Search This Blog

12.3.08

இடித்த கோயில்களின் கற்களை எடுத்து சாலைக்கு ஜல்லிபோடும் காலம் வரும்

இன்றையத் தினம் எனது பிறந்தநாள் விழா என்ற பெயரால் இந்த ஊரில் விழா எடுத்து வருகிறார்கள். உண்மையிலேயே இந்தப் பிறந்தநாள் என்பது துவக்கத்தில், பிறக்காதவர்களுக்குத் தான் கொண்டாடப்பட்டது. விநாயகசதுர்த்தி என்றும், இராமநவமி என்றும், கிருஷ்ண ஜெயந்தி என்றும் பிறக்காத கடவுளுக்கு எல்லாம் பிறந்தநாள் கொண்டாடினார்கள். இது அசல் பித்தலாட்டமல்லவா!

இப்போது தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்களுக்கு, மற்றவர்கள் சமுதாயத்திற்குச் செய்துவரும் தொண்டைப் பாராட்டுவதற் காகப் பிறந்தநாள் விழாக் கொண்டாடி வருகின்றார்கள்.

அந்தப்படியே தான் எனக்கும் அறிஞர் அண்ணா அவர்களுக்கும் பிறந்தநாள் விழாக் கொண்டாடி வருகிறார்கள். என்று கருதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தொண்டு செய்பவன் அல்லன். அரசியலுக்கும் எனக்கும் வெகுதூரம். அரசியலைப் பொறுத்தவரையில் தமிழ் இனமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஆட்சியைப் பாதுகாப்பதும், கேடாகப் போகும் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதும் தான் எனது அரசியல் கொள்கை.
மற்றப்படி என் கவனமெல்லாம் சமுதாயத்தின் மீது தான்
.

நாட்டில் 100க்கு 97 பேராகப் பெரும்பான்மை மக்கள் வாழும் திராவிட இன மக்களாகிய நாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பச்சையாகச் சொன்னால் பார்ப்பான் வைப்பாட்டிப் பிள்ளைகளாக இருந்து வருகிறோம்.

இங்குக் கூடி இருக்கிற மக்களாகிய உங்களைப் பார்த்து யார்? என்று கேட்டால் இந்து என்பீர்கள். இந்து என்றால் என்ன அர்த்தம். பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்கிற சூத்திரத் தன்மையை ஒப்புக் கொண்டதாகவே அர்த்தமாகும். திராவிடர் கழகத்தாராகிய நாங்களும் தி.மு.க.வில் பகுதிப் பேரும் வேண்டும் என்றால், இந்து என்பதை ஒப்புக் கொள்ளாதவர்களாக இருக்கலாம்.

ஆனால், பெரும்பான்மையானவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், இதை விட வெட்கக் கேடு எதுவாக இருக்க முடியும்?

இந்தப் பெரும்பான்மை மக்களுக்கு இழிவையும் மாற்றி, அவர்களைச் சுயசிந்தனையாளர்களாக மாற்றி அமைப்பது தான் எனது பிரதானத் தொண்டாகும்.
எனக்கு வயதோ 94. கைகால்கள் நடுங்குகின்றன. நாள்களை எண்ணிக் கொண்டு இருப்பவன் நான். எதற்காக ஊரைச் சுற்றிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். நம் வாழ்நாளில் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியான - -தேவையான தொண்டு செய்யவேண்டும் என்கிற உணர்ச்சி தான் அதற்குக் காரணம்!

என்னைத் தவிரவும், என் இயக்கத்தைத் தவிரவும் இந்தச் சமுதாயத் தொண்டு செய்ய இந்த நாட்டில் வேறு நாதியே இல்லை. அரசியலில் ஈடுபட்டாலும் தி.மு.க. ஓரளவிற்கு இந்தக் கொள்கையைக் கொண்டு இருப்பதாகவே நான் கருதுகின்றேன். முழுக்க அவர்கள் ஈடுபட முடியாமைக்குக் காரணம் அவர்கள் பொதுமக்களின் ஓட்டை நம்பி இருப்பது தான். கால ஓட்டத்தில் நாம் எவ்வளவோ மாறி இருக்கிறோம். எத்தனையோ விஷயங்களில் சீர்திருத்தம் பெற்று இருக்கிறோம். கால்நடையாகச் சென்ற மனிதன் இன்றைக்கு ஆகாயத்தில் பறக்கிறான்.
இவ்வளவு தூரம் பல விஷயங்களில் மாறுதலை விரும்பிய மனிதன், கடவுள் - மத விஷயங்களில் மாத்திரம் மாறுதலடைய மறுக்கிறான் என்றால், அதற்குக் காரணம் அவற்றின் மீது அவனுக்குள்ள பயமே! இந்தப் பயமான உணர்ச்சி இன்று நேற்று மனிதச் சமுதாயத்தில் ஊட்டப்பட்டதல்ல அவற்றை வைத்துப் பிழைப்பவன் ஜாக்கிரதையாக - மனித சமூகத்தில் பல்லாயிரம் வருடமாக ரத்தத்திலேயே ஊறச் செய்துவிட்டது தான் இந்தப் பயந்தாங்கொள்ளித் தன்மைக்குக் காரணமாகும். இதை எடுத்து எறிவது என்றால் சாதாரணக் காரியமல்ல. உயர்ந்த விலை கொடுத்தாக வேண்டும். கடவுள் மாயையில் இருந்து விடுவிக்கப்பட்டால்தான் உண்மையான மனிதன் உலகில் சுதந்திரமாக நடமாட முடியும். அதற்காகவே நான் பாடுபட்டு வருகிறேன்.

கடவுளைக் கும்பிடுகிறவனைப் பற்றியும், பிரச்சாரம் செய்கிறவனைப் பற்றியும் நான் கடுமையாக விமர்ச்சிப்பதாகக் கூறுகிறார்கள். கடவுள் இல்லை என்று கூறியவர்களை உங்கள் புராணங்களில் வசைபாடியுள்ள அளவிற்கு இன்னும் நான் போகவில்லையே! கடவுள் இல்லை என்று சொல்லியவர்களின் மனைவிமார்களை எல்லாம் கற்பழிக்க வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதே! அதைப்போலவா நான் கூறுகிறேன்?
கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்கிறேன். அதற்குக் காரணம் கூறுகிறேன். சரி இல்லை என்றால் என்னைத் திருத்த முன்வரட்டுமே! ஏற்றுக் கொள்கிறேன். கடவுளுக்கு ஆதாரம் என்னடா என்று கேட்டால் அதெல்லாம் கேட்காதே - நம்பு என்கிறான். சாணியைப் பார்த்து நாறுகிறதே என்றால், அதெல்லாம் தப்பு, மோந்து பார்க்காதே நம்பு, என்பது போலல்லவா கடவுளைப் பற்றிக் கூறுகிறான்.

அப்படியே தான் கடவுள் இருப்பதாகக் கூறுகிறானே- - அவன் உண்மையில்- நடைமுறையில் -வாழ்க்கையில் கடவுளை நம்புகிறானா? கடவுளை நம்பி எதை ஒப்படைக்கிறான்! கடவுள் இருக்கிறது என்பவனைக் கூப்பிட்டு ஓர் அறை அறைந்தால் அவன் என்ன சொல்வான்? அவன் என்ன சொல்வான்? அந்த அறைக்குக் காரணம் கடவுள் தான் என்று கூறிக் கொண்டு பேசாமல் செல்வானா? அல்லது அடித்தவனைத் திருப்பி அடிக்க முன்வருவானா? எந்தக் கடவுள் பக்தன் கடவுளை நம்பி வீட்டைப் பூட்டாமல் வருகிறான்? கோயில் கதவையே பெரிய பூட்டுப் போட்டல்லவா பூட்டுகிறான்!

சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறானே! ஒரு சர்வ சக்தி உள்ள கடவுள், தான் இருப்பதைக் கூட நமக்குச் சந்தேகமறத் தெளிவு படுத்த, சக்தி இல்லாததாகத் தானே இருக்கிறது.
எல்லாம் வல்ல - எல்லாம் உடைய சக்தியுள்ள கடவுளுக்குக் காணிக்கை எதற்காக? இலட்சக்கணக்கான ரூபாய் இந்தக் குழவிக்கல்லுக்குக் கொட்டி அழுகிறானே பக்தன்! இதைப் பற்றி எவன் வாய் திறக்கிறான்? எவனாவது கொஞ்சம் கள்ளுக்குடித்து விட்டு உளறினால், போச்சு போச்சு என்று கூப்பாடு போடும் அரசியல்வாதி இந்தப் பக்கம் திரும்ப மறுக்கிறானே!
குடிக்கிறவனாவது ஒரு பதினைந்து நிமிஷமாவது ஜம்மென்று இருக்கிறானே! கோயிலுக்குச் சென்று கொட்டி அழுகிற மடையன் எதை அனுபவிக்கிறான்? பார்ப்பான் தானே அதை மூட்டை அடித்துக் கொழுக்கிறான். இதைப் பற்றி எவன் பேசுகிறான்?

நம் சமுதாயம் இயற்கையிலேயே இழிவான சமுதாயமாகப் போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான் தான் என்று கூறிக் கொண்டே இனியும் போவதில் ஒன்றும் பிரயோசனமில்லை. பார்ப்பான் ஒழிந்து போய்விட்டான். நமது இழிவை ஒழித்துக் கொள்ள நமக்கே விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறோம்.

போட்டிப் போட்டுக் கொண்டல்லவா நாம் கோயிலுக்குப் போகிறோம். போட்டிப் போட்டுக் கொண்டல்லவா நெற்றியில் சாம்பலையும், நாமத்தையும் பூசிக் கொள்கிறான். அப்படித்தான் கோயிலுக்குப் போகிறானே, சாமி இருக்கும் இடத்திற்குச் செல்ல யோக்கியதை உண்டா?
``சூத்திரப்பயலே! வெளியே நில்லடா என்றல்லவா கூறுகிறான். இதைப் பற்றி எவனுக்காவது மான ரோஷ வெட்கம் இருக்கிறதா? மானமுள்ளவனாக இருந்தால் கோயில் என்றால் காரித்துப்புவானே! பெண்கள் கையில் விளக்கமாற்றை எடுத்துக் கொள்வார்களே! இந்த 1973லும் இந்தக் கேடு கெட்ட இழிநிலை என்றால், இதைவிட வெட்கக்கேடு ஒன்று உலகிலேயே இருக்க முடியுமா?

மனிதனுக்குள்ள இந்த இழிநிலையும், ஜாதிக்குப் பாதுகாப்பான சமுதாய அமைப்பும் இந்த நாட்டை விட்டு அடியோடு ஒழிய வேண்டும் என்றால், அவற்றிற்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கிற கடவுள் என்கின்ற எண்ணமே நமது புத்தியை விட்டு அறவே அகல வேண்டும். கடவுளை மறப்பதால் தான் - மறுப்பதால் தான் உண்மை மனிதனாக சுதந்திர மனிதனாக உலகில் உலவ முடியும்.

இன்றைக்கு உலகம் பூராவும் நாத்திகர் கொள்கை பரவி வருகிறது. ருசியாவில் கடவுள் என்ற சொல்லையே தூக்கி எறிந்து விட்டான். மேல் நாடுகளிலும் பகுத்தறிவாளர் சங்கம், சிந்தனையாளர் சங்கம், உண்மை நாடுவோர் சங்கம் என்று ஏராளமாக உண்டாக்கிப் பாடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்!

இப்போது தான் நம் நாட்டிலும் அந்த சங்கங்கள் பரவி வருகின்றன. காலவாக்கில் இங்கும் மாறுதல் வந்தே தீரும். அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பனை செய்யப்பட்ட கடவுளும், மதமும், சாத்திரமும் அறிவு வளர்ச்சிக்கு முன்னே எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்?

இந்தக் கடவுள் விஷயமும், மத விஷயமும் பொய்யென்று கூட நாங்கள் சொல்லவில்லை. இவை நிஜமாக இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று தானே கூறுகிறோம். சிந்திக்க வேண்டாமா?சிந்திப்பது தானே மனிதனின் பகுத்தறிவுக் கழகு? சிந்திப்பது கூட பாவம் என்றால் நீ எப்படிப் பகுத்தறிவுள்ள மனிதனாக முடியும்?

பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்க ஆரம்பித்ததனால் தான் மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துவிட்டான். பகுத்தறிவு மனித சமுதாயத்தில் வளர்ந்தால் தான் அமையும் ஆட்சியும் ஒரு பகுத்தறிவு ஆட்சியாக உறுதியோடு அமைய முடியும். அப்படி அமைகிற ஓர் ஆட்சியால் தான் கோயில் என்கிற பேரால் இருக்கிற குட்டிச்சுவர்களை எல்லாம் உடைத்து சாலைக்கு ஜல்லிபோட முடியும்? ஆபாசக் களஞ்சியமாக இருக்கக்கூடிய புராண இதிகாசங்களுக்கு எல்லாம் தடைபோட முடியும். கல்வியிலும் ஒரு பெரிய மனிதனை உண்டாக்க முடியும்?

எனவே தோழர்களே! எந்தத் துறையிலும் உங்கள் பகுத்தறிவுக்கு முதலிடம் கொடுங்கள். நான் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி விடாதீர்கள்.
உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளிவிடுங்கள்.

--------- நன்றி: “பெரியார் களஞ்சியம்” ஜாதி தீண்டாமை பாகம் 15

0 comments: