Search This Blog

28.3.08

கூப்பிட்டால் வந்துவிடுவார் கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்

தந்தை பெரியார் அவர்கள் ஆறு மாதச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, 13.6.1958ஆம் தேதி விடுதலை ஆனார். வெளியானவுடன் சுற்றுப் பிரயாணம் பற்றி ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் விளக்க அறிக்கை பின்வருமாறு:

பெரியார் அவர்கள் விடுதலை ஆனவுடன் தங்கள் தங்கள் ஊருக்கு வரவேண்டும் என்பதாக ஒரு மாதமாகவே பலர் கடிதங்கள் எழுதி வழிச் செலவுக்குப் பணமும் பல பேர் அனுப்பியிருக்-கிறார்கள். இந்த இரண்டு மூன்று நாள்களாகப் பல தந்திகளும், செக்குகளும், டிராப்ட்களும் வந்தவண்ணமாய் இருக்கின்றன.

பெரியார் உடல் நிலையைப் பற்றி, பெரிய நோய் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவரது 80 வயதே அதாவது மூப்பு என்பதே ஒரு பெரிய நோய் அல்லவா? அதிலும் பெரிய டாக்டர்கள் பலர் அவர் உடல்நிலை பற்றிப் பயப்படும்படியாகக் கூறி பெரியாரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இனி அவரைப் பயணம் செய்யும்படியோ, பேசும்படியோ விடா-தீர்கள்! கண்டிப்பாய் விடாதீர்கள்! என்பதாக ஒரே கருத்தாய்க் கூறி வருகிறார்கள்.
பெரியார் அவர்கள் தனது மூப்பினால் வேறு எந்தக் காரியமும் செய்ய முடியா-விட்டாலும், தனது மூப்பு, பிரயாணத்திலோ - பேச்சிலோ தனக்கு முடிவு தரவாவது உதவட்டுமே என்கிறார்.

இதற்கு ஆக அவரைத் தற்கொலை செய்து கொள்ளும்படி விடலாமா? அல்லது நாமாவது அவரது முடிவை அவசரப்படுத்தலாமா?

ஆகையால், அவர் இனி அதிகப் பிரயாணம் செய்யாமலும் அதிகம் பேசா-மலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து, பொதுச் சொத்து நாதி அற்றதாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப்பாற்றுவது போல் கவலையுடன், காப்பாற்றியாக வேண்டும்.

அரசாங்கத்தாரால் நம் மக்களுக்கு இப்போது ஏற்பட்ட அக்கிரமமான கொடு-மைக்கும் கொலைக்கும் பெரியார் அவர்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களைப் பாராட்டி ஆறுதல் கூறவேண்டி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் எய்தவனை விட்டு-விட்டு அம்பை (வாளியை) நொந்து கொண்டு இருக்கிறார்கள்! இதற்குப் பரிகாரமாகத் தவறான வழியில் செல்லத் தூண்டப்-படுகிறார்கள். இத்தவறான நிலைக்கு ஆளா-காமல் மக்களை நடத்த வேண்டி இருக்கிறது. இது பெரியாரால் தான் ஆகும் மற்றவர்-களுக்குப் பெரிதும் விஷயமே புரியவில்லை என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.

ஆகையால், ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் அழைப்-பது என்கின்ற தன்மையில் அந்தந்த மாவட்டத்-தார் முடிவு செய்து கொண்டு அந்தப்படி அழைத்தால், தேதி குறிப்பிடுவதை நான் கவனித்துத் தேதி கொடுக்கிறேன்.
அழைப்பைக் குறைத்தால் பெரியார் அவர்களை பத்திரிகைக்கும், நூல்களுக்கும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி செய்யலாம். மாநாடுகளை மாதத்திற்கு ஒன்று நடத்தினாலே போதுமானது ஆகும். அதுவும் அனுமதி பெற்று நடத்துவது பயன்படத் தக்கதாகும்.
இதை மாவட்டத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

பெரியாருக்கு ஒரே வேளை உணவுதான், இரண்டு வேளை பால் இப்படித்தான் சிறையில் (ஆஸ்பத்திரியில்) பழக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாய் யாரும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கூப்பிட்டால் வந்து விடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்.
இது இரண்டிலும் அவர் குழந்தையே ஆவார்.

ஆகையால் தோழர்கள் அருள்கூர்ந்து இதைக் கருத்தில் கொள்ளப் பணிவாய் வேண்டுகிறேன்.

------------------அன்னை மணியம்மையார்-- விடுதலை, 8.6.1958

0 comments: