Search This Blog

16.3.08

சிவன், பிரம்மா, விஷ்ணு யோக்கியதை

உழைப்பது நாம்; உழைக்கும் மக்களாகிய நாம் சூத்திரன், பஞ்சமன், வைப்பாட்டி, மக்கள், நம் தாய்மார்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டிகள் என்று மனுவில் கூறுகிறான். கடவுள் சங்கதியோ கேட்க வேண்டாம். ராமன் ஒரு கடவுள். அவன் யோக்கியதை என்ன? இவற்றையெல்லாம் நாம் வைத்திருக்கலாமா? அடுத்தபடியாக இந்த கடவுள், மதம், சாஸ்திரம், புராணங்கள், அரசாங்கம் எல்லாம் புரட்டுப் பித்தலாட்டம், புராணங்கள் இருப்பது மானங்கெட்டதனம்.. இவற்றையெல்லாம் உடைத்து நொறுக்க வேண்டும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மானம் இருக்கிறது என்று அர்த்தம். நம் இழிவு ஒழிய வேண்டுமானால் இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும். முதலில் அதற்கு துணிந்து மக்கள் முன்வரவேண்டும். மதத்தை ஒப்புக் கொண்டால் அதில் நாம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறாமே. நான் தான் உன்னை கீழ்ஜாதியாகவும், பார்ப்பானை மேல் ஜாதியாகவும், உன்னை உழைப்பவனாகவும், அவனை உழைக்காமல் உண்டுகளிப்பவனாகவும், உன்னை பஞ்சமன், பறையனாக, தீண்டப்படாதவனாக, நான்காம் ஜாதி அய்ந்தாம் ஜாதியாகவும், பார்ப்பானை மேல் குலத்தவனாகவும் படைத்தேன் என்கின்ற கடவுளை நாம் கும்பிடலாமா? மதத்தை ஒப்புக் கொண்டால் நாம் பொறுக்கி என்ற நிலைதான் ஏற்படும். மனுதர்மத்தில் சூத்திரனானால் அவனுக்கு கெட்டுப்போன எச்சில் இலைதான்; உழுத்துப் போனதைத்தான் சாப்பிட வேண்டும்; கிழிந்த வேட்டிதான் கட்ட வேண்டும்; சூத்திரன் பொருளீட்டக் கூடாது; காதில் விழும் போதே அருவருப்பான பெயர்தான் வைக்க வேண்டும்; மந்திரியாக இருக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். நாங்கள் தோன்றித்தானே இதிலே சிறிது மாற்றம் ஏற்பட்டது. நெற்றியிலே விபூதி பூசுவது, நான் சூத்திரன் என்று ஒத்துக் கொண்டதாகத்தான் அர்த்தம். இப்போது உடனடியாக என்ன செய்யச் சொல்கிறீர்கள், என்று லக்னோ சென்றிருந்தபோது என்னை கூட்டத்தில் கேட்டார்கள். நீங்கள் கோயிலுக்குப் போகக்கூடாது. நெற்றியில் மதச் சின்னங்கள் அணிந்து கொள்ளக் கூடாது. உங்கள் வீட்டுக் காரியங்களுக்கு பார்ப்பனர்களை அழைக்கக் கூடாது, பார்ப்பான் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது, உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாகத்தான் கூறினேன். இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் தலையில் தொட்டுப் பார்த்தனர். உச்சிக்குடுமி இருந்தது. உடனே கத்தரிக்கோல் வாங்கி வரச் செய்து முதலில் ஒருவன் வெட்டினான். இப்படி இங்கேயே 10, 15 பேர்கள் வெட்டிக் கொண்டார்கள். மற்றும் இந்த ஜாதி, மதம், சாஸ்திரம், புராணங்கள் இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், நம்மைப் பிடித்துள்ள பேய்கள் ஜாதி, ஜனநாயகம், கடவுள் மத புராணங்கள் என்னும் மூன்று என்றும், நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக உள்ள நோய்கள் அரசியல் கட்சிகள், தேர்தல், பார்ப்பான், பத்திரிகை, சினிமா ஆகிய இந்த அய்ந்தும் என்று கூறினேன்.

உலகோரெல்லாம் நவீன நாகரிகங்களுடன் முன்னேறி வர, நீ மட்டும் இவ்வளவு காட்டுமிராண்டியாக இருக்கிறாயே, நீ எப்போதுதான் திருந்துவது? உன் இழிவு ஒழிய வேண்டாமா? மனித சமுதாயத்தில் நீ மனிதனாக வாழ வேண்டாமா? என்று கேட்டால், எது வேண்டுமானாலும் சொல்லு செய்கிறோம். ஆனால், இது முன்னோர்கள் சொன்னது, அதிலே மட்டும் கை வைக்காதே என்றால் என்ன அர்த்தம்? முன்னோர்கள் என்றால் யார்? ரிஷிகள்தானே உன் முன்னோர்கள்? இந்த ரிஷிகள் எல்லாம் எதற்குப் பிறந்தவர்கள்? இவர்களுடைய யோக்கியதை என்ன? குடத்திற்கு, பன்றிக்கு, கழுதைக்கு, குதிரைக்கு என்றுதானே பிறந்தார்கள்? ஒருவராவது மனிதனுக்குப் பிறந்திருப்பார்களா? ஆபாசம் இருக்கிறது என்று தெரிந்தும் அதைவிட மாட்டேன் என்றால் என்ன பிடிவாதம்? நாரதர் யார்? அவனது வயது என்ன? யாருக்காவது தெரியுமா? எல்லா யுகங்களிலும் இருந்திருக்கின்றான்! கலியுகத்தில் மட்டும் தான் இல்லை. அதுவும் நான் இல்லாதிருந்தால் வந்திருப்பான். ஒருவன் 40, 50 லட்சம் வருஷம் என்று இருக்க முடியுமா? ஒன்றரை கோடி வருடம் வாழ முடியுமா? இப்படி ஒரு மனிதன் இதே மாதிரி அயோக்கியத்தனங்களைக் கொண்டிருக்கிறான். மதத்தை எடுத்துக் கொண்டால் சைவ மதத்தினர் உயர்ந்தவர்கள் நாங்கள் என்கிறார்கள். கசாப்புக்கடை மாதிரி வைத்திருக்கிறான் இவன் மதத்தை வைஷ்ணவன் என்று ஒருவன். எல்லாம் அயோக்கியத்தனம் பித்தலாட்டம் பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள்! நீ அப்படியிருக்க சம்மதிப்பாயா? உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் நீ என்ன செய்வாய்? சம்மதிப்பாயா? உதைக்க மாட்டாயா? கடவுள் கதை என்ன? பெண்டாட்டியை வாடகைக்கு வாங்கியதும், அடுத்தவன் மனைவிமேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுளும்தானே இருக்கிறது? பிள்ளையார் யோக்கியதை என்ன? சுப்பிரமணியனுடைய யோக்கியதையை பெரிய புராணத்திலே எழுதியிருக்கிறானே - பிள்ளையைக் கொல்லுதல் பக்தியா? சிவன் அவனைக் கொன்றான். இவனை வாயில் விழுங்கினான் என்று இருக்கிறது. ஒழுக்கமானதாக ஏதாவது இருக்கிறதா? அன்பான சிவன் என்கிறாய். எது அன்பானது? கையிலே சூலாயுதம், இடுப்பிலே புலித்தோல், கழுத்தில் பாம்பு, மண்டை ஓடு, பல பேரைக் கொன்றிருக்கிறது; எப்படி அது அன்பான சிவம் ஆக இருக்க முடியும்? கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு, தொலையட்டும் பரவாயில்லை. இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான கடவுளை வைத்துக் கொண்டு அதற்காகப் பல சடங்குகளை, பூசைகளை இந்த 1959-லேயும் செய்தாயானால் என்ன அர்த்தம்? நான் சுசீந்திரம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரிய உற்சவம் நடந்தது. பெரிய கூட்டம், நிறைய போலீஸ், என்னவென்று விசாரித்தேன்.

ஒரு நாள் சிவன் பெண்டாட்டியிடம் நாரதர் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இதை கடலையாக வறுத்துக் கொடு என்றானாம். இரும்பை எப்படி கடலையாக வறுக்க முடியும் என்று அவள் கூறிவிட்டாளாம். பிறகு விஷ்ணு பெண்டாட்டியிடமும், பின் பிரம்மாவின் பெண்டாட்டியிடமும் அதுபோலவே அந்த இரும்பைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கூறினான். இரும்பையாவது வறுப்பதாவது, இது எப்படி முடியும் என்று கூறிவிட்டார்கள். அதற்கு நாரதர், நான் வறுத்து வருகிறேன்; பார் என்று கூறிவிட்டு பூலோகத்திலுள்ள அனுசுயா என்ற பத்தினியிடம் கொடுத்து வறுத்துக் கொடு என்று கூற, அவள் அது என்னவென்று கூடப் பார்க்காமல் சட்டியில் போட்டு வறுத்தாளாம். அது கடலையாகப் பொரிந்து வந்ததாம். அதை நாரதர் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியோருடைய பெண்டாட்டிகளிடம் போய், பார் பார் நான் இரும்பை கடலையாக வறுத்து வந்துவிட்டேன் என்றானாம். அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு அது எப்படி முடிந்தது என்று கேட்க, அதற்கு நாரதர், அந்தம்மாள் பதிவிரதை - அதனால் வறுக்க முடிந்தது என்றானாம். உடனே அவள் பதி விரதையானால் எங்கள் சங்கதி என்ன என்று கோபம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேர்களுடைய பெண்டாட்டிகளும் விசனப்பட்டார்களாம். இதற்குப் பரிகாரம் காண வேண்டுமென்று அவர்கள் புருஷன்கள் வந்ததும், ``நீ கடவுள்! கடவுள் பெண்டாட்டி நாங்கள். எவனோ காட்டி இருக்கிற ஒரு ரிஷியின் மனைவி பெரிய பதிவிரதையாம்; இரும்பை வறுத்து விட்டாள். அவள் பதிவிரதையானால் எங்கள் சங்கதி என்ன?'' என்று கேட்டார்களாம். சரி இப்போ என்ன பண்ணச் சொல்லுகிறீர்கள் என்று கடவுள்கள் கேட்க, ``நீங்கள் போய் அவளையும் அபசாரியாக ஆக்கிவிட்டு வா'' என்றார்களாம். ``பதிவிரதைத் தன்மையை போக்கிவிட்டு வா'' என்றார்களாம். இந்த மூன்று பேரும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) சாமியார் வேடம் போட்டுக் கொண்டு அந்த ரிஷிபத்தினியிடம் போய், அம்மா பசிக்குது சோறு போடு என்று கேட்டார்கள். அவளும் இவர்களை உட்கார வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள். இவர்கள், ``சாப்பிடுகிறோம்; ஆனால், சாப்பிடுவதற்கு முன் ஒரு பூசை செய்வது வழக்கம். அது செய்துவிட்டுத்தான் சாப்பிடுவோம்'' என்று கூறினார்கள். அந்தம்மாள், ``அப்படியா, அதற்கு என்ன வேணும்? தேங்காய், பழம், சூடம் என்ன தேவை கூறுங்கள்'' என்று கேட்டாள். அதற்கு இவர்கள் ``அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ உன் சேலையை அவிழ்த்துவிட்டு நிற்கணும்; நாங்கள் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடுவோம்'' என்றார்கள்.

இவர்கள் சொன்னதுதான் தாமதம், அவள் சிறிதும் தயங்கவில்லையாம். உடனே சேலையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாள். அவள் அவிழ்க்க அவிழ்க்க இந்த கடவுள்கள் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டார்களாம். அவளுடைய பதிவிரதாத்தன்மை அப்படியே அழிவில்லாமல் இருந்துவிட்டதாம். உடனே அந்தக் குழந்தைகளை எடுத்துப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அவளுடைய புருஷன் வந்தான், பார்த்தான் குழந்தையை. ``நான் போகும்போது சும்மாயிருந்தாய்; வருவதற்குள் ஏது குழந்தை? எப்படி பெற்றெடுத்தாய்?'' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான். அவள், ``மூன்று பேர் வந்து பிச்சை கேட்டார்கள்; போட்டேன். நான் அம்மணமாக நிற்கணும் என்றார்கள். அப்படியே செய்தேன். அவர்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்'' என்று நடந்ததைக் கூறினாள். அவன் ரிஷியாயிற்றே. உடனே ஞானக்கண்ணால் பார்த்து விஷயம் தெரிந்து கொண்டானாம். ``நல்ல வேலை செய்தாய். இவர்கள் யார் தெரியுமா? சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகும். உன்னைக் கெடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறார்கள்! நீ நல்ல வேலைதான் செய்தாய்'' என்று கூறி அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான். இப்படி உலகத்தில் காத்தல், அழித்தல், பிறத்தல் வேலை பார்க்கிற கடவுள்கள் இவள் வீட்டு தொட்டியில் குவா குவா கொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தில் வேலைகள் எல்லாம் நின்று போயிற்றாம். மக்கள் தேவர்கள் எல்லாம் திண்டாடுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அப்புறம் விஷயம் தெரிந்தது. ரிஷியிடம் ஓடிவந்து ``உலகத்தில் எல்லா வேலையும் நின்று போச்சு, நாங்கள் திண்டாடுகிறோம். மூன்று தேவர்களையும் விட்டு விடுங்கள்'' என்று கேட்டார்கள். ``அதற்கு என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்! அவளைப் போய்க் கேளுங்கள்'' என்று கூறினார். அந்த ரிஷி பத்தினியிடம் போய், ``புத்தி வந்தது, தேவர்களைவிடு'' என்று கெஞ்ச அவளும் சரி என்று தேவர்களாக பழைய உருவாக்கி அனுப்பி விட்டாளாம். இதைத்தான் அன்று அங்கு உற்சவ தினமாகக் கொண்டாடினார்கள். கொஞ்சமாவது அறிவுக்கு இடமிருக்கிறதா இதில்? இந்தக் கதையின் பேரால் ஒரு பண்டிகையா? உற்சவம் கொண்டாடுவதா? வெட்கமாக இல்லை? கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளைக் கும்பிடுங்கள்; வேண்டாம் என்று கூறவில்லை. முஸ்லீமும் கிறிஸ்தவனும் சாமி இருக்கு என்கிறான். அவன் எப்படி கூறுகிறான்? ஒரே கடவுள், அவர் அன்பானவர், அருளானவர், யோக்கியமானவர், அவர் ஒன்றும் கேட்க மாட்டார், பிறப்பு இறப்பு இல்லாதவர், உருவமில்லாதவர் என்கிறான்! நீ என்னடா என்றால் பல ஆயிரக்கணக்கான கடவுள்கள் என்கிறாய். எல்லாம் பித்தலாட்டமான கடவுள், அடுத்தவன் பெண்டாட்டிமீது ஆசைப்பட்ட கடவுள், பல பெண்டாட்டிகளையும், சோற்றுப் பூசையும் கேட்கும் கடவுள்! கடவுள் பிறப்பு இறப்பு உடையவர், அவருக்கு பல உருவங்கள் உண்டு என்கிறாய். என்ன அர்த்தம்? நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த முஸ்லீம், கிறிஸ்தவன்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். வெள்ளைக்காரன் மடையனாக இருந்தான். அக்காள் தங்கையைக் கட்டிக் கொண்டு திரிந்தான். பச்சை மாமிசம் தின்று வந்தான். அவன் இன்று முன்னேற்றமடைந்து கடவுளிடம் போட்டி போடுகிற அளவுக்கு ஆகாய விமானம், கப்பல், எலக்ட்ரிக்லைட், சந்திர மண்டலம் வரை போக ஆரம்பித்து விட்டான். இன்னும் நாம் காட்டுமிராண்டியாக இருந்தால் என்ன அர்த்தம்? இவ்வளவு உற்சவம் பூசை விழா செய்து வந்தால் நாம் சூத்திரன் என்பதை ஒத்துக் கொள்வதாகத்தான் அர்த்தம். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். லக்னோவில் நான் இதையெல்லாம் கூறும்போது அங்கு யாரும் இது தப்பு என்ன மறுத்துக் கூறவில்லை. நீங்கள் உங்கள் பகுத்தறிவைச் செலுத்தி அறிவு பெற வேண்டும்.

-----தந்தைபெரியார் -"விடுதலை" 4-6-1959

0 comments: