய்... யாகத்துல எங்களையும் சேத்துண்டு சோம ரஸத்துல கொஞ்சம் எங்களுக்கும் தரணும். இதுக்கு நீங்க ஒத்துண்டா... நாங்க ஆபரே-ஷனை ஆரம்பிக்கிறோம்...

என நிபந்தனை விதித்தார்கள் வைத்யம் பார்க்கும் அஸ்வினி குமாரர்கள். அவர்களுக்கும் சோமரஸம் மீது அவ்வளவு ஆசை.

வேறு வழி இல்லாமல், சரி, சோம யாகத்தில் அஸ்வினி தேவதைகளுக்கும் ஒரு பங்கு தருகிறோம்... என உறுதி கொடுக்-கப்பட்டப பிறகுதான். விஷ்ணுவின் தலையை தைலம் தடவி கழுத்தோடு ஒட்ட வைத்-தார்களாம் அஸ்வினி குமாரர்கள்.
சரி.. இந்தக் கதையை நான் எதற்கு சொன்னேன் என்றால்...
தஞ்மாது ப்ராமணேன பேடஜம்
நகார்யம்...

வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்கொள்ள வேண்டும் இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக்கூடாது. பிராமணனாய் பிறந்தவன் வைத்ய சாஸ்திரமே கற்கக்கூடாது.

என்பது வேத நிபந்தனை இதனால் தான் அஸ்வினி குமாரர்களிடம் பிராமணர்கள் ஓடினார்கள். இன்றும் கூட வங்காள மாநிலத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமார்... என்றே அழைக்கிறார்கள்.

ஆக... பிராமணன் டாக்டருக்கு படிக்கக்கூடாது என்பதயும் வேதம் முன்மொழிந்து வழிமொழிகிறது. ஆனால் இன்று அப்படியா நடக்கிறது?....


(நக்கீரன் வெளியிட்ட 'சடங்குகளின் கதை' நூலில்...)

0 comments: