Search This Blog

11.3.08

அன்னை மணியம்மையார் பிறந்தநாள்

இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் (1917). உலக வரலாற்றில் ஒரு சமூகப் புரட்சி இயக்கத் துக்குத் தலைமை வகித்த ஒரு வீரப் பெண்மணி அன்னையார் அவர்கள்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியார் அவர்களின் சமூகப் புரட்சி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தனி வாழ்வைத் தூக்கி எறிந்து தந்தை பெரியார், அவர்கள் தந்த இலட்சியம், உருவாக்கிய இயக்கம் இவையே கதி என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரை வரலாற்றில் காண்பது என்பது அரிதினும் அரிது.

அன்னையார் அவர்கள் தந்தையார் சுயமரியாதைக்காரர் என்ற முறையிலும், கொள்கைச் சூழலில் அன்னையார் வளர்ந்த நிலையிலும், அவற்றையெல்லாம் சிறுமியாக இருந்த நிலையிலே உள்வாங்கிக் கொண்ட தன்மையிலும், தன் வாழ்வு என்பது பொது வாழ்வு - தந்தை பெரியார் அவர்களால் உரு வாக்கிக் கொடுக்கப்பட்ட இலட்சியத்திற்காக எதையும் ஈகம் செய்யும் தன்மையது என்பதை இளம் வயதிலேயே வரித்துக் கொண்டவர் ஆவார்.
தந்தை பெரியார் அவர்கள் ஒருவரை அடையாளம் கண்டு, நம்பிக்கை வைத்து, மாபெரும் பொறுப்பை ஒப்படைக்கிறார் என்றால், அது சாதாரணமானதல்ல.

இயக்கத்திற்கு ஒரு ஏற்பாடாக தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்களைத் திருமணம் செய்துகொண்ட போது, பெரும்பாலோர் நினைத்ததுண்டு - பெரியார் எதிர் பார்க்கும் அளவுக்கு இந்தப் பெண்ணால் செயல்பட முடியுமா? இயக்கத்தைக் கட்டிக் காக்க முடியுமா? தமிழர் சமுதாயத்துக்கு வழிகாட்ட முடியுமா? என்று எண்ணியவர்கள் உண்டு.
தந்தை பெரியாரின் ஆப்த நண்பரான திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கூட அப்படித்தான் கருத்தும் கூறினார்.

அவையெல்லாம் தோற்றுப்போய், தந்தை பெரியார் அவர்களின் கணிப்புதான் கடைசியில் வென்றது என்பதை அன்னை மணியம்மையார் செயல்பாட்டின்மூலம், உழைப் பின்மூலம், எளிமையின் மூலம், துணிவின்மூலம் சாதித்துக் காட்டினாரே!

எளிமையானவர்தான் - தோற்றத்திலும், பேச்சிலும் அடக்கமும், கனிவும் இருக்கும்தான்; ஆனால், அவர்களுக்குள் பதுங்கியிருந்த போராட்டக் குணம் என்பது குகைவாழ் புலி போன்றதாகும்.

தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்கள் நடத்திக் காட்டிய - இந்தியாவையே குலுங்கும்படிச் செய்த இராவண லீலா என்ற ஒரு நிகழ்ச்சி போதாதா?

நெருக்கடி நிலை என்ற ஒன்று அறிவிக்கப்பட்டு மனித உரிமைகளும், கருத்துரிமையும், பேச்சு உரிமையும், எழுத்து உரிமையும் நசுக்கப்பட்ட அந்த இருள் சூழ்ந்த காலகட்டத்தில், இயக்கத்தையும், ஏடுகளையும் அவர் நடத்திக் காட்டிய விதம் சாதாரணமானதுதானா?
இவற்றையெல்லாம்விட - தந்தை பெரியார் அவர்கள் 1949 முதல் 1973 வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு இடையும் தாக்குப் பிடித்து பொதுவாழ்வைத் தொடர முடிந்தது - பெரும் பெரும் போராட்டங்களை நடத்த முடிந்தது, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு உரிமைகளை ஈட்டித்தர முடிந்தது என்றால், அவற்றிற் கெல்லாம் மூல வித்தாக இருந்து தந்தை பெரியார் அவர்களை எல்லா வகையிலும் பேணிக்காத்து தமிழர் சமுதாயத்துக்கு ஒப்படைத்தார்களே - அந்த ஒன்றுக்காக மட்டுமே, அன்னையார் அவர்களுக்கு ஊருக்கு ஊர் சிலை வைத்து நன்றி பாராட்டலாமே!

தந்தை பெரியார் அவர்கள் அன்னையாரை அடையாளம் காட்டியதுபோலவே, அன்னை மணியம்மையார் நமது ஆசிரியர் அவர்களை, தமக்குப் பிறகு கழகம், அறக்கட்டளை இவற்றிற்கு முழுப் பொறுப்பாக்கி ஏற்பாடு செய்ததும்; அதன் சிறப்புமிகு பலனை இயக்கமும், சமுதாயமும், இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் இன்றைய தினம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்களே - இவையெல்லாம் அன்னை மணியம்மையார் யார் - எத்தகு பெருமைக்கு உரியவர் என்பதற்கான அணிகலன்களாகும். அன்னையார் பிறந்த நாளில், இவற்றை அசை போடுவோம் - உள்வாங்கு வோம் - செயல்படுவோம் - வெற்றி பெறுவோம்! வாழ்க பெரியார்! வாழ்க அன்னை மணியம்மையார்!

நன்றி: -----"விடுதலை" தலையங்கம் --10-3-2008

0 comments: