Search This Blog

23.3.08

செல்வி ஜெயலலிதாவும் செல்வி மாயாவதியும்

திராவிட இயக்கம் அதுவும் அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - அதுவும் அகில இந்திய அண்ணா திமுக என்ற பெயரில் உள்ள ஒரு அமைப்புக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர் செல்வி ஜெயலலிதா. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருப்பவர் களுக்கு, அக்கட்சியின் அடிப்படைக் கொள்கையைத் தெரிய வேண்டும்!

அவசர அவசரமாக அன்றைய கட்சியின் பொதுச் செயலாளர் ப.உ. சண்முகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டதை ஒரு வார காலத்திற்குள் படித்து முடித்து கரைத்துக் குடித்து விட்டு, அக்கட்சியில் சேர்ந்து, உடனடியாக கொள்கைப் பரப்புச் செயலாளராகத் தாவிப் பிடித்தவர் அவர். அதனுடைய கேடு இன்று வரை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

அண்ணா திமுக என்கிறபோது அண்ணா யார்? அவர் கொள்கை யாது? அவர் யாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்? அந்தத் தலைவரின் சித்தாந்தம் என்ன?
தி.க.வையும் - திமுகவையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று எதற்காக அறிஞர் அண்ணா சொன்னார்?

அண்ணாவின் `ஆரியமாயை நூல் என்ன கூறுகிறது?
`தீ பரவட்டும் என்ன பேசுகிறது? `இலட்சிய வரலாறு பகர்வது என்ன? `நீதி தேவன் மயக்கம் நாடகத்தின் உள்பொருள் என்ன? `சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்? என்ற நாடகத்தை எழுதி அதில் அறிஞர் அண்ணா அவர் களே காகபட்டராக நடித்ததன் பின்புலம் என்ன?

அண்ணா எழுதிய `விதைக்காது விளையும் கழனியப் படித்ததுண்டா? `நிலையும் நினைப்பும் கேள்விப்பட்டதது தான் உண்டா? `புராண மதங்கள் புரியுமா?
இவைபற்றி ஒட்டு மொத்தமாகவே தெரிந்து கொள்ளாதவர், தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டாதவர்தான் அகில இந்திய அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராம்! எப்படியிருக்கிறது?

`இந்து மதம்பற்றி அறிஞர் அண்ணாவின் பார்வை என்ன - கருத்து என்ன? அம்மையார் அறிவாரா?

இதோ அண்ணா எழுதுகிறார்?``நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர்கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது - யோகயாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோர் என்று கூறுபவர் எப்படி தம்மை `இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித் தான் துணியும்? `இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் `இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழு வாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடு தலைக்கு வழி பிறந்த பின்னர் அடிமை முறிச் சீட்டில் கையொப்பமிடுவாரா? நாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் `இந்து மார்க் கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்து பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்
- போதுமா இவை அத்தனையும் அறிஞர் அண்ணா அவர்களால் அடுக்கி அடுக்கிக் கூறப்பட்டவையாகும் (நூல்: `ஆரிய மாயை
)

அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டு இருப்ப வர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா? ஒருக்கால் இவற்றைத் தெரிந்திருந்தால், இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்பது இ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு; அந்த ஏட்டிலே அண்ணா வுக்கு எதிராக, அவரின் எழுத் துகளுக்கும் கருத்துக்களுக்கும் மாறாக எப்படி பேனா பிடிக்க முடிகிறது? பலகட்சிகளையும் சுற்றிப் பார்த்து வந்தவர்கள் எல்லாம், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்திய ம.பொ.சி.யின் சீடர்களாக யிருந்தவர்கள் எல்லாம், அண்ணா பெயரால் நடக்கும் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டின் நாற்காலியில் அமர்ந்து அண்ணாவின் சிந் தனைகளை கொச்சைப் படுத்திக் கொண்டு இருக் கிறார்களே!
எடுத்துக்காட்டாக அவ்வேட்டின் (18.3.2008) ஏழாம் பக்கத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும்!

இந்து மதத்தை கலைஞர் கருணாநிதி இழித்துப் பேச லாமா? விமர்சனம் செய்ய லாமா? என்று எழுத்தாணி பிடிக்கிறார்களே - அது எப்படி? அம்மையாரின் `இந்துமத சீலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்களே - அக் கட்சியில் மருந்துக்காவது அண்ணாவின் தம்பிமார்கள் இருக்கிறார்களா?

மேலே எடுத்துக்காட்டப் பட்டுள்ள அண்ணாவின் எழுத்துகளில் `யோகம் `யாகம் பற்றியெல்லாம் விமர் சிக்கப்பட்டுள்ளதே!


இந்த நிலையில் திருக்கடை யூர் சென்று வழிபடுவதும், யாகங்கள் நடத்திடுவதும் கண்டிப்பாக அண்ணாவின் கொள்கைகளைக் காலில் போட்டு இடறுவதுதானே! இதனை எடுத்துச் சொன்னால் எரிச்சல் வருவானேன்? உண்மை சுடுகிறதோ, - கருத்துகள் கடுகடுக்கின்றனவோ.
அண்ணா திமுகவில் ஆரியத் தலைமை அண்ணா சொன்ன கொள்கைகளின் ஆணி வேரை வெட்டுகிறது - திராவிடச் சித்தாந்தத்தின் அடித்தளத்தின்மீது வெடி குண்டுகளை வீசுகிறது!
தன்னையும் அறியாமல் சட்ட மன்றத்தில் `ஆம் நான் ஒரு பாப்பாத்தி! என்று சொன்ன ஆரிய அகங்காரம் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. அத னால் தான் `சோ வீட்டுக்கும், பாலச்சந்தர் வீட்டுக்கும், முக்தா சீனிவாசன் வீட்டுக்கும், அம்மையார் ஓடோடிச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறார்.
ஆசீர்வாதம் வழங்குவது என்றாலும் ஆரியர்கள்தானே வழங்க வேண்டும், அந்தத் தகுதி சூத்திராளுக்குக் கிடை யாதே!

பெரியார் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், அண்ணாவின் வரலாற்று நாள்களிலும் வெளியில் வந்து சிலைகளுக்கு மாலை அணிவிக்கவோ, நினைவிடங்களில் மலர் வளையம் வைக்கவோ, செல்வி ஜெயலலிதாவுக்கு மனம் வராது. ஆனால் தமது பிறந்த நாள் ஆசீர்வாதம் வாங்க மட்டும் அய்யர்மார்களைத் தேடித் தேடி ஓட முடியும்!
சரி.. இந்த அம்மையா ராவது பார்ப்பனக் குலத்தில் உதித்த குலக் கொழுந்து!
உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் செல்வி மாயாவதிக்கு என்ன வந்தது? பதவிக்காகப் பார்ப்பனர் களைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டதோடு தந்தை பெரியார் அவர்களைப் புறக்கணிக்கத் தயாராகி விட்டாரே!

பகுஜன் சமாஜ் என்று ஒரு கட்சியைக் தொடங்கினார் கான்ஷிராம்.
தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தாம் இந்த நாட்டில் பகுஜன் - பெரும் பான்மை மக்கள் - இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதி காரம் வர வேண்டும் என்ற உன்னதமான உரிமைக் கொடி யைத் தூக்கிப் பிடித்தார்.
தந்தை பெரியார் பிறந்த நாளை `பெரியார் மேளா என்ற பெயரில் உ.பி.யின் தலை நகரான லக்னோவில் கோலா கலமாகக் கொண்டாடினார் (1995 செப்டம்பர் 17).
பதவிக்காக அந்தக் கொடியைத் தலைகீழாகப் பிடிக்கத் தொடங்கி விட் டாரே! மாயாவதி? `பகுஜன் போய் `சர்வ ஜன் என்று குரல் வந்து விட்டதே.

இது அடிப்படையிலேயே கான்ஷிராமின் கருத்தினைச் கருவறுப்பது ஆகாதா?
இன்னும் ஒருபடி மேலேயும் (உண்மையில் தாழ் வான) சென்று உ.பி.யில் பெருந் தலைவர்கள் பட்டிய லிலிருந்து தந்தை பெரி யாரைத் தூக்கி எறிந்து இருக்கிறாரே! 2007 டிசம்பர் 6 நாளிட்ட `தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் முதல் பக்கச் செய்தி என்ன தெரியுமா?
“Periyar Goes off Govt List of Great Leaders”
உள்ளே இடம் பெற்ற செய்தி என்ன?

``உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றம் மாபெரும் தலைவர் களின் பட்டியலிலிருந்து தந்தை பெரியாரின் பெயரை நீக்கும் திருத்தத்துடன் சட்ட மசோதாவை கடந்த டிசம்பர் மாதத்தில் நிறை வேற்றியுள்ளது. பார்ப்பனர்களின் வலியுறுத்தலுக்கு முதல்வர் மாயாவதி பணிந்து விட்டதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.

இவ்வாறு திருத்தப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சந்தில் சிந்து பாடுவது போன்று, இப் பட்டியலில் ராமர் ,கிருஷ்ணர் ஆகிய கடவுள் களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப் பினர்கள் ஹூக்கும் சிங்கும் ஓம்பிரகாஷ் சிங்கும் கோரினர். இந்த இரு இதிகாச நாயகர்கள் இடம் பெறாத இந்திய கலாசார நாகரிகம் முழுமையானதாகவே இருக்காது என்று அவர்கள் கூறினார்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பேரணி யில் தந்தை பெரியாரின் புதிய ராமாயணம் பற்றிய பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை யொட்டி இந்து மதத்தையே பகுஜன் சமாஜ் கட்சி இழிவுபடுத்தி விட்டது என்ற பிரச்சாரத்தை பா.ஜ.க.வினர் அவிழ்த்துவிட்ட னர். இதனால் எழுந்த பொது மக்களின் கடுமையான விமர் சனங்களைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தந்தை பெரியாரை முன்னிலைப் படுத்தும் செயலில் தயக்கம் காட்ட நேர்ந்தது.

ஆனால் எந்த நிர்பந்தத் தினாலும் இச்சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்படவில்லை என்றும், மக்களின் உணர்வு களையும், மத நம்பிக்கை களையும் மதிப்பவர் முதல்வர் மாயாவதி என்பதாலேயே கொண்டு வரப்பட்டது என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் நசீமுதீன் சித்திக் கூறினார். பகுஜன் என்ற முழக்கத்தை சர்வஜன் என்று மாற்றிக் கொண்டு பார்ப்பனர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி விட்ட மாயாவதி பார்ப்பனர்களை திருப்தி செய்ய தந்தை பெரியாரின் பெயரை மாபெரும் தலைவர் பட்டியலில் இருந்து நீக்கியதில் வியப்பேது மில்லை. என்றாலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சூத்திரர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் உத்தரப் பிரதேசத்தில் உருவாகி தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்பி வருவது நமக்கு மன நிறைவளிக்கிறது.``
இதுதான் `டைம்ஸ் ஆப் இந்தியா நாளிட்டுள்ள செய்தி.

தமிழ்நாட்டிலே பார்ப்பனத் தலைமை திராவிட இயக்கத்தின் போர்வையில் பார்ப்பனர் அல்லாதார் எழுச்சித் தீயை அணைக்க முற்படுகிறது என்றால் உத்தரப்பிரதேசத்திலே அரசிய லின்பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்மையார், வந்த பாதையை மறந்து விட்டு, நிறுவனர் கான்ஷி ராமுக்கு நாமம் சாத்தி விட்டு பார்ப்பனர்களின் பக்கம் குடை சாய்ந்துவிட்டாரே!

பார்ப்பனத் தலைமையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல்வரும் கரம் கோர்த்து வருகிறார்கள்!
இதற்குள் காவிக் கொடி யினர் காவடி எடுத்து வரு கிறார்கள்.
இந்தச் சக்திகளை நிர் மூலப்படுத்துவது எப்படி? இதனைச் செய்யாவிட்டால் மீண்டும் மனுதர்மச் கொடி தான் நாட்டில் பட்டொளி வீசிப் பறக்கும்?
சிந்திக்க வேண்டிய நேரம் - செயல்பட வேண்டிய நேரம் இது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இந்த இருபெரும் தலைவர்கள் மூட்டிய கனல் - ஆம், அது ஒன்றுதான் இந்தச் சக்தி களைச் சுட்டெரிக்கும்.

தந்தை பெரியாரின் சீடர் அறிஞர் அண்ணாவின் நூற் றாண்டு விழா - இந்த வருடம் செப்டம்பர் 15-இல் தொடங் குகிறது!

அறிஞர் அண்ணாவை அண்ணா திமுகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். அண் ணாவின் தம்பிகள் எங்கி ருந்தாலும் இதுபற்றிச் சிந்திப் பார்களாக! அய்யாவின் தொண்டர்கள் இந்த நேரத் தில் நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளனர்.

வாழ்க பெரியார்!
வாழ்க அண்ணா!

நன்றி: ------------22-3-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் "மின்சாரம்" எழுதிய கட்டுரை

0 comments: