இராமாயணம் நடந்த காலம் இராமாயணப்படி திரேதாயுகம், துவாபர யுகம் இவ்விரண்டிற்கும் முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்த இன்றைக்கு 2550 ஆண்டுகள் தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதாயுகத்தில் (21,00,000 ஆண்டுகளுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன பற்றி ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-
(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு)
1. இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் ராமன் கேட்கும் பொழுது 'பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)
2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, 'திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கும் பேதமில்லை' என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம், 106 ஆவது சர்க்கம்; 412 ஆவது பக்கம்)
3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம் போல் கட்டப்பட்ட ஒரு உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தரகாண்டம் 15ஆவது சர்க்கம்; 69 ஆவது பக்கம்)
4. வாலியிடம் இராமன் கூறும்பொழுது, 'பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்கரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான்;' என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம் 69 ஆவது பக்கம்)5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது 'வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆவது சர்க்கம் 23,24 ஆவது பக்கங்கள்)
21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றி கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனால் இராமாயணக் காலம் (திரேதா யுகம்) என்பது பொய்யேயாகும்.
-----தந்தைபெரியார்- நூல்: "இராமயணக்குறிப்புகள்"
Search This Blog
22.3.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment