Search This Blog

29.3.08

திராவிடர் கழகம் முன்வைக்கும் கேள்வி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்த எறையூர் என்ற கிராமம் அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிபட்டு வருகிறது.

அந்த ஊரில் வாழும் கிறித்தவர்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு, அது பகையாகி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு, அளவு கடந்து போயிற்று! காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி இரு மனித உயிர்களும் பலியாகிவிட்டன.

பிரச்சினை என்ன? அவ்வூரில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு உரிய ஆலயமான தூய செபமாலை அன்னை ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் அவமதிக்கப்படு கிறார்கள் - புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அப்படிப் புறக்கணிப்பவர்கள் யார்? வன்னியக் கிறித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தங்களுக்கென்று தனி ஆலயம் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆலயத்தைத் தனிப் பங்காக அறிவிக்கவேண்டும்; ஒரு பாதிரியார் இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனைகள் நடத்தவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

கோரிக்கை, துண்டு அறிக்கைகளாகவும், சுவரொட்டிகளாகவும் உருப்பெற்று கடைசியில் உண்ணாவிரதப் போராட்டமாகவும் மாறியது.

ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் முற்றிய சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறை வந்தது; கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் துப்பாக்கிச் சூடுவரை நடைபெற்றுள்ளது.

கிறித்தவர்களைப் பொறுத்தவரை ஆலய நிருவாகம் என்பது அரசு போல நடத்தும் நிருவாக அமைப்புகள் எல்லாம் தடபுடலாக உண்டு. இருந்தும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமூக மான முடிவை ஏற்படுத்தாமல் போனது மிகவும் ஆச்சரியத்திற் குரியது.
மறை மாவட்டம் என்கிற அமைப்புகள் எல்லாம் இருந்தும்கூட அவர்களால் ஏன் சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை என்பது அறிவார்ந்த, நியாயமான கேள்வியாகும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமை, ஜாதிக் கொடுமை என்னும் பயங்கர நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தானே ஜாதி, தீண்டாமை இல்லாத வேற்று மதத்திற்குத் தாவினர்? அப்படிச் சென்ற பிறகும்கூட, இந்து மதத்தின் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்கிற போது, இந்து மத நோயின் கொடூரம் எத்தகையது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஜாதி, தீண்டாமை என்பது கிறித்தவ மதத்தின் சித்தாந்தம், கோட்பாடுகளில் இல்லாத நிலையில் இதனை அனுமதிப்பது எப்படி?

இந்தியாவில் நிலவும் ஜாதி, தீண்டாமை இவற்றிலிருந்து முற்றிலுமாக கிறித்தவ மதம் விலகி இருக்கவேண்டும் என்று போப் தலையிட்டு கூறிய நிலையெல்லாம் உண்டே! அப்படியிருந்தும் இந்தியாவில் உள்ள பங்குத் தந்தைகள், ஆயர்கள், இதில் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை? ஒருக்கால் அவர்களையும் அந்த இந்து மத ஜாதி நோய் படாதபாடுபடுத்து கிறதோ! முதலியார் கிறித்தவர், நாடார் கிறித்தவர் என்று உத்திப் பிரித்து வாழுவது யதார்த்தமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், இவர்கள் மதம் மாறப் போகிறார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அப்படியே மதம் மாறினாலும் அப்படிச் செல்லுகிற இடத்திலாவது இந்த ஜாதி, தீண்டாமை நோயின் தாக்குத லிலிருந்து விடுபடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இந்து மதத்தைச் சேர்ந்த சில பிரசங்கிகள், மீண்டும் இந்து மதத்திற்கு வருமாறு அழைப்புக் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்து மதத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தாஜா செய்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்கிற யுக்தியாகக் கூட இது இருக்கக்கூடும்.

இந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதற்கு முன் ஒரு கேள்விக்கு விடையளிக்க அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்து மதத்திற்கு அவர்கள் வந்தால், எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார்கள் என்பது ஒரு கேள்வி; ஜாதியில்லை என்றால், இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. ஏதாவது ஒரு ஜாதியைச் சொல்லி அதில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினால், மறுபடியும் ஜாதி என்னும் புதைச் சேற்றில் அதிகாரப்பூர்வமாக மாட்டிக்கொள்ளத்தானே செய்வார்கள்?

ஜாதி ஒழிப்பு என்பது இந்த நாட்டில் எவ்வளவு அவசியம் என்பதை இப்போதாவது எல்லாத் தரப்பினரும் உணரவேண்டும். உணர்வார்களா? உணர்ந்து செயல்பட முன்வருவார்களா?
உண்மையான ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறது.

------"விடுதலை" தலையங்கம் 28-03-08

1 comments:

mraja1961 said...

இவர்கள் இழிவு நீங்க இஸ்லாம் மார்க்கமே தீர்வு. அதுவரை இவர்களுடைய சாதி இழிவு திராது. இது அடியானின் தாழ்மையான கருத்து.

மகாராஜா