Search This Blog

20.3.08

பெரியாரின் பெருவெற்றி

சென்னை, மார்ச் 18- ஒரு தகுதி யான தத்துவம் எதுவென்ப தற்கும், வெற்றி பெற்ற ஒரு தத்துவத்தின் மாட்சிமையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு பெரியாரியல் ஒரு சமகால உதாரணமாகத் திகழ்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்.திங்களன்று சென்னை பல்கலைக் கழக தத்துவத் துறையின் சார்பில், நவீன தத்துவ சிந்தனையும் தமிழ் மரபும், என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகப் பங் கேற்று அவர் வழங்கிய சிறப்புரையாவது:

தமிழர்களாகிய நாம் நமது முன்னோடிகள் படைத்தளித்து விட்டுப் போன இலக்கியங் களின் பெருமையையும், அதன் தொன்மையையும் பலவாறாக பாராட்டிப் பேசுவதில் காணு கிற சுகத்தை அத்தகைய இலக்கியங்களை நவீன காலத் திற்கேற்ப நமது தலை முறையில் வடித்தெடுப்பதில் காண தவறி வருகிறோம். நமக்கு, நமது முன்னோர்கள் விட்டுச் சென்றது போன்ற படைப்புகளை தற்காலத்து சூழ்நிலைகளை மையப் படுத்திய இலக்கியங்களை நமக்கு பின்வரும் தலை முறைக்கு தந்துவிட்டுப் போவது நமது கடமையல்லவா. அவர் களும் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் தான் தனது பாரம்பரிய இலக்கியப் பெருமைக்கு தேடிப் போக வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

விடுதலை உணர்வோடு வெள்ளையர்களை எதிர்த்த போது மக்களிடம் சுதந்திர வேட்கையை தூண்டிவிட நேர்ந்தது. அதற்கு வலுசேர்க்க மண்ணின் பெருமைகளை முன்வைத்த வேளையில், அதோடு தொடர்புடைய மொழியின் பெருமையையும் பேச நேர்ந்தது. தாய்மொழி மீதான பற்றுதல் ஏற்பட இதுதான் அடிப்படை.

ஆங்கில இலக்கியங்களில் பழமையானது. இடைப் பட்டது. நவீனம் என மூன்று பகுதிகள் உண்டு. தமிழ் இலக் கியத்தைப் பொறுத்தவரை முதல், இடை, கடை என புத்திசாலித்தனமாக பிரித்தனர். நமக்கு கடை என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை தான். நவீனம் நம்மிடம் இல்லை.

இதற்கான காரணத்தை நாம் இன்னொரு கோணத் திலும் பார்க்க வேண்டி இருக் கிறது. கம்பனும், வள்ளுவனும், சங்க இலக்கியப் புலவர் பெரு மக்களும் இன்றைய படைப் பாளிகளை தொடக்கத்தி லேயே பயமுறுத்தி விடுகிறார் கள். இவர்கள் செய்யாத எதை நாம் சாதித்துவிடப் போகி றோம் என்கிற பெருமூச்சி லேயே இன்றைய தலைமுறை பிரமித்து நின்று விடுவதும் தமிழில் நவீனங்கள் வருவதற்கு தடைக்கற்களாக இருக்குமோ என நான் சந்தேகிக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை தத்துவம் என்றாலே அவை சமயம் சார்ந்த கருத்து களாகத்தான் இருந்தன. சமண சமய கருத்துகளும், சைவ சித்தாந்தங்களும் நமது பழைய இலக்கியங்களில் மேலாதிக்கம் செய்திருப்பதை காண முடியும். வடக்கில் தோன்றிய கௌதம புத்தர் மனிதகுலத்திற்கான வாழ்க்கை நெறிமுறைகளைத் தான் போதித்தார். அவரும் இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது என்கிற ஆய்வில் ஈடுபட்டார். உறுதியான விடை அவருக்கும் கிட்டவில்லை. ஆனால் அவரை வழிகாட் டியாகக் கொண்டு, பின்வந்த வழித்தோன்றல்கள் மறுபிறவி என்பதை முன்வைத்தனர். புத்தர் அவ்விதம் கூறவில்லை.
கடந்த காலத்தின் அனுப வங்களும், எதிர்காலத்தின் மீதான அனுமானங்களும் தத் துவங்களாக கருதப்படுகின் றன. அடிமைச் சமுதாயத்தி லிருந்தவர்கள் அடுத்துவரும் முதலாளித்துவ சமுதாயம் குறித்தும், முதலாளித்துவ சமுதாயத்தவர் அடுத்து வரும் சமதர்ம சமுதாயம் குறித்தும் முன்கூட்டியே கூறுவது தத்துவங்களாக கூறப்பட்டன. பின்னர் அதுவே பின்னோக்கிப் போய் முந்தைய சமுதாய நிலைகளைப் பற்றி கூறுவதும் தத்துவமாகியது.

ஆனால், இன்றைக்கு தத்து வம் என்பது சொல்கிறவனுக்கு புரிகிறதோ இல்லையோ கேட் பவனுக்கு விளங்கிக் கொள்ள இயலாது எதுவோ அது எல் லாமே தத்துவமாகக் கருதப் படுகின்றன. தகுதியான இலக்கியம் என்பது அதனை கேட்கிற வாசிக்கிறவனை அவன் இருக் கும் நிலையிலிருந்து கொஞ்ச மேனும் மேம்படுத்த வேண்டும் என்பதுபோல தத்துவமும் அது யாருக்காக படைக்கப்படு கிறதோ அந்த மனிதகுல மேம் பாட்டிற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். மனிதனை வாழ வைக்க எது வழி காட்டுகிறதோ அதுதான் தத்துவம். ஒரு தத்துவத்தை சொல்கிறவர் அதற்கு தானே வழிகாட்டியாக நின்று, வாழ்ந்தும் காட்ட வேண்டும்.
அந்த வகையில், மனிதன் இறந்தபின் அவன் சுகம் காணும் தத்துவங்கள் எதனை யும் கூறாமல் அவன் வாழும் போதே மனிதனுக்குரிய மாண் புகளோடு வாழ வழிகாட்டிய பெரியாரியலும்,
`தான் சொன்ன தத்துவத்திற்கு தானே உதாரணமாக வாழ்ந்தும் காட்டிய தந்தை பெரியாரும் நமக்கு சமகாலத்தின் சாலச் சிறந்த உதாரணம்.

தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மனிதன்கூட தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்ள கூச்சப்படுகிறான். சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது. அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக் கொள்கின்றனர்.

தந்தை பெரியாரின் தத்துவங்கள் மனிதனையும் அவனது முன்னேற்றத்தையும் அடி நாதமாகக் கொண்டு அமைந்து இருந்த காரணத்தாலேதான் அவை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது. இத்தகைய பெருமை வேறுபல தத்துவ வாதிகளுக்கு அமையாமல் போனதற்கு காரணம் அவர்கள் மனிதனை மறந்ததே. பகுத்தறிவு வாதமும், பொதுவுடைமை வாதமும் இன்னும் நூறாண்டு களானாலும் தத்துவத்துறையில் தனித்து நின்று கோலோச்சும் என்பதற்கு அவை மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி இருப்பதே காரணம்
என்றார் தா. பாண்டியன்.

-------"விடுதலை" 13-3-2008

0 comments: