சூத்திரனென்ற பெயரைச் சுமப்பதற்கு தமிழர்கள் ஏற்றவர்களென்று அவர்கள் மேல் ஆரியர் அச்சுமையை ஏற்றியிருக்கிறார்கள். அதனைச் சுமந்து கொண்டிருப் பவர்கள், இறக்கிவிட வேண்டுமேயன்றி, ஏற்றியவர்கள் இறக்கிவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதி சமீபகாலத்தில், ஆனரெபிள் திவான்பகதூர் ரகுநாதராவ் அவர்கள் (இவர் காங்கிரஸ் துவக்க காலத் தலைவர்களில் ஒருவர்) ஆனரெபிள் பொப்பிலி மஹாராஜா அவர்களை சூத்திரர் என்று எழுதி, 1910-ம் வருடம், ஏப்ரல் 23-ந் தேதி பிரசுரமான `ஹிந்து பத்திரிகை வாயிலாக வெளி யிடப்பட்டதை அநேகர் அறிந்திருப்பீர்கள். (ராவ் பகதூர் வெ.ப. சுப்பிரமணி முதலியார் அவர்கள் `இராமண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் - 1935 வெளியீடு)
1. அரசு ஆவணங்களில் `சூத்திரர் பட்டம் நீக்கக் கோரி இயற்றப்பட்ட முதல் தீர்மானம்
பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. மைதானத்தில் 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22,23 தேதிகளில் நடைபெற்றது. 20-ம் நூற்றாண்டின் கிழக்கந்திய லூதர் என்றழைக்கப்பட்ட, இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் என்ற போர்வையில் ஆர்ய இனத்தால் தங்களது அடிப்படை உரிமைகளும் களவாடப்பட்ட நமது சகோதரர் களுக்காக போராடியவரும், தனது வாழ்நாளையே பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு தியாகம் செய்தவரு மான டாக்டர் நாயர் அவர்கள் பெயரிலான அரங்கில் மாநாடு நடைபெற்றது. மைசூர் ஜனாப் முகமது அப்பாஸ் கான் அவர்கள் இம்மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை பனகல் மகாராஜா அவர்கள் முன்மொழிய செல்வி ரஞ்சிதம் வழி மொழிந்தார். திரு வோகேலி ஆர்யா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எந்த ஜாதியும் நமது ஜாதியும்விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்ற நம்பிக்கையில் பொது வாழ்வினைத் தொடங்க வேண்டுமென நமது மதிப்பிற்குரிய தேசப் பற்றாளர் திரு ஈ.வெ.ராமசாமி அவர்களின் ஆலோசனைக்கு உண்மையானவர்களாக நாமிருந்து, நாம் அனைவரும் இங்கு ஒன்றாக உயர்ந்தவர், தாழ்த்தவர், பணக்காரர், ஏழை, ஆண், பெண், இந்து, முகமதியர், கிறிஸ்துவர் என்ற வேறுபாட்டின்றி, நமது தனிப்பட்ட சுதந்திரத்தையும், குண நலங்களையும் இழந்து விடாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் போல் நாம் இங்கு வாழ்வோம் என்று அவர் கூறினார். இம்மாநாட்டில் மேலும் திருவாளர்கள் சர்.ஏ. ராமசாமி முதலியார், ஈ.வெ.கி. ராமசாமி நாயக்கர், எஸ். ஆர்யா, சி. செங்கல்வராய முதலியார், ஓ.சி. சீனிவாசன், பி. ஜீவரத்தின முதலியார் மற்றும் பல தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. திரு ஜே.எஸ். கண்ணப்பர் கீழ்க்கண்ட தீர்மானத்தை வழிமொழிந்தார்.
``சென்னை அரசு தனது ஆவணங்களில் `சூத்ரா என்ற சொல்லைப் பயன்படுத்துவது பெரும்பான்மையாக உள்ள பார்ப்பனரல்லாத சமூகத்தினரின் சுய மரியாதை உணர்வை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது என இம் மாநாடு கருதுகிறது. அதனால், கடந்த கால ஆவணங்களி லிருந்து இந்த சொல்லை நீக்குவதுடன் அலுவலக ஆவணங்களில் இனி இச்சொல்லைப் பயன்படுத்தக் கூடாதென அனைத்து இலாக்காக்களுக்கும் உடனடியாக ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டுமென அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது
ஒட்டு மொத்த சமூகத்தின் சுயமரியாதையினைப் பற்றியது இத்தீர்மானம் என அவர் கூறினார். பார்ப்பன ரல்லாத மக்கள் `சூத்திரர் என்றழைக்கப்பட்டனர்; அவர்களும் இது ஏதோ தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்பதாகவே கருதி இதுவரை அதில் நிறைவு பெற்றவராகவே இருந்து வந்தனர். `ரிக்வேதம், மனுதர்ம சாஸ்திரப்படி ஒரு சூத்திரன் என்பது `தாசிமகன் என்றும், பார்ப்பனருக்கு சேவை செய்யவே பிறந்தவன் என்றும் பொருள் தருவதாகும். இந்தப் பட்டமும் அதன் விளக்கமும் இவர்களுக்கு உண்டாக்கும் இழிவைப் போல் இழிவைத் தருவது வேறெதுவுமிருக்க இயலாது. சில காலத்துக்கு முன் சென்னையின் வடக்குப் பகுதி `கருப்பு நகரம் என்றழைக்கப்பட்டதைவிட இது மிகவும் மோசமானது. மக்களின் போராட்டத்தின் காரணமாக இப்பெயர் `ஜார்ஜ் டவுன் என மாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வேண் டும். `பஞ்சமர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இதற்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவர்கள் ஆதிதிராவிடர் என்றழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியில் உள்ள பணியாளர்களின் வகுப்புவாரியான எண்ணிக்கையினை அளிக்க சட்டமன்ற மேலவை கேட்டுக் கொண்டதற்காக சென்னை மாகாண சுயாட்சி அரசு பதில் அளிக்கும்போது, அரசின் பார்ப்பனச் செயலாளர் ஒருவர் சமீபத்தில் `சூத்ரா என்ற சொல்லை பார்ப்பனரல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார். மத நம்பிக்கை கொண்டு இருந்த அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியின்போது, எந்த அரசு அறிக்கை யிலும் இப்பட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போதுள்ள உள்துறை அமைச்சரோ ஒரு பார்ப்பனரல் லாதவர். டாக்டர், சுப்பராயன் அவர்களிடம் நாம் கோருவதெல்லாம், அரசு ஆவணங்களிலிருந்து இச்சொல் நீக்கப்பட வேண்டும் என்பதுதான். இத்தீர்மானத்தை வழிமொழிந்த திரு டி.ஆர். ரத்தினம் அவர்கள் `சூத்ரா என்ற இச்சொல் சமூகத்தை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளதால், அரசு ஆவணங்களில் ஆட்சேபணைக்குரிய இத்தகைய சொல் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். இத் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பலத்த கைதட்டல்களுக் கிடையே நிறைவேற்றப்பட்டது.
2. சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் உரிமைகூட சூத்திரர்களுக்கு இல்லை என்பது பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
``சந்நியாசம் கொள்வது ஆரியர்க்கு உரியதல்ல; ஆரியர்கள் முதலாவதாக இந்தியாவில் நுழைந்த பொழுது, சந்நியாசத்தை வெறுப்பவர்களாகவே இருந் தனர். அவர்களது வாழ்க்கைச் சூழல் அதைப்பற்றிச் சிந்திக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. உண் மையில் வேதகால முனிவர்களிற் பலர் அவர்களது பெரிய மகிழ்வான, நிறைந்த வாழ்வினை குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிந்தனர். அவர்களில் யாக்ஞவல்கி யரைப் போன்ற சிலர் இரண்டு மனைவிகளை உடைய வர்களாக இருந்தனர். காலப்போக்கில் ஆரியர் அல்லா தாரிடமிருந்து - குறிப்பாக ஹரப்பாவில் வாழ்ந்த திராவிடர்களிடமிருந்து `சந்நியாசம் என்ற கோட்பாட்டை அவர்கள் கடன் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் மூன்று உயர்சாதியினர் மட்டுமே லவுகீக வாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளலாம்; மற்றவர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று ஆக்கிக் கொண்டார்கள். அதுவும் வாழ்வின் கடைசிக் கட்டத்தில்தான். இந்தக் கடுமையான விதி முறைக்கு மாறாக, சூத்திரர்கள் மட்டுமல்லாமல் அடிமை களும் சண்டாளர்களும் (தீண்டத்தகாதவர்களும்)கூட விரும்பினால் சந்நியாசிகளாகலாம் என்று புத்தர் அனுமதித்தார் இவ்வாறு கீதை பற்றிய உண்மை என்ற நூலில் பகுத்தறிவு அறிஞர் வி.ஆர். நார்லா கூறியுள்ளார்.
பிற்காலத்தில் ஆரியர்கள் இதனை எடுத்துக் கொண்டார்கள்; என்றாலும் மூன்று சாதியாருக்கு மட்டுமே உள்ள உரிமை சந்நியாசம் கொள்ளுவது என்று திரித்து வைத்துக் கொண்டனர். அதாவது கீழ் சாதியினருக்கு அவ்வுரிமை இல்லை. இன்றளவும் `இந்துலா என்ற இந்துச் சட்டத்தில் இது நடைமுறையில் உள்ள ஓர் சட்டமாகும். உச்சநீதிமன்றத்தின் கீழ்க்கண்ட தீர்ப்பில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏ.அய்.ஆர். 1980 உச்சநீதிமன்றம்
ஏ.அய்.ஆர். 1972-லிருந்து ஆல் 273
எஸ். முர்தசா பாசல் அலி,
மற்றும் ஏ.பி. சென் ஜேனே
சிவில் மேல்முறையீடு எண்: 1979-ன் 1802- நாள்: 21.12.1979
கிருஷ்ண சிங்: மேல்முறையீட்டாளர் வி. மதுரா அஹிர் மற்றும் இதரர்.
(அ) இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 3, விதி 13- வாதிப்பிரதிவாதிகளுக்கு இந்து தனிப்பட்ட சட்டம் பொருந்துவதுபற்றி - சூத்திரர்கள் சன்னியாசிகளாக ஆவதற்குத் தகுதியற்றவர்களா என்பதுபற்றி..
ஜதி அல்லது சன்யாசி ஆவதற்கு சூத்திரர்கள் தகுதியற்ற வர்கள் என்று கருதப்பட்ட ஸ்மிருதி எழுதியவர்களால் நிர்ணயிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான விதி, அரசியலமைப்பு சட்டம் பகுதி 3-ன் கீழ் உறுதியளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காரணமாக செல்லத் தக்கதல்ல என்ற கருத்து சரியானதல்ல. வாதிப்பிரதிவாதி களின் தனிப்பட்ட சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்தின் 3-ஆம் பகுதி தொடவே இல்லை (பக்கம் 17)
வாதிப்பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களைக் கையாளும்போது, இந்து சட்டங்கள்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அதிகார பூர்வமான ஆதாரங்களின், அதாவது பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளவாறு ஸ்மிருதிகள் மற்றும் அவற்றின் விளக்கவுரைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதி சட்டத்தை, அது எந்த ஒரு பழக்கத்தினாலோ அல்லது வழக்கத்தினாலோ அல்லது மற்றொரு சட்டத்தால் ரத்து செய்யப்பட்டதாகவோ அல்லது மாற்றப்பட்டதாகவோ இல்லாதபோது, நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, நவீன காலத்திய தனது சொந்தக் கருத்தினை அறிமுகப்படுத்த இயலாது. (பக்கம்: 17)
கீழ்சாதிக்காரர்களுக்குத் துறவு பூணவும் உரிமை இல்லை. அப்படி நிகழ்ந்துவிட்டால், அது அவர்களுக்கு உயர்சாதியினருடன் சிறிதளவேனும் சமத்துவத்தை அளித்துவிடும். மேலும், மேல்சாதிக்காரர்களின் ஆதிக்க சக்திகளின் அடித்தளம் ஆட்டங்கண்டு விடும் என்பதால் மிகவும் சாமார்த்தியமாக வர்ணாசிரமத்திற்கு - குலத் தொழிலுக்கு எவ்வித இடையூறும், தடங்கலும் - ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணனின் கீதை உபதேசம் மூன்றாவது அத்தியாயம் 4,7,8 சுலோகங்களை கூர்ந்த மதியினர் படித்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று தமது நூலின் 169-ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
---------- - - --- தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை--- 2001- `பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்பு - பக்கம் 142-145
Search This Blog
7.3.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment