(மார்ச்சு 6-ஆம் தேதி மகா சிவராத்திரியாம். அதன் யோக்கியதையை தந்தை பெரியார் எழுதுகிறார் - படியுங்கள்)
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம். அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).
அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.
அடுத்த கதை -
ஒரு பாப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத் தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச் சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.
இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியாமை யும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
------- தந்தைபெரியார் -- நூல்: "இந்துமதப் பண்டிகைகள்"
---------------நன்றி:விடுதலை
Search This Blog
5.3.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment