Search This Blog

18.3.08

இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம்

இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் (16.3.1978) - வரலாற்றுக் குறிப்பு நாள்! அவர்தம் புகழைப் பொருளோடு உயர்த்திப் பிடிப்பதில் `இராவண லீலாவுக்கு முக்கிய இடம் உண்டு.

ஒவ்வொரு விஜயதசமியன்றும் புதுடில்லியில் ராம்லீலா மைதானத்தில் (இதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது) ஆண்டுதோறும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் உருவங்களுக்கு எரியூட்டி விழா கொண்டாடுகிறார்கள். `ராம்லீலா வட இந்தியாவின் கலாச்சாரத் திருவிழாவாகவே ஆக்கப்பட்டு விட்டது.

இராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம் என்று நேரு, விவேகானந்தர் போன்றவர்களே கூறியிருக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது, ஒரு சார்பாக இராமாயணப் பாத்திரங்களான திராவிட இனத்தவர்களை எரிப்பதை விழாவாக கொண்டாட லாமா? இது திராவிடர்களை இழிவுபடுத்துவது ஆகாதா என்ற தன்மான வினாவை எழுப்பியதோடு அல்லாமல், அவர்கள் இராவ ணாதிகளின் உருவங்களைச் செய்து வைத்துக் கொளுத்துவது போலவே இராமனாதிகனை (இராமன், சீதை, இலட்சுமணன்) உருவங்களைக் கொளுத்தும் எதிர்வினை செயலில் ஈடுபட்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

அவர்கள் அதற்கு `ராம் லீலா என்று பெயர் கொடுத்தனர் என்றால் அன்னையார், இங்கே `இராவண லீலா என்று பெயர் கொடுத்தார். அன்னையாரின் இந்தச் செயல் வரலாற்று ஓட்டம் முழுவதுமே முக்கிய குறிப்பாகப் பதிவு செய்யப்பட்டு விடும்.

அத்தகைய அன்னையாரின் வரலாற்றுக் குறிப்பு நாளான இன்று - தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து ஒரு பிரபல தொலைக்காட்சியில் இராமாயணத் தொடர் அரங்கேற்றப்படுகிறது என்பது வேதனைப்படத்தக்க ஒன்றுதான்.
நவீன தொழில் நுட்பத்தில் மிகப் பிர்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, ஞாயிறுதோறும் ஒளிப்பரப்பாகிறதாம்.

அண்மையில் என்.டி.டிவி இராமாயணத் தொடரை ஒளிபரப்பத் தொடங்கிய போதே அதனைக் கண்டித்து இருக்கிறோம்.

தமிழர்களைக் கொச்சைப்படுத்த தமிழ்நாட்டிலேயே கைலாகு கொடுக்கப்படுகிறது. கேட்டால் வியாபாரம் என்பார்கள். மீன் விற்ற காசு கவிச்சியா அடிக்கப் போகிறது என்று சமாதானம் கூடச் சொல்வார்கள்.

அதுவும் காவிக் கூட்டம் ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று தோள் தட்டி, தொடை தட்டி வன்முறை ஆயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்த இராமாயண தொடராம்.

ராமன் பாலம் என்று சொல்லி தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கலைத்திட காவிகள் தினவெடுத்துக் கிளப்பியுள்ள இந்தப் பருவத்தில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பு தமிழ்நாட்டில் என்றால் இது ஏதோ எதேச்சையாக நடந்ததாகக் கருத முடியாது. இதன் பின்னணியில் ஒரு நோக்கம் உறுதியாக இருக்கிறது என்று கருதிட இடம் உண்டு. இது பிறகு வெளிப்படக் கூடும்.
பார்ப்பனர்கள் எப்பொழுதும் எதிர் எதிரே நின்று வீரப் போர் புரிந்தது கிடையாது - கிடையவே கிடையாது.

எதிரிகளுக்கு நம்மிடமிருந்து மலிவாகவே ஆள்கள் கிடைப் பார்களே! தந்தை பெரியார் காலத்துக்குப் பிறகும் இது தொடருகிறதே - தொடரலாமா? தந்தை பெரியார் ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் என்றாரே அறிஞர் அண்ணா, அதனையெல்லாம் அறியாதவர்களா இவர்கள்?

அரசியல் பின்னணியா? வியாபாரப் பின்னணியா? எந்தப் பின்னணியாகத்தான் இருந்தால் என்ன? தமிழர்களுக்குக் கேடு செய்வது என்ற திட்டம் மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை!
மீண்டும் இராவண லீலாக்கள் தேவையா? அன்னையாரின் நினைவு நாள் இந்த வினாவை இப்பொழுது எழுப்பியிருக்கிறது!


-------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 16-3-2008 இதழில் எழுதிய கட்டுரை
இராமாயணத்தை விமர்சி

0 comments: