Search This Blog

16.1.15

பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம்-பெரியார்

தமிழர் திருநாள்




திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.


இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். 


இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.


எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.


தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும்.


விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை-களை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.


அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி,  சரஸ்வதி பூசை, தீபாவளி, விடுமுறை இல்லாத பண்டிகைகள் _ கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி*, தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.


இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?


தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத - முக்காலத்திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.


கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.


இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.

                      ------------------------------- தந்தை பெரியார்- "விடுதலை" 30.1.1959

7 comments:

தமிழ் ஓவியா said...

எதை நோக்கி செல்கிறது இந்தியா!

ஊழல், ஊழல், ஊழல் - என்று
ஊதி, ஊதி ஊரைச் சுற்றி வந்தார்கள்!
ஊழலை ஓழிப்போம்!
இந்தியாவை உயர்த்துவோம்! - என்று
ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள்!
ஊரை (நாட்டை) ஆள அதிகாரம் வந்தவுடன்
ஊழல் என்று கூறுவதை ஒழித்தார்கள்!

மக்களை, மனிதத்தை மறந்து
மதம் மதம் மதம் என்று
மந்திரிகள் மார்த்தட்டி கூறுகிறார்கள்!
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே
நாட்டின் தேசியவாதி என்று
நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

நாளும் ஒரு மதப் பேச்சு
நாட்டிலும், ஏட்டிலும் மனிதம் போச்சு!
அதன் விளைவு
காந்தியைச் சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில்
கோயில், சிலை அமைத்து வழிபட
இந்து மகாசபா ஏற்பாட்டில்...
ஜனவரி 30ஆம் தேதி திறப்பு விழா!
மனிதப் பற்றை மறக்கடித்து!
மதப் பற்றை வளர்க்கிறார்கள்!

எதை நோக்கிச் செல்கிறது? இந்தியா!
வளர்ச்சி வேண்டும் என்று வாக்களித்த
ஏழை -எளிய மக்கள் - என்றென்றும்
ஏழைகளாக வாழ வழி செய்ய
எல்லாம் தனியார் மயம்!
அன்று

ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய வந்து
நம்மை அடிமையாக்கினார்கள்!
இன்று அந்நிய முதலீடு என்ற பெயரில்
நம் அரசே நம்மை அடிமையாக்குகிறது!
அதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை!
நம் உற்பத்தித் திறனை நாமே இழக்க
வழிவகை செய்யும் கொள்கை!
தாராளமயமாக்கல் உலகமயமாக்கல் என்று
அந்நிய பொருள்களை வாங்கும் கொள்கை!
பிறகு எப்படிப் பெருகும் நாம் நாட்டு உற்பத்தி?

வரிப் பாக்கி செலுத்தாத
அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு,
வாரி வாரிக் கடன் கொடுக்கும்
நம் நாட்டு வங்கிகள்
வசதி இல்லா ஏழை மாணவனுக்கு
கல்விக் கடன் கொடுக்க
வீட்டை அடமானம் கேட்கிறது!

ஏமாற்று நிறுவனங்களிடம்
வரி வசூலிக்க தெரியாத இந்திய அரசோ!
இந்தியாவை அடமானம் வைத்து
உலக வங்கியில் கடன் வாங்குகிறது!
பிறகு எங்கு நாம் முன்னேறுவது?
உலகமே மனித அறிவுக்கும்
அறிவியலுக்கும் முக்கியத்துவம்
கொடுத்து முன்னேறும்! இக்காலத்தில்
நம் நாடும் நாட்டை ஆளும் அரசும்
மதத்திற்கும் மதம் சார்ந்த செயலுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது
பிறகு எப்படி பெருகும் அமைதியும் ஒற்றுமையும்?

உலக அரங்கில் நாம் முன்னேற
அறிவும், கல்வியும், அறிவியலும் தேவையா?
அல்லது
மதமும், மதச்சார்ந்த செயல்களும் தேவையா?
சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்களும் மக்களும்!
இன்று நாம் சிந்திக்க மறுத்தால்!
நாளை நம் பிள்ளைகளுக்கு இல்லாமல் போகும்
அமைதியும் அறிவும் நிறைந்த அழகு வாழ்க்கை!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள் குரல் கொடுங்கள்
மனித அறிவுக்கும் மனித நேயத்துக்கும் எதிராக செயல்படும்
ஆளாக இருந்தாலும் அரசாக இருந்தாலும்
கண்டிப்புடன் கண்டனக் குரல் கொடுங்கள்!
மனிதநேயத்தைக் காப்போம்!
இந்தியாவை மீட்போம்!

- க. பாலன்

Read more: http://viduthalai.in/page3/94499.html#ixzz3PEIOnR8X

தமிழ் ஓவியா said...

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிகின்றதா?

சபரிமலையிலுள்ள பொன்னம்பல மேட்டில் இப்பொழுது மகரஜோதி தெரிகின்றது என்று சொல்வது பொய். பல ஆண்டுகளாக அங்கே மகரஜோதி தெரியவில்லை. மகரஜோதி என்பது அதிசயமான ஒளி அல்ல.

அந்தப் பகுதியில் வாழ்ந்த காட்டுவாசிகள் இரவில் வெளிச்சத்துக்காக ஏற்றிய தீப்பந்தங்களின் ஒளிதான் அது. அதைப் பார்த்த சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகம், பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதற்காக காட்டுவாசிகளை விரட்டிவிட்டு அவர்களே அங்கே தீப் பந்தம் கொளுத்தினார்கள்.

பகுத்தறி வாளர்கள் அங்கே சென்று உண்மையை வெளிக்கொண்டு வர முயன்றதால் அடிதடி நடந்தது. இதற்குப் பிறகு அங்கே மகரஜோதியை ஏற்றுவதில்லை, அதனால் மகரவிளக்கும் தெரிவதில்லை. நான் ஆண்டு தோறும் சபரிமலை சென்று மகரஜோதி தெரிகின்றதா என்று பார்க்கின்றேன். தெரியவே இல்லை.

இப்படிச் சொன்னவர் நாத்திகர் அல்ல. ஏதோ ஓர் ஆற்றல் நம்மை மிஞ்சி இருக்கின்றது என்று நம்பக்கூடிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இவ்வாறு சொன்னார். தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலிக்கு வந்துவிட்டு, அங்கிருந்து பயணியர் தொடர்வண்டியில் திருச்செந்தூர் செல்லும்பொழுது அவர் கூறியது இது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் வட பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் திருப் பதிக்கும் குருவாயூருக்கும் அடுத்தபடி யாக அதிக வருவாயை ஈட்டும் கோயிலாகும்.

இமயமலையிலுள்ள பத்ரிநாத் - கேதார் நாத்துக்கும் காஷ்மீரில் உள்ள அமர்நாத்துக்கும் சென்றவர்கள், சபரி மலைக்குச் செல்வதை எண்ணி வியப்படைய மாட்டார்கள்.

1920 வரை பொன்னம்பல மேட்டி லுள்ள மகர விளக்கைப் பற்றி எவரும் பேசியதில்லை என்கின்றார் காலஞ் சென்ற பேராசிரியர் ஏ.டி.கோவூர் அவர்கள். 1940 க்குப் பிறகு தான் பொன் னம்பல மேட்டிலுள்ள அந்த ஒளியைப் பற்றிய கதைகள் பரவின. இந்த இடைப் பட்ட காலத்தில்தான் காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் குடியேறியிருக்க வேண்டும்.

சபரிமலைக்கருகில் இதுவரை மனித பாதச்சுவடே படாத பொன்னம்பல மேடு சபரிமலை பொன்னம்பல மேடு என்ற மலையில்தான் அற்புதமான இந்த விளக்கு தானாகவே எரிகின்றது என்று ஒரு கூட்டத்தினர் பரப்பினார் கள்.

வேறு சிலரோ, பக்தர்களைப் பார்க்க அய்யப்பன் தேவலோகத்திலி ருந்து எழுந்தருளும்பொழுது உண்டா கும் ஒளியே அது என்றார்கள். கேர ளத்திலுள்ள பத்திரிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு இதைப்பற்றிய கதைகளை பரபரப்பாக எழுதின. வானொலியும் இந்தப் பணியில் சளைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதை

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவற்றை நன்கு அறிந்தவர்கள்தான் பூசை செய்யலாம் என்பதுஆகமவிதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலானோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.

பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, சிலர் அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில்களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள்.

கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பாக சில மந்திரங்கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள்.

அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது

(உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

Read more: http://viduthalai.in/page5/94507.html#ixzz3PEJXzidd

தமிழ் ஓவியா said...

ஆத்மாவா?

அம்மி மிதிக்காமல்
அருந்ததி பார்க்காமல்
அய்யர் இன்றி
தலித் தலைமையில்
திருமணம் செய்த அப்பாவுக்கு
காரியம் செய்ய
ஆரியனை அணுகினேன்

எட்டு முழ வேட்டி
என்று ஆரம்பித்து
நாலுமுழ நீளத்திற்கு
லிஸ்ட் கொடுத்தார்
கேரட், பீன்ஸ்
கத்திரிக்காய் உருளைகிழங்கு
பச்சரிசி பத்து கிலோ
புளி, மிளகாய்
பருப்பு வகைகள்

வாழை இலை ஆறு
ஒரு குடும்பத்திற்கு
ஒரு வாரத்திற்குஆகும்போல
சாமி இதெல்லாம் எதற்கு?
அப்பாவியாய்க் கேட்ட

மகனைப் பார்த்து அய்யர் சொன்னார்
அப்பாவின் ஆத்மா
சாந்தி அடைய வேண்டாமா?
எனக்குள் ஒரு கேள்வி
அப்பாவின் ஆத்மாவா
அய்யரின் ஆத்மாவா?

கலவை: வ. தட்சணாமூர்த்தி சென்னை 51

Read more: http://viduthalai.in/page6/94517.html#ixzz3PEKTwyK0

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூறுகிறார்...

போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/94509.html#ixzz3PEKefHeG

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்: அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், வீடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக் கின்றன.

www.waytosuccess.com
www.padasalai.net
www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com
www.tamilasiriyarthanjavur.blogspot.com
www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறுகின்றன. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

English

www.jeyaenglish.com
www.dhilipteacher.wordpress.com

இத்தளத்தில் ஆங்கிலப் பாடக் குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட், வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக் குறிப்புகள் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page7/94520.html#ixzz3PEKppaO3

தமிழ் ஓவியா said...

இப்படி ஒரு முதலமைச்சர்

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வாஸ்து, ஜோதிடம், பில்லி சூனியம், வவ்வால்... சாரி, ஏவல்... போன்ற மூட நம்பிக்கைகளில் அபார நம்பிக்கை உடையவர் என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திர சேகர ராவும், வாஸ்து, ஜோதிடத்தின் மீது, கிறுக்கு பிடித்து அலைகிறார். சந்துருவின் ராசி எண், 6 என்பதால், தன் தொடர்புள்ள அனைத்துமே, 6 ஆக இருக்க வேண்டும் என்பதில், ரொம்பவே கெடுபிடியாக உள்ளார்.

சமீபத்தில், அய்தராபாத்தில் தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. 'சரியாக, மாலை, 6 மணி, 6 நிமிடம், 6 விநாடிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கும். அமைச்சர்கள் அனைவரும் குறித்த நேரத்துக்கு வந்து விட வேண்டும். யாராவது, ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் தொலைத்து விடுவேன்' என, தன், கிளி மூக்கை தடவியபடியே எச்சரிக்கை விட்டிருந்தார், சந்திர சேகர ராவ்.

இதனால், அமைச்சர்கள் அனைவரும், கூட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, காத்துக் கிடந்தனர். சந்திரசேகர ராவ் கூறிய, 6:00 மணி கடந்தது. அனைவரும், வழி மீது விழி வைத்து காத்திருந்தது தான், மிச்சம்; சந்துரு வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

ஒரு வழியாக, 45 நிமிட தாமதத்துக்கு பின், வந்த அவர், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், இறுகிய முகத்துடன் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.அமைச்சர்களோ, 'உலக நடிப்புடா சாமி... 'சாரி' கேட்டால், அவரின் இமேஜ் குறைந்து விடுமாம். அதனால் தான், முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லாமல் இருக்கிறார்' என, முணுமுணுத்தனர்.

Read more: http://viduthalai.in/page7/94521.html#ixzz3PELU78sl